Published : 16 Sep 2015 08:52 AM
Last Updated : 16 Sep 2015 08:52 AM

பாலினச் சமத்துவம் ஆயுதப் படைகளிலும் பரவட்டும்!

இந்திய ராணுவத்தில் பாலினச் சமத்துவத்தை உறுதியாகக் கட்டமைக்க மேலும் ஒரு செங்கல்லை வழங்கியிருக்கிறது டெல்லி உயர் நீதிமன்றம். நம்முடைய கடற்படையில் போர்ப்படைப் பிரிவில் வேலைக்குச் சேரும் பெண்களும் ஆண்களைப் போலவே ஓய்வுபெறும் வயது வரையில் (பர்மனென்ட் கமிஷன்) பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஏற்கெனவே இதேபோல தொடுக்கப்பட்ட வழக்குகளில் ராணுவத்தின் தரைப்படை, விமானப் படை ஆகியவற்றிலும் பெண்களுக்கு இதே உரிமையை டெல்லி உயர் நீதிமன்றம்தான் 2010-ல் வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. அதிகாரபூர்வமாகவே கடைப்பிடிக்கப்பட்டுவந்த ஒரு பாலினப் பாகுபாட்டுக்கு இதன் மூலம் முடிவுகட்டப்பட்டிருக்கிறது.

இப்போதுள்ள நடைமுறைகளின்படி இந்தியக் கடற்படையில் சேரும் பெண்கள் அதிகபட்சம் 14 ஆண்டுகளுக்குத்தான் பணிபுரிய முடியும். இவ்வாறு இள வயதில் பணியில் சேர்ந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு படையில் இருந்து ஓய்வுபெறும் அவர்களால் தகுதியுள்ள வேறு பணிகளில் அமர முடிவதில்லை. அத்துடன் 14 ஆண்டுகள்தான் சேவை என்பதால், ஓய்வூதியம் பெறும் தகுதியும் அவர்களுக்கில்லை என்று மறுக்கப்படுகிறது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு பெண்களும் கடற்படையில் 54 வயது வரையில் தொடர்ந்து பணிபுரிய முடியும்.

இப்போது பணியில் இருப்பவர்களும், ஓய்வுபெற்றவர்களுமாகச் சேர்ந்து 19 பேர் “கடற்படையில் சேரும் ஆண் வீரர்களுக்குத் தரும் அதே பயிற்சிகள்தான் எங்களுக்கும் தரப்படுகின்றன, அதே பணிகளைத் தான் நாங்களும் செய்கிறோம், அவர்களைப் போலவே வெவ்வேறு துறைகளில் நாங்களும் பணிபுரிகிறோம். ஆனால், வேலையிலிருந்து 14 ஆண்டுகளிலேயே விலக்கப்படுவதால் எங்களுக்கு அநீதி இழைக்கப் படுகிறது, பெண் என்பதாலேயே விலக்கப்படுகிறோம். பாலின அடிப்படையிலான இந்த அநீதியைக் களைய வேண்டும்” என்று இந்த வழக்கைத் தொடுத்தனர்.

இந்த வழக்கில்தான் “தொழில்ரீதியாகப் பெண்கள் முன்னுக்கு வருவதைத் தடுக்கும் எந்தச் சட்டத்தையும், விதியையும், நடைமுறை யையும் நீதிமன்றத்தால் ஆதரிக்க முடியாது” என்று வரலாற்றில் பொறிக்க வேண்டிய வார்த்தைகளைத் தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது நீதிமன்றம்.பெண்களையும் ஆண்களுக்குச் சமமாக நடத்த வேண்டும் என்று தீர்ப்பு வந்த பிறகு, தரைப்படையில் 340 பெண்களுக்கு அத்தகைய நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நாடாளுமன்றத்தில் சமீபத்தில்தான் தெரிவித்திருந்தார். இனி, கடற்படையிலும் பெண்களுக்குப் பணி வாய்ப்புகளுக்கான கதவுகள் முழுமையாகத் திறக்கப்பட்டுவிடும். எனினும், ராணுவத்தின் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் அத்துறையும் பெண்களுக்கு எதிரான தங்களுடைய கண்ணோட்டத்தை முற்றிலுமாக மாற்றிக்கொண்டால்தான் விடிவு பிறக்கும் என்பதை இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியாது. பெண்களுக்கு நீண்ட காலச் சேவைக்கான வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன் என்று கேட்டபோது, “கிராமப்புறங் களிலிருந்து வந்து படையில் சேரும் வீரர்கள் பெண் அதிகாரிகளின் கட்டளைக்குக் கட்டுப்பட விரும்ப மாட்டார்கள்” என்றும் “பெண்கள் போர் வீரர்களாக இருப்பதைச் சமூகமும் விரும்பவில்லை” என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறியிருப்பது, நம்முடைய அமைப்பில் ஆணாதிக்கம் எவ்வளவு கோலோச்சுகிறது என்பதற்கான அதிகாரபூர்வ உதாரணம்.

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் காவல் துறையிலும் ராணுவத்திலும் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவு. பெண்களைச் சேர்க்கக் கூடாது என்ற மனோபாவமும் அணுகுமுறையும்தான் இதற்குக் காரணம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்களை அதிக எண்ணிக்கையில் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ள முயற்சிகளும் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. வீரதீரச் செயலுக்கான விருதைப் பெறவிருக்கும் தரைப்படை ராணுவ அதிகாரி லெப். கர்னல் மிதாலி மதுமிதா, இதேபோல நீண்ட கால சேவை தனக்கு மறுக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று வழக்காடித்தான் நியாயம் பெற்றார் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். வருங்காலத்திலேனும் இந்தச் சூழல்கள் எல்லாம் மாற நம்முடைய அடிப்படை மனோபாவம் மாற வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x