Published : 12 Nov 2020 03:14 am

Updated : 12 Nov 2020 07:34 am

 

Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 07:34 AM

தேஜஸ்வி: உருவாகிறார் ஒரு தலைவர்

tejaswi-yadav

தம்பி

தேர்தல் 2020 பிஹாருக்கும் பிஹாரைத் தாண்டியும் சொல்லியிருக்கும் முக்கியமான செய்தி இதுதான், ‘அடுத்து ஒரு தலைவரை பிஹார் உருவாக்கிவிட்டது!’

லாலு குடும்பத்தின் எட்டாவது பிள்ளையான தேஜஸ்வி பிரசாத் யாதவ் முந்தைய ஆட்சிக் காலத்தில் கட்சிக்குள் இருந்த குடும்பப் போட்டி, பதவிப் போட்டிகளில் முந்திக் கட்சியைத் தன்வயப்படுத்தினார். இப்போது பிஹார் அரசியல் களத்தையும் தன்வயப்படுத்தத் தொடங்கியிருக்கிறார். அவருடைய ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையேற்றிருக்கும் ‘மகா கூட்டணி’ வெறும் 12 இடங்களில் ஆட்சியைத் தவறவிட்டிருந்தாலும், அதிகமான வாக்குகளையும் தொகுதிகளையும் வென்ற தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பதே ஏனைய கட்சிகளின் தூக்கத்தைக் கெடுக்கும்.


லாலு இல்லாத பிஹார் தேர்தல் களம் ஏனையோருக்குச் சுவாரசியம் அற்றது என்றால், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினருக்கோ பெரும் பலத்தை இழந்து நிற்பதாக இருந்தது. எதிரே மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான வலுவான கூட்டணி. பெயர் என்னவோ ‘மகா கூட்டணி’ என்பதாக இருந்தாலும் பலவீனமான கூட்டணியாகவே ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி இருந்தது. மூன்றில் இரண்டு பங்கு இடங்களை நிதீஷ் குமார் கூட்டணி வெல்லும் என்பதே தேர்தல் அறிவிப்பு வெளியானபோது எல்லோர் கணிப்பாகவும் இருந்தது. அது உண்மைதான். பாஜக, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மூன்றும் கிட்டத்தட்ட சரிசமமான பலசாலிகள். இவற்றில் இரண்டு ஒன்று சேர்ந்தால் அது உச்சம் தொடும் கூட்டாக அமைந்துவிடுவது இயல்பு. அப்படிப்பட்ட கூட்டணியையே கலகலக்கவைத்திருக்கிறார் தேஜஸ்வி.

தேஜஸ்வி 2000-ல் 11 வயதுப் பையனாக இருந்தபோதே லாலு அவரைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைத்துச்சென்றிருக்கிறார். எனினும், தேஜஸ்வியின் பிரதான ஆர்வம் கிரிக்கெட் மீதுதான் இருந்தது. ஜார்க்கண்ட் கிரிக்கெட் அணியிலும் டெல்லி டேர்டெவில்ஸ் 20-20 கிரிக்கெட் அணியிலும் விளையாடியிருக்கிறார். பெரிய கிரிக்கெட் வீரராக ஆக வேண்டும் என்ற அவரது விருப்பம் நிறைவேறவில்லை. இந்நிலையில், 2015-ல் பிஹாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் ‘மகா கூட்டணி’ அமைத்தது. அந்தத் தேர்தலில் ராகோப்பூர் தொகுதியில் நின்று தேஜஸ்வி சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதீஷ் மறுபடியும் முதல்வரானார். தேஜஸ்வி துணை முதல்வரானார். எனினும், இந்தக் கூட்டணி இரண்டு ஆண்டுகளே நீடித்தது. அதன் பிறகு, தேஜஸ்வியின் அரசியல் ஈடுபாட்டில் சுணக்கமே காணப்பட்டது.

கரோனா பெருந்தொற்று தேஜஸ்வியின் மறுபிரவேசத்துக்குப் பெரும் வாய்ப்பளித்தது. வெளி மாநிலங்களிலிருந்து திரும்பி வரும் பிஹார் தொழிலாளர்களுக்காக தேஜஸ்வி குரல் கொடுக்க ஆரம்பித்தார். சமூக நீதிச் சொல்லாடலிலிருந்து பொருளாதார நீதிச் சொல்லாடலுக்குக் கட்சியை எடுத்துச் சென்றதோடு, ‘15 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆண்டுவரும் நிதீஷ் பிஹாரில் வேலைவாய்ப்புகளையே உருவாக்கவில்லை; அதனால்தான் பிஹாரிகள் வேறு மாநிலங்களுக்குப் பிழைப்புக்காகச் செல்ல வேண்டியிருக்கிறது’ என்பதை மையப் பேச்சாக்கினார்.

லாலுவின் காலம் வரை ‘முஸ்லிம் – யாதவர்கள்’ பிரதிநிதியாக மட்டுமே பார்க்கப்பட்டுவந்த கட்சியில் முற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று பல சமூகங்களின் முகத்தையும் பிரதிபலிப்பதாக மாற்றினார். ராஜத போட்டியிட்ட 144 தொகுதிகளில் மாநிலத்தில் 26% உள்ள ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 25 தொகுதிகள்; 15% உள்ள முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.

முந்தைய தேர்தலில் 80 இடங்களில் வென்ற ராஜதவுக்கு தற்போது கிடைத்துள்ள 75 இடங்கள் கொஞ்சம் சரிவுதான்; எதிரே மீண்டும் பாஜக – ஐஜத கூட்டணி ஆட்சியில் தொடர்கிறது என்றாலும், லாலு, நிதீஷ், பாஸ்வான் இந்த மூவரையும் அடுத்து பிஹாரில் இதுவரை மாநிலம் தழுவிய ஒருவர் தலைவராக உருவெடுக்க முடியவில்லை. மாநிலத்தில் வலுவான கட்சியாக பாஜக திகழ்ந்தாலும், கட்சி பிரதமர் மோடியின் முகத்தையே தேர்தல்களுக்குப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இதனாலேயே நிதீஷ் முகத்தை அது நம்ப வேண்டியிருக்கிறது. இத்தகு சூழலில் தேஜஸ்வி தன்னுடைய தந்தையின் நிழலிலிருந்து விலகிப் பெற்றிருக்கும் இந்த வெற்றியானது ஒரு பெரும் வெற்றிடத்தை நிரப்புபவராக அவரை உருவாக்கியிருக்கிறது.

தேர்தல் பிரச்சாரத்தின்போதே பெரும் கூட்டம் அவருக்காகக் கூடியது. ஒரு நாளைக்கு 12 கூட்டங்கள் வரை தேஜஸ்வி பேசினார். கடந்த காலங்களில் தேஜஸ்வியின் பிரச்சினையாக இருந்த காலை தாமதமாக எழுந்து 11 மணிக்கு மேல்தான் வெளியே வருவது, முறையாகக் கட்சி அலுவலகம் வராமல் இருப்பது, மூத்த தலைவர்களுடனான முரண்டுகள் இவை எல்லாவற்றுக்கும் இந்தத் தேர்தலில் தேஜஸ்வி முடிவு கொடுத்திருந்தார். இப்போது உள்ளதுபோல துடிப்பாக எப்போதும் செயல்பட்டால், எதிர்கால பிஹார் அவருடையதாக இருக்கும் என்கிறார்கள் கட்சிக்காரர்கள். தலைவர் தன்னை வளர்த்துக்கொள்ளட்டும்!


Tejaswi yadavதேஜஸ்வி பிரசாத் யாதவ்பிஹார்பிஹார் தேர்தல் களம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x