Last Updated : 08 Oct, 2015 08:33 AM

 

Published : 08 Oct 2015 08:33 AM
Last Updated : 08 Oct 2015 08:33 AM

நேபாளத்தில் ஏன் நோப்பாளம்?

நேபாளம் தகித்துக்கொண்டிருக்கிறது. புதிய அரசியல் சட்டத்தைச் சுவீகரித்துக்கொண்ட பிறகு இந்தியாவைப் போல, நேபாளமும் மதச்சார்பின்மை பிரகடனத்தை வெளியிட்டது என்னவோ உண்மை. முதலில், சாதிச்சார்பையே அதனால் கைவிட முடியவில்லை.

ஒருபுறம், மீண்டும் அதை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று பழமைவாதிகள் குரல் கொடுக்கின்றனர். இன்னொருபுறம், பெண்களுக்கான உரிமைகளுக்காகப் பெண்ணியவாதிகள் குரல் கொடுக்கின்றனர். எல்லாவற்றையும்விட முக்கியமானதும் இந்தியா தீவிரமாகக் கவனித்துக்கொண்டிருப்பதும் மாதேசிகளின் போராட்டத்தைத்தான்.

மாதேசிகள் யார்?

மாதேசிகள் வசிக்கும் பகுதி ‘தராய்’(தரை) என்று அழைக்கப்படுகிறது. மாதேசிகள் இந்தியாவின் உத்தரப் பிரதேசம், பிஹார் மாநிலங்களை ஒட்டிய நேபாளத்தின் சமவெளிப் பிரதேசத்தில் வாழ்பவர்கள்; விவசாயம், கால்நடை வளர்த்தல் தொழில்களில் ஈடுபடுகிறவர்கள். கல்வி, வேலைவாய்ப்பு மட்டும் அல்லாமல், இந்தியக் குடிமக்களுடன் திருமண உறவும் வைத்திருப்பவர்கள். இந்தியர்களைப் போன்ற அடையாளங்களைக் கொண்ட இவர்களில் பலர் தங்களுடைய சாதி, தொழில் காரணமாக நேபாளத்தின் மலைப் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு இணையாகத் தங்களுக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கோருபவர்கள்.

மாதேசிகள் சிறுபான்மையினர். மேலும், மாதேசிகள் நேபாளிகளைப் போல மலைவாழ் மக்கள் அல்ல என்பதால் தோற்றம், மொழி, கலாச்சார வேறுபாடுகள் அதிகம். மாதேசிகளின் கட்சி பிராந்தியக் கட்சி. ஆகையால், மாதேசிகள் கட்சிக்கு நேபாளத்தின் வேறெந்தப் பகுதியிலும் ஆதரவு இல்லை. எனவே, தேசிய அரசியலில் அவர்கள் ஒதுக்கப்பட்டே இருக்கிறார்கள்.

நேபாளம் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க முயன்றபோது, மாதேசிகள் உள்ளிட்ட சிறுபான்மைக் குழுவினர் தங்களுடைய கோரிக்கைகளைத் தெரிவித்தனர். அவற்றில் பெரும்பாலானவை புதிய அரசியல் சட்டத்தில் ஏற்கப்படவில்லை. அத்துடன் புதிய அரசியல் சட்டத்தின் சில பிரிவுகள் தங்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதாகவே மாதேசி உள்ளிட்ட பிரிவினர் கருதுகின்றனர். புதிய அரசியல் சட்டம் அந்நாட்டை 7 மாகாணங்கள், 75 மாவட்டங்களைக் கொண்ட நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்க வகை செய்கிறது. மாதேசிகளும் மற்றவர்களும் வசிக்கும் பகுதிகள் இதுவரை இருந்த நில எல்லைப்படி பிரிக்கப்படாமல், மலைவாழ் நேபாளிகள் பெரும்பான்மையினராகவும் இவர்கள் அரசியல் ரீதியாக செல்வாக்கு பெற முடியாத வகையில் குயுக்தியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மாதேசிகள் அத்தனை பேரும் ஓரணியில் இருந்தாலும், இனி நாடாளுமன்றத்திலோ, மாகாண சட்டசபைகளிலோ அவர்கள் குரல் வலுவாக ஒலிக்காது. இதைத்தான் மாதேசிகள் வன்மையாக எதிர்க்கின்றனர். தங்கள் பகுதியில் உள்ள 5 மாவட்டங்களை 2 மாகாணங்களுக்குள் மட்டும் வருமாறு மறுவரையறை செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்.

அரசியல் சட்டக் கட்டமைப்பும், நில எல்லைப் பிரிப்பும் பாரம்பரியமான நேபாள ஆதிக்க சாதி மக்களின் அரசியல் செல்வாக்கையும் பிரதேச ஆதிக்கத்தையும் பாதுகாக்கிற வகையில் புதிய அரசியல் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. மாதேசி உள்ளிட்ட சிறுபான்மைப் பிரிவு மக்களுக்கும், அரசியல் சட்டத்தை வகுக்கும் சட்ட மன்றத்தில் பிரதிநிதித்துவம் தரப்பட்டிருந்தாலும் அவர்கள் தகுதியான பிரதிநிதிகளை அனுப்பாமல் தங்களுடைய உறவினர்கள், நண்பர்கள் போன்றோரை நியமித்தனர். அவர்களால் அரசியல் சட்டத்தை வகுப்பதைப் புரிந்துகொண்டு தக்க வகையில் வாதாடி, தங்களுக்கு வேண்டிய உரிமைகளையும் சலுகைகளையும் பெற முடியவில்லை.

மாதேசிகள் மட்டுமல்ல; ஜனஜாதி என்ற சிறுபான்மை மக்களும் பெண்களும்கூடப் புதிய அரசியல் சட்டம் தங்களுடைய நலனுக்கு எதிராகவே இருக்கிறது என்று கடுமையாகச் சாடுகின்றனர். புதிய அரசியல் சட்டத்தின் 289-வது பிரிவு, மாதேசிகள் உள்ளிட்ட பல பிரிவினருக்கு எதிராக இருக்கிறது. நாட்டின் அதிபர், துணை அதிபர், பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தலைவர்கள், மாகாண அரசுகளின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், அவைத் தலைவர்கள், புலனாய்வுப் படையின் தலைவர்கள் ஆகிய அனைத்துக்கும் ‘பாரம்பரியமாக நேபாளக் குடியுரிமை பெற்றவர்கள்’ மட்டுமே தகுதியுடையவர்கள். நேபாளிகளைத் திருமணம் செய்துகொண்டு, நேபாளப் பகுதிகளில் குடியேறி, அதன் மூலம் குடியுரிமை பெற்றவர்களுக்கு இந்தப் பதவிகளை வகிக்கத் தகுதியில்லை என்று 289-வது பிரிவு திட்டவட்டமாகக் கூறுகிறது. இதைத்தான் மாதேசிகள் கடுமையாக எதிர்க்கின்றனர். உத்தரப் பிரதேசம், பிஹார் மாநிலங்களைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்துகொள்ளும் தங்களைக் குறிவைத்தே இந்தப் பிரிவு சேர்க்கப்பட்டிருப்பதாகவும், நேபாள நாட்டின் அரசியல் சட்டம் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சம உரிமையும் சலுகையும் தருவதற்குப் பதிலாக சிலருக்கு மட்டுமே உரிமைகளையும் பதவிகளையும் வழங்கும் விதத்தில் வடிக்கப்பட்டிருப்பதாகவும் கண்டிக்கின்றனர்.

மாதேசிகளின் கோரிக்கைகள்

மாதேசிகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் 5 மாவட்டங்களும் புதிதாக அமையவுள்ள 7 மாகாணங்களில், 2 மாகாணங்களுக்குள் அடக்கப்பட வேண்டும் (புதிய மாகாணங்களுக்கு இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை.) அதிபர், பிரதமர் பதவிக்கு மாதேசிகளும் வர அனுமதிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றம், மாகாண சட்டசபை மட்டுமல்லாது அரசின் எல்லா அமைப்புகளிலும் எல்லாத் தரப்பு மக்களுக்கும் அவர்களுடைய மக்கள்தொகை அடிப்படையில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். மாகாண சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகள் அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் விகிதாச்சார அடிப்படையிலேயே வரையறுக்கப்பட வேண்டும். சமூக நீதி வழங்கும் துறையில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்பவை முக்கியமான கோரிக்கைகளாகும்.

இந்தியத் தலையீடு

நேபாளத்தை எப்போதுமே தன்னுடைய நெருக்கமான கூட்டாளிபோலவே இந்தியா கருதினாலும், இந்தியாவின் அதீத ஆர்வம் அவர்களைத் தொந்தரவுக்கு உள்ளாக்குவதாகத் தொடர்ந்து நினைக்கிறார்கள். குறிப்பாக, நேபாள மாவோயிஸ்ட் கட்சி இந்தியாவைவிடவும் சீனத்தை நெருக்கமாக நினைக்கக் கூடியது. நேபாள பூகம்பத்தின்போது இந்தியா பெரும் அளவில் உதவியது. எனினும், இந்தியாவின் ஆங்கில ஊடகங்கள் இந்திய உதவியை அளவுக்கு அதிகமாக ஊதிப்பெருக்கியபோது, நேபாளிகள் எரிச்சல் அடைந்தனர்.

'இந்திய ஊடகங்களே வெளியேறு' எனும் இயக்கத்தையே சமூக வலைதளங்களில் நடத்தினர்.

இத்தகைய பின்னணியில் நேபாளத்தில் புதிய அரசியல் சட்ட விவகாரத்திலும் நேபாள அரசுக்கு இந்தியா சில யோசனைகளைச் சொன்னது. குறிப்பாக, மாதேசிகள் உள்ளிட்ட அனைத்துச் சமூகங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் எனும் சூழலை உருவாக்காமல், புதிய அரசியல் சட்டத்தை உடனடியாக ஏற்க வேண்டாம். மேலும், சில சுற்றுப் பேச்சு நடத்திவிட்டுப் பிறகு இறுதி செய்துகொள்ளலாம் என்றது. இதை நேபாளத் தலைவர்கள் விரும்பவில்லை. தங்களுடைய உள் விவகாரங்களில் இந்தியா தேவையின்றித் தலையிடுவதாகக் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், மாதேசிகள் தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவிலிருந்து நேபாளத்துக்குச் செல்லும் அத்தியாவசியப் பண்டங்கள் உள்ளிட்ட சரக்குகளைத் தடுத்து நிறுத்தினர். அவர்கள் போராட்டத்துக்கு ஒத்துழைப்பது போல இந்தியாவிலிருந்து சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் தங்கள் போக்குவரத்தை நிறுத்தின. இது நேபாளச் சந்தையையும் அன்றாட வாழ்க்கையையும் ஸ்தம்பிக்க வைத்தது. மாதேசிகளின் கிளர்ச்சிக்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக நேபாளக் கட்சிகள் சந்தேகிக்கின்றன. “மாதேசிகளை இந்தியாதான் தூண்டிவிடுகிறது, பெரிய அண்ணன் மனோபாவத்தில் நேபாளத்தின் அரசியல் செயல்பாட்டில் தலையிட இந்தியா நினைக்கிறது” என்று நேபாள அரசியல் கட்சிகளும் தலைவர்களும் மறைமுகமாகவும் நேரடியாகவும் தாக்குதல்களைத் தொடுத்துவருகின்றனர்.

நேபாள காங்கிரஸ் கட்சி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட்), நேபாள ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என நேபாளத்தின் மூன்று கட்சிகளும் வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்டவை என்றாலும், அடிப்படையில் அரசியல் அதிகாரமும் செல்வாக்கும் தங்களுடைய கட்சிகளை விட்டுச் சென்றுவிடக் கூடாது, தங்களுடைய செல்வாக்கும் பதவிகளும் அதிகாரங்களும் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகின்றன.

நேபாளத்தின் போக்கு எப்படி இருக்கிறது, இனி என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கான சமிக்ஞைகள் வேறு விதங்களிலும் தென்படுகின்றன. சீனத்தின் வரவேற்பு அவற்றில் ஒன்று: “அரசியல் சட்டம் நல்ல முறையில் இயற்றப்பட்டிருக்கிறது; நேபாளத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் இது வழிவகுக்கும்” என்று பாராட்டியிருக்கிறது சீன அரசு!

நேபாளம் ஒரு பார்வை

முக்கிய நகரங்கள் : காத்மாண்டு, வீர்குஞ்ச், பொகாடா.

மக்கள்தொகை : 26,494,504.

பரப்பளவு : 1,47,181 ச.கி.மீ.

மொத்த உற்பத்தி மதிப்பு : 62.384 பில்லியன் டாலர்கள்.

நபர்வாரி வருமானம் : 2,310 டாலர்கள்.

நாட்டின் நீளம் : 800 கி.மீ.

அகலம் : அதிகபட்சம் 200 கி.மீ.

மிகப் பெரிய ஆறுகள் : கோசி, நாராயணி, கர்ணாலி.

மொழிகள் : மொத்தம் 100+. அதிகம் பேசப்படுபவை: நேபாளி, நேவார், தாரு, குருங், தமங், மகர், அவதி, ஷெர்பா, கிராந்தி, ராய், லிம்பு, மைதிலி, போஜ்புரி, போடோ.

மதங்கள் : இந்து - 81.3%, பவுத்தர்கள் - 9%, இஸ்லாமியர் - 4.4%, கிராடிசம் - 3.1%, கிறிஸ்தவம் - 1.4%.

உலகின் 93-வது பெரிய நாடு. மக்கள்தொகைப் பெருக்கத்தில் உலகின் 41-வது நாடு. நேபாளத்தின் வடக்கில் சீனமும் தெற்கு, கிழக்கு, மேற்கில் இந்தியாவும் உள்ளன.

அரசியல் சட்ட வரலாறு:

நேபாளத்தை 1768 முதல் 2008 வரையில் ஆண்டது ஷா மன்னர் பரம்பரை. ‘நேபாள ஜனநாயக மதச்சார்பற்ற குடியரசுக் கூட்டமைப்பு’ என்று அந்நாட்டு அரசியல் சட்டம் நேபாளத்தைக் குறிப்பிடுகிறது.

1948, 1951, 1959, 1962, 1990, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் நேபாள அரசியல் சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது.

நேபாளமும் இந்தியாவும்:

இந்தியாவுடன் 1,751 கி.மீ. நீள நில எல்லையைக் கொண்டது நேபாளம்.

நேபாளம் வழியாகக் கள்ளக் கடத்தல்காரர்கள், பெண்கள் - குழந்தைகளைக் கடத்துவோர், பயங்கரவாதச் செயலில் ஈடுபடக்கூடியவர்கள் வருவதால் இந்தியாவுக்கு நேபாளத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்தும் வெளியுறவுத் தொடர்புகள் குறித்தும் தொடர்ந்து கவலை எழுகிறது. நேபாள நாட்டவர் இந்தியாவுக்கு வருவதற்கு விசா, பாஸ்போர்ட் போன்ற நடைமுறைகள் கிடையாது. நேபாளிகள் இந்தியாவில் தொழில் தொடங்கவும், வியாபாரம் செய்யவும், ராணுவத்தில் பணிபுரியவும் தடை ஏதும் இல்லை. பிரிட்டனிலும் இந்தியாவிலும் கோர்க்க படைப் பிரிவு இருக்கிறது. நேபாளிகள் இந்தியப் பல்கலைக்கழகங்களில் பயில அனுமதிக்கப்படுகிறது.

நேபாளத்தை ஒட்டிய இந்திய மாநிலங்களில் நேபாளியும் ஆட்சி மொழியாக இருக்கிறது. கல்விக் கூடங்களில் நேபாளி கற்றுத்தரப்படுகிறது.

மன்னாராட்சியின் நீட்சி:

19-வது நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து நேபாளம் மன்னராட்சியின் கீழ்தான் இருந்துள்ளது. அதன் பிரதம மந்திரிகளாக ராணா அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள்தான் பதவி வகித்துள்ளனர்.

மன்னராட்சிக்கு எதிராக 1990-ல்தான் முதலில் கலகம் ஏற்பட்டது.

- வ.ரங்காசாரி, தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in

(*நோப்பாளம் - எரிச்சல், கோபம், உக்கிரமமான சினம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x