Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

பொதுமுடக்கத்தைத் தவிர்க்க கட்டுப்பாடுகள் கருவியாகட்டும்

அடுத்த அலை கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு வெளியிட்டிருக்கும் வரையறைகள் வரவேற்புக்குரியவை என்றாலும் கால தாமதமானவை. தேர்தல் முடிந்த கையோடு வெளியாகியிருக்க வேண்டியவை இத்தகு அறிவிப்புகள். இன்னொரு பொதுமுடக்கத்தை நோக்கித் தமிழ்நாடு தள்ளப்பட்டுவிடக் கூடாது என்றால், அதற்கேற்ப கிருமித் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளை முழு மூச்சில் முன்னெடுக்க வேண்டியது அவசியம். தொற்று எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனைகளில் இடத் தட்டுப்பாடும், மருத்துவர்கள் - மருந்துகள் பற்றாக்குறையும் ஏற்பட்டு உயிரிழப்புகள் நேரும் அவல நிலைக்குத் தமிழ்நாடும் சென்றுவிடக் கூடாது. வடமாநிலங்களில் இப்போது மோசமான அத்தகு நிலை ஏற்பட போதிய மருத்துவக் கட்டமைப்பை இவ்வளவு காலமாக அங்கு ஆண்டுவந்த அரசுகள் உருவாக்காதது ஒரு முக்கியக் காரணம் என்றால், இருக்கும் கட்டமைப்புக்கு ஏற்ப தொற்றைக் கட்டுப்படுத்த உரிய நேரத்தில் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்காததும் ஒரு காரணம்.

சாமானியர்களின் பொருளாதாரப் புழக்கத்தில் முடக்கம் ஏற்படும்போது, அது பெருந்தொற்று ஏற்படுத்தும் பாதிப்பைவிட அதிகமாக இருக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கும் நாம், சாமானிய மக்களின் அன்றாடப்பாட்டைக் குலைத்துவிடாத வகையில் கட்டுப்பாடுகளைத் திட்டமிட வேண்டும். மக்கள் தங்கள் அன்றாடப்பாட்டுக்காக அண்டை மாவட்டங்களுக்கும், அத்தியாவசியத் தேவைகளுக்காக அண்டை மாநிலங்களுக்கும்கூடச் செல்வதற்கான நிலைமை இலகுவாக இருக்க வேண்டிய அதே சமயத்தில், தவிர்க்கக்கூடிய பயணங்கள், பெரிய அளவிலான கூடுகைகளுக்கு ஒரு குறுகிய காலகட்டத்துக்கேனும் தடை விதிக்கப்பட வேண்டும். அத்தியாவசியத் தேவைகள் மற்றும் சேவைகளின் பொருட்டு இயங்குவோர் தவிர, ஏனையோர் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை வெளியே நடமாடுவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு ஒரு நல்ல உதாரணம்.

மக்கள் நடமாட்டம் குறைக்கப்படும் இந்த நாட்களைத் திட்டமிட்டு தாம் செயலாற்றுவதற்கான அவகாசமாக அரசு எடுத்துக்கொள்ள வேண்டும். சென்ற முறை நமக்குப் பெரிய அளவில் கைகொடுத்த ‘காய்ச்சல் க்ளினிக்’குகளை சென்னையில் இருநூறாக உயர்த்தும் முடிவு நல்லது; இது அதிகமான பாதிப்புகளை எதிர்கொள்ளும் ஏனைய பிராந்தியங்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும். மருத்துவக் கட்டமைப்பை விஸ்தரிப்பதோடு மருந்துகள், தடுப்பூசிகளும் தடையின்றிக் கிடைப்பதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல, நோயாளிகளைச் சிறுமைப்படுத்தும் வகையில் வீதிகளைத் தகரத்தட்டிகள் கொண்டு அடைப்பது, வீடுகளைத் தனிமைப்படுத்தும் வகையில் அடைப்பது போன்ற அவலங்கள் மீண்டும் அரங்கேறாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x