Last Updated : 20 Dec, 2020 03:13 AM

 

Published : 20 Dec 2020 03:13 AM
Last Updated : 20 Dec 2020 03:13 AM

எம்ஜிஆர் இன்றும் ஏன் பேசும்பொருள் ஆனார்?

‘எம்ஜிஆர் ஆட்சி தருவேன்’ என்கிறார் ரஜினிகாந்த். ‘எம்ஜிஆரின் நீட்சி நான்’ என்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன். விஜயகாந்த் கூட தன்னை கருப்பு எம்ஜிஆர் என்றுதான் சொல்லிக் கொண்டார். பாக்கியராஜ் கூட எம்ஜிஆர் வாரிசு என்று கட்சி தொடங்கி கையை சுட்டுக்கொண்டார். நடிகர் விஜய் கூட எம்ஜிஆர் போல்ஏழைகளுக்காக பாடுபடுவேன்என்று ஒரு கூட்டத்தில் சொன்னார். டி.ராஜேந்தர் கூட எம்ஜிஆர் ஆட்சியை போல் என்னாலும் ஆள முடியும் என்று சொல்லி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் நல்லாட்சிக்கு 2 உதாரணங்கள். காமராஜர் ஆட்சி, எம்ஜிஆர் ஆட்சி, அவ்வளவுதான்! காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்லிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது ஸ்டாலின் அடுத்த முதல்வர் என்று சொல்கிற திமுக கூட, ‘கருணாநிதி ஆட்சி அமைப்போம்’ என்று சொல்வதில்லை. ‘நல்லாட்சி அமைய எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்றுதான் சொல்கிறார்கள். எம்ஜிஆர்சிலை திறப்பு விழாவில்தான் ‘எம்ஜிஆர் ஆட்சியை நான் தருவேன்’ என்று ரஜினிகாந்த் முதலில் பேசினார். அதன்பிறகு எம்ஜிஆரை தொடர்புப்படுத்தி அடிக்கடி பேசுகிறார். ரஜினி ஆதரவாளரான தமிழருவி மணியன், எம்ஜிஆரை போல் ரஜினியும் சாதிப்பார் என்று சொல்லியிருக்கிறார்.

சோனு சூட் என்ற வட இந்திய நடிகர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்று ஒரு ரயிலையே வாடகைக்கு எடுத்து இலவசமாக அவர்கள் போகும் இடங்களுக்கு செல்ல உதவி செய்தார். ஹரியாணாவில் டவர் கிடைக்காததால், ஒரு கிராமத்தில் ஒரு பள்ளி சிறுமி மரத்தில் ஏறி அமர்ந்து செல்போனில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றார் என்ற செய்தி கேள்விப்பட்டு, அந்த கிராமத்துக்கு செல்போன் டவர் நிறுவ ஏற்பாடு செய்தார். தீ விபத்தில் தன்னுடைய புத்தக பை எரிந்து விட்டது என்று ஒரு சிறுமி கதறி கதறி அழுத வீடியோவை பார்த்த அந்த நடிகர், அந்தக் குழந்தைக்குபுதுப் புத்தகங்கள், புதுப்பை எல்லாவற்றையும் அந்த குழந்தை இருக்கும் இடம் தேடி அனுப்பி வைத்தார். இப்படி அந்த நடிகர் மனிதநேயத்துடன் செய்த உதவிகளை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். ஆட்சியில் அமர துடிக்கும் நடிகர்களின் பங்களிப்பு என்ன என்று கேட்டால் என்ன சொல்வார்கள்?

நான் எம்ஜிஆர் மடியில் அமர்ந்து வளர்ந்தவன் என்றுதேர்தல் பிரச்சாரத்தில் கமல் சொல்கிறார். சிவாஜி மடியில்அமர்ந்து வளர்ந்தவன் என்று கூட கமல் சொல்லியிருக்கிறார். எம்ஜிஆர் கட்சி தொடங்க இருந்த நேரம், ‘உலகம்சுற்றும் வாலிபன்’ படம் ரிலீசாகக் கூடாது என்று அன்றைய ஆளும் கட்சியான திமுக எல்லா முயற்சிகளையும் செய்தது.மதுரையில், உலகம் சுற்றும் வாலிபன் படம் திரையிடப்பட்டால், நான் புடவை கட்டிக் கொள்கிறேன் என்று வீரவசனம் பேசினார் மதுரை முத்து. அதன் பிறகு அவர் அதிமுக.வில்சேர்ந்தார்! படம் வெளியே வரவிடாமல் முடக்கி பொருளாதார ரீதியாக எம்ஜிஆருக்கு கடும் நெருக்கடியைத் தர வேண்டும் என்பதுதான் அன்று சிலருடைய திட்டம். படப்பெட்டியை திரையரங்குகளுக்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுப்பது, சுவரொட்டிகள் ஒட்டவிடாமல் இடைஞ்சல் செய்வது அல்லது ஒட்டிய சுவரொட்டிகளை கிழிப்பது என்று எல்லா வகையிலும் எம்ஜிஆரை பயமுறுத்தி பார்த்தனர். ஆனால் இந்த சவால்களை எல்லாம் சமாளித்து படத்தை திரையிட்டார் எம்ஜிஆர். எதிர்ப்பே அவருக்கு இலவச விளம்பரம் ஆனது. அந்தப் படம் அவருக்கு வெற்றி படம். வசூலிலும் சாதனை செய்தது.

எம்ஜிஆர் தொடங்கிய சத்துணவு திட்டம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணம். அவரைத் தொடர்ந்து மற்ற மாநில முதல்வர்கள் அந்த திட்டத்தை செயல்படுத்தினார்கள். சத்துணவுக்கு என்று தனித்துறை, தனிஅமைச்சர் எல்லாம் எம்ஜிஆர் தொடங்கியது. நியாய விலைக் கடைகளில் எம்ஜிஆர் ஆட்சியில் அரிசி விலை 2 ரூபாய்தான். ரவை, மைதா, சர்க்கரை, பாமாயில், பள்ளி சிறுவர்களுக்கான சீருடை ஆகியவை கூட நியாய விலை கடையில் கிடைத்தன. அவை எல்லாமே தரமானவை. ரேஷன் அரிசி விலையை உயர்த்தவில்லை என்று மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய மத்திய தொகுப்பு அரிசியை தரமாட்டோம் என்று சொன்னது. எம்ஜிஆர் அதை கண்டித்து அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அமைச்சர் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து அப்படியெல்லாம் நடக்காது என்று உத்தரவாதம் தந்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

எம்ஜிஆர் மூன்று முறை முதல்வரானார். அவரால் நல்லாட்சி தர முடியும் என்று தமிழக மக்கள் நம்பினார்கள். அவர் ஆட்சியில் அதிகாரம் பரவலாக்கப்பட்டது. அவர் மக்கள் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருந்தார். எம்ஜிஆரை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ரஜினி பிறந்த நாளன்று அவர் வீட்டு வாசலில் காத்திருந்தவர்களை சந்திக்கவில்லை. ஒரு பெண்மணி கதறி அழக்கூட செய்தார். குறைந்தபட்சம் அவரதுகுடும்ப உறுப்பினர்களாவது அவர்களை சந்தித்து இருக்கலாம். அது கூட செய்ய முடியவில்லை.

தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதைத் திருத்திக் கொள்ள எம்ஜிஆர் என்றுமே தயங்கியது கிடையாது. ஒரு முறை நிருபர் ஒருவர், என்டிஆரிடம், எம்ஜிஆருடன் உங்களை எப்படி ஒப்பிடுவீர்கள் என்று கேட்ட போது ‘‘அவரோடு என்னை ஒப்பிட சொன்னால், என்ன பதில் சொல்ல முடியும். எம்ஜிஆர் கடவுள்; அவரை என்னோடு எப்படி ஒப்பிட முடியும்’’ என்று ‘ஆந்திராவின் கடவுள்’ என்டிஆர் சொன்னார்.

வேளாண் சட்டத்திருத்தம், அதைத் தொடர்ந்து நடக்கும் போராட்டம் இதுபற்றி எல்லாம் ரஜினியின் கருத்து என்ன? இப்போது அவர் நியமித்து இருக்கும் 2 அரசியல் ஆலோசகர்கள் கூட, ‘எல்லாம் ஐயா சொல்வார்’என்றுதான் சொல்கிறார்கள். எம்ஜிஆர் அப்படி எல்லாம் யாரையும் பேச விடாமல் தடுத்தது கிடையாது. பல அமைச்சர்கள் தங்கள் கருத்துகளை சொல்லிகொண்டுதான் இருந்தார்கள்.

எம்ஜிஆர் ஏதோ திடீரென புதுக்கட்சி தொடங்கி ஆட்சி அமைத்ததாக நினைக்கிறார்களோ என்னவோ. அண்ணாவிடம் அரசியல் கற்றவர். என் இதயக்கனி என்று எம்ஜிஆரை அண்ணா கொண்டாடினார். ‘நீ முகத்தை காட்டினாலே 30 லட்சம் ஓட்டு’ என்று எம்ஜிஆரை பற்றி அண்ணா சொன்னது உண்மைதான். இப்போது இருப்பவர்கள் எம்ஜிஆர் வரலாறு பற்றி சரியாக படிக்கவில்லையோ என்னவோ?

மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்றுவேன்; எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவேன் என்று சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன். ஆனால், எம்ஜிஆர் திருச்சியைதான் இரண்டாம் தலைநகரமாக்க விரும்பினார். அப்போதைய அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், திருச்சி - தஞ்சாவூர் செல்லும் வழியில் காட்டூர் என்ற கிராமத்தை ஒட்டியுள்ள இடத்தை தேர்ந்தெடுத்தார். ஆனால், அது அதிக செலவை ஏற்படுத்தும் என்பதாலும் எதிர்க்கட்சிகள் அதை கடுமையாக எதிர்த்ததாலும் அந்த திட்டத்தை எம்ஜிஆர் கைவிட்டார்.

எம்ஜிஆர் ஏழை மக்களின் நண்பன். இல்லாதவர்களுக்கு கொடுக்கும் வள்ளல். இந்த இரண்டும் இன்று இருப்பவர்களுக்கு பொருந்துமா என்று தெரியவில்லை. ‘பெண்கள் தங்கள் கணவர்களின் பேச்சை கூட கேட்க மாட்டார்கள்; என் பேச்சை கேட்பார்கள்’ என்று பெருமிதமாக சொன்னார் எம்ஜிஆர். மற்றவர்கள் அப்படி சொல்ல முடியுமா? ரஜினி கட்சி ஆரம்பிப்பது பற்றி விஜயகாந்த் மகனிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘‘முதலில் அவர் கட்சி தொடங்கட்டும்’’ என்று சொல்லியிருக்கிறார். ரஜினி மீதுள்ள சந்தேக நிழல் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.

ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும் போதே கட்சி தொடங்கினார் விஜயகாந்த். பாமக.வின் கோட்டையான விருத்தாச்சலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதாவே அவரை தேடிப் பிடித்து கூட்டணிக்கு அழைத்தார். விஜயகாந்தின் தமிழ் உணர்வு, அரசியல் துணிவு, சினிமாவில் இருந்து வரும் எல்லோருக்கும் இருக்குமா என்பது தெரியவில்லை.

நடிகர்கள் நாடாளலாமா என்று கேட்ட போது, எம்ஜிஆர் பதில் சொல்லவில்லை, செயல்மூலம் காட்டினார். அதனால்தான் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கூட அந்த கட்சி ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா கூட தேர்தல் பிரச்சாரத்தின் போது எம்ஜிஆர் பெயரை உச்சரித்தால்தான் ஓட்டு விழும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அவர் பெயரை சொல்லிதான் ஆட்சி அமைத்தார். எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய இரட்டை இலை சின்னம், தமிழ்நாட்டில் இன்று வரை தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறது. எம்ஜிஆர் என்பது மகத்தான மாயாஜால சக்தி. அதனால்தான் அந்த சக்திக்கு இத்தனை போட்டி. முதல்வர் பதவி அவருக்குப் பெருமை சேர்க்கவில்லை. முதல்வர் பதவிக்கு அவர் பெருமை சேர்த்தார் என்றே சொல்லலாம்.

ரஜினி, கமல்தான் என்றில்லை... சினிமாவிலிருந்து வரும் எல்லோருமே எம்ஜிஆர் ஆகிவிடுவார்களா என்பதற்கு வாக்காளப் பெருமக்கள் தக்க பதில் வைத்திருப்பார்கள்.

ஜாசன்
மூத்த பத்திரிகையாளர்
எழுத்தாளர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x