Last Updated : 27 Dec, 2015 11:00 AM

 

Published : 27 Dec 2015 11:00 AM
Last Updated : 27 Dec 2015 11:00 AM

நேரு குடும்பத்தை காங்கிரஸால் ஏன் விட முடியவில்லை?

2014 மே மாதம் இந்தியாவிலும் பிரிட்டனிலும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பிரிட்டிஷ் நாடாளுமன்ற ஜனநாயக முறையைத்தான் நாமும் பாவிக்கிறோம். பிரிட்டனில் தொழிலாளர் கட்சிக்கு 232 தொகுதிகளில் மட்டும் வெற்றி கிட்டியது. 2010-ல் கிடைத்ததைவிட 24 இடங்கள் குறைவு. தொழிலாளர் கட்சியின் தலைவர் எட் மிலிபாண்ட் தோல்விக்குத் தார்மிகப் பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார்.

இதற்கிடையில், இந்தியாவில் மக்களவைப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 தொகுதிகளில் மட்டும் வென்றது. அதற்கு முந்தைய பொதுத் தேர்தலைவிட 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளை இழந்தது. இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் அவரவர் பதவிகளில் அப்படியே நீடித்தனர். கட்சியின் தோல்விக்குத் தங்களுடைய திறமைக் குறைவே காரணம் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் முகமாக இருந்தவர் ராகுல் காந்தி!

ஒற்றுமையா, அடிவருடித்தனமா?

அந்தத் தேர்தல் முடிவுக்குப் பிறகு ஒன்றரை ஆண்டுகள் ஓடிவிட்டன. அதற்குள் கட்சியின் மீது தங்களுடைய பிடியை இருவரும் மேலும் வலுப்படுத்திக்கொண்டுவிட்டனர். நேஷனல் ‘ஹெரால்ட் வழக்கு’ தொடர்பான அழைப்பாணைக்கிணங்க டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராக இருவரும் சென்றபோது இது வெளிப்படையாக உறுதிப்பட்டது. அது தனிப்பட்ட வழக்கு, தனி நபரால் அளிக்கப்பட்ட புகாரின் மீது விசாரிக்கப்படுவது; இருப்பினும் காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் நடைப் பயணமாக நீதிமன்றம் சென்றனர். இது குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்குத் தாங்கள் காட்டும் ஆதரவா அல்லது கட்சிக்குள் இருக்கும் ஒற்றுமையைக் காட்டும் முயற்சியா அல்லது அரசியல் ஆதாயத்துக்காகக் காட்டும் அடிவருடித்தனமா? பெரும்பாலும் கடைசியாகச் சொன்ன காரணமாகத்தான் இருக்கும்.

காங்கிரஸ்காரர்கள் சோனியா காந்தி அல்லது ராகுல் காந்திக்கு நெருக்கமாக நின்றுகொண்டு கேமராவில் பதிவாகத் துடித்தனர். இவ்விருவரை நெருங்க முடியாதவர்கள் குறைந்தபட்சம் பிரியங்கா காந்தியுடனாவது சேர்ந்து ‘காணப்பட்டுவிட’ முயன்றனர்.

காங்கிரஸ் கட்சி ஏன் இப்படி நேரு - காந்தி குடும்பத்தை மட்டுமே நம்பியிருக்கிறது? இந்தக் கேள்விக்குப் பதில் அளிப்பதற்கு முன், காங்கிரஸுக்குத் தலைமை தாங்க இக்குடும்பத்தைச் சாராத பிற தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் கட்சியின் நலன் நன்றாக இருக்கும் என்பதற்கான காரணங்களைக் கூற விரும்புகிறேன். இந்திய அரசியல் வரலாற்றில் காங்கிரஸ் கட்சிக்குப் படுதோல்வியை ஏற்படுத்தியது இப்போதைய நேரு - காந்தி குடும்பத்தவர்கள்தான். ஜவாஹர்லால் நேருவும் இந்திரா காந்தியும் இந்த நாட்டுக்கு என்ன நன்மைகளைச் செய்தார்கள் அல்லது செய்யத் தவறினார்கள் என்பது நினைவில் இல்லாத வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இக்குடும்பத்துக்குள்ள அரசியல் செல்வாக்கு தேய்பிறையாகிவருகிறது. இன்றைய இளைஞர்கள் நீங்கள் எந்தப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள், எந்த குடும்பத்திலிருந்து வருகிறீர்கள் என்றெல்லாம் பார்த்து வியப்படைவதில்லை. தலைமை தாங்க உங்களுக்குள்ள தகுதி என்ன என்றுதான் பார்க்கிறார்களே தவிர, உங்களுடைய அம்மா யார், அப்பா யார் என்றெல்லாம் கவலைப்படுவதில்லை. மிகப் பெரிய பாரம்பரியம் உள்ள கட்சிக்கு ஒரேயொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் தலைவராக முடியும் என்று குறுக்கிவிடுவதால், இவர்களைவிடத் திறமையும் அர்ப்பணிப்பு உணர்வும் அறிவாற்றலும் உள்ளவர்களுக்கு அந்தத் தலைமைப் பொறுப்பு மறுக்கப்படுகிறது. எனவே, காங்கிரஸ் கட்சி தன்னுடைய எதிர்கால நலன் கருதியும், நாட்டின் நலன் கருதியும் கட்சிக்குத் தலைமை வகிக்கத் திறமையுள்ள மற்றவர்களைத் தேட வேண்டும். கட்சி இதுவரை அப்படி எந்த முயற்சியையும் எடுக்கவில்லை, இனியும் எடுக்கும் என்பதற்கான அறிகுறிகளும் இல்லை.

மகத்துவமும் ஒளிவட்டமும்

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவி மீது காந்தி - நேரு குடும்பத்தின் உடும்புப் பிடிக்குக் காரணங்கள்தான் என்ன?

முதலாவதாக, நேரு - காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் கட்சிக்குத் தலைமை தாங்கிய ஒரு நேரத்தைக் கட்சியில் எவராலும் நினைவுகூரவே முடியாது. அந்த அளவுக்குக் குடும்பத்தின் ஆதிக்கம் தொடர்ச்சியாக இருக்கிறது. 1975-ல் சஞ்சய் காந்தியைத் தன்னுடைய அரசியல் வாரிசாக முடி சூட்டினார் இந்திரா. அதிலிருந்து குடும்ப ஆதிக்கத்துக்கு உட்பட்ட கட்சியாகிவிட்டது காங்கிரஸ். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சில காலத்துக்கு மட்டுமே நேரு - இந்திரா குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைவராக இருந்தார்.

அடுத்த காரணம், காங்கிரஸுக்கு எதிராக வாக்களித்த லட்சக்கணக்கான மக்களைப் போல அல்லாமல், காங்கிரஸ் கட்சியின் தூண்களாக விளங்கும் தலைவர்களான குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஷீலா தீட்சித், மீரா குமார் போன்றோர் நேரு காந்தி குடும்பத்தின் பெயருக்கே ஒரு மகத்துவம் இருப்பதாகவும் அவர்களுடைய புகழ் ஒரு ஒளிவட்டத்தைத் தாங்கி நிற்பதாகவும் இப்போதும் நம்புகின்றனர். தங்களையெல்லாம் குறுகிய வட்டத்துக்குள் செயல்படும் மாநிலத் தலைவர்களாகவும் நேரு காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிராந்தியங்களைக் கடந்த, சாதிகளைக் கடந்த, மொழிகளைக் கடந்த அரசியல் ஈர்ப்பு உள்ள தேசியத் தலைவர்களாகவும் கருதுகின்றனர். இந்தத் தலைவர்களின் செல்வாக்கு சரிந்துவருவதை காங்கிரஸ் கட்சிக்கு வெளியே உள்ளவர்கள் கண்டுவந்தாலும் நேருவைப் போல, இந்திராவைப் போல, ராகுல் காந்தியும் தேர்தலில் தங்களுக்கு வெற்றியை அள்ளிவந்துவிடுவார் என்று நம்புகின்றனர்.

முதல் குடும்பத்துக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் உள்ள உறவானது மன்னனுக்கும் அவருடைய குடிமக்களுக்கும் இடையிலான உறவு போன்றது, பிரபுவுக்கும் அவருக்கு அடிமைப்பட்ட மக்களுக்கும் இடையிலான உறவு போன்றது. நேரு - காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனித்தன்மை வாய்ந்த சிறப்பாளர்கள் என்று நம்புகின்றனர். இந்த அரசியல் ராஜ குடும்பத்தின் சாம்ராஜ்யம் சுருங்கிக்கொண்டிருந்தாலும், இவர்களை நீக்கிவிட்டு இன்னொருவரை ராஜாவாக்க காங்கிரஸ் குடிமக்கள் நினைப்பதே இல்லை.

முதல் குடும்பத்தின் மீது காங்கிரஸ்காரர்களுக்கு உள்ள விசுவாசமானது மனதை நெருடுவதாகவும் முட்டாள்தனமாக வும் இருக்கிறது. 1977-ல் இந்திரா காந்தி தலைமையில் போட்டி யிட்டபோதும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பெருந்தோல்வியைப் போலவே 2014-லும் ஏற்பட்டுவிட்டதாகக் கருதுகின்றனர். அந்தத் தோல்வியிலிருந்து இந்திரா எழுந்து வந்ததைப் போலவே சோனியாவும் ராகுலும் எழுந்து வருவார்கள் என்று நம்புகின்றனர். வேறு சிலரோ சோனியா, ராகுலால் முடியாததை பிரியங்கா காந்தி சாதித்துக் காட்டுவார் என்று நம்புகின்றனர்.

நேரு - காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்களை காங்கிரஸ் கட்சியினரால் ஏன் கைவிட முடியவில்லை என்றால், அவர்களால் மட்டுமே கட்சியை ஒற்றுமையாக ஒரு தலைமையின் கீழ் வைத்திருக்க முடியும் என்று நம்புகின்றனர். இதர காங்கிரஸ் தலைவர்களின் பதவிப் பேராசையையும் கோஷ்டி மனப்பான்மையையும் அடக்கி அனைவரையும் இணைக்கும் பசையாக, உறுதியை வலுப்படுத்தும் காரையாக நேரு - காந்தி குடும்பம்தான் இருக்க முடியும் என்று உளமார நம்புகின்றனர்.

மூடுமந்திர வருமானம்

காங்கிரஸ் கட்சியை இப்போதும் எதிர்காலத்திலும் ஒற்றுமையாக வைத்திருக்கக்கூடிய இன்னொரு அம்சம், நேரு காந்தி குடும்பத்தாரிடம் அல்லது அவர்களுடைய நெருங்கிய ஆலோசகர்களிடம் மட்டுமே இருக்கிறது; ‘அது’ கட்சியின் நிதி ஆதாரங்கள். இதை யாராலும் மறுக்கவோ, உறுதிப்படுத்தவோ முடியாது. அரசியல் கட்சிகளுக்குக் கிடைக்கும் வருவாயின் மூலம் எது என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று தகவல் அறியும் சட்டம் வலியுறுத்தினாலும் காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளின் வருமானம் பற்றிய தகவல்கள் மூடுமந்திரமாகவே இருக்கின்றன. மக்களுக்கு மட்டுமல்ல, கட்சியில் உள்ள பெரும்பாலானவர்களுக்கே அதைப் பற்றிய விவரங்கள் தெரியாது. காங்கிரஸின் பெட்டகத்துக்கான சாவி, எண். 10, ஜன்பத் சாலையில் வசிக்கும் கட்சியின் தலைமைக்கு வேண்டப்பட்ட ஒரு சிலரிடம் மட்டுமே இருப்பதாக நம்பப்படுகிறது. தேர்தலில் கட்சிக்குப் படுதோல்வி கிட்டிய பிறகும்கூட இவர்களால் எப்படித் தலைமையில் நீடிக்க முடிகிறது என்பதற்கான பதில் இதில்தான் அடங்கியிருக்கிறது.

எம்.ஜே. அக்பரின் கருத்து

பிரபல பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பர் இப்போது பாஜகவில் உறுப்பினர். ஒரு காலத்தில் காங்கிரஸில் இருந்தார். ஜவாஹர்லால் நேரு குறித்த வரலாற்று நூல் எழுதிய நவீன வரலாற்றாசிரியர் என்ற வகையில், அவர் சில கருத்துகளைக் கூறுகிறார். ஒரு காலத்தில் காங்கிரஸ் என்றால், நாடு அதைப் பார்த்த கண்ணோட்டமே வேறு. சுதந்திரப் போராட்டத்தை நாடு தழுவிய மக்கள் இயக்கமாக நடத்தியது காங்கிரஸ். தேச நலனும் மக்கள் நலனும்தான் அதற்கு முக்கியமாக இருந்தன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சுதந்திரமான, ஐக்கிய இந்தியாவைக் கட்டி எழுப்பும் பணியில் பெரும் பங்கு வகித்தது காங்கிரஸ். நாட்டின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் பாடுபட்டது காங்கிரஸ். அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக இல்லாவிட்டாலும் வலிமையான, துடிப்பான எதிர்க் கட்சியாகச் செயல்பட்டு நாடாளு மன்றத்திலும் வெளியிலும் மக்களுடைய பிரச்சினைகளை ஆட்சியாளர்களின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருக்கும் அம்மாவும் மகனும் கட்சியில் இல்லாமல் இருந்திருந்தால் - என்கிறார்.

எம்.ஜே. அக்பரின் ஆதங்கம் பாஜகவின் எல்லா தலைவர்களாலும் உளமாரப் பகிரப்படுவது அல்ல. காங்கிரஸ் கட்சி தேய்ந்துவருகிறதே என்று மனமார கவலைப்படப்போகிற பாஜக தலைவர் எவரும் இருக்கப்போவதில்லை. காங்கிரஸ் இல்லாத பாரதமே லட்சியம் என்று தேர்தலின்போது முழங்கியவர்தான் நரேந்திர மோடி. அக்பரின் கருத்துகளே என் நெஞ்சத்திலும் அலையலையாக வந்து மோதுகின்றன. இந்நாட்டின் சுதந்திரத்திலும் வளர்ச்சியிலும் உன்னதமான பங்கெடுத்த காங்கிரஸ் தொடர்ந்து அமைப்புரீதியாகவும் வேறு வகையிலும் தேய்ந்துவருவது மனச் சோர்வையே ஏற்படுத்துகிறது.

சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x