Published : 11 Feb 2021 03:12 AM
Last Updated : 11 Feb 2021 03:12 AM

உத்தராகண்ட் வெள்ளம் உணர்த்தும் உண்மைகள்

உத்தராகண்டின் நந்தாதேவி மலையின் பனியாறு சிதைவுற்று ஏற்பட்ட வெள்ளத்தில் பல உயிர்கள் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. புவியியல்ரீதியில் இந்தப் பிராந்தியம் எந்த அளவுக்கு எளிதில் பாதிப்படையக் கூடியது என்பதையே இந்தத் துயரச் சம்பவம் உணர்த்துகிறது. அந்தப் பனியாற்றின் பெருந்துண்டுகள் ரிஷிகங்கா நதியிலும் தௌலிகங்கா நதியிலும் கலந்ததால் அருகே இரண்டு நீர் மின் திட்டங்களில் பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் அகப்பட்டுக்கொண்டனர்.

வெள்ளத்தில் ஏராளமானோர் அடித்துச்செல்லப்பட்டனர். இந்தத் துயரத்துக்கிடையிலும் ‘இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை’யாலும் ராணுவத்தாலும் 15 பேர் உடனடியாகக் காப்பாற்றப்பட்டிருப்பது சிறு ஆறுதலைத் தருகிறது. இந்த வெள்ளமானது அந்தப் பகுதியையே முடக்கிப்போட்டிருக்கும் வேளையில், மீட்பு நடவடிக்கைகளும் நிவாரணப் பணிகளும் கடும் முட்டுக்கட்டைகளை எதிர்கொண்டிருக்கின்றன.

இந்த நேரத்தில் ஒன்றிய அரசும் உத்தராகண்ட் அரசும் அந்த மாநிலத்தில் அடிக்கடி ஏற்படும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளைப் புறக்கணிக்க இயலாது. இந்த மாநிலத்தின் ஆழமான பள்ளத்தாக்குகளில் நிலநடுக்கத்தைப் பற்றிய கவலையின்றி ஏராளமான நீர் மின் திட்டங்கள், அணைகள் கட்டப்பட்டன. தேரி அணை கட்டப்பட்ட பகுதியில் 1991-ல் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்ட பின், சுற்றுச்சூழல் சார்ந்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. மேலும் 2013-ல் கேதார்நாத்தில் ஏற்பட்ட வெள்ளமும் அந்தப் பிரதேசத்தை மோசமாகப் பாதித்தது. அணைகளால் ஏற்படும் சிறு சிறு நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், நிலையற்ற பனிஏரிகள் போன்றவை அந்தப் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் மாறிக்கொண்டே இருப்பதை உணர்த்திக்கொண்டிருக்கின்றன.

கரிம உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியா நீர் மின் திட்டங்களை அதிக அளவில் உருவாக்கிக்கொண்டிருக்கிறது, இவற்றில் பெரும்பாலானவை இமயமலைப் பகுதியில் அமைந்திருக்கின்றன. ஒரு மதிப்பீட்டின்படி பார்த்தால் இமயமலையில் 28 நதிகளின் பள்ளத்தாக்குகளில் அணைகளைக் கட்டும் இந்தியாவின் திட்டம் நிறைவுபெற்றால், இந்திய இமயமலைப் பகுதியில் ஒவ்வொரு 32 கிமீக்கும் ஒரு அணை இருக்கும். இது உலக அளவில் மிக அதிகச் செறிவிலானது ஆகும்.

இந்த அளவுக்கு அடர்த்தியில் அணைகள் கட்டப்பட்டால் நிலநடுக்கங்கள், பருவகால இடர்கள், கேதார்நாத்தில் ஏற்பட்டது போன்ற வெள்ளங்கள், அதிக அளவிலான உயிர்ப் பன்மை இழப்பு, மிக முக்கியமாக மலைச்சாரலில் இருக்கும் சமூகங்களுக்குப் பாதிப்பு என்று ஏராளமான பிரச்சினைகள் ஏற்படும் என்று சூழலியர்கள் எச்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். அணைகளின் ஆயுளை அதில் படியும் வண்டல் குறைத்துக்கொண்டிருப்பது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

எடுத்துக்காட்டாக, இமாச்சல பிரதேசத்தில் உள்ள பக்ரா அணையில் மதிப்பிடப்பட்டதைவிட 140% வண்டல் காணப்படுகிறது. இவையெல்லாமே இமயமலைப் பகுதியில் நீர் மின் திட்டங்கள் அந்தச் சூழலுக்கு எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பதை உணர்த்துகின்றன. பெரிய அணைகளால் ஏற்படும் நன்மையைவிட, அவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் என்பது உலக அளவில் நிரூபணமாகிவரும் சூழலில், இந்திய அரசும் இது தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டியதையே உத்தராகண்ட் உள்ளிட்ட இமயமலைப் பகுதிகளில் ஏற்படும் இயற்கைச் சீற்றங்கள் நமக்குக் கூறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x