Published : 09 Apr 2021 03:12 am

Updated : 09 Apr 2021 06:19 am

 

Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 06:19 AM

ஒரு ஓட்டின் மதிப்பு என்ன?

value-of-one-vote

கோவையைச் சேர்ந்த 105 வயது பெரியவர் மாரப்பன் கரோனா அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் கோடை வெயிலில் நடையாகவே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்துச் சென்ற செய்தியைப் படித்தபோது, எனக்கு குல்சும் பீவி நினைவில் வந்தார்; திருச்சியில் செய்தியாளராகப் பணியாற்றிய காலகட்டத்தில் அறிமுகமானவர்; அப்போது அவருக்கு 116 வயது; நத்தர்ஷா பள்ளிவாசலில் யாசகம் பெறுபவராக அமர்ந்திருந்தார்; அந்த நிலையிலும் எந்தத் தேர்தலிலும் வாக்களிக்கத் தவறியதே இல்லை. ஈரோட்டுப் பெரியவர் ராமதாஸ் அவரைப் பின்தள்ளிவிட்டார்; உயிரிழந்த மனைவிக்கு அவசர அவசரமாக ஈமச் சடங்குகளை முடித்துவிட்டு வாக்களித்துச் சென்றவர் இவர்.

தன் வேலைக்கு ஒரு மாதம் ஓய்வு கொடுத்துவிட்டு, தன்னுடைய கட்சிக்குத் தேர்தல் பணியாற்றுவதற்காக வாக்குப்பதிவுக்கு இரு வாரங்கள் முன்பு கோவில்பட்டி சென்ற சுப்பிரமணியனுக்குத் தேர்தல் இன்னும் முடியவில்லை. வாக்குப்பதிவு வரை அவர் பிரச்சாரத்தில் சுற்றிக்கொண்டிருந்தார். இப்போது கட்சி அவரைக் கண்காணிப்புப் பணியில் அமர்த்தியிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை வரை வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ‘பாதுகாக்கப்பட்ட அறை’யை இரவு பகலாக ராணுவப் படையினரும், காவல் துறையினரும் மட்டும் கண்காணிக்கவில்லை; சுப்பிரமணியன் போன்ற பல நூறு அரசியல் தொண்டர்களும் சுழற்சி முறையில் வெளியே அந்தக் கட்டிடங்களைக் கண்காணித்தபடி வெயிலில் காய்ந்துகொண்டிருக்கிறார்கள். வெறுமனே கட்சிப் பணி என்று இதைச் சுருக்கிவிட முடியாது.


சென்னையில் காலையில் நான் வாக்களிக்கச் சென்றபோது வாக்குச்சாவடிக்கு மக்கள் அலையலையாக வந்துசென்றுகொண்டிருந்தனர். வாக்குச்சாவடிக்குள் நுழையும்போது, பக்கத்தில் உள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்த இரு பெரியம்மாக்கள் எதிரே என்னைக் கடந்து சென்றனர். பட்டுச்சேலை, தலை நிறைய மல்லிகைப்பூ, கருப்பு நெற்றியின் மத்தியில் பெரிய சிவப்புக் குங்குமப் பொட்டு, அதன் மேலே திருநீற்றுப் பூச்சு, இரண்டுக்கும் மத்தியில் ஒரு மஞ்சள் சந்தனக் கீற்று நிறைந்த அவர்களுடைய பொலிந்த முகங்கள் தேர்தல் உள்ளடக்கியிருக்கும் வேறொரு அர்த்தப்பாட்டைச் சட்டென்று அந்த இடத்துக்கு வெளிக்கொண்டுவந்ததுபோல இருந்தது.

பெரும்பாலான கூட்டம் திருவிழாவுக்குச் செல்வதுபோல சீவி சிங்காரித்துத்தான் ஓட்டுப்போட வந்துசெல்கிறது. ஏன் சில நிமிடங்கள் மட்டுமே இருந்து கடக்கும் ஒரு வாக்குச்சாவடிக்கு மக்கள் இவ்வளவு அலங்காரத்துடன் வந்துசெல்கிறார்கள் என்று சின்ன வயதில் தோன்றுவது உண்டு; அது ஓர் ஆன்மிகத்தன்மையை உள்ளடக்கியிருப்பது வாக்குப்பதிவு இயந்திரம் முன் நிற்கும்போது புரிந்தது. வெளியே காத்திருக்கும் மக்கள் கூட்டத்தின் மத்தியில் நான் ஒவ்வொரு முறை வாக்கு இயந்திரத்தின் முன் நிற்கும்போதும் என்னை அறியாமல் உணர்ச்சிப் பெருக்குக்கு ஆளாவதுண்டு. வாக்குப் பொத்தானை அழுத்துவதானது, எந்த வல்லமையும் இல்லாத ஒரு சாமானியர் இந்த ஒட்டுமொத்த உலகினுடைய விதியின் மீதும் நிகழ்த்தக்கூடிய ஒரு சிறு மோதல்தான். கண்ணுக்குத் தெரியாத அரசு எனும் பெரும் சக்தியுடன் ஒரு ஆட்டத்துக்கான வாய்ப்பை அது அளிக்கிறது. இதுவும் இல்லையென்றால் தனக்கு முன்னுள்ள சர்வ வல்லமை மிக்க இந்த அரசினுடைய இயக்கத்தில், உலகத்தினுடைய போக்கில் ஓர் எளிய மனிதருக்கு என்ன கட்டுப்பாடு இருந்துவிட முடியும்?

உலகெங்கும் தேர்தல்களில் நான்கில் ஒரு பங்கினர் அல்லது மூன்றில் ஒரு பங்கினர் வாக்களிக்காமலே போவதும், வாக்களிக்க அடித்தட்டு மக்கள் முன்வரிசையில் நிற்பதும், புறக்கணிப்பதில் நடுத்தர வர்க்கம் பெரும்பான்மை வகிப்பதும் தொடர்ந்து ஆய்வுக்குள்ளாக்கப்பட்டுவருகிறது. ‘வாக்களிப்பவர்கள் இந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கட்டும், சோம்பல்பட்டு வீட்டிலேயே தூங்குபவர்கள் நாசமாகப்போகட்டும்!’ என்று தள்ளிவிட முடியவில்லை. ஜனநாயகம் என்பது எல்லோருக்கும் முடிவுகளில் சமவாய்ப்பு அளிப்பது மட்டும் அல்ல; முடிவெடுக்கையில் எல்லோரையும் அரவணைப்பதும் ஆகும்.

உலகின் சில நாடுகளைப் போல இந்தியாவிலும் எல்லோரும் வாக்களிப்பதைக் கட்டாயமாக்கும் முயற்சிகள் குஜராத்தில் நடந்தன. வாக்களிக்காததைக் குற்றமாகக் கருதும் நடவடிக்கையின் ஆரம்பம்தான் அது. பிரச்சினை என்னவென்றால், வாக்களிப்பது எப்படி ஒருவரின் உரிமையோ, வாக்களிக்காமல் இருப்பது அப்படி ஒருவரின் சுதந்திரமாகவும் இருக்கிறது. ஆனால், வாக்களிப்பதைப் போல வாக்களிக்காமல் இருப்பதையும் ஒருவரின் உரிமையாகக் கருத முடியுமா? சிக்கலான கேள்வி இது.

காஷ்மீர் மக்கள் பல சந்தர்ப்பங்களில் தங்களுக்கு இந்திய அமைப்பின் மீது இருக்கும் அதிருப்தியைத் தேர்தல் புறக்கணிப்பு வழியாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். கிராமங்களில் தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டிக்கும் வகையிலும், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்ப்பந்திக்கும் வகையிலும் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பை ஒரு ஆயுதமாக மக்கள் கைக்கொள்வதைத் தமிழ்நாட்டிலேயே பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறோம். இதுவும் ஒரு வகையான அரசியல் செயல்பாடுதான். ஜனநாயகப் பங்கேற்புதான். ஆனால், தன்னுடைய வாழ்க்கை முழுமையும் தன்னுடைய சுயமுனைப்பால் நடக்கிறது என்று கருதி ‘அரசும் அரசியலும் தெண்டம்; அரசியலர்கள் கேவலமானவர்கள்’ என்ற எண்ணத்தில் வாக்களிப்பைப் புறக்கணித்து, தேர்தல் நாளை மற்றொரு விடுமுறை நாளாகக் கருதிக் கடப்போரையும் ஒன்றாக்கிப் பார்க்க முடியுமா?

கரூரிலிருந்து பேசிய நண்பர் ராம்பிரசாத், “உங்க சென்னை ஆளுங்களுக்கு என்ன கேடு?” என்று கேட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு நடந்த இடங்களில் அதிகபட்சம் கரூர் (83.92%); குறைந்தபட்சம் சென்னை (59.06%). “எல்லா வாய்ப்பு வசதிகளையும் முதல்ல வாரிச்சுருட்டிக்குறது நகரங்கள்தான். வாய்ப்பு வரிசைல கடைசியா இருக்குற எங்களை மாதிரி ஆளுங்கதான் ஜனநாயகத்தைத் தாங்கிப்பிடிக்கணுமா?” என்பது அவருடைய முறைப்பாடு. ஜனநாயகம் வளரும்போது மக்கள் தங்களுக்கான வாய்ப்பு வசதிகளைப் பெறும் வரிசையில் நகரங்கள் முன்னுரிமை பெறுகின்றன. வாய்ப்பு வசதிகள் எளிதாக வந்தடைவதாலேயே எது அவற்றையெல்லாம் அடையக் காரணமோ, அந்த ஜனநாயகத்தின் தேவை தன்னுடைய அன்றாட வாழ்க்கையில் இல்லை என்ற முடிவுக்கு நகரவாசிகள் வந்துவிடுகின்றனர். இது நகைமுரண்.

அரசியலும் ஜனநாயகமும் பிரிக்க முடியாதவை. அரசியலையும் அரசியலர்களையும் வெறுப்பவர்களுடைய ஜனநாயகக் காதல் அர்த்தமற்றது, கேலிக்கூத்தானது. என்னுடைய அன்றாட வாழ்க்கைக்கு இந்த அமைப்பு பயன்படவில்லை; பயன்படாத ஓர் அமைப்பின் மீது எனக்கு எந்தப் பற்றும் வேண்டியதில்லை என்று கூறுவோரின் குரல் கவனிக்கப்பட வேண்டும், அவர்களும் அரவணைக்கப்பட வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆயினும் வேறோர் அமைப்பைக் கட்டுவதையும்கூட இந்த அமைப்புடன் ஊடாடாமல் எங்கனம் மேற்கொள்ள முடியும்?

வாக்களிப்பதைப் புறக்கணிக்க ‘என்னுடைய வேட்பாளர்கள் மோசம், இருக்கும் எல்லா அரசியல் கட்சிகளும் மோசம், நீடித்திருக்கும் அரசியல் அமைப்பு மோசம்’ என்று கூறப்படும் எல்லா நியாயங்களையும்விட ஒரு ஓட்டின் எல்லை எப்படியும் விஸ்தீரணமானது என்று கருதுகிறேன். ஹிட்லருக்கு அளிக்கப்பட்ட ஒரு ஓட்டு, ஜெர்மன் வரலாற்றோடு முடிந்துவிடவில்லை. ஜார்ஜ் புஷ் தன்னுடைய அரசியல் பயணத்தை டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து ஆரம்பித்தார்; குண்டு விழுந்து உயிர்களைக் குடித்து முடித்தது ஆப்கனில். அந்தந்தக் கலாச்சாரங்களிலிருந்தே இதற்கான விதைகள் முளைத்தெழுகின்றன என்றாலும், மேம்பட்ட ஜனநாயகத்தைப் பேசுபவர்கள்தான் ஜனநாயகத்தை மேம்படுத்த ஏனையோரைக் காட்டிலும் கூடுதலாகப் பொறுப்பெடுத்துக்கொள்ளவும், ஜனநாயகத்தோடு உறவாடவும் உழைக்கவும் வேண்டியிருக்கிறது. ஒரு ஓட்டானது இந்த உலகத்தின் அரசியல் போக்கில் ஒரு மெல்லிய, அதேசமயம் தொடர் அதிர்வுகளைக் கொண்ட கூரிய வருடல். ஒதுங்கிக்கொள்ளுதல் தீர்வல்ல.

- சமஸ், தொடர்புக்கு: samas@hindutamil.co.in


ஒரு ஓட்டின் மதிப்பு என்னVoteகுல்சும் பீவிமாரப்பன்வாக்குப் பதிவுகரோனா அச்சுறுத்தல்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x