Published : 11 Sep 2020 15:57 pm

Updated : 11 Sep 2020 15:57 pm

 

Published : 11 Sep 2020 03:57 PM
Last Updated : 11 Sep 2020 03:57 PM

ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்புமா?

will-peace-return-to-afghanistan

ஆப்கானிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கவிருக்கும் சூழலில், தொடர்ந்து நடந்துவரும் வன்முறைச் சம்பவங்கள் ஆப்கானியர்களின் உயிரைக் குடித்துவருகின்றன.

சண்டை நிறுத்தம் செய்ய வேண்டும் அல்லது வன்முறைச் சம்பவங்களைக் குறைத்துக் கொள்ளவாவது வேண்டும் என்று முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன. சமீபத்தில் தலைநகர் காபூலின் மையப் பகுதியில், ஆப்கானிஸ்தான் துணை அதிபர்களில் ஒருவரான அம்ருல்லா சாலேயின் வாகன அணிவகுப்பின்போது நடந்த குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள்.


எனினும், இந்தத் தாக்குதலில் ஈடுபடவில்லை என்று தாலிபான் கிளர்ச்சிக் குழு மறுத்திருக்கிறது. இதுவரை யாருமே இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை. சமீபகாலமாகக் காபூலில் மீண்டும் படுகொலைகளை தாலிபான் அமைப்பு அரங்கேற்றிவருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் சூழலில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. இதுபோன்ற தாக்குதல்கள் மூலம் அரசின் மீதான அழுத்தத்தை அதிகரித்து, அமைதிப் பேச்சுவார்த்தையில் ஆதாயத்தைப் பெறும் நோக்குடன் தாலிபான் இதைச் செய்துவருவதாகக் கருதப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடங்க கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டுவந்த நிலையில், இதுபோன்ற பயங்கரமான சம்பவங்கள், நாட்டில் அமைதி திரும்பும் என ஆப்கானியர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைச் சிதைத்துவிடும். சாலே மீதான இந்தத் தாக்குதலின் பின்னணி மர்மமானது என்றாலும், ஆப்கானிஸ்தானின் எதிரிகள் அவரை ஒழித்துக்கட்ட வேண்டும் எனும் தீர்மானத்துடன் இருப்பது தெளிவாகவே தெரிகிறது.

தாலிபான் அமைப்புக்கும், அரசு மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களைச் சேர்ந்த குழுவுக்கும் இடையில் நேரடிப் பேச்சுவார்த்தை நடப்பதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நடந்துவந்த சூழலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தாலிபான் அமைப்பை சாலே கடுமையாக எதிர்த்துவருவதாலும், தேசியப் பிரச்சினைகளின்போது தனது தேசபக்தி நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்துவதாலும், தாலிபான்களால் அவர் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறார்.

தாலிபானுடன் சமாதானமாகச் செல்ல முடியாது என்பதை, சில நாட்களுக்கு முன்னர் அவர் உறுதியாகத் தெரிவித்துவிட்டார். அதேசமயம், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒரு தடையாகவும் இருக்கப்போவதில்லை என்றும் கூறியிருந்தார்.

துராந்து எல்லைக் கோடு தொடர்பாகப் பேசிய அவர், ஆப்கானிஸ்தானின் குளிர்காலத் தலைநகராக பெஷாவர் (பாகிஸ்தான் நகரம்) இருந்துவந்த காரணத்துக்காக, ஆப்கனுக்குச் சொந்தமான நிலப்பகுதியை பாகிஸ்தானுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தப் பேச்சுகள் காரணமாகவே, பாகிஸ்தான் உளவுத் துறையாலும் தாலிபான்களாலும் அவர் குறிவைக்கப்படுகிறார் என்பதில் சந்தேகமில்லை.

சமீபத்திய சூழலைப் பார்க்கும்போது, ‘தாக்குதல் நடத்துவது; ஆனால் அதற்குப் பொறுப்பேற்க மறுப்பது’ எனும் வியூகத்தை தாலிபான் அமைப்பு கைக்கொண்டுவிட்டதைப் போல தெரிகிறது. இன்றைய சூழலில் இப்படியான தாக்குதலை நடத்தும் அளவுக்குப் பெரிய அமைப்பாகவும், செல்வாக்கு மிக்கதாகவும் இருக்கும் ஒரே அமைப்பு தாலிபான்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அமைதிக்கான விருப்பத்தை அரசு அதிகாரிகள் வெளிப்படுத்தினாலும், அப்படியான எந்த ஒரு அறிகுறியும் தாலிபான் தரப்பிலிருந்து தென்படவில்லை.

ஆப்கானிஸ்தானின் ஒருமைப்பாடு மற்றும் எதிர்காலத்துக்காக, தாலிபானுடனான பகைமை அத்தியாயம் முடிவுக்கு வர வேண்டும் என்று தேசிய நல்லிணக்க உயர் கவுன்சிலின் தலைவர் அப்துல்லா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

எனவே, அமைதியை ஏற்படுத்துவதில் தங்களது உறுதிப்பாட்டை தாலிபான் அமைப்பும் வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில், தாலிபானின் வன்முறையும், தற்காலிகப் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதில் அது காட்டும் தயக்கமும், அமைதி முயற்சி குறித்து அந்த அமைப்பு அக்கறை காட்டவில்லை எனும் எண்ணத்தையே மக்களிடம் ஏற்படுத்தியிருக்கின்றன.

ஆகவே, போர்நிறுத்தமே இந்தப் பேச்சுவார்த்தையின் பிரதான அம்சமாக இருக்க வேண்டும். தொடரும் போரால் பொதுமக்கள் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டுமெனில் இந்த முயற்சி மேலும் தாமதமாகக் கூடாது!

- ‘ஆப்கானிஸ்தான் டைம்ஸ்’ நாளிதழில் வெளியான தலையங்கம்.
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்தவறவிடாதீர்!

ஆப்கானிஸ்தான்Afghanistanஅமைதி திரும்புமாPeaceவன்முறைச் சம்பவங்கள்ஆப்கானியர்கள்காபூல்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x