Published : 16 Dec 2015 09:00 AM
Last Updated : 16 Dec 2015 09:00 AM

வெனிசுலாவின் அரசியல் மாற்றம்!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் அரசியலில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதிபர் நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி, சமீபத்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறது. கடந்த 17 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவந்த இடதுசாரிக் கட்சி அது. மொத்தமுள்ள 167 தொகுதி களில் 112-ல் ‘ஜனநாயக ஒற்றுமை இயக்கம்’ என்ற வலதுசாரிக் கட்சி வெற்றிபெற்றிருப்பது, தென் அமெரிக்க நாடுகளின் அரசியல் மாற்றங்கள் குறித்த கவனத்தை ஈர்த்திருக்கிறது.

மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்ற சர்வாதிகாரிகளின் பிடியிலிருந்து வெனிசுலாவை, ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் ஹியூகோ சாவேஸ் மீட்டார். அவரது மறைவுக்குப் பிறகு, நிகோலஸ் மதுரோ அதிபரானார். சாவேஸுக்கு இருந்த நிர்வாகத் திறமையும் அரசியல் செல்வாக்கும் மதுரோவுக்கு இல்லை என்றே அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சிக்கு இப்படியொரு தோல்வி ஏற்பட எது காரணமாக அமைந்தது? அர்ஜெண்டினா நாட்டின் அதிபர் தேர்தலில் இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த டேனியில் சியோலி தோற்றிருக்கிறார். இதை வைத்து, தென் அமெரிக்க நாடுகளில் வலதுசாரிக் கட்சிகள் புத்துயிர் பெற்றுவிட்டன என்று கூறிவிட முடியாது. பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவால் அரசியல்ரீதியாக இந்நாடுகளில் இடதுசாரிக் கட்சிகள் ஆட்சியிழப்பைச் சந்தித்துள்ளன என்றுதான் கூற வேண்டும்.

அந்நாட்டின் இயற்கை வளங்களை அரசுடைமையாக்கி அதில் கிடைத்த வருவாயைக் கொண்டு ஏழைகளுக்கான வசதிகளையும் வேலைவாய்ப்பையும் பெருக்கியவர் ஹியூகோ சாவேஸ். கச்சா பெட்ரோலிய எண்ணெய் மூலம்தான் இதற்கான வருவாயில் பெரும் பகுதி கிடைத்துவந்தது. சர்வதேசச் சந்தையில் 2014 ஜூன் மாதம் ஒரு பீப்பாய் கச்சா பெட்ரோலியம் 115 டாலருக்கு விற்றது. இப்போது ஒரு பீப்பாய் 40 டாலர் என்ற அளவுக்குச் சரிந்துவிட்டது. இதனால் நாட்டின் வருவாயில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. அது அரசின் செலவுகளைப் பெரிதும் பாதித்தது. பொருளாதாரத்தை வலுப்படுத்தி, விரிவுபடுத்த வேண்டும் என்றுதான் சாவேஸ் முதலில் நினைத்தார். அவருடைய ஆட்சிக் காலத்தில் எண்ணெய் விலை அதிகமாக இருந்ததால் அவருக்கு நெருக்கடி ஏதும் ஏற்படவில்லை.

ஆனால், நிகோலஸ் மதுரோ அரசோ நாட்டின் பிரச்சினைகளுக்கு எதிர்க் கட்சிகள் மீதே பழியைப் போட்டது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க மாற்று வழியை அது கண்டுபிடிக்கவில்லை. உயர் பணவீக்க விகிதம், அத்தியாவசியப் பண்டங்களுக்குத் தட்டுப்பாடு, மிகவும் மோசமான அடித்தளக் கட்டமைப்பு போன்றவை மக்களுடைய பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்தின.

மதுரோவுக்கு அரசியல் சாதுர்யம் போதாது. சோஷலிஸ்ட் கட்சியிலேயே அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தலைவராக சாவேஸ் இருந்தார். இப்போது அக்கட்சியில் கோஷ்டிப் பூசல்கள் அதிகரித்துவிட்டதால் மதுரோவின் கட்சித் தலைவர் பதவிக்கே ஆபத்து வந்துவிட்டது. இத்தேர்தல் முடிவானது சோஷலிஸ்ட்டுகளுக்கு எச்சரிக்கை மணி. சாவேஸ் ஏற்படுத்திய நிர்வாக நடைமுறை லட்சக்கணக்கான வெனிசுலா மக்களுக்குப் பயனளித்தது. அதை மேலும் வலுப்படுத்தி நடைமுறைப்படுத்துவதுதான் மக்களிடையே இழந்த செல்வாக்கை சோஷலிஸ்ட்டுகள் மீட்பதற்குள்ள ஒரே வழி. தங்களுக்குச் சவாலாக விளங்கும் விஷயத்துக்கெல்லாம் எதிர்க் கட்சிகளை மட்டுமே குறைகூறிக்கொண்டிருந்தால் பயனிருக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x