Published : 13 Oct 2015 09:25 AM
Last Updated : 13 Oct 2015 09:25 AM

எல்லோருக்கும்தானே பிரதிநிதி பிரதமர்?

மாட்டிறைச்சியின் பெயரால் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட தாத்ரி விவகாரம் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துதான் என்ன? தாத்ரியைத் தொடர்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக நாடு முழுவதும் மாட்டிறைச்சியின் பெயரால் மக்கள் விரோதச் சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மக்களிடையே இனவாதத்தையும் வெறுப்புணர்வையும் பரப்பும் தீயசக்திகள் எழுச்சியோடு செயல்பட ஆரம்பித்திருக்கின்றன. மோசமான இந்தச் சூழலைக் கண்டித்து நயன்தாரா சேகல், அசோக் வாஜ்பாய், ரகுமான் அப்பாஸ், சாரா ஜோசப் என்று எழுத்தாளர்கள் வரிசையாகத் தங்கள் விருதுகளை அரசிடம் திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நாட்டின் அறிவுலகத்திடமிருந்து வரும் இப்படியான சமிக்ஞைகள் வரக்கூடிய பேராபத்துகளை முன்கூட்டிச் சொல்லக்கூடியவை. அரசு நிச்சயம்

தீவிரமாக இவற்றைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமருக்கும் அரசுக்கும் மக்களுக்கும் எதைச் சொல்ல வேண்டுமோ அதைத் தன்னுடைய பதவியின் மாண்புகளுக்கு உட்பட்டுத் தெளிவாகவே சொல்லிவிட்டார். பிரதமர் இத்தனை நாட்கள் இதுகுறித்துப் பேசாமல் இருந்தது அதிர்ச்சி என்றால், மவுனம் கலைந்த பின் அவரிடமிருந்து வந்த வார்த்தைகள் அதைவிடவும் அதிர்ச்சி ரகம்!

பிஹார் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் போகிறபோக்கில் ஓரிடத்தில் மிகவும் வசதியாகப் பேசியிருக்கிறார் மோடி.

அது தொடர்பாக அவரிடம் யாரும் கேள்வியும் கேட்க முடியாது, விளக்கமும் பெற முடியாது. அந்தக் கொலை எப்படிக் கொடூரமான முறையில் நடத்தப்பட்டது, கொலை செய்ய வந்தவர்கள் யார், ஏன் வந்தார்கள், மாட்டிறைச்சிக்குத் தடை என்ற சமீபத்திய தீவிர நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் எழுந்துள்ள அமைதியின்மை எப்படிப்பட்டது என்பது குறித்தெல்லாம் தன்னுடைய பேச்சில் அவர் குறிப்பிடவே இல்லை. நாட்டின் முன்னேற்றத்துக்கு அனைத்துப் பிரிவு மக்களும் ஒற்றுமையாக இருப்பது முக்கியம் என்று குறிப்பிட்டுவிட்டு, ‘வறுமைக்கு எதிராகத்தான் இந்துக்களும் முஸ்லிம்களும் போராட வேண்டும்’ என்று, தான் ஏற்கெனவே கூறியதையே மீண்டும் பேசி, அச்சம்பவத்தை அத்துடன் முடித்துவிட்டார்.

பிஹார் பொதுக்கூட்டத்தில் அவர் இப்படிப் பேசிய அதே நாளில், அவருடைய கட்சியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஜம்மு - காஷ்மீர் சட்டப் பேரவையில், மாட்டுக் கறி விருந்து கொடுத்ததற்காக சுயேச்சை உறுப்பினர் இன்ஜினீயர் ரஷீத் என்பவரை அவையிலேயே தாக்கினர் என்பது இங்கே அவசியம் குறிப்பிட வேண்டியது. ஆனால், மோடியின் பேச்சோ பாஜக - சங்கப் பரிவாரங்கள்தான் இச்சம்பவங்களில் ஈடுபட்டன என்பதை அவர் உணர்ந்ததாகவே வெளிக்காட்டவில்லை. அடிப்படையில் தாத்ரி விவகாரத்துக்காக எல்லா இந்துக்களையும் முஸ்லிம் களையும் கண்டித்ததன்மூலம் அவர் யாரையுமே கண்டிக்கவில்லை என்பதுதான் உண்மை.

அதே சமயம், பிஹாரின் பிற ஊர்களில் பேசியபோது, இந்துக்களில் சிலர் மாட்டுக்கறி சாப்பிடுவது உண்டு என்று பேசியதற்காக லாலு பிரசாத்யாதவையும் அவர் சார்ந்த ராஷ்ட்ரீய ஜனதா தளத்தையும் கேலி செய்யாமல்விட்டுவிடவில்லை. அவர் செய்த கேலியும் கிண்டல்களும் வெறும் தேர்தல்பிரச்சாரங்களில் கையாளப்படும் மக்கள் ஈர்ப்பு உத்திகளில் ஒன்றாக மட்டுமே பார்க்க முடியாது.

அதில் மறைந்திருந்து வெளிப்படும் பொருள்தான் என்ன? லாலு பிரசாத் யாதவை மாட்டிறைச்சியை அடிப்படையாக வைத்து இந்துக்களின் விரோதியாகச் சித்தரிக்க முயல்வதன் மூலம் தன்னையும் தன் கட்சியையும் இந்துக்களின் பிரதிநிதியாகக் காட்டிக்கொள்ள பிரதமர் விரும்புகிறார் என்பதுதானே! இப்படியான ராஜதந்திரங்கள் ஒரு தேசத் தலைவருக்கான இலக்கணம் அல்லவே...!

இனவாதம் எந்தச் சமூகத்திடமிருந்து வெளிப்பட்டாலும் ஆபத்தானதே. எனினும், பேரினவாதம் கூடுதல் ஆபத்தானது. வெறுப்புத் தீயைத் தான் சார்ந்த சமூகத்தில் மட்டுமல்லாமல், ஏனைய சமூகங்களுக்கும் பரப்பும் பேரபாயம் இது. பிரதமர் ஆபத்தை இன்னும்கூட உணர்ந்ததாகத் தெரியவில்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x