Last Updated : 19 Dec, 2020 03:14 AM

 

Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM

எத்தனை போராட்டங்கள் நடந்தாலும் மக்கள் பாஜக பக்கமே

அ.அஸ்வத்தாமன்

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்ற முதல் இந்தியாவில் எப்போதும் போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அதுவும் மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சி என்ற எந்தத் தேர்தல் நடந்தாலும் அதற்கு சில மாதங்களுக்கு முன்பாக பாஜக.வுக்கு எதிரான திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டங்கள் தொடங்கி விடுகின்றன. பிரச்சினைகளுக்காக போராட்டமா அல்லது போராடுவதற்காக பிரச்சினைகள் புனையப்படுகிறதா என்ற கேள்வியை இப்போராட்டங்கள் எழுப்புகின்றன.

கரோனா ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பு குடியுரிமைச் சட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக மாதக்கணக்கில் போராட்டங்கள் நடைபெற்றன. அதன்பிறகு சுற்றச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு எதிராக அணி திரண்டார்கள். ஆனால், அதனை போராட்டமாக மாற்ற முடியவில்லை. அதனால் இப்போது நாடாளுமன்றத்தில் நீண்ட விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் தொடர்போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

எதற்காக இந்தப் போராட்டம் என்றுதெளிவாக காரணங்கள் முன்வைக்கப்பட்டால் அதற்கு விளக்கமாக பதில் கூறி விடலாம். மாறாக, அபாண்டங்கள், அபத்தங்கள், புனைவுகள் முன்வைக்கப்படும் போது அதற்கு பதில் கூறுவது சாத்தியமற்றது. உதாரணமாக, 10 ஆண்டுகளில் விவசாயிகளின் நிலங்களைப் பறித்துக் கொள்வார்கள், நீதிமன்றம் செல்ல முடியாது என்றெல்லாம் கொஞ்சம்கூட கூசாமல் வதந்திகளைப் பரப்புகிறார்கள். ஏதோ இந்த சட்டங்களின் மூலமாகதான் புதிதாக 'ஒப்பந்த முறை விவசாயம்'வரப்போவது போன்று பேசுகிறார்கள்.

உண்மையை சொல்ல போனால், நம் தமிழக கரும்பு விவசாயிகள் ஒப்பந்த முறையில் விவசாயம் செய்கின்றனர். அதில் தற்போது வரைமுறைபடுத்த சட்டம் ஏதும் இல்லாததால் விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள். ஆனால், இப்போது கொண்டு வரப்பட்டுள்ள வேளாண்சட்டம், இதற்கு ஒரு தீர்வாக அமையும். இந்த சட்டத்தில், தனியாக நீதிமன்றங்களே உருவாக்கப்பட்டு 30 நாட்களில் நீதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றமே செல்ல முடியாது என அபாண்டமாக பொய்யை பரப்புகிறார்கள்.

இப்போது இருப்பது போல கரும்புவிவசாயிகளிடம், விலையை குறிப்பிடாமல் சர்க்கரை ஆலை நிர்வாகம் ஒப்பந்தம் போடுவதும், பணம் தராமல் இழுத்தடிப்பதும் இனிமேல் நடக்காது. பாஜக அரசுக்கு எதிரான அனைத்துப் போராட்டங்களிலும் ஒரே விதமான முறைதான் பின்பற்றப்படுகிறது. எதிர்க்கப்படுகின்ற சட்டத்தின் உண்மையான கூறுகளை நேர்மையாக முன்வைக்கும் போதும், இந்த சட்டத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லையே என்று விளக்கும்போதும், "பிரச்சினை இல்லை என்றால் அவர்கள் ஏன் போராடுகிறார்கள்" என்று சொல்லி வைத்தார் போல ஒரே மாதிரியான வாதத்தை முன்வைக்கிறார்கள்.

இது போராடுபவர்களையும், போராடத் தூண்டுபவர்களையும் கேட்கவேண்டிய கேள்வி. பிரச்சினை இல்லாமல்நீங்கள் ஏன் போராடுகிறீர்கள் என்று கேட்கவேண்டும். ஆனால், அப்படி யாரும் கேட்பதில்லை. இப்படி அரசியல் கட்சிகள்,விவசாய அமைப்புகள், தொழிற்சங்கங்கள், சூழலியல் அமைப்புகள் என்று எண்ணிலடங்கா போராட்டங்கள் நாள்தோறும் நடைபெற்றாலும் பாஜக மீதும், மோடி அரசு மீதும் நாட்டு மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை.

கடந்த 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகளும், அண்மையில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் அதனை நிரூபிக்கின்றன. கரோனா ஊரடங்கு காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினை பூதாகரமாக்கப்பட்டது. அவர்களை பல நூறு மைல்கள் மோடி அரசு நடக்க வைத்து விட்டது, பட்டினி போட்டு கொன்று விட்டது என்றெல்லாம் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. புலம்பெயர் தொழிலாளர்களை அதிகம் கொண்ட மாநிலம் என்பதால் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் இதனை முன்வைத்தே பாஜக.வுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்கள். ஆனாலும், 15 ஆண்டுகள் ஆட்சி செய்த பாஜக கூட்டணியை, மேலும் 5 ஆண்டுகள் ஆள பிஹார் மக்கள் தேர்ந்தெடுத்தனர்.

விவசாயிகள் போராட்டம் நடைபெறும் டெல்லிக்கு அருகில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக அதிக இடங்களில் வென்றுள்ளது. ஐதராபாத் மாநகராட்சித் தேர்தலில் கடந்த முறை வெறும் 4 இடங்களில் வென்ற பாஜக, இந்த முறை 48 இடங்களில் வென்று நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. கோவா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 17-ம் தேதி வெளியான கேரளஉள்ளாட்சித் தேர்தலிலும் கடந்த முறையை விட பாஜக அதிக இடங்களில் வென்றுள்ளது. அம்மாநில தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியில் காங்கிரஸை வீழ்த்தி 2-வது இடத்தைப் பாஜகபிடித்துள்ளது. பாலக்காடு, பந்தளம் ஆகிய இரு நகராட்சிகளையும் பாஜக கைப்பற்றியுள்ளது. கம்யூனிஸ்ட்டுகளின் இரும்புக் கோட்டை என்று வர்ணிக்கப்படும் முதல்வர் பினராயி விஜயனின் சொந்த ஊரான கண்ணூரில் முதல் முதலாக பாஜக வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், இடதுசாரிகளின் கோட்டையான கேரளம், சிறுபான்மை மக்கள் நிறைந்த கோவா, ஹைதராபாத் என்று எங்கும் பாஜக.வின்வெற்றி கொடி பறக்கிறது. பாஜக.வின்இவ்வளவு வெற்றிகளும் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு மத்தியில்தான் கிடைத்துள்ளது என்பதை போராட்டக்காரர்கள் உணர வேண்டும். நாட்டு மக்கள் மோடி அரசின் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடுதான் இந்த தேர்தல் முடிவுகள்.

எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், திரையுலகினர், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ஊடகத்தினர், அறிவிஜீவிகள் என்று பல்வேறு தரப்பினரும் பாஜக அரசுக்கு எதிரான போராட்டங்களை தூண்டிவிட்டு வருகின்றனர். ஆனால், அவர்களை நம்பாமல் மக்கள் பாஜக பக்கமே நிற்கின்றனர் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

பாஜக வெற்றி பெற்றால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீது பழி சுமத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலமேநடைபெற்றது. கொச்சி மாநகராட்சியில் காங்கிரஸ் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த வேணுகோபால் பாஜக வேட்பாளரிடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஜனநாயக முறைப்படி அந்த தோல்வியை ஏற்க மனமில்லாமல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்து விட்டதாக அவர் குற்றச் சாட்டினார்.

ஆனால், இந்த முறை அதையும் சொல்ல முடியாது. பல மாநிலங்களில் வாக்குச் சீட்டு முறையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.

ஏதோ ஒரு சட்டத்தில் பிரச்சினை என்று சொன்னால் கூட பரவாயில்லை, வருகிறஅத்தனை சட்டங்களிலும் பிரச்சினை இருப்பதை போன்று பேசுகிறார்களே என்று சாதாரண மக்களும் கூட யோசிக்கத் தொடங்கி விட்டார்கள். அதுதான் தேர்தல்களிலும் எதிரொலிக்கிறது. பாஜக மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அசைக்க முடியவில்லை என்ற உண்மையை புரிந்து கொண்டு எதிர்கட்சிகள் வேறு ஆக்கப்பூர்வமான வேலைகளைப் பார்ப்பது நல்லது.

அ.அஸ்வத்தாமன்,

பாஜக செய்தித் தொடர்பாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x