Published : 30 Oct 2015 08:16 AM
Last Updated : 30 Oct 2015 08:16 AM

இணையவழி மருந்து விற்பனையில் எச்சரிக்கை தேவை

செல்பேசிகள், ஆடைகள், அலங்காரப் பொருட்கள் வாங்குவதுபோலவே மருந்து விற்பனையும் இணையத்தில் களைகட்டத் துவங்கிவிட்டது. இதய நோய்க்கான மருந்துகள், நீரிழிவு நோய் மாத்திரைகள், சத்து மாத்திரைகள் என சகல மாத்திரை மருந்துகளையும் இணையம் வழியே வாங்கிவிட முடியும். மருத்துவ ஆலோசனை அளிப்பதிலிருந்து மருந்துப் பொருட்களையும் வீட்டுக்கே நேரடியாக வந்து கொடுக்கும் சேவைகள்வரை இணைய நிறுவனங்கள் செய்துவருகின்றன. இதற்கெனப் பிரத்யேக வலைத்தளங்களும் ஆப்ஸ்களும் ஏராளமாக வந்துவிட்டன. இந்தியாவில் இயங்கிவரும் சுமார் 8 லட்சம் மருந்துக் கடைகளின் விற்பனை இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக மருந்துக்கடைகளின் எண்ணிக்கை மட்டும் 40 ஆயிரம். சென்னையில் மட்டும் 5,000 கடைகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட 40 லட்சம் ஊழியர்கள் நாடு முழுவதும் மருந்தகங்களில் வேலையில் இருக்கிறார்கள். இந்தத் தொழிலை நம்பியே 1.5 கோடி குடும்பங்கள் இருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில்தான், மருந்து விற்பனையை இணையம் மூலம் நடத்துவதற்கு அனுமதி வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்துவருவதாக வெளியான தகவல் மருந்துக்கடை உரிமையாளர்களை வெகுண்டெழச் செய்தது. இதைக் கண்டித்து அக்டோபர் 14 அன்று மருந்துக்கடை உரிமையாளர்கள் கடையடைப்பு நடத்தினர். ரூ.83 ஆயிரம் கோடி மதிப்பைக்கொண்ட இந்திய மருந்து விநியோகத் துறையை இணைய நிறுவனங்கள் பங்கிட்டுக்கொள்வதால் ஏற்படும் தொழில் போட்டியே இந்த எதிர்ப்புக்கான ஆதாரம் என்றாலும், அதைத் தாண்டியும் சில முக்கியமான பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டுகிறது மருந்து விற்பனையாளர்கள் சங்கம்.

பொது மருந்துகள் மட்டுமல்லாது மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டுக்கு மட்டுமே விற்கப்படும் மருந்துகளையும்கூட மருத்துவர் பரிந்துரை இன்றி இணைய மருந்து நிறுவனங்கள் விற்கின்றன எனும் குற்றச்சாட்டு அவற்றில் முக்கியமானது. கருக்கலைப்பு மருந்து உட்பட தடைசெய்யப்பட்ட பல மருந்துகள் இணையம் மூலம் விற்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. அதேபோல தகவல் தொழில்நுட்பச் சட்டமும், மருந்து மற்றும் அழகுசாதனங்கள் சட்டமும் மீறப்படுகின்றன என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த மே மாதம் மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நடத்திய ஆய்வில் பிரபல இணைய மருந்து வர்த்தக நிறுவனம் ஒன்று பரிந்துரைச் சீட்டு அவசியமான 45 மருந்துகளை மருந்துச்சீட்டு இல்லாமலே இணையத்தில் விற்றது தெரியவந்திருக்கிறது. அதேசமயம், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்தால் மட்டுமே தாங்கள் மருந்துகளை விற்பதாக இணைய மருந்து நிறுவனங்கள் எதிர்வாதம் செய்கின்றன.தற்போது, இணைய மருந்து விற்பனைத் துறையைக் கண்காணிக்க இந்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இருப்பினும் திட்டவட்டமான வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும்வரை மருந்து விற்பனை இணைய தள நிறுவனங்களைத் தடைசெய்ய வேண்டும் என்கின்றனர் மருந்தாளர்கள்.

மருந்தாளர்கள் கோரிக்கை நியாயமானது. எனினும், கால மாற்றப் போக்குகளுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்வதே எந்தத் தொழிலும் நீடித்த வெற்றி காண வழிவகுக்கும். தவிர, இணைய மருந்து விநியோகச் சேவையானது உதவிக்கு ஆளற்ற நோயாளிகளுக்குப் பெரும் வரப்பிரசாதம். அதேசமயம், இணையவழி மருந்து விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்களை வழிநடத்த திட்டவட்டமான வரையறைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும். பாரம்பரியமாக இத்தொழில் ஈடுபட்டிருப்போரின் நலனையும் கருத்தில் எடுத்துக்கொண்டு அது அமைய வேண்டும். இல்லாவிடில் நோயாளிகளின் உயிரோடு விளையாடுவதாகிவிடும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x