Published : 15 Feb 2021 03:12 AM
Last Updated : 15 Feb 2021 03:12 AM

பள்ளித் தேர்வுகளை நடத்துவதன் சவால்கள் என்னென்ன?

பெருந்தொற்றானது 2020-21 கல்வியாண்டுக்கு முற்றிலுமாக பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறது. 10-ம் வகுப்புக்கும் 12-ம் வகுப்புக்கும் தற்போது தேர்வுகளை நடத்துவதில் உள்ள சவால்கள் என்னென்ன? இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திர பூஷனும் தமிழ்நாடு மாநிலத்தின் அரசுத் தேர்வுகளுக்கான முன்னாள் இயக்குநர் கே. தேவராஜனும் தங்கள் கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள்.

பள்ளித் தேர்வுகள் தற்போது எழுத்துத் தேர்வுகளாக நடத்தப்பட வேண்டுமா?

சந்திர பூஷன் ஷர்மா: வழக்கமான எழுத்துத் தேர்வுகளுக்கு நாம் திரும்ப வேண்டிய தருணம் இது என்று நினைக்கிறேன். 18 வயதுக்குக் கீழே உள்ளவர்கள்தான் கரோனாவால் மிகக் குறைவாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களால் கரோனாவை எதிர்த்துப் போராட முடியும். ஆனால், வழக்கமான கற்றல் செயல்பாடு நடைபெறாத சூழலை எதிர்த்து அவர்களால் போராட முடியாது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் 40 கோடி பேர் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டு, இயல்பாக வாழ முடியாத இந்த வாழ்க்கை பெருந்தொற்றைவிட மோசமானது. நீட் தேர்வை நாம் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம். ஆகவே, வாரியத் தேர்வுகளை எழுத்துத் தேர்வுகளாக நடத்துவது நல்ல முடிவாக இருக்கும்.

கே. தேவராஜன்: வாரியத் தேர்வுகளைக் கைவிட முடியாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் அவற்றை எப்போது நடத்துவது என்பதுதான் கேள்வி. பெரும்பாலான மாணவர்களுக்கு இணைய வகுப்புகளின் அனுபவம் கிடைக்கவில்லை. மேலும், பெரும்பாலான ஆசிரியர்கள் இணையவழிக் கல்வி வழங்குவதற்கு ஏற்றவாறு பயிற்சி பெறவில்லை. சில தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களும் இணைய வழியில் வகுப்பெடுப்பதற்குத் திணறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நானறிவேன். ஆகவே, நேரடியான வகுப்புகளைத் தொடங்கிவிட்டு அதற்குப் பிறகு தேர்வு நடத்துவதைப் பற்றி முடிவு செய்யலாம். தேர்வுகளை நடத்துவதற்கென்று ஒரு வாரியம் இருக்கிறது. ஆனால், வகுப்புகள் நடந்தனவா இல்லையா என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. என்னுடைய பார்வையில் மூன்று மாதங்களுக்கு முதலில் வகுப்புகள் நடைபெற வேண்டும். அதன் பிறகு அந்த காலப் பகுதிக்குள் நடத்தப்பட்ட பாடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். மிச்சமுள்ள பாடப் பகுதிகளுக்குப் பிறகு தேர்வு நடத்தலாம்.

இணைய வசதியைப் பொறுத்தவரை நகர்ப்புறம்/ கிராமப்புறம் சார்ந்து ஏற்றத்தாழ்வு நிலவுவதால் 10-ம், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும், நாடு முழுவதும் ஒரே மாதிரி தேர்வு நடத்துவது நியாயமாக இருக்குமா?

சந்திர பூஷன் சர்மா: ஏற்றத்தாழ்வான நிலை காணப்படுகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். சில மாணவர்களுக்கு நவீனத் தகவல் தொடர்பு சாதனங்கள் கிடைக்கும், நல்ல ஆசிரியர்கள் கிடைப்பார்கள்; மற்றவர்களுக்கு அப்படிச் சொல்ல முடியாது. ஆனால், ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது, எந்த அளவுக்குத் தேர்வுகளைத் தள்ளிப்போடுகிறோமோ அந்த அளவுக்கு அவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை நாம் தட்டிப்பறிக்கிறோம்.

கே.தேவராஜன்: தமிழ்நாடும் கூட ஒரு கல்வித் தொலைக்காட்சி அலைவரிசையைத் தொடங்கியது. சிக்கல் என்னவென்றால் கிராமங்களில் தடையற்ற மின்சாரம் கிடைப்பது இல்லை. சில வீடுகளில் ஒரே ஒரு தொலைக்காட்சிப் பெட்டிதான் இருக்கும். பெற்றோர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதால் அந்த நேரத்தில் பிள்ளைகள் கல்வி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு அவர்கள் அனுமதிப்பதில்லை. அப்படியே தொலைக்காட்சியைப் பார்த்தாலும் அதில் நடத்தப்படும் பாடங்கள் அவர்களுக்குப் புரிவதில்லை. பாடங்களை மாணவர்கள் புரிந்துகொண்டிருக்கின்றனரா என்பதைப் பரிசோதித்துப் பார்த்த பிறகே தேர்வுகளை நடத்த வேண்டும். இல்லையென்றால், நகர்ப்புறங்களைச் சேர்ந்த மேல்தட்டு வர்க்கத்தினரின் பிள்ளைகளுக்கு மட்டும்தான் உயர்கல்வி வாய்ப்புகள் கிடைக்கும். இப்போதும் கூட, பெரும்பாலான மாணவர்கள் பொறியியல் படிப்பின் முதல் ஆண்டில் நடத்தப்படும் தேர்வுகளில் தோல்வியுறுகிறார்கள். நான் சொல்ல வருவது என்னவென்றால், முதலில் மாணவர்களைப் பள்ளியில் நன்கு படிக்க வைக்க வேண்டும். பாடத்திட்டத்தை நிறைவுசெய்ய வேண்டும். அதன் பிறகு அவர்கள் உயர் கல்வி நிலையங்களில் சேர்வதற்கு அனுமதிக்க வேண்டும். கல்வியாண்டை ஜனவரி வரை தள்ளிப்போடலாம். ஆறு மாதங்களை மட்டுமே நாம் இழப்போம். கல்வி ஆண்டு ஜூனில்தான் தொடங்க வேண்டும் என்று யார் முடிவுசெய்தது?

இந்த ஆண்டுக்கு மட்டும் மாணவர்களுக்குப் பிரத்தியேகமான தேர்வுக் கொள்கை உருவாக்க அவசியம் இருக்கிறதா?

சந்திர பூஷன் சர்மா: அதிகாரத் தரப்பினரின் கண்ணோட்டத்தி லேயே பள்ளிக் கல்வியைப் பார்க்க நாம் பழகிவிட்டோம். ஆசிரியர்களை நாம் நம்புவதில்லை, அதிகாரத்தின் உயர்தரப்பிலேயே கடினமான கொள்கைகளை உருவாக்கி அவற்றைப் பின்பற்றும்படி ஆசிரியர்களிடம் கூறுகிறோம். அருணாசல பிரதேசத்திலும் பள்ளிகள் இருக்கின்றன, ஒருவருக்குக்கூட கரோனா தொற்று ஏற்பட்டிராத தொலைதூரக் குக்கிராமங்களிலும் பள்ளிகள் இருக்கின்றன. இந்தப் பள்ளிகளில் வழக்கமான கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் நடைபெற விடாமல் ஏன் தடுத்து நிறுத்தினோம்? இணையத் தொடர்பு இல்லாத பகுதிகளில் வழக்கமான வகுப்பறைச் செயல்பாடுகள் நடைபெற விடாமல் ஏன் தடுத்து நிறுத்தினோம்? ஏனெனில், டெல்லியிலிருந்தோ, சென்னை, பாட்னா, ஜெய்பூரிலிருந்தோ வரும் மையப்படுத்தப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் நாம் முடிவெடுக்கிறோம். களத்தில் உள்ளவர்கள், அதாவது பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் போன்றோர் குறிப்பிட்ட சூழலை நன்றாகப் புரிந்துகொண்டிருப்பவர்கள் என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

பள்ளிக் கல்வியின் நிர்வாகியாகவும் வாரியத் தேர்வுகளை நடத்தியவராகவும் அனுபவம் கொண்ட நீங்கள் மாணவர்களுக்கு அதிகச் சிரமம் இல்லாமல் இந்தத் தேர்வுகளை நடத்துவதற்கு என்ன அறிவுரைகளைக் கூறுவீர்கள்?

கே. தேவராஜன்: எல்லாத் தேர்வு வாரியங்களின் தலைவர்களையும் ஒன்றுகூட்டி ஒரு கூட்டத்தை சிபிஎஸ்ஈ நடத்தியிருக்க வேண்டும், பாடத்திட்டத்தைக் குறைப்பதன் மூலம் அழுத்தத்தை ஏற்படுத்தாத தேர்வுகளை எப்படி நடத்துவதென்று முடிவுசெய்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. பாடப் புத்தகங்களைச் சுருக்குவதிலும் பலனில்லை. மின்சாரத்தைப் பற்றி ஆறேழு பக்கங்களில் ஒரு பாடம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை எப்படி ஒரே பக்கமாகச் சுருக்குவீர்கள்? பாடப் புத்தகங்களின் ஆசிரியராகச் சொல்கிறேன், அது மிகவும் கடினம்.

இரண்டாவது முறையாகவும் தேர்வில் தோல்வியுறும் மாணவர்களுக்கு உடனடியாக மறுபடியும் தேர்வு எழுத வாய்ப்புகள் வழங்கலாம் அல்லவா?

சந்திர பூஷன் சர்மா: நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். நாம் நமது தேர்வுகளை மிகவும் இறுக்கமானவையாக மாற்றிவிட்டோம். அதனால்தான் ஏராளமான மாணவர்கள் தற்கொலைசெய்துகொள்கிறார்கள். திறந்தநிலைப் பள்ளிக்கல்விக்கான தேசிய நிறுவனத்தின் தலைவராக நான் இருந்திருக்கிறேன். அதில் நாங்கள் சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறோம். அதில் மாணவர்களே தேர்வு நாளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். எல்லாத் தேர்வு வாரியங்களும் இதைப் பின்பற்றலாம் என்றே நம்புகிறேன். ஒரு தேர்வை நடத்தி மாணவர்களை மதிப்பீடு செய்வதைவிட பல தேர்வுகளை நடத்த வேண்டும். அது ஏன் நடப்பதில்லை? கல்வியைப் பொறுத்தவரை எல்லா முடிவுகளும் அதிகாரத் தரப்பைச் சார்ந்ததாகவே இருக்கின்றன. கொள்கை முடிவு எடுப்பவர்கள் மாணவர்களுக்குக் கல்வி கற்பித்ததில்லை. ஒரு குழந்தை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி அவர்களுக்கு ஏதும் தெரியாது. ஆகவே, வகுப்பில் பாடம் எடுத்தவர்கள், மாணவர்களையும் அவர்களின் மனநிலையையும் அறிந்தவர்கள் ஆகியோரின் கையில்தான் பள்ளிக் கல்வித் துறை இருக்க வேண்டும்.

மாணவர்களை மதிப்பீடு செய்யும் முறையைப் பொறுத்தவரை வழிகாட்டும் நெறிமுறைகள் ஆசிரியர்களிடம் கொடுக்கப்பட வேண்டும்… “உங்கள் மதிப்பீடுதான் மிக மிக முக்கியமானது, அதை நேர்மையாகச் செய்யுங்கள்” என்று அவர்களிடம் சொல்லிவிட்டால் அவர்கள் காரியத்தைக் கச்சிதமாகச் செய்துமுடிப்பார்கள். நமது ஆசிரியர்களை நம்புவதை நாம் நிறுத்திவிட்டோம். அதனால்தான் தற்போது ஏராளமான விஷயங்கள் குறித்து முடிவெடுக்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். வகுப்பறையானது ஆசிரியரின் கட்டுப்பாட்டிலும் பள்ளியானது தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டிலும் இருக்கட்டும்.

‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x