Published : 31 Oct 2015 11:20 AM
Last Updated : 31 Oct 2015 11:20 AM

துவரம் பருப்பும் பழைய நினைப்பும்!

‘துவரம் பருப்பின் அரசியல்’ தலையங்கத்தை வாசித்தவுடன் என் இளமைக் காலங்கள் நினைவுக்கு வந்தன. 1955 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கு நோக்கினும் கம்பு, கேழ்வரகு, சோளம், வரகு, குதிரைவாலி, திணை போன்ற புஞ்சை தானியங்களும், துவரை மற்றும் மிளகாய் போன்ற பயிர்களும் செழித்துவளர்ந்ததைப் பார்த்திருக்கிறேன்.

தை பிறந்தவுடனேயே புஞ்சை தானியங்கள் விளைந்து வீட்டுக்கு வந்துவிடும். துவரை மற்றும் மிளகாய் ஆகியன பங்குனி அல்லது சித்திரை மாதத்தில் விளைச்சல் காணும். ஆனால் புஞ்சை தானியங்கள் செழித்து வளர்ந்த பூமியை இன்று வேலிக்கருவை முட்செடிகள் ஆக்கிரமித்துக்கொண்டுவிட்டன. அரசு இலவசங்களை மக்களுக்கு அளித்ததே தவிர விவசாயக் குளங்களைத் தூர்வாரும் பணியைச் செய்யவில்லை. விளைவு ராமநாதபுரம் மாவட்டத்தில் 1991 முதல் விவசாயம் சிறிது சிறிதாக அழியத் தொடங்கியது.

தமிழகம் முழுவதும் இன்று இதே நிலைதான். இலவசங்கள் மூலம் தனது வாக்குவங்கியைத் தக்க வைத்துக்கொள்வதில் அரசு ஆர்வம் காட்டியதே தவிர, நலிந்துபோன விவசாயத்தை மீட்டெடுப்பதில் அக்கறை காட்டவில்லை. எனவேதான் இன்று விண்ணை முட்டுகிறது பருப்புகளின் விலை.

- சசிபாலன், ‘தி இந்து’ இணையதளத்தில்…

‘துவரம் பருப்பின் அரசியல்’ கட்டுரை வாசகர்களைச் சிந்திக்கவைப்பதுடன் அறுபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழகத்தையும் நினைவுபடுத்துகிறது. இந்தியாவின் பாரம்பரிய புஞ்சைப் பயிர் வகைகளான சோளம், கம்பு, கேழ்வரகு ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட தானியங்கள். இவை அனைத்தும் மறைக்கப்பட்டு மக்காச்சோளமாக தலையாட்டம் போடுவதை கூர்மையாக விமர்சித்துள்ளார் கட்டுரையாளர்.

- எஸ். சொக்கலிங்கம், கொட்டாரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x