Published : 11 Sep 2015 10:13 AM
Last Updated : 11 Sep 2015 10:13 AM

பேரொளி வீசிய அறிவொளி

இன்று தமிழ்நாடு 100% எழுத்தறிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்தச் சாதனைக்கும் அறிவொளிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அறிவொளியில் அன்று நேரடியாகச் செயல்பட்ட பல சாமானியர்கள் தாங்கள் கையெழுத்திடக் கற்றுக்கொண்டார்களோ இல்லையோ தங்கள் பிள்ளைகளைக் கட்டாயம் படிக்கவைக்க வேண்டும் என்று உறுதியெடுத்துக்கொண்டார்கள்.

தமிழ்நாடு உயர் கல்வியில் பெற்றிருக்கும் ஏற்றத்துக்கு மக்களிடம் உள்ள மனோதிடமே காரணம். இந்த மனோதிடத்தை உருவாக்கியதில் அறிவொளி என்னும் பேரியக்கத்துக்குப் பங்குண்டு. அறிவொளியில் அன்று அதிகபட்சப் பெண்கள் பங்கேற்கத் தொடங்கிய நிகழ்வுக்கும், இன்று பெண்கள் ஆளுமை பெற்றுள்ளதற்கும் உள்ள தொடர்புகள் ஆய்வு செய்யப்பட வேண்டியவை. அறிவொளி திட்டத்தின் மாபெரும் வெற்றியின் ரகசியம், அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் வட்டார, மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பில் ஈடுபட்ட இளைஞர்கள்தான்.

இவர்கள் அறுபது எழுபதுகளில் முற்றிலும் பொதுப் பள்ளிகளாக இருந்த அரசுப் பள்ளிகளில் பயின்றவர்கள். அறிவொளியின் எழுச்சிதான் அன்றைய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் குத்சியா காந்தியை, “என் இறப்புக்குப் பிறகு, என் சமாதியில் இங்கோர் அறிவொளி பைத்தியம் உறங்குகிறது என்று எழுதுங்கள்” எனச் சொல்லவைத்தது. வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ராமசுந்தரத்தை அனைவருடனும் மதிய உணவுக்குத் தட்டேந்தி வரிசையில் நிற்க வைத்தது. வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த எம்.பி. விஜயகுமாரை இன்றுவரை கல்வியோடு கட்டிப்போட்டு வைத்துள்ளது. இப்படி அறிவொளியின் சாதனைகளைப் பகிர்ந்துகொண்டே போகலாம். அறிவொளி குறித்து மாடசாமி, தமிழ்ச்செல்வன் என சிலர் எழுதிவருகிறார்கள்.

எனினும், அறிவொளி குறித்து இன்னும் முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆட்சியாளர்கள், மக்கள் என சகலருக்கும் அந்த ஆய்வு பயன்தரும்!

முனைவர் பேரா. என். மணி, தலைவர்,
பொருளாதாரத் துறை,
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x