Published : 31 Mar 2021 03:15 AM
Last Updated : 31 Mar 2021 03:15 AM

களத்தில் பவனி: சூடு பறக்கும் நெல்லை மண்டலம்

சட்டமன்றத் தேர்தல் பரபரப்போடு, குமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் பரபரப்பும் சேர்ந்திருப்பதால் நெல்லை மண்டலத்தில் சூட்டுக்குக் குறைவில்லை. 22 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட இந்தப் பிராந்தியத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு விதங்களிலான சவால்களை எதிர்கொள்கின்றன அரசியல் கட்சிகள்.

தமிழகத்தின் ஏனைய எந்த மண்டலத்தையும்விடவும் சாதி – மத அரசியல் அதிகம் செல்வாக்கு செலுத்தும் களம் ஆகும். அதேபோல, திமுக – அதிமுகவோடு பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று தேசியக் கட்சிகளும் செல்வாக்கோடு திகழும் பகுதிகளை உள்ளடக்கிய மண்டலம் இது. கூட்டணி அடிப்படையில் திமுகவுக்கு முந்தும் சக்தி அதிகம் என்பதால், தீவிரப் பணிக்குத் திட்டமிட்டு தூத்துக்குடிக்கு அமைச்சர் காமராஜ், கன்னியாகுமரிக்கு தளவாய் சுந்தரம், நெல்லைக்கு அமைச்சர் உதயகுமார் மூவரையும் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்திருக்கிறது அதிமுக. தன்னுடைய தென் மண்டலப் பொறுப்பாளராக கனிமொழியைத் திமுக நியமித்திருப்பதும், அவருடைய மக்களவைத் தொகுதியான தூத்துக்குடி இந்த மண்டலத்திலேயே வருவதும் அவருடைய நேரடிப் பொறுப்புக்குக் கீழ் இந்த மண்டலம் வர வழிவகுத்திருக்கிறது.

சூடு பறக்கும் குமரி

மக்களவை இடைத்தேர்தல் வேட்பாளராக, மறைந்த உறுப்பினரான வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டிருக்கிறார். “அப்பா விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்வேன்” என்று சொல்லிப் பிரச்சாரம் செய்கிறார் விஜய் வசந்த். தொகுதியில் சொந்தச் செல்வாக்கையும் கொண்டிருந்தவர் வசந்தகுமார் என்பதால், கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளோடு அனுதாப ஓட்டும் கிடைக்கும் என்று இந்தக் கூட்டணி கணக்கிடுகிறது.

சிறுபான்மையினச் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரை எதிர்த் தரப்பு நிறுத்தும்போது, கடந்த காலங்களில் ‘இந்து வேட்பாளர் – இந்துவல்லாத வேட்பாளர்’ என்ற பிரச்சாரம் பாஜகவுக்கு ஒரு பலத்தைக் கொடுத்தது; சாதிரீதியாக நாடார் சமூக வாக்குகளின் திரட்சிக்கும் அது பெருமளவில் வழிவகுத்தது. பதிலுக்கு காங்கிரஸ் தரப்பிலும் ‘இந்து, அதே நாடார் சமூக வேட்பாளர்’ என்ற உத்தி முன்னெடுக்கப்படும்போது, மேற்கண்ட பிரச்சாரத்துக்கு வழியில்லாமல் போகிறது. கூட்டணி பலத்தை மட்டுமே கொண்டு களம் இறங்குகையில் அனைத்துச் சமூகங்களின் வாக்குகளையும் இரு தரப்புகளும் பெற வேண்டியது கட்டாயம் ஆகிறது. இது உருவாக்கும் நிர்ப்பந்தத்தைக் களத்தில் காண முடிகிறது. “பத்து ஆண்டுகள் நான் அமைச்சராக இருந்திருக்கிறேன். கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் நான் செய்த துரோகம் என்ன? அப்படி எதையாவது நிரூபித்தால், அரசியலை விட்டே ஒதுங்குகிறேன்” என்று பிரச்சாரம் செய்கிறார் பாஜக வேட்பாளராகக் களம் இறங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

இன்னோர் உதாரணம், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றே முக்கால் லட்சம் மீனவர் வாக்குகள் உள்ளன. இவர்கள் வாழ்வாதாரமான கடல் தொழில் பாதிப்புக்குள்ளாவது அரசியல் களத்தில் மிக முக்கியமான ஒரு பிரச்சினை. கீழமணக்குடி - கோவளம் இடையே அமையவிருந்த சரக்குப் பெட்டக மாற்று முனையத்தை அனுமதிக்கக் கூடாது என மீனவர்கள் தொடர்ந்து போராடிவந்தனர். 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வி அடைய இந்தத் திட்டத்துக்கு ஆதரவான அவருடைய நிலைப்பாடு ஒரு முக்கியமான காரணம். விளைவாக, முந்தைய தேர்தலில் ‘வளர்ச்சி’யின் பெயரில், ‘சரக்குப் பெட்டக மாற்று முனையம்’ அமைப்பதாகப் பிரச்சாரம் செய்த பொன்.ராதாகிருஷ்ணன், இந்தத் தேர்தலில் “மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டங்களையும் கொண்டுவர மாட்டேன்” எனப் பிரச்சாரம் செய்கிறார். வலுவான வேட்பாளர் என்பதோடு, அவருடைய அரசியல் வாழ்வின் மிக முக்கியமான யுத்தமாகவும் இது பார்க்கப்படுவதால், தீவிரமாகப் பணியாற்றுகிறது பாஜக.

கவன ஈர்ப்பு கோவில்பட்டி

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிதான் நெல்லை மண்டலத்தின் நட்சத்திரத் தொகுதி. அமைச்சர் கடம்பூர் ராஜுவும், அமமுக சார்பில் டி.டி.வி.தினகரனும் களத்தில் நிற்கின்றனர். திமுக கூட்டணி சார்பில் நிற்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் சீனிவாசனும் சளைத்தவர் அல்ல. கடம்பூர் ராஜு சொந்த பலத்திலேயே யுத்தத்தை முன்னெடுக்க தினகரன் தமிழகம் முழுவதும் பயணிப்பதால், அவருக்காக அமமுகவின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளரும் உள்ளூரில் செல்வாக்கு மிக்கவருமான மாணிக்கராஜா தொகுதிக்குள் சுற்றிச் சுழன்றுவருகிறார். சீனிவாசனுக்காகக் களம் இறங்கியிருப்பது எழுத்தாளர்கள் படை. சீனிவாசன் எளிய மக்களுக்கு நெருக்கமானவர், நல்ல செயல்பாட்டாளர் என்பதைத் தாண்டி தீவிரமான வாசகரும்கூட. விளைவாக, கி.ரா., பூமணி, சோ.தர்மன், கலாப்ரியா, ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி, பா.செயப்பிரகாசம், சமயவேல், தேவதச்சன் என்று ஐம்பது படைப்பாளிகள் சீனிவாசனுக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்ட அறிக்கை தமிழ்நாட்டில் முன்மாதிரி இல்லாத நிகழ்வு என்று சொல்லலாம். வெறும் அறிக்கையோடு முடித்துக்கொள்ளாமல், பல எழுத்தாளர்கள் சுழற்சி முறையில் மக்களைச் சந்தித்து வாக்குகளையும் சேகரிக்கின்றனர்.

ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பில் பூங்கோதை ஆலடி அருணாவும், அதிமுக சார்பில் மனோஜ் பாண்டியனும் களத்தில் நிற்கின்றனர். பனங்காடு படையின் சார்பில் பிரச்சாரத்துக்கு, உடல் முழுக்க தங்கத்தோடு வந்து செல்லும் ஹரி நாடார் இந்தத் தொகுதியைத் தாண்டியும் சமூகவலைதளங்கள் வழியே காட்சிப்பொருளாகி இருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு ஆகியவை முக்கிய பேசுபொருள்களாகப் பேசப்படுகின்றன. கூடவே, தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவில் இருக்கும் உப்பளத் தொழிலாளர்கள், தீப்பெட்டி, கடலைமிட்டாய் தயாரிப்புத் தொழிலாளர்களின் வாக்குகளை வளைக்க அனைத்துக் கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கின்றன. குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ‘பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்காக பாஜக அரசு நாடு தழுவிக் கொண்டுவந்த 10% இடஒதுக்கீடு’ ஒரு முக்கிய பேசுபொருளாக இருக்கிறது. திமுக சார்பில் இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது என்று ராஜுக்கள், பிள்ளைமார், நாயர் சமூக மக்களிடம் பிரதான பிரச்சாரமாக முன்வைக்கிறது பாஜக. மூன்று மாவட்டங்களிலுமே, அதிமுக அரசும் பாஜகவும் இணைந்து செயலாற்றிய ‘தேவேந்திர குல வேளாளர்’ பெயர் மாற்றத்தை அதிமுக – பாஜக கூட்டணி பேசுகிறது. ‘திமுக இந்து விரோதக் கட்சி’ என்று தாக்குதலையும் அது நடத்துகிறது. பதிலுக்கு, ஒன்றிய – மாநில அரசுகளின் செயல்பாடுகளைப் பட்டியலிட்டு ‘தமிழ்நாட்டின் உரிமைகளைப் பலி கொண்ட கூட்டணி அதிமுக – பாஜக கூட்டணி தங்கள் தவறுகளை மறைக்க இப்போது சாதி – மத அரசியல் கூட்டணியாகவும் மாறிவிட்டிருக்கிறது’ என்று தாக்குகிறது திமுக கூட்டணி.

ஆரம்பத்திலிருந்தே பாஜக ஆதரவாளராக இருந்தும் கூட்டணியில் உரிய மரியாதை கிடைக்காததால் ஒட்டப்பிடாரம் தனித் தொகுதியில் தனித்துக் களமிறங்கும் கிருஷ்ணசாமி, அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு வந்து வேட்பாளர் ஆகியிருக்கும் நயினார் நாகேந்திரன், 20 ஆண்டுகளாகத் தொகுதியைத் தக்கவைத்திருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன், தொண்டர்களின் எதிர்ப்பை மீறி தொகுதியைப் பெற்றாலும், முன்னாள் கட்சி சகாக்கள் இருவரைப் போட்டி வேட்பாளர்களாக எதிர்கொள்ளும் விஜயதரணி, தமிழக அரசின் டெல்லிப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ்ராஜன், சண்முகநாதன் இப்படியான பிரமுகர்கள் கனஜோர்களுக்கு மத்தியில், சீமான் பிரச்சாரம், கமல் பிரச்சாரம் நீங்கலாகப் பெரிய கவன ஈர்ப்புகள் இல்லாமல் சுயபலத்தில் தேர்தலை எதிர்கொள்கின்றனர் நாதக, மநீம கட்சியினர்.

மக்கள் எல்லாவற்றையும் திருவிழாபோல பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

- என். சுவாமிநாதன், தொடர்புக்கு: swaminathan.n@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x