Published : 28 Sep 2015 09:32 AM
Last Updated : 28 Sep 2015 09:32 AM

ரொமீலா தாப்பர் பேசுகிறார்... ரிக் வேதத்தில் திராவிட மொழி!

பண்டைய இந்திய வரலாற்றை மறு வாசிப்புக்கு உட்படுத்திய இந்திய வரலாற்றாசிரியர்களில் முதன்மையானவர் ரொமீலா தாப்பர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர். ‘எ ஹிஸ்ட்ரி ஆஃப் இந்தியா’, ‘அசோகா அண்டு தி டிக்ளைன் ஆஃப் தி மவுரியாஸ்’ போன்ற வரலாற்று ஆய்வு நூல்களை எழுதியவர். அவருடனான பேட்டியின் சில முக்கியப் பகுதிகள் இங்கே!

உங்களுடைய சமீபத்திய புத்தகமான ‘தி பாஸ்ட் ஆஸ் பிரசண்ட்’-ஐ வாசிக்கும்போது, வரலாற்று ஆய்வின் இன்றைய போக்கையும் இந்திய வரலாறு குறித்த வெகுஜனப் புரிதலையும் ஒருவிதமான வருத்தத்தோடு அவதானிப்பதாகத் தோன்றுகிறது.

50 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி நிறுவனங்களில் வரலாற்றுப் பாடம் கற்றுத்தரப்பட்ட விதமே வேறு. அப்போது வரலாற்றைப் புதிய பார்வையில் எழுதியவர்கள் பல எதிர்ப்புகளைச் சந்தித்தோம். அந்தவகையில் இன்று ஓரளவு ஆரோக்கியமான மாற்றம் வந்துள்ளது. இருப்பினும், பொதுமக்களிடையே காலாவதியான வரலாறும் வரலாறே அல்லாதவையும்தான் இன்னமும் வரலாறாக இருக்கின்றன. கடந்த காலத் தகவல்களின் குவியல்தான் வரலாறு என இன்றும் பலர் நம்புகின்றனர். பலவிதமான மூலங்களைக் கண்டறிந்து, அவற்றைக் குறுக்குவிசாரணை செய்து, ஆதாரங்களின் நம்பகத்தன்மையைச் சோதித்து அதன் அடிப்படையில்தான் தகவல்களைத் திரட்ட வேண்டும். ‘வரலாற்று முறைமை’ என நாங்கள் அழைப்பது இதைத்தான்.

முறையான பயிற்சி இன்றி பொதுவான ஆர்வத்தில் வரலாற்றைத் தேடுபவர்களுக்கும், தர்க்கரீதியாக சமரசமின்றி வரலாற்றைப் புரிந்துகொள்ளும் வரலாற்றாசிரியருக்கும் துல்லியமான வேறுபாடு உள்ளது என்கிறீர்கள் அல்லவா?

நிச்சயமாக. நான் சொன்னது எல்லா வரலாற் றுக்கும் பொருந்தும். அதிலும், பண்டைய இந்திய வரலாற்றில் இந்தச் சிக்கல் கூடுதலாகவே இருக்கிறது. ஒரு டஜன் பண்டைய இந்திய வரலாற்றுப் புத்தகங்களைப் படித்துவிட்டால் நீங்கள் நிபுணராகி விட முடியாது. அதன் மூலங்கள் மற்றும் அக்கால கட்டத்தில் வழக்கத்திலிருந்த மொழிகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, மவுரியக் கல்வெட்டுகளை ஆராய பிராகிருதம் தெரிந்திருக்க வேண்டும். அதனுடன் தொடர்புடைய கௌடில்யரின் (சாணக்கியர்) அர்த்தசாஸ்திரத்தை வாசிக்க சம்ஸ்கிருதமும் கற்றிருக்க வேண்டும். ஓரளவாவது தொல்லியல் தெரிந்திருக்க வேண்டும்.

தற்காலத் தொல்லியல் ஆய்வுகளில் அறிவியல் முறைகள் பல பின்பற்றப்படுகின்றன. இதனால் தொல்லியலை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. அடுத்தபடியாக வெறுமனே மொழி அறிவையும் தாண்டி, மொழியியல் தெரிந்திருக்க வேண்டும். சமீப காலமாகப் பெரிதும் விவாதிக்கப்படும் ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். நாங்கள் மாணவர்களாக இருந்தபோது ரிக் வேதத்தின் ஒரே மொழி இந்து-ஆரிய மொழி. ஆனால், இன்றைய வேத ஆய்வாளர்களைக் கேட்டுப்பாருங்கள். ரிக் வேதத்தில் திராவிட மொழியும் உள்ளதென்று அவர்களில் பெரும்பாலோர் சொல்வார்கள். வரலாற்றாசிரியரின் பார்வையை இது புரட்டிப்போடுகிறதல்லவா? “ஒரே ஒரு மொழியை மட்டுமே பேசிய மக்களின் மொழியில் எழுதப்பட்ட ஒரு நூல் இங்குள்ளது” என இனி எவரும் சொல்ல முடியாது.

நீங்கள் பேசுவதிலிருந்து கடந்த காலம் என்பது ஒற்றைத் தன்மை கொண்டதல்ல என்பது புரிகிறது. சாமானிய மக்கள் மனதில் சில தவறான, அபாயகரமான விஷயங்கள் புகுத்தப்பட்டுள்ளன. சில மதம் சார்ந்த நடவடிக்கைகளை, சில இன அடையாளங்களை, சில குழுக்களை ஒற்றைத் தன்மையிலேயே புரிந்துவைத்துள்ளனர்…

பொதுமக்களிடையே பரப்பப்படுவதைப் பற்றி நான் இப்போது விளக்கப்போவதில்லை. ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும். ‘மத்திய ஆசியாவிலிருந்து ஈரான் வழியாக இந்தியா வந்தடைந்ததுதான் ஆரிய மொழி’ என்றுதான் நெடுங்காலமாகச் சொல்லப் பட்டது. ஆனால், ‘ஆரிய மொழி பேசியவர்கள் இம்மண்ணின் மைந்தர்களே’ எனும் கருத்து சமீபகால மாகப் பரப்பப்படுகிறது. சிலர் ஹரப்பா நாகரிகத்தைத் தோற்றுவித்ததே ஆரியர்கள்தான் என்கின்றனர். ஒட்டுமொத்தமாக ஆரியர் அல்லாத கூறுகளே இந்திய நாகரிகத்தில் இல்லை எனச் சொல்லத் தொடங்கிவிட்டனர். பல காரணங்களுக்காக இதை நான் மறுக்கிறேன்.

புனிதப்படுத்துதல் என்பதாலா?

ஆம்! புனிதமான ஆரியவாதம். அதில் ஒரு மூலம் மட்டும் முன்னிறுத்தப்படுகிறது. பன்முகத்தன்மைகள் விளிம்புக்குத் தள்ளப்படுகின்றன. மொழியில் மற்றும் தொல்லியல் அடிப்படையில் இதை நாங்கள் முற்றிலுமாக மறுக்கிறோம். ஹரப்பா நாகரிகத்துக்குப் பின்தோன்றியதுதான் ரிக் வேதம் என்பதே எங்களுடைய வாதம். ஏனென்றால், ஓமனில் ஹரப்பா பண்பாட்டின் தடங்கள் காணப்படுகின்றன. அவர்களுக்கு மெசபடோமியாவோடும் தொடர்பு இருந்திருக்கிறது.

ஆனால், இத்தகைய கூறுகள் ரிக் வேதத்தில் பிரதிபலிக்கவில்லை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியிலும் இரண்டாம் நூற்றாண்டின் தொடக் கத்திலும் ஹரப்பா கலாச்சாரம் அக்கம்பக்கத்தில் இருந்த பிற கலாச்சாரங்களோடு தொடர்பு கொண்ட தாகத் தெரியவருகிறது. ஆனால், ரிக் வேதமோ கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் மத்திய காலம் தொடங்கி இறுதிவரையில்தான் தொகுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் சாம்பல் நிறப் பானைக் கலாச்சாரம், கருப்பு மற்றும் சிவப்புப் பானைக் கலாச்சாரம், பெருங்கற்கள் கலாச்சாரம் எனப் பல விதமான கலாச்சாரங்கள் இருந்துள்ளன. இப்படிப் பலதரப்பட்ட கலாச்சாரச் சூழலில்தான் ஆரிய மொழி பேசிய மக்கள் இந்தியாவில் குடியேறினர்.

அதிலும் ஹரப்பா நகரங்களின் கலாச்சாரம் அதிநவீனமானது. அம்மக்களுக்கு எழுத்தறிவும் இருந்தது. மறுபுறம் எழுத்தறிவற்ற, நகர்ப்புற வாழ்க்கை முறை அறியாத, விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்த ரிக் வேதச் சமூகம். இது போன்ற அடிப்படையான வேறுபாடுகளை யாரும் மறந்துவிட வேண்டாம்! -தொடரும்..

தமிழில் சுருக்கமாக: ம.சுசித்ரா

நன்றி: ஃப்ரண்ட்லைன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x