Published : 27 Jan 2021 03:17 am

Updated : 27 Jan 2021 06:49 am

 

Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 06:49 AM

அதிகரிக்கும் பெண்கள் புற்றுநோய் ஆபத்து!

women-cancer

அண்மையில் மறைந்த புற்றுநோய்ப் போராளி மருத்துவர் சாந்தா கலந்துகொண்ட கடைசி நிகழ்வில், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வெளியிட்டுள்ள ஒரு திட்ட அறிக்கை நம்மை யோசிக்க வைக்கிறது. தமிழகத்தில் வருடந்தோறும் ஆண்களைவிடப் பெண்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துவருவதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது. அது தந்துள்ள புள்ளிவிவரம் இது: தமிழகத்தில் 11 பேரில் ஒருவருக்குப் புற்றுநோய் வரும் ஆபத்து காத்திருக்கிறது. 2016-ல் மட்டும் 65, 590 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் 28,971 பேர் ஆண்கள்; 36,619 பேர் பெண்கள். இவர்களில் மார்பகப் புற்றுநோய் பாதிப்புள்ளவர்கள் 24.7% பேர்; கருப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்புள்ளவர்கள் 19.4% பேர். நிகழாண்டில் புதிய புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 78 ஆயிரத்தைத் தாண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

பொதுவாக, புற்றுநோய் நம்மைத் தாக்குவதற்கு நவீன வாழ்க்கைமுறைகளே வழி கொடுக்கின்றன. நுரையீரல் புற்றுநோய்க்குப் புகைப்பழக்கமும் வாய்ப் புற்றுநோய்க்குப் புகையிலை போடுவதும் பான்மசாலா மெல்லுவதும் அதிமுக்கியக் காரணிகள். மார்பகப் புற்றுநோயும் பெருங்குடல் புற்றுநோயும் துரித உணவுக்கும் உடற்பருமனுக்கும் தொடர்புடையவை. பெண்களிடம் அழகு சாதனப் பயன்பாடு அதிகரிப்பது சருமப் புற்றுநோயை வரவேற்கிறது. உடலியக்கம் குறைவதும் உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைச் சூழலும் தொடர்ந்து பல மணி நேரம் அமர்ந்தே பார்க்கும் பணிச் சூழல் அதிகமானதும் புற்றுநோய் பாதிப்பு உச்சம் நோக்கிச் செல்வதற்குப் பல வாசல்களைத் திறக்கின்றன.


பெண்கள் ஹார்மோன் காரணம்

பெண்களிடம் புற்றுநோய் அதிகரிப்பதற்கு மிகச் சிறிய வயதில் பருவமடைவது, தாமதமாகத் திருமணம் செய்வது, தாமதமாகக் குழந்தை பெற்றுக்கொள்வது, தாய்ப்பால் கொடுப்பது குறைந்து போனது, குழந்தை பிறப்பதைத் தள்ளிப்போட நீண்ட காலம் மாத்திரை சாப்பிடுவது ஆகியவை பிரதானக் காரணங்கள். பெண்களுக்குப் பருவமடைந்தது முதல் மாதவிலக்கு நிரந்தரமாக நிற்கும்வரை ‘ஈஸ்ட்ரோஜன்’ எனும் ஹார்மோன் சுரக்கும். இது கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுரக்காது. இது புற்றுநோயை வரவேற்கும் ஹார்மோன். ஆகவே, இது சுரப்பது தடைப்பட்டால் புற்றுநோய் வாய்ப்பு குறையும். இன்றைய தலைமுறை இளம் பெண்களுக்கு உடற்பருமன் ஏற்படுவதும் அதிகரித்துள்ளது. தேவைக்கு மேல் சேர்ந்திருக்கும் கொழுப்பு செல்களில் ‘ஈஸ்ட்ரோஜன்’ சுரந்து புற்றுநோய் வாய்ப்பை அதிகரிக்கிறது.

தேவை விழிப்புணர்வு

நவீன அறிவியல் வளர்ச்சியில் உயர் ரத்த அழுத்தம் போலவோ, சிறுநீரகப் பிரச்சினை போலவோ புற்றுநோயையும் தடுக்க முடியும்; கட்டுப்படுத்த முடியும்; 100% குணப்படுத்தவும் முடியும். அதற்கு, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் ஆரம்ப நிலையில் அதைக் கண்டுபிடிப்பதும்தான் முக்கியம். புற்றுநோய் அறிகுறி தென்படும் முன்னரே ஒருவருக்குப் புற்றுநோய் இருக்கிறதா அல்லது இனிமேல் வர வாய்ப்பிருக்கிறதா என்பதைத் தெரிவிக்க ‘புற்றுநோய் முன்னறிதல்’ (கேன்சர் ஸ்க்ரீனிங்) பரிசோதனைகள் உள்ளன. புகைபிடிப்பவர்கள், புகையிலை போடுபவர்கள், மது அருந்துபவர்கள், உடற்பருமன் உள்ளவர்கள், வம்சாவளியில் புற்றுநோய் வந்துள்ள குடும்பத்தில் பிறந்தவர்கள், தொழில்ரீதியாகப் புற்றுநோய் வரலாம் எனும் எச்சரிக்கையில் இருப்பவர்கள் ஆகியோர் இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.

பெண்கள் தாங்களாகவே மார்பகங்களை அழுத்தமாகத் தொட்டுப் பார்க்கும் சுய பரிசோதனையை மாதம் ஒருமுறை மேற்கொள்ளலாம். அப்போது ஏதேனும் கட்டி, வீக்கம், மார்புக் காம்பில் மாறுதல் போன்றவை தெரிந்தால், உடனே மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியம். பெண்கள் 40 வயதுக்கு மேல் வருடத்துக்கு ஒருமுறை ‘மமோகிராம்’ பரிசோதனையை மேற்கொள்வது மார்பகப் புற்றுநோய்க்கு ஆரம்பத்திலேயே விலங்கு போட உதவும். கருப்பை வாய்ப் புற்றுநோயை அறிய ‘பாப் ஸ்மியர்’ பரிசோதனை உதவும். ‘அல்ட்ரா சவுண்ட்’பரிசோதனை மூலம் கருப்பை மற்றும் சினைப்பைப் புற்றுநோய்களை முன்னரே அறியலாம்.

தடுப்பது எப்படி?

புற்றுநோயின் தொடக்கப் புள்ளி நாம் தொலைத்துவிட்ட உணவு மரபு. நிலத்தில் பயிராக்குவதில் தொடங்கி, தட்டில் பரிமாறுவது வரை ஏகப்பட்ட ரசாயனங்கள்! கொழுப்பு மிகுந்த பதப்படுத்தப்பட்ட அந்நிய உணவுகள் நம்மை அடிமைப்படுத்தின. உடல்நலன் காக்கும் செம்பு, பித்தளை போன்ற உலோகக் கலங்கள் இருந்த இடத்தில் நெகிழிகள் இடம்பிடித்தன. எனவே, தொலைத்ததை மீட்டெடுப்பதுதான் புற்றுநோயை வெல்லும் முக்கிய வழி. பெண்களின் விழிப்புணர்வு தொடங்க வேண்டிய முக்கியப் புள்ளியும் இதுதான். குழந்தைக்குக் குறைந்தது 6 மாதங்கள் தாய்ப்பால் தருவது முக்கியம். இரண்டு வயதுவரை தாய்ப்பால் கொடுப்பது இன்னும் நல்லது.

சின்ன வயதிலிருந்தே பூண்டு, வெங்காயம் சாப்பிட்டோமானால், அவற்றில் உள்ள ‘அலிசின்’ புற்றுநோய் செல்களை எரித்துவிடும். கேரட்டில் உள்ள ‘பீட்டா கரோட்டீன்’ புற்றுநோய்க்குப் பரம எதிரி. முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிஃபிளவர் சாப்பிடுவது நல்லது. இவற்றிலுள்ள ‘பைட்டோ கெமிக்கல்கள்’ புற்றுநோய்க்கு வலுத்த வைரி!

தக்காளி, தர்ப்பூசணியில் ‘லைக்கோபின்’ உள்ளது. இது பெண்களுக்கான அநேகப் புற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது. புதினா, மஞ்சள், கருஞ்சீரகம், மிளகு, வெந்தயம், இஞ்சி போன்ற மகிமைமிக்க ‘நாட்டு மருந்துக’ளை’ வாரம் ஐந்து நாட்களுக்காவது சாப்பிட வேண்டும். சிறுதானிய உணவுகள், நார்ச்சத்து உணவுகள், வண்ண வண்ணக் காய்கறிகள் ஆகியவற்றால் வயிற்றை நிரப்பினால் குடல் புற்றுநோய் ‘குடித்தனம்’ புக மறுப்பது உறுதி.

இயற்கைவழி உணவுகள் முக்கியம்!

தினமும் ஒரு கீரை, மாலையில் ஒரு பழச்சாறு சேர்த்துக்கொள்ளலாம். க்ரீன் டீ நல்லது. கேசரியோ கோழிக்கறியோ செயற்கைச் சாயம் எதில் இருந்தாலும், அதைத் தவிர்க்கப் பழகுவோம். இயற்கைவழி உணவுகளுக்கே முன்னுரிமை தருவோம். துரித உணவுகள், உப்பு குளிக்கும் பாக்கெட் உணவுகள், பேக்கரி உணவுகள் உள்ளிட்ட தொப்பை கூட்டும் உணவுகளைத் தவிர்ப்போம். செயற்கைச் சுவையூட்டிகளும் மணமூட்டிகளும் போட்டி போடும் இனிப்புகள் வேண்டவே வேண்டாம். பதிலாக, இந்தியப் பாரம்பரியப் பலகாரங்களுக்கு மாறிவிடுவோம். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் சுட்ட எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டாம். மைதா உணவைக் குறைப்போம். கருகலான உணவு நமக்கு எதிரி. மீன் புற்றுநோயைத் தடுக்கும் அரண். மிருக இறைச்சிகளில் ஒமேகா - 6 எண்ணெய் உள்ளது. இது புற்றுநோயை ‘வணக்கம்’ போட்டு வரவேற்கும். துரித உணவகங்களில் புகையில் வாட்டித் தயாரிக்கப்படும் ‘பார்பெக்யு’ உணவுகளும் எண்ணெயில் ஊறி வரும் பிராய்லர் கோழி உணவுகளும் ‘புற்றுநோய்த் திருவிழா’வுக்கு அழைப்பிதழ் அனுப்பும்.

அழகு சாதனக் களிம்புகளை அளவோடு பயன்படுத்துவோம். புற்றுநோய்க்குப் படி கட்டும் ‘ஹெச்பிவி’, ‘ஹெப்படைடிஸ்-பி’ ஆகிய வைரஸ் தொற்றுகளை ஓரங்கட்ட தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வோம். சுயசுத்தம் மிக முக்கியம். சுத்தமான குடிநீரைக் குடிப்பதும், மாசுபட்ட சூழலைத் தவிர்ப்பதும் அவசியம். உடற்பருமனுக்கு இடம் கொடேல்! தினமும் அரை மணிநேரம் நடைப்பயிற்சியும், 20 நிமிடம் மூச்சுப்பயிற்சியும் கட்டாயம். இத்தனையும் இருந்துவிட்டால், ‘புற்றுநோய் இல்லாத புதிய உலகம்’ பெண்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் சாத்தியம்தான். அதை நடைமுறைப்படுத்துவதுதான் மறைந்த மருத்துவர் சாந்தாவுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

- கு.கணேசன், பொது நல மருத்துவர்.

தொடர்புக்கு: gganesan95@gmail.comபுற்றுநோய் ஆபத்துபெண்கள் புற்றுநோய்Women cancer

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x