Published : 09 Feb 2021 03:13 AM
Last Updated : 09 Feb 2021 03:13 AM

எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்துவார் ஒவைஸி?

அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவர் அஸதுதீன் ஒவைஸி அரசியல் சமன்பாடுகளையெல்லாம் சிக்கலுக்குள்ளாக்குகிறார். மையநீரோட்ட மதச்சார்பற்ற கட்சிகளும் முஸ்லிம் வாக்காளர்களும் கொண்டிருக்கும் நெருக்கமான பிணைப்பை அவர் கலைத்துவிடுகிறார். இந்தியாவில் பிரபல்யத்துக்கான குறியீட்டெண்ணில் பாஜகவின் மும்மூர்த்திகளான நரேந்திர மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு அருகில் அவர் வருகிறார்.

அண்மையில் பிஹாரில் ஏஐஎம்ஐஎம் பெற்ற வெற்றிகள், தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் மேற்கு வங்கம் (2021), உத்தர பிரதேசம் (2022) ஆகிய மாநிலங்களுக்கு ஒவைஸி சென்றுவந்தது எல்லாம் அவரது உண்மையான நோக்கம் என்ன, முஸ்லிம் வாக்காளர்களின் வாக்களிப்பு முறைகள் எப்படி இருக்கும், பாஜகவுக்கும் அதன் எதிர்கட்சிகளுக்கும் இந்த முறைகள் எப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்தும் என்பனவற்றைக் குறித்த விவாதங்களுக்குப் புத்துயிர் கொடுத்துவிட்டன.

தேசிய அளவில் ஒவைஸியின் அவதாரமானது சச்சார் குழுவின் அறிக்கை, பாட்லா இல்லத்தில் நடந்த மோதல் கொலை வழக்கு போன்றவற்றால் தூண்டப்பட்ட அரசியல் இயங்குமுறைகளின் சேர்க்கையின் விளைவு ஆகும். அப்போது அரசியல்ரீதியிலான இந்துத்துவத்தின் செல்வாக்கு சரிவில் இருந்தது, முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலை, அவர்களின் பாதுகாப்பின்மை ஆகியவற்றின் ஊடாட்டம் அந்தச் சமூகத்தின் நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு நடந்துகொள்வதில் மதச்சார்பற்ற மையநீரோட்டக் கட்சிகள் அடைந்த தோல்வியை வெளிப்படுத்தியது.

இது ஒரு மதச்சார்பற்ற முரணை உருவாக்கியது, பாஜகவின் தோல்வி, காங்கிரஸும் பிராந்திய கட்சிகளும் அடைந்துகொண்டிருந்த வெற்றிகளின் நடுவே முஸ்லிம்களுக்குத் தவறிழைத்ததாக மதச்சார்பற்ற கட்சிகள் மீது பெரும்பாலான முஸ்லிம் இயக்கங்கள் குற்றம் சுமத்தின. இப்படியாக அந்தச் சமூகம் முஸ்லிம் இயக்கங்களுடனான பரீட்சையையும் மேலதிகப் பிரதிநிதித்துவத்துக்கான கூக்குரலையும் தொடங்கியது. உத்தர பிரதேசத்தின் ‘பீஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா’, ‘ராஷ்ட்ரீய உலமா கவுன்சில்’ போன்றவையும் அஸாமின் ஏஐயூடிஎஃப் கட்சியும், பிஹாரில் அலி அன்வர் அன்சாரியின் தலைமையிலான பஸ்மண்டா இயக்கமும், 2012-லிருந்து மஹாராஷ்டிரம், கர்நாடகம், பிஹார், உத்தர பிரதேசம் தற்போது மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஏஐஎம்ஐஎம் கட்சியும் முஸ்லிம் சமூகத்துக்குள் ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சியையே சுட்டுகின்றன.

ஆரம்பத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சியும் சில குறைகளைக் கொண்டிருந்தது. முதலாவதாக, அது ஒரு நகரம் சார்ந்த கட்சியாக மட்டுமே இருந்தது. இரண்டாவதாக, 2004 ஆந்திர பிரதேசச் சட்டமன்றத் தேர்தல் வரை அந்தக் கட்சியால் 4 இடங்களுக்கு மேல் வெல்ல முடியாத நிலை காணப்பட்டது. மூன்றாவதாக, 1989, 1994 தேர்தல்கள்போல அந்தக் கட்சி எப்போதெல்லாம் ஹைதராபாதுக்கு வெளியில் போட்டியிட முயன்றதோ அப்போதெல்லாம் அது படுதோல்வியடைந்திருக்கிறது.

அந்தத் தேர்தல்களில் முறையே 35 தொகுதிகளிலும் 20 தொகுதிகளிலும் போட்டியிட்டு முறையே 28 தொகுதிகளிலும் 15 தொகுதிகளிலும் வைப்புத்தொகையை இழந்தது. இப்படியாக, வெளியில் காலூன்றுவதற்கு முன்பு தனது சொந்த மண்ணில் தனது செல்வாக்கை வலுப்படுத்த வேண்டிய கடினமான பணி ஒவைஸியின் முன்னே இருந்தது. ஆகவே, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடன் சேர்ந்துகொள்ளும் பாதுகாப்பான பாதையை ஒவைஸி தேர்ந்தெடுத்தார். 2008-ல், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கான ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக்கொண்ட பிறகு நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் அரசுக்கு ஒவைஸி ஆதரவு அளித்தார்.

தேசிய அளவிலான அபிலாஷைகள்

2009-க்குள் இரண்டு காரணிகள் ஒவைஸிக்கு உதவிக்கொண்டிருந்தன. நாடாளுமன்றத்தில் தேவைப்படும் தருணங்களில் அவர் செய்யும் இடையீடுகள் தேசிய அளவில் முஸ்லிம்களுக்கான சிறந்த குரலாய் அவரை நிறுவின. இரண்டாவது, ஹைதராபாதில் அதிக சட்டமன்றத் தொகுதிகள் உருவாகும் வகையில், அதாவது முஸ்லிம்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதிகளில், செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு, ஒவைஸியின் கட்சிக்கு அதிக இடங்களைப் பெற்றுத்தந்து பிராந்திய அளவில் அவரை வலுப்படுத்தியது. இது நாடு தழுவிய அளவிலான அவரது அபிலாஷைகளுக்கு நெய்யூற்றியது. 2012-க்குள் அந்தக் கட்சி அருகிலுள்ள இரண்டு மாநிலங்களை – மஹாராஷ்டிரத்தையும் கர்நாடகத்தையும் – குறிவைத்தது, குறிப்பாக நிஜாம் ஆட்சியில் முந்தைய ஹைதராபாத் சமஸ்தானத்துக்குக் கீழ் இருந்த, முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகமாக இருந்த பகுதிகளைக் குறிவைத்தது.

தன் செல்வாக்கை நாடெங்கும் விரிக்க வேண்டும் என்ற இந்தக் கட்சியின் அபிலாஷைகளுக்கு 2012 அக்டோபரில் முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டது. அப்போது கிழக்கு மஹாராஷ்டிரத்தின் நாண்டேடு நகராட்சித் தேர்தலில் அது போட்டியிட்ட 25 இடங்களில் 11-ல் வெற்றிபெற்றது. அப்போது ஒவைஸி மதச்சார்பின்மை முரண் கோட்பாட்டைப் பின்பற்றி – இந்து மதவாத சக்திகளுக்கு காங்கிரஸ் உறுதுணையாக நடந்துகொள்கிறது என்றும் முஸ்லிம்களின் நலனுக்கு எதிராக நடந்துகொள்கிறது என்றும் குற்றம்சாட்டி, ஆந்திரத்திலும் மத்தியிலும் காங்கிரஸுக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொண்டது.

ஒவைஸியின் அரசியல் நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்தால் அவருடைய கணக்குகள் புரியும். பாஜகவுக்கும் அரசியல் இந்துத்துவத்துக்கும் மாற்றினை உருவாக்கும் தனது தேடலில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு மூன்றாவது அணியை உருவாக்க முயன்றுகொண்டிருக்கிறார். அதில் ஏஐஎம்ஐஎம் கட்சி தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடமிருந்து சிறுபான்மை வாக்குகளை ஈர்க்கும் காந்தமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, 2018-ல் கர்நாடகத்தில் காங்கிரஸை ஆதரிக்காமல் மதச்சார்பற்ற ஜனதா தளத்தையே ஒவைஸி ஆதரித்தார், மஹாராஷ்டிரத்தில் 2014-லும் 2019-லும் பாஜகவைக் குறிவைப்பதைவிட காங்கிரஸையும் தேசியவாத காங்கிரஸையுமே அதிகமாகக் குறிவைத்தார். அதே வகைமாதிரி பிஹாரில் 2015, 2020 ஆகிய ஆண்டுகளிலும் உத்தர பிரதேசத்தில் 2017-லும் பின்பற்றப்பட்டது. தற்போது, வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸையும் முதல்வர் மம்தா பானர்ஜியையும் ஒவைஸி குறிவைத்திருக்கிறார், அதேபோல் 2022 உத்தர பிரதேசச் சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் போன்றவற்றை ஒவைஸி குறிவைப்பார்.

அரசியல் உளவியல்

ஒவைஸியின் அரசியலால் பாதிக்கப்படும் கட்சிகள் அவரை பாஜகவின் கூட்டாளி என்று முத்திரை குத்துவதில் வியப்பில்லை. எனினும், மதச்சார்பற்ற பிரதானக் கட்சிகள் மீதான ஒவைஸியின் தாக்குதலுக்குப் பின்னுள்ள காரணம் என்பது அவரால் தவிர்க்க இயலாத ஒன்று. ஒவ்வொரு மாநிலத்திலும் ஏஐஎம்ஐஎம் கட்சி வெல்ல நினைக்கும் தொகுதிகள் சிறுபான்மையினர் அதிகம் உள்ள தொகுதிகள். அவற்றில் மேற்கண்ட கட்சிகளே இதுவரை செல்வாக்கு செலுத்திவந்தன. அந்தத் தொகுதிகளுக்காக மல்லுக்கட்ட வேண்டுமென்றால் பாஜகவைவிட அந்தக் கட்சிகளை நோக்கியே அவர் கணைகளை விடுக்க வேண்டியிருக்கிறது.

மூன்று மாநிலங்களை எடுத்துக்கொள்வோம்: பிஹார், வங்கம், உத்தர பிரதேசம். உத்தர பிரதேசத்தில் மட்டும், மீரத்-முஸாஃபர்நகர்-சஹரன்பூர் பகுதிகளில் ஷேக்குகள், சய்யிதுகள், குரேஷிகள் மற்றும் பிறரைப் போல முலே ஜாட்கள், தியாகி முஸ்லிம்கள், குஜ்ஜார் முஸ்லிம்கள் போன்ற சாதிகள் காணப்படுகின்றன. ரோஹில்கண்ட் பகுதியில் துருக்கியர்கள், பதான்கள், சைஃபிகள், அன்சாரிகள், இன்ன பிறர் தங்கள் சாதி அடையாளங்களைப் பராமரித்துவருகிறார்கள்.

பிராஜில், குறிப்பாக அலிகர் நகரத்தில், தங்கள் செல்வாக்கினை இழந்துவிட்ட உயர்சாதி பதான்கள் சிறுசிறு அளவில் காணப்படும் பகுதிகள் உள்ளன. பிஹாரில் பிற்படுத்தப்பட்ட சாதியினரான அன்சாரி முஸ்லிம்கள் அரசியல்மயப்பட்டிருக்கிறார்கள்; போஜ்புரியும் மிதிலா மொழியும் பேசப்படும் மாவட்டங்களில் அவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள்; ஏஐஎம்ஐஎம் கட்சி சமீபத்தில் தேர்தல் வெற்றிகளை ருசித்த சீமாஞ்சல் பகுதியில் உயர்சாதி சூரஜ்பூரிகளுக்கும் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரான குலையா முஸ்லிம்கள், ஷெர்ஷாவாடி முஸ்லிம்கள் ஆகியோருக்கு இடையிலான பகைமை வெகு பிரசித்தம்.

மேலும், வடக்கு வங்கத்தின் கூச்பெஹார், அலிபுர்துவார், ஜல்பாய்கூரி போன்ற இடங்களில் நாஷ்யா ஷேக் முஸ்லிம்கள் கணிசமான அளவில் காணப்படுகின்றனர். தெற்கு வங்கத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களை ஷேக்குகளாக அடையாளப்படுத்திக்கொண்டாலும் அவர்கள் இதர பிற்பட்ட வகுப்பினராக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்கள் ஃபுர்ஃபுரா ஷரீஃபை அல்லது ஜாமியத்-உலமா-இ-ஹிந்தை பின்பற்றுபவர்களாகப் பிரிந்துகிடக்கிறார்கள்.

இந்தப் பின்னணியில், மூர்க்கமான இந்துத்துவச் சொல்லாடல் குறித்த அச்சம் அவர்களின் மனதைப் பாதிக்கவில்லையென்றால் உள்வேறுபாடுகளையெல்லாம் வெளிப்படையாகக் காண்பிக்கக் கூடிய வகையில்தான் முஸ்லிம்களின் உளவியல் உள்ளது. எனினும், தேர்தல்கள் மிகவும் பிளவுபட்ட நிலையில் பாஜகவின் உடனடி வெற்றி பற்றிய அச்சம் முக்கியமாக இருக்கும்போது முஸ்லிம்கள் ஒவைஸியைப் புறக்கணித்துவிட்டு மதச்சார்பற்ற பிரதானக் கட்சிகளுக்கே வாக்களிப்பார்கள்.

- சஜ்ஜன் குமார், அரசியல் நோக்கர்.

‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x