Published : 13 Jan 2021 10:40 am

Updated : 10 Apr 2021 17:22 pm

 

Published : 13 Jan 2021 10:40 AM
Last Updated : 10 Apr 2021 05:22 PM

சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 20: கொடிக்குப் பாரமான காய்

sila-tharunangalum-sila-nigazhvugalum-20

கல்யாணி நித்யானந்தன்

வாசலில் சின்ன திண்ணை மீ்து அமர்ந்திருந்தேன். கேட்டின் அருகில் மூலையில் அடர்த்தியாகப் படர்ந்து பூத்துக் குலுங்கியிருந்த போகன்வில்லா செடி காற்றில் அசைந்துகொண்டிருந்தது. அதை அங்கே நட்ட ரத்தினத்தின் நினைவு வந்தது. மனத்தில் இனம்புரியாத உணர்ச்சி. பரிதாபமா, துக்கமா தெரியவில்லை.

ரத்தினம், நான் பணிபுரிந்த மருத்துவமனையில் ஒரு நோயாளி. 14 - 15 வயது இருக்கும். சிறு வயதில் கீல் வாதத்தால் (ருமாடிக் ஃபீவர்) இதயத்தில் ஒரு ‘வால்வு’ பழுதடைந்து இருந்தது. மூச்சுத் திணறலுடன் வந்தவன், ஒரு வாரத்திலே எழுந்து நடமாடிவிட்டான். அவன் வீட்டுக்குப் போகத் தயார். அதனால், அனுப்பிவிடும்படி பெரிய மருத்துவர் சொல்லிவிட்டார். இதுவரை ஒருநாள்கூட அவனைப் பார்க்க யாருமே வரவில்லை. அவனும் கவலையுடன் இருந்தான். விசாரித்ததில் அவனுக்குப் பெற்றோர் இல்லை; ஒரு அண்ணன்தான். அவர்தான் கொண்டு வந்து சேர்த்தார்.


தன் பையைக் கையில் பிடித்துக்கொண்டு வெளி வராந்தாவில் அமர்ந்திருந்தான். இரண்டு நாட்களாகியும் யாரும் வரவில்லை. செவிலியர் அவனுக்கு மருந்து, மாத்திரை அளித்தார்கள். யாரோ, ஏதோ உணவு அளித்தார்கள். நான் இதைக் கண்டு பரிதாபப்பட்டு மீண்டும் அவனை ‘அட்மிட்’ செய்தேன். உடல்நிலை நன்றாக இருந்தபடியால், அவன் மற்ற நோயாளிகளுடன் நட்புடன் பழகி, அவர்களுக்கான உதவி செய்து கொண்டிருந்தான். செவிலியர், இளநிலை மருத்துவர்கள் இட்ட ஏவல்களைச் செய்துகொண்டிருந்தான். ரத்தினத்தின் வீட்டு விலாசத்துக்குப் போட்ட கடிதம் ‘விலாசதார் இல்லை’ என்று திரும்பிவிட்டது.

ஒரு ஆளை அனுப்பி விசாரிக்கச் சொன்னதில், அக்கம்பக்கத்தார், அந்தக் குடும்பம் வீட்டை காலி செய்து வெளியூர் போய்விட்டதாகச் சொன்னார்கள். சங்கடப்பட்டேன். போக இடமில்லாதவனை என்ன செய்ய? வழக்கம்போல் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தான். மருந்து, மாத்திரைகளைத் தவறாமல் கொடுத்து வந்ததால் நடமாடிக்கொண்டு இருந்தான். கசமுச என்று முணுமுணுப்பார்கள். அதைக் கேட்டு, இனியும் இவனை இங்கே வைக்க முடியாது என்று தெரிந்துவிட்டது. ஒரு முடிவுக்கு வந்தேன். அவனை காரில் ஏறச் சொல்லி என் வீட்டுக்கு அழைத்துப் போய்விட்டேன். நல்ல காலம் என் வீட்டிலும் நல்ல மனதுகள். என் செய்கைக்குக் கேள்வி கேட்கவில்லை. பிடுங்கி நட்ட நாற்றைப் போல் அவனுக்குப் பரம சந்தோஷம். சும்மா இருக்கவில்லை. சிறு சிறு வேலைகளைச் செய்தான். கீரை ஆய்ந்து, காய்கறி நறுக்கி, குழந்தைகளின் காலணிகளைத் துடைத்து ‘பாலிஷ்’ செய்து, தூசு தட்டி, ‘ஹோஸ்’ பைப்பால் புல்லுக்கும் செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சினான்.

அவனுக்கு அரை உப்பு சாப்பாடு, பருப்பு சாதம், தயிர் சாதம், உப்பில்லாத தோசை, சப்பாத்தி (பாவம் சர்க்கரையோ, வெல்லமோ தொட்டுக்கொண்டு சாப்பிடுவான்). அவன் உணவையும், அவன் கனமான , கடின வேலைகளைச் செய்யாமலும் என் தாயாரும் மாமியாரும் மேற்பார்வை பார்த்துக்கொண்டார்கள். அவர்களது கண்ணாடி, புத்தகத்தைத் தேடிக் கொடுப்பான். என் அம்மாவுடன் சில சமயம் மதியத்தில் பரமபதம் விளையாடுவான். என் மகன் பந்து விளையாட அழைத்தால், ‘என்னால் ஓட முடியாது. மூச்சு வாங்கும். அம்மா திட்டுவார்கள்’ என்று கூறி பந்து வீசுவதுடன் நின்றுவிடுவான்.

அவனுக்குத் தோட்ட வேலை செய்ய வேண்டும் என்கிற ஆசை. எனக்குப் பயந்து செய்வதில்லை. சில நாட்களில் என்னோடு காரில் மருத்துவமனைக்கு வந்து, பழைய நண்பர்களோடு அளவளாவுவான். அங்கு கேட் அருகில் ஒரு நல்ல போகன்வில்லா செடி இருந்தது. ஒருநாள் அதிலிருந்து ஒரு நல்ல கொம்பைச் சீவிக்கொண்டு வந்தான். எங்கள் வீட்டின் கேட் அருகில் நடப் போவதாகச் சொன்னான். நான் அவனை, மண்ணைக் கொத்தக் கூடாது என்று தடுத்துவிட்டேன். வீட்டுக்கு வரும் இஸ்திரிகாரரிடம் ‘‘அண்ணா... அண்ணா...’’ என்று கெஞ்சி, அவர் மண்ணைக் கொத்த, இவன் அந்தக் கொம்பை நட்டு ஆசையாய்ப் பராமரித்து வந்தான்.

சில நாட்களுக்கு முன் வெளிநாட்டில் இப்போது இருக்கும் என் மகனிடம் பேசும்போது, எதேச்சையாக ரத்தினத்தைப் பற்றி பேச நேரிட்டது. அப்போது என் மகன், ‘‘அம்மா உனக்குத் தெரியுமா? நீ மாடி வராந்தாவில் படிக்க ஒரு மேசை விளக்கு வைத்திருந்தாயே, அது ஒரு நாள் காற்றில் தவறி விழுந்து, அதன் ‘பல்ப்’ பின் கண்ணாடி உடைந்து, உள்ளே உள்ள கம்பிகள் மாத்திரம் இருந்தன. ரத்தினம் என்னை அழைத்து ‘‘வா உனக்கு ஒரு வேடிக்கை காண்பிக்கிறேன்’’ என்று சொல்லி, அந்த விளக்கின் ‘ப்ளக்’கை சொருகி ‘ஸ்விட்ச்’சைப் போட்டான். அந்தக் கம்பிகள் மத்தாப்புப் போல பிரகாசமாய் எரிந்து சாம்பல் ஆகி விட்டது. இது இப்படி ஆகும் என்று ரத்தினத்துக்கு எப்படித் தெரிந்ததோ?’’ என்று கூறினான். வாய்ப்புக் கிடைத்திருந்தால் ரத்தினம் என்னவாகி இருப்பான்?

ஒருநாள் ‘‘அம்மா... ஒரே ஒரு முறை மிளகாய்ப் பொடி தொட்டுக்கிட்டு ஒரு நல்ல தோசை தின்கிறேன்’’ என்று கெஞ்சினான். நான் மனம் இளகி, ‘‘சரி... ஆனால், நாளைக்கு முழுவதும் உப்பில்லாக் கஞ்சிதான். Lasix மாத்திரை ஒன்று காலையில் போட்டுக்கொள்’’ என்றேன். அவன் ரசித்து, துண்டு துண்டாகத் தோசை தின்றதைக் கண்டு என் மனம் கனத்தது. எத்தனை நாட்கள் இந்தப் பிள்ளையை அடைகாப்பது? மெல்ல மெல்ல தெம்பு குறைந்து வருவதை என்னால் அறிய முடிந்தது.

4 - 5 மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் பின்னிரவில் மூச்சுத் திணறல் வந்தது. உடனே ஊசி போட்டு, காரில் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டு போனேன். இரண்டே நாட்கள். இந்த முறை எமனை ஏமாற்ற முடியவில்லை. ஒரு சின்ன சமாதானம். கஷ்டப்படாமல் உறக்கத்திலேயே அந்த உயிர் பிரிந்துவிட்டது. இரண்டு நாட்கள் குளிர்பதன அறையில் வைத்திருந்தோம். பிறகு காவலர் உதவியுடன் அவனது கடைத் தேற்றினோம். யாரோ மாலை இட்டார்கள். யாரோ கோடித் துணி இட்டார்கள். யாரோ கொள்ளி வைத்தார்கள்.

சிலர் பிறந்ததும் ‘அனாதை’ ஆகிறார்கள். இந்த ரத்தினம் கைவிடப்பட்ட மணி. சில மாதங்கள் அதை என் குடும்பமாகிய மாலையில் கோத்து வைத்திருந்தேன். எங்கிருந்தோ வந்தான். நட்புடன் சிலரின் வாழ்க்கையைத் தீண்டினான்.

‘கொடிக்குக் காய் பாரமா’ என்று ஒரு சொலவடை வழக்கில் உள்ளது. ஆனால், இந்த வளர்ந்த காய், அவன் குடும்பமாகிய கொடிக்குப் பாரம் ஆகிவிட்டது. அந்தக் காய் வாழ்ந்து மறைந்ததுகூட அந்தக் குடும்பக் கொடிக்குத் தெரியாமல் போனது!

சந்திப்போம்... சிந்திப்போம்..!

கட்டுரையாளர்: கல்யாணி நித்யானந்தன், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு),

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு: joenitya@yahoo.com

ஓவியம்: வெங்கி

தவறவிடாதீர்!சில தருணங்களும் சில நிகழ்வுகளும்கொடிக்குப் பாரமான காய்Sila tharunangalum sila nigazhvugalum 20கல்யாணி நித்யானந்தன்Special article

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x