Published : 15 Sep 2020 07:42 am

Updated : 15 Sep 2020 07:42 am

 

Published : 15 Sep 2020 07:42 AM
Last Updated : 15 Sep 2020 07:42 AM

திராவிட நாட்டின் கூட்டு ஆட்சிமொழியாகவும் சர்வதேச மொழியாகவும் ஆங்கிலம்: அண்ணா

anna-about-languages

தமிழ்நாட்டுக்கு 1950-ல் வந்த இந்தி நல்லெண்ணக் குழுவினர் அண்ணாவைச் சந்தித்தார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கலந்துரையாடல் இது. இந்தி சாகித்ய சம்மேளனத் தலைவரான சந்திரபள்ளி பாண்டே தலைமையில் வட நாட்டிலிருந்து வந்த குழுவினர் காஞ்சனலதா, சபர் மாலா, பாபா ராகவதாஸ், பண்டிட் சீதாராம் சதுர்வேதி, சந்திர காந்தர் ஆகியோரோடு சென்னை தட்சிணப் பாரத இந்திப் பிரச்சாரச் சாலையின் தலைவரான பால்சந்திர ஆப்தேவும் சேர்ந்து அண்ணாவைச் சந்தித்தனர். சுமார் ஓராண்டுக்கு முன் திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்து, திமுக எனும் புதிய இயக்கத்தைத் தோற்றுவித்திருந்த அண்ணா அந்நாட்களில் வலியுறுத்திவந்த ‘திராவிட நாடு’, அவருடைய கனவில் எத்தகையதாக உருப்பெற்றிருந்தது என்பதையும், அவருடைய விழுமியங்கள் எவ்வளவு உயர்வாக இருந்தன என்பதையும் இந்த உரையாடல் வெளிப்படுத்துகிறது. இந்தக் கலந்துரையாடல் ‘திராவிட நாடு’ பத்திரிகை அலுவலகத்தில் நடைபெற்றதாகத் தெரிகிறது. ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலிலிருந்து சுருக்கமான வடிவம் இங்கே.

சதுர்வேதி: தாங்கள் இந்தி மொழி பரவுதல் கூடாது எனக் கூறுவதாகக் கேள்விப்பட்டோம். ‘இந்தி ஆரிய மொழி’ என்று தாங்கள் கூறுவதாகவும் அறிந்தோம். பல மொழிச் சேர்க்கையால் உருவான மொழியே இந்தி. இதுவே பொது மொழியாக இருக்கும் நிலையில் இருப்பது என்று கருதுவதோடு, அவ்வாறு இருக்க அது அருகதையுள்ளது என்றும் உறுதியாக நம்புகிறோம். ஆகவே, இதுபற்றிய தங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறோம்.


அண்ணா: மகிழ்ச்சி. இந்தி திணிக்கப்பட வேண்டாம் என்று நாங்கள் கூறுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. முக்கியமானது, எங்கள் குழந்தைகள் தாய்மொழி தமிழ், அகில உலக மொழி ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளைக் கற்க வேண்டியுள்ளது. இது கடினம். அதோடு எங்கள் மொழி எல்லோரும் போற்றும் ஒரு சிறந்த மொழி. இலக்கிய வளமும் சிறந்த அழகும் வாய்ந்தது. இன்னொரு மொழி கட்டாயமாக எம் மீது திணிக்கப்பட்டால், தனிப்பெருமை உடைய எங்கள் தாய்மொழி பின்தள்ளப்படும். ‘இந்தி அழகுள்ளதல்ல; இலக்கிய வளங்கொண்டதல்ல’ என்று தங்கள் போன்றோரே ஒப்புக்கொண்டு உள்ளீர்கள். ஆகவே, அத்தகைய ஒரு மொழி, எங்கள் மீது ஏன் சுமத்தப்பட வேண்டும்? எங்கள் எதிர்ப்புக்கு அரசியல்ரீதியிலும் காரணங்கள் உண்டு. இந்தி அரசாங்க மொழியாக வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். அதாவது இப்போது ஆங்கிலத்துக்கு இருக்கும் இடம் இந்திக்கு இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள். இதை எங்களால் ஒப்ப முடியாது. இந்தி தேவை என்றால் வேண்டுபவர்கள் அதைக் கற்றுக்கொள்ள விரும்புவதில் எங்களுக்கு எதிர்ப்பில்லை. ஆனால், அது அரசாங்க மொழி என வலியுறுத்தப்படுவதில் வேறு பொருள் உள்ளது. இந்தியா ஒரே நாடு என்ற எண்ணத்திலேயே இந்தி மொழி ஆதரவாளர்கள் அது அரசியல் மொழியாக வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

காஞ்சனலதா: அப்படி என்றால் இந்தியா ஒரு நாடில்லையா?

அண்ணா: இல்லை சகோதரி! இந்தியா ஒரு நாடல்ல. உபகண்டம். பல இனங்கள் வாழும் ஒரு பரந்த நிலப்பரப்பு. இங்கே ஒரே ஆட்சி நிலவுவது என்பது முடியாதது. அதேபோல, ஒரே மொழி அரசாங்க மொழி ஆவதும் இயலாது.

சதுர்வேதி: தாங்கள் திராவிடஸ்தான் கோருவதாகக் கேள்வியுற்றோம். அது சாத்தியமாகுமா? இந்தியாவை ஆரிய வர்த்தம் என்றும் சீக்கிஸ்தான் என்றும் திராவிடஸ்தான் என்றும் பிரிப்பதால், இப்போது நாம் பாகிஸ்தானைப் பிரித்ததால் ஆளான கஷ்ட நஷ்டங்கள் உண்டாகாதா?

அண்ணா: உண்மைதான். ஆனால், எங்கள் கோரிக்கை வேறுவிதமானது. பாகிஸ்தான், சீக்கிஸ்தான் போன்றதல்ல. ஏனெனில், பாகிஸ்தான் ஒரு புது படைப்பு. சீக்கிஸ்தான் ஒரு புதுக் கோரிக்கை. நாங்கள் கோரும் திராவிட நாடு பூகோளரீதியிலும் சரித்திரரீதியிலும் எப்போதும் தனியாகவே இருந்ததாகும். வட இந்தியாவைப் போன்றதல்ல. பெரிய பெரிய சாம்ராஜ்யங்கள் வடக்கே இருந்திருக்கின்றன. சந்திரகுப்தர், அக்பர், ஔரங்கசீப் போன்றோருடைய சாம்ராஜ்யங்கள் வடக்கில் இருந்திருக்கின்றன. அப்போதும் நாங்கள் கூறும் திராவிடநாடு, தென்னாடு - தனியாகத் தனி அரசுடனே இருந்ததாகும். பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்து, இந்திய நாட்டைத் தங்கள் வசப்படுத்திய பின்னரே இந்தியா உருவாயிற்று. நிர்வாக வசதிக்காகத் தென்னாடும் இணைக்கப்பட்டு டெல்லி ஆட்சி ஏற்பட்டது. அதற்கு முன்னதாகத் தென்னாடு - தக்காணம் - ஒரு சுதந்திர நாடாகத்தான் இருந்தது.

சதுர்வேதி: தாங்கள் தனி நாடு கோருவதன் நோக்கம் என்ன?

அண்ணா: எல்லா அதிகாரங்களும் எம்மிடமே இருக்க வேண்டும் என்பதுதான். இப்போது எதற்கெடுத்தாலும் டெல்லிக்குப் போக வேண்டி இருக்கிறது. எங்களது விவகாரங்களில் இன்னொருவர் தலையீடு இருக்கக் கூடாது. எல்லாம் எங்களாலேயே கவனித்துக்கொள்ளப்பட வேண்டும்.

காஞ்சனலதா: ஒரே உலகம் ஏற்பட வேண்டும்; உலகத்துக்கே ஒரு பொதுப் பாராளுமன்றம் ஏற்படவேண்டும் என்றெல்லாம் பேசப்படும் இந்தக் காலத்தில் ‘தனியாகப் போகிறேன்’ என்று கூறலாமா? ஒற்றுமையைக் குலைக்கலாமா? ஒரு குடும்பத்தில் வசிக்கும் சகோதரர்கள் அல்லவா நாம்?

அண்ணா: தங்கள் உவமானம் தவறு எனக் கூற வருந்துகிறேன். நாம் ஒரே குடும்பத்தில் வசிக்கும் சகோதர்கள் அல்ல. ஒரே வீட்டில் குடியிருக்கும் நண்பர்கள். அதிலும் அழகான ஒரு தனி வீடு இருக்கும்போது, கட்டாயப்படுத்தி ஒரே வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் நண்பர்கள். உலக ஒற்றுமை பற்றிக் கூறினீர்கள். நாங்கள் தனி நாடாகப் பிரிவதால், உலகத்தோடு துண்டித்துக்கொள்ள மாட்டோம். உலக விவகாரங்களில் அக்கறை காட்டுவோம். வெளிநாட்டு விஷயங்களில் முழுமையுள்ள இந்தியக் கருத்து எப்படிச் செல்கிறதோ அப்படியே அதை ஒட்டி நாங்களும் இருப்போம்.

சதுர்வேதி: அதாவது, வெளிநாட்டு விவகாரங்களில் பொதுவாக இருந்து, இந்திய ஆட்சியினர் எடுக்கும் நடவடிக்கைகளோடு ஒத்துழைப்பீர்கள்… அப்படித்தானே? அது எப்படி இயலும்?

அண்ணா: முடியும்! இப்போது உலக விவகாரங்களைக் கவனித்துக்கொள்ள ஐக்கிய நாடுகள் இல்லையா? அதைப் போல இந்திய உபகண்டம் முழுமைக்கும், நாம் ஒரு சபையை ஏற்படுத்திக்கொண்டு, வெளிநாட்டு விவகாரங்கள் பற்றிய பொதுக் கொள்கையை நிர்ணயித்துக்கொள்ளலாம்.

காஞ்சனலதா: வெளிநாட்டு விவகாரம் தவிர்த்து ஏனைய பொறுப்புகளும் அதிகாரங்களும் உங்கள் வசமே இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இதை மத்திய சர்க்காரிடம் தெரிவித்து உங்கள் அதிகாரங்களைப் பெருக்கிக்கொள்ளலாமே? உங்கள் மாகாணத்திற்கு அதிக அதிகாரங்கள் வேண்டுமெனக் கோரி, அவை சர்க்காரால் மறுக்கப்பட்டால், அப்போது நீங்கள் பிரிவினை குறித்துப் பேசலாம் அல்லவா? இப்போது இந்திய சர்க்காருடன் இணைந்திருப்பதால் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றன?

அண்ணா: நன்மைகள் எவையும் இல்லை. தாங்கள் சொல்வதெல்லாம் நாங்கள் கேட்டு சலித்துப்போனவை.

பாண்டே: ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தமிழகம் ஆகியவை திராவிடஸ்தானில் அடங்கி இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். அது எப்படி?

அண்ணா: அந்தப் பிரதேசங்களில் வாழ்வோர் இனவாரியாகப் பார்த்தால் திராவிடர்கள்.

ஆப்தே: அப்படி என்றால் மகாராஷ்டிரம்? அங்கும் திராவிடர்கள் இருக்கிறார்கள்…

அண்ணா: ஆமாம். அவர்களே விரும்பினால் தனிநாடு அமைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

ராகவதாஸ்: தாங்கள் கூறும் திராவிடஸ்தானில் ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகியவற்றின் பொதுமொழி என்ன?

அண்ணா: ஆந்திரத்தில் தெலுங்கு, கர்நாடகத்தில் கன்னடம், கேரளத்தில் மலையாளம் முறையே அவர்கள் சொந்த மொழியாக இருக்கும். கூட்டு ஆட்சிமொழியாக சர்வதேச மொழியாகவும் (Federal and International) ஆங்கிலம் இருக்கலாம்.

ராகவதாஸ்: உதாரணமாக, நான் ஒரு சாதாரண குடிமகன். எனக்கு ஆங்கிலம் தெரியாது. அப்படியானால் உங்கள் பாராளுமன்றத்தில் எனக்கு இடம் கிடையாது!

அண்ணா: மன்னிக்க வேண்டும். வட்டார மொழி அறிந்தவர்கள் சட்டசபை போகத் தடை இல்லை. அந்தந்தப் பகுதியில் அந்தந்த வட்டார மொழிதான் அரசியல்மொழியாக, ஆட்சிமொழியாக இருக்கும்.

ராகவதாஸ்: அப்படியானால், ஆங்கிலம்?

அண்ணா: அகில உலகத் தொடர்புக்கும் கூட்டாட்சி விவகாரங்களுக்கும் அது பயன்படும் என்று குறிப்பிட்டேன்.

ராகவதாஸ்: பொது ஜனமாகிய எனக்கு உலகம் வேண்டிய தில்லை! நீங்கள் என்னைப் போன்றவருக்கும் சர்க்காருக்கும் இடையிலிருந்து மொழிபெயர்ப்பு வேலை செய்பவர்களாக ஆவீர்கள்!

அண்ணா: ஒரு ஜனநாயக ஆட்சியில் பொது ஜனம் காட்சிப் பொருளல்ல. ஜனநாயகத்தின் உயர்நோக்கமே அவர்களை முன்னேற்றுவதுதானே! ஆகவே, அறியாமை அதிக நாட்கள் நீடிக்க வேண்டுமா? பொதுஜனம் எப்போதுமே பொதுஜனமாகவே இருக்க வேண்டும் என்பது தங்கள் விருப்பமா?


அண்ணாஆங்கிலம்திராவிட நாடுஆட்சிமொழிசர்வதேச மொழி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x