Last Updated : 02 Dec, 2015 09:54 AM

Published : 02 Dec 2015 09:54 AM
Last Updated : 02 Dec 2015 09:54 AM

தலைவனுக்கு’ ஓட்டுப்போட்டு, தமிழ்நாட்ட தெறிக்க விடலாமா?!

மூணு தலைமுறையா ஒரே கட்சியில இருக்கவங்க, ஒரே சாமியக் கும்புடுதவங்க, ஒரே கொள்கையில ஊறிப்போனவங்க யாராச்சும் இருந்தா, தயவுசெஞ்சி இந்தக் கட்டுரையப் படிக்காதீங்க. ஏன்னா, இத எழுதுனவன் அந்த மாரி ஆளு கெடையாது.

எங்க தாத்தா சுப்பையா சுயமரியாதையவிட சாமிதாம் முக்கியம்னு நினைக்கிறவரு. ‘ஆலயப் பிரவேச உரிமை’ கெடைக்காத காலத்துலயே, உசந்த சாதி ஆளுக மாதிரியே ‘பாவ்லா’காட்டி, திருச்செந்தூர் கோயிலுக்குள்ள போய் சாமி கும்பிட்டாராம். பெத்த பிள்ளைக பூராம் செத்துப்போவுதேன்னு, ‘இனிமே பிள்ளை பிறந்தா ஆண்டிப்பண்டாரம் கையில குடுத்துட்டு, தவுட்டுக்குப் பிள்ளையை வாங்கிக்கிறேன் முருகா’ன்னு வேண்டிக்கிட்டவரு. கிருஷ்ணன் என்ற அழகான பேர் கொண்ட எங்கப்பாவுக்கு, ‘பிச்சைக்கனி’ன்னு பட்டப் பேர் வாங்கித்தந்த புண்ணியவான் அவரு.

அப்பா நாத்திகவாதி. சாமியவிட சுயமரியாதைதாம் முக்கியம்னு, வரி குடுக்கிற சொந்தக் கோயிலுக்கே போகாதவரு. பிள்ளைகளுக்குக் கோயில்ல முடியெடுப்பான்னு பெருசுக சொன்னதும், சரின்னு சலூனுக்குக் கூட்டிட்டுப் போய் மொட்ட போட்டவரு.

கோயில் கொடை நேரத்துல, சொக்காரன் (பங்காளி) கடைதானேன்னு பூராச்சாமியாடிகளும் அருளோட வந்து ஓசி கலர் கேட்பாங்க. இதுக்கு மேல குடுத்தா, கட்டுபடியாகாதுன்னு எப்ப தோணுதோ, அப்ப கலர் கீயை கீழே வச்சிட்டு, பகுத்தறிவு ஆயுதத்தை எடுத்திருவாரு அப்பா. அப்புறம் என்ன? பூராச்சாமியும் தெறிச்சி ஓடிரும்.

பாலும் நல்லாருக்கும்... எலுமிச்சம்பழ ஜூஸும் நல்லாருக்கும். ரெண்டையும் கலந்தா என்னாவும்? அப்பிடியொரு பிள்ளை நான். ஆன்மிகவாதிககிட்ட கடவுள் நம்பிக்கை உள்ளவனாகவும், முற்போக்குவாதிககிட்ட பகுத்தறிவாளனாவும் நடிச்சிக்கிட்டு இருக்கேன்.

காங்கிரஸ், திமுக, ரஜினி

இதே கதை அரசியலுக்கும் பொருந்தும். தாத்தா காங்கிரஸ்காரரு. அப்பா திமுக வெறியரு. ஆரம்ப கால எம்ஜிஆர் ரசிகர் வேற. சின்னப் புள்ளைகளுக்குப் பூராம் கலைஞர், கனிமொழி, அருட்செல்வன் (கருணாநிதி என்ற பெயரின் தூய தமிழ் வடிவமாம்), திராவிடச் செல்வி, உதயகுமார்னு பேர் வெச்சவரு. கூடப் பிறந்த தம்பிக்கு ‘அலிபாபா’ன்னு பேர் வெச்சிருக்காரு. ‘பிள்ள பொறந்தா பிச்சக்கனிகிட்ட சொல்லிறாம பேரு வெச்சிருங்கப்பா, இல்லன்னா அவென் பாட்டுக்கு ‘அடிமைப் பெண்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’னு பேர் வெச்சிறப்போறாம்’னு சொந்தக்காரங்க பூராம் சிதறி ஓடுற அளவுக்கு அப்பா கொள்கைவாதியா இருந்திருக்காரு.

நான் ஒரு மாதிரி ஆளு. பள்ளிக்கூடம் படிக்கும்போது, வருங்கால முதல்வர் ரஜினின்னு நோட்ல எழுதுனவன். காலேஜ் படிக்கும்போது அப்பாகிட்டயே திமுகவ விமர்சிக்கிற அளவுக்குத் துணிஞ்சிட்டேன்.

‘கலைஞர் இருக்கத்தண்டியும் திமுகவுக்குத்தாம் ஓட்டுப்போடுவேன்னு அப்பாகிட்ட சொல்லுலே’ன்னு ஒரு தடவை அம்மாவே என்கிட்ட கெஞ்சிருக்காவன்னா பாத்துக்கோங்களேன். இப்ப பிரச்சினையே இல்ல. அதாம் கலைஞர் முதல்வர் போட்டியிலயே இல்லியாமே? அதனால அடுத்த தேர்தல்ல யாருக்கு ஓட்டுப்போடுறதுன்னு ரஜினிய மாதிரி, வெளிப்படையா சொல்லுற உரிமை எனக்குக் கெடைச்சிருக்கு.

விஜயகாந்த் ஓகே

இன்னைக்கு நிலவரப்படி, புதுசா யாருக்கு ஓட்டுப்போடலாம்னு யோசிச்சேன். விஜயகாந்த் ஓகேன்னு தோணுது. வேற யாரையும் பிடிக்கல.

பூராப்பேரும் சிரிப்பீங்கன்னு தெரியும், சிரிங்க. ‘ஒரு மாசமா நான் பேப்பரே படிக்கல’ன்னு எந்த அரசியல்வாதியாவது உண்மையச் சொல்வாரா? ‘நீங்க கேட்கிற விஷயம் பற்றி கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவில் விவாதிச்சிட்டுப் பதில் சொல்றேன்’னு அடிச்சிவிடத் தெரியாத அப்பாவி விஜயகாந்த்.

சொந்தக் கட்சிக்காரனையே அடிக்கிற ஆளுன்னு சொல்வீங்க. எத்தனை பேரு சொந்தக் கட்சிக்காரனைக் கொன்னிருக்கானுவனு யோசிங்க? பத்திரிகையாளர்களை அடிக்கிறதும், பத்திரிகை ஆபீஸையே கொளுத்துறதும் அரசியல்வாதிங்களுக்குச் சாதாரணம். ஆனா, ‘தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ’ன்னு சும்மா மெரட்டுறது தப்பாம். நல்லா இருக்குய்யா உங்க நியாயம்?

அதெல்லாம் இருக்கட்டும்… விஜயகாந்த் எதற்காக முதல்வராக வேண்டும். காரணங்களைச் சொல்றேன் எண்ணிக்கோங்க.

கருணாநிதியை மாதிரி சொந்தக் குடும்பத்தையே கட்சியா பாவிக்கிற பாங்கு, ஜெயலலிதா மாதிரி தன்னைத் தவிர, கட்சியில வேற யாரையும் வளர விடாத தாராள மனம் ரெண்டுமே விஜயகாந்த்கிட்ட இருக்கு. இது போதாதா அவர் முதல்வராவதற்கு?

ஏர்போர்ட்ல இறங்குனா பேட்டி, இடுப்பளவு தண்ணியில நின்னா பேட்டின்னு தலைவனை ஓயாமத் தொந்தரவு பண்றாங்க பத்திரிகைகாரங்க. அவங்ககிட்ட இருந்து விஜயகாந்த்துக்குப் பாதுகாப்பு வேண்டாமா?

முதல்வராகிட்டா, 5 வருஷத்துக்கு 5 தடவை மட்டும் பிரஸ் மீட் வெச்சாப்போதும்ல, அதுக்காக.

சட்டசபை செய்திகள பத்திரிகைகள்ல படிக்க நல்லாவேயில்ல. பூராத்தையும் தணிக்கை பண்ணி வெளியிடுதாங்க. அதை லைவ்வா கேப்டன் டிவியில பாக்கலாம் பாருங்க, அதுக்காக.

25 வருஷத்துக்கு மேல சினிமாவுக்கு சேவை செஞ்சிட்டு, தன் மகனையும் சினிமா துறையில இறக்கியிருக்கிற கேப்டன், சொந்தமா ஒரு மல்டிஃபிளக்ஸ் தியேட்டராவது வாங்க வேண்டாமா? அதுக்காக.

திமுகவையும் அதிமுகவையும் கண்டபடி திட்டுற விஜயகாந்த் மட்டும் யோக்கியமான்னு கேட்கிறீங்கள்ல. அவர் யோக்கியமான்னு தெரிஞ்சுக்க வாய்ப்பு குடுக்க வேண்டாமா? அதுக்காக.

தமிழ்நாட்ல உள்ள அத்தனை கோர்ட்லயும் அவதூறு வழக்குல ஆஜரானவரு, தன்னை விமர்சிக்கிறவங்க மேலயும் கேஸ் போட வாய்ப்பு குடுக்கணுமில்லியா? அதுக்காக.

தமிழ்நாட்டுல கூட்டணி அமைச்சரவை அமைஞ்சதே இல்லியாம்ல. கம்யூனிஸ்ட்காரன் யாரும் அமைச்சரே ஆனதில்லியாம்ல? அதுக்காக.

அமைச்சர்கள் யார் யார்?

தேமுதிகவால தனிச்சி ஆட்சியமைக்க முடியாது. விஜயகாந்த் தலைமையில கம்யூனிஸ்ட், தமாகா, விடுதலைச் சிறுத்தை, முஸ்லிம் அமைப்புகள் எல்லாம் சேரணும். அப்பிடி, கூட்டணி ஆட்சி அமைஞ்சா, ஒன்றரை வருஷம்கூட தாக்குப்பிடிக்காதேன்னு சொல்றீங்களா? அதனால என்ன? எந்த ஆட்சியா இருந்தாலும் முத வருஷத்துலயே அதோட லட்சணம் தெரிஞ்சுபோயிருது. மிச்ச நாலு வருஷமும் எப்ப ஆட்சி மாறும்னு ஏங்கிக்கிட்டுதான இருக்கோம். அந்த வாய்ப்பைத் தலைவன்கிட்ட இருந்து ஆரம்பிப்போமே.

ஜெயிச்சா விஜயகாந்த் தாம் முதல் அமைச்சர். அவரோட சம்சாரம் மின்சாரத் துறை அமைச்சர், சுதீஷ் பொதுப்பணித் துறை அமைச்சர், தாமிரபரணி மணல் கொள்ளையைத் தடுத்த இந்திய கம்யூனிஸ்ட் நல்லகண்ணு கனிம வளத் துறை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர், முத்தரசன் தொழிலாளர் நலத் துறை அமைச்சர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சங்கரய்யா கல்வித் துறை அமைச்சர், ஜி.ராமகிருஷ்ணன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், திருமாவளவன் சிறுபான்மையினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர். கேட்க சூப்பரா இருக்குல்ல? விளையாட்டுத் துறை அமைச்சர் அமைச்சர் பதவி தனக்கு வேண்டாம்னு சொல்லிட்டாருன்னா வைகோவ சபாநாயகர் ஆக்கிறலாம்.

திமுக நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள். சட்டசபையில விஜயகாந்த்துக்கும், அந்தம்மாவுக்கும் சண்டை நடக்கும்போது மனசுக்குள்ள சிரிச்சாலும், முகத்தை சோகமா வெச்சுக்கிட்டு வேடிக்கை பாத்தீங்களே, அதேமாதிரி இந்தத் தேர்தலையும் ஜெயலலிதா, விஜயகாந்த்தை மோதவிட்டுட்டு திமுக ஒதுங்கி இருப்பது தான் கட்சிக்கும் நல்லது, ஸ்டாலினுக்கும் நல்லது.

முடிஞ்சா விஜயகாந்த் வெற்றிக்கு உதவி செய்யுங்க. அவர் ஜெயிச்சா, விஜயகாந்த்துக்குத் திராணி இருக்கான்னு கேட்ட ஜெயலலிதா, டென்ஷன்ல நிரந்தரமா ஓய்வெடுக்க வேண்டியது வரும். ஒன்றரை வருஷத்துல தானாவே ஆட்சி கவுந்துரும்.

அப்புறம் என்ன? அடுத்த தேர்தல் வரும்போது திமுகவுக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடும். ஸ்டாலின் இதைச் செய்யலைன்னா அழகிரி செய்வாரு. எப்பிடி வசதி?

- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x