Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM

முன்னெச்சரிக்கையோடு புத்தாண்டைக் கொண்டாடுவோம்

கரோனா தொற்று அச்சத்தின் காரணமாகப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் காவல் துறையின் நடவடிக்கை மிகவும் சரியானதே. சென்னையின் கடற்கரைப் பகுதிகளிலும் விடுதிகளிலும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும் எவ்விதமான பொதுக் கூடுகைகளும் அனுமதிக்கப்படாது என்றும் விதிமுறைகளை மீறுவோர் தண்டிக்கப்படுவார்கள் என்றும் காவல் துறை எச்சரித்துள்ளது. இவை அனைத்தும் ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்டுவரும் கரோனா முன்தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சி என்பதோடு, பிரிட்டனிலிருந்து இந்தியா வந்தவர்களிடமிருந்து, உருமாறிய கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை அடுத்து எழுந்திருக்கும் அச்சத்தையும் பிரதிபலிக்கிறது. இந்தியாவில் இன்னும் கரோனாவுக்கான தடுப்பூசிப் பரிசோதனைகள் நிறைவுபெறாதிருக்கும் நிலையில், பொதுக் கூடுகைகளை இயன்றவரை தவிர்ப்பதே பாதுகாப்பானது.

மாநில அரசும் காவல் துறையும் பொதுக் கூடுகைகளைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்திக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக பல்லாயிரக்கணக்கானோர் கூடும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றை சென்னையில் நடத்தியிருப்பது முரணாகவே தோன்றுகிறது. மாநில அரசின் விதிமுறைகளை ஆளுங்கட்சியே கடைப்பிடிக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியான திமுக தரப்பில் நடத்தப்பட்டுவரும் பிரச்சாரப் பயணங்களிலும் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதில்லை. தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் அனைத்து அரசியல் கட்சிகளுக்குமே மக்களை நேரடியாகச் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. குறைந்தபட்சம் தொண்டர்கள் முகக்கவசம் அணிவது அவசியம் என்றாவது கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்த வேண்டியது அவசியம்.

தொற்று அச்சத்தைக் காரணம்காட்டி போராட்டங்களை அனுமதிக்காத அரசு, தான் நடத்துகிற விழாக்களிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பதில்லை. அரசு சார்பில் நடத்தப்படுகிற நலத்திட்ட விழாக்களில் முகக்கவசம், தனிமனித இடைவெளி முதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுவதில்லை. அரசியல் தலைவர்களுடன் தொண்டர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள் என்றபோதிலும், நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகள் இன்னும் நீங்காத நிலையில், அந்த ஆர்வத்தை அரசியல் கட்சிகள் ஊக்குவிக்கக் கூடாது. காலந்தோறும் தேர்தலுக்கான பிரச்சார வடிவங்கள் மாறிக்கொண்டே வருகின்றன. சமீப காலமாக, தேர்தல் பிரச்சாரங்களில் காட்சி ஊடகங்கள் முக்கியத்துவம் பெற்றுவருகின்றன. சமூக ஊடகங்களின் செல்வாக்கும் அதிகரித்தபடியே இருக்கிறது. இந்நிலையில், காலத்திற்கேற்ற வகையிலும், நோய்த்தொற்றைத் தவிர்க்கும் வகையிலும் புதிய பிரச்சார வடிவங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும்.

புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நள்ளிரவில் இருசக்கர வாகனங்களில் பயணிப்பதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும். அதிவேகப் பயணமும், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். காவல் துறையின் கண்காணிப்புகளைத் தாண்டி, இளைஞர்களும் தங்களுக்கான சுய பொறுப்பை உணர வேண்டும். ஒருபக்கம் கரோனா எனும் பெருந்தொற்றிலிருந்து காத்துக்கொள்ள உலகமே போராடிக்கொண்டிருக்கையில், விபத்தின் காரணமாக உயிரிழப்பைச் சந்திப்பது துரதிர்ஷ்டவசமானது. தொற்றுநோயும் அதன் தொடர்விளைவுகளும் உருவாக்கிய துயரங்களிலிருந்து புத்தாண்டு நம்மை மீட்டெடுக்கட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x