Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM

திருச்சி மண்டலத்தில் அனல் தகிக்கும் பிரச்சாரங்கள்

தமிழகத்தின் மத்திய மண்டலம் என்று அழைக்கப்படுவது திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகியவற்றையும் காவிரிப் படுகை மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகியவற்றையும் உள்ளடக்கியது. இந்த 9 மாவட்டங்களிலும் மொத்தம் 41 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் அதிக அளவாக திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளும், குறைந்த அளவாக பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் தலா 2 தொகுதிகளும் உள்ளன.

தொழிலகங்கள் நிறைந்த திருச்சி, கரூர், சிமென்ட் தொழிற்சாலைகள் நிறைந்த பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்துமே விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் அதிகம் கொண்ட மாவட்டங்களாகும்.

நட்சத்திர வேட்பாளர்கள்

மத்திய மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளில் இந்தத் தேர்தலில் திமுக – அதிமுக இடையே 26 தொகுதிகளில் நேரடிப் போட்டி நிலவுகிறது. இதில் குறிப்பாக திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், ஓ.எஸ்.மணியன், எஸ்.காமராஜ், முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், ஆர்.வைத்திலிங்கம், பாஜகவின் அண்ணாமலை ஐபிஎஸ் ஆகியோர் தேர்தல் களத்தில் உள்ள குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள்.

வழக்கமாக நடைபெறும் தேர்தல்களை விட இந்தத் தேர்தல் திமுக – அதிமுக கட்சிகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், இனி தங்கள் அரசியல் வாழ்க்கைக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுவிடும் என்பதால் இரு கட்சிகளும் வெற்றி பெற வேண்டும் என்பதில் தீவிரம் காட்டிவருகின்றன. பல இடங்களில் தேர்தல் களம் கடும் வெயிலையும் தாண்டி சூடு பறக்கிறது. விராலிமலைத் தொகுதியில் போட்டியிடும் சுகாதாரத் துறை அமைச்சர் கே.விஜயபாஸ்கருக்கு ஆதரவாக அவரது மகளும், மன்னார்குடி தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது மகனும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

பிரச்சாரத்தின்போது மக்களைக் கவர்வதற்காகவும், ஊடகங்களின் வெளிச்சம் தங்கள் மீது பட வேண்டும் என்பதற்காகவும் டீக்கடைகளில் டீ போடுவதும், மண்வெட்டியை எடுத்துக்கொண்டு விவசாயப் பணியாற்றுவதும், இஸ்திரி போடுவதும், முகச் சவரம் செய்வதும், வயலில் களை எடுப்பதும், ஹோட்டலில் உணவு சப்ளை செய்வதும், புரோட்டா போடுவதும், சிலம்பம் சுற்றுவதும் என வேட்பாளர்கள் செய்யும் வித்தியாசமான பிரச்சார உத்திகள் பல இடங்களில் நகைக்குப்புக்கு உரியதாக மாறிவிடுகின்றன. இதில் உச்சமாக, நாகப்பட்டினம் அதிமுக வேட்பாளர் தங்க.கதிரவன் பிரச்சாரத்தின்போது துணி துவைத்துக்கொண்டிருந்த பெண்களிடம் சேலையை வாங்கி, தான் துவைத்துக் கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானது.

அள்ளித் தெளிக்கப்படும் வாக்குறுதிகள்

தனித்தனியே தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தாலும் பிரச்சாரங்களுக்குச் செல்லும் இடங்களில் பிரதானக் கட்சிகளின் வேட்பாளர்கள் பல்வேறு வகையான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துவருகிறார்கள். குறிப்பாக, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் இந்தத் தொகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான செலவுகளைத் தாங்களே ஏற்றுக்கொள்வதாகப் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளனர். இதுபோல பாலம் கட்டித்தருவேன், அரசுக் கல்லூரி கொண்டுவருவேன், அடிப்படை வசதிகளைத் செய்துதருவேன் என வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துவருகின்றனர். ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளரின் கட்சியே ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தாலும், அவர் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா என்பது சந்தேகம்தான் எனும் அளவில் வாக்குறுதிகளை வாரி வழங்குகிறார்கள்.

திமுகவுக்கு அதன் தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, மகளிரணிச் செயலாளர் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் தொகுதிகளைப் பகிர்ந்துகொள்ளும் நிலையில் அதிமுகவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மட்டுமே பிரச்சாரத்துக்குப் பெரிதும் நம்பியுள்ளனர். இதேபோல, அமமுகவினர் டி.டி.வி.தினகரனையும், மநீமவினர் கமல்ஹாசனையும் நாதகவினர் சீமானையும் தங்கள் தொகுதிக்கு வரவழைப்பதில் போட்டிப் போட்டாலும் எல்லாத் தொகுதிகளிலும் போதுமான அளவுக்குப் பிரச்சாரத்தில் ஈடுபட அவர்களால் முடியவில்லை. இது களத்தில் இந்தக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஒரு சறுக்கலாக இருக்கிறது.

நிர்ணயிக்கும் சக்திகள்

மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் திமுக, அதிமுகவுக்கும் இடையில் பெரிய அளவில் வாக்கு வங்கியில் ஏற்றத்தாழ்வு இல்லை என்றாலும், அமமுகவுக்கு இந்தப் பகுதியில் உள்ள செல்வாக்கு அதிமுகவுக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. மேலதிகம், விவசாயிகள் சார்ந்த பிராந்தியம் என்பதால் ஹைட்ரோ-கார்பன் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியானது மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான அலையில் பெரும் செல்வாக்கு வகித்தது. இப்போது சட்டமன்றத் தேர்தலிலும் மாநில உரிமைப் பறிப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஊழல் குற்றச்சாட்டுகள் இவற்றோடு உள்ளூர்ப் பிரச்சினையாக விவசாயத்தின் எதிர்காலம் முக்கியமாகப் பேசப்படுகிறது. அதே சமயம், விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவித்த வகையில் விவசாயிகள் மத்தியில் அதிமுக மீதான எதிர்ப்புணர்வு குறைந்திருப்பதைக் காண முடிகிறது. இதே போல திமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தில் குடும்ப வாரிசு அரசியல், கடந்த ஆட்சிக் காலத்தின் குறைபாடுகள் முக்கியமாகப் பேசப்படுகின்றன. மேலும், வேட்பாளர்கள் தேர்வில் திமுக, அதிமுக கட்சிகளில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாகப் பல இடங்களில் சொந்தக் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கப்பட்டதும், சில இடங்களில் சமாதானம் ஆன சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

திருச்சி மாவட்டத்தில் பேட்டைவாய்த்தலையில் ரூ.1 கோடி பிடிபட்டதையடுத்து மாவட்ட ஆட்சியர், காவல் துறைக் கண்காணிப்பாளர். சார் ஆட்சியர் உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரூரில் உள்ள நிதி நிறுவனங்களில் ரூ.5 கோடி, விராலிமலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் சகோதரரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் என அவ்வப்போது வெளிவரும் செய்திகளும் பிரச்சாரத்தில் பேசுபொருளாகின்றன.

- எஸ். கல்யாணசுந்தரம்,

தொடர்புக்கு: kalyanasundaram.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x