Last Updated : 24 Sep, 2015 09:45 AM

 

Published : 24 Sep 2015 09:45 AM
Last Updated : 24 Sep 2015 09:45 AM

மாணவர்கள் உள்ளே, செல்பேசி வெளியே!

பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் செல்பேசிகளை, தடைசெய்யப்பட்ட கடத்தல் சாமான்களைப் போலத்தான் பாவிக்கிறார்கள். இவையெல்லாம் வளரிளம் பருவ மாணவர்களின் கண்களில்கூடப் பட்டுவிடக் கூடாது என்பதில் கறாராக இருக்கிறார்கள். ஆனால், பிரிட்டிஷ் தனியார் பள்ளிகள் பல, செல்பேசிகளை மாணவர்கள் பள்ளிக்குக் கொண்டுவருவதையும் அதைப் பயன்படுத்துவதையும் ஆதரிக்கத் தொடங்கி யிருக்கின்றன. இது சரியா?

ஹெடிங்டன் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர் கரோலின் ஜோர்டான் இதைத் தெரிவிக்கிறார். “சமீபகாலம் வரை நாங்கள்கூட செல்போனை மாணவர்கள் கொண்டுவரக் கூடாது என்றுதான் கண்டிப்புடன் இருந்தோம். இந்த நவீனத் தொழில் நுட்பத்தைப் பாடம் படிக்க ஏன் பயன்படுத்தக் கூடாது என்று சிந்தித்து இப்போது ஊக்குவிக்கி றோம்; ஸ்மார்ட் போன் என்றும் டேப்லெட் என்றும் அழைக்கப்படும் உபகரணங்களை இப்போது பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு எடுத்துவருகிறார்கள்” என்கிறார்.

எப்படிக் கண்காணிப்பது?

அவருடைய யோசனையை அமல்படுத்த முடியுமா என்று மலைப்பாக இருக்கிறது. பிரிட்டனில் ஒரு வகுப்பில் சுமார் 30 மாணவர்கள் இருக்கின்றனர். 30 பேரும் நீங்கள் கேட்ட கேள்விக்கான விடையைத்தான் கூகுளில் தேடுகிறார்கள் என்று எப்படி நிச்சயமாகச் சொல்ல முடியும்? எப்படி ஒவ்வொருவரின் டேப்லெட்டையும் ஒரே சமயத்தில் கண்காணிப்பது? நாம் கேள்வி கேட்டதைப் பயன்படுத்திக்கொண்டு அவர்கள் ட்விட்டரையோ ஃபேஸ்புக்கையோ, வாட்ஸ்அப்பையோ பார்க்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? வீணாக வம்பை விலைக்கு வாங்குவதாக ஆகிவிடாதா?

எங்கும் நீக்கமற நிறைந்துவிட்ட தொழில்நுட்பத் தையும் சாதனத்தையும் பயன்படுத்தாமல் ஒதுக்கிவைப்பது சரியா என்ற யதார்த்தமான கேள்வி நியாயம்தான்; நாம் நினைக்கும் வகையில் மாணவர்கள் படிக்க வேண்டுமா, மாணவர்கள் விரும்பும் வகையில் நாம் போக வேண்டுமா என்ற சிக்கலான கேள்வி இங்கே எழுகிறது. இதில் ஆழ்ந்து சிந்தித்தால், நவீன சாதனங்களை இப்படி அனுமதிப்பதைவிட வழக்கமான பாணியில் பாடம் நடத்துவதே நல்லது என்ற பதில் கிடைக்கும்.

செல்பேசிகளை வகுப்பறைகளில் தடை செய்த பிறகு மாணவர்களுடைய படிப்பு எப்படி மேம்பட்டது, தேர்வில் எப்படி மதிப்பெண்களைப் பெற்றார்கள் என்று சமீபத்தில் ஆய்வு நடந்தது. 2% அளவுக்கு மாணவர்களின் கல்வித்தரம் கூடியிருந்தது. இவ்வளவு கடுமையாக இருந்து வெறும் 2% தானா என்ற கேள்வி எழக்கூடும். ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு வாரத்துக்குக் கூடுதலாகப் பாடம் சொல்லிக்கொடுத்தால் ஏற்படக்கூடிய விளைவு இந்த 2% மதிப்பெண்கள் உயர்வு. ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்’ என்ற உயர் கல்வி நிலையத் தின் ஆய்வாளர்கள் 2001 முதல் 91 பள்ளிக்கூடங் களில் 1,30,000 மாணவர்களிடம் தொடர்ச்சியாக நடத்திய ஆய்வின் முடிவு இந்த வளர்ச்சியை உணர்த்தியிருக்கிறது. இலவச மதிய உணவு உண்ணும் மாணவர்கள், அரசின் கல்வி உதவித் தொகை பெறும் (ஏழை) மாணவர்கள் விஷயத்தில் இது இரட்டிப்புப் பலனைத் தந்திருக்கிறது.

ஏற்றத் தாழ்வு அதிகரிக்குமா?

செல்பேசிகளைப் பள்ளிக்கூடங்களில் அனுமதிப்பதால் மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வு அதிகரித்துவிடுமா என்ற கேள்வி அடுத்து எழுகிறது. செல்பேசிகளை அனுமதித்துவிட்டால் மூத்த மாணவர்கள் அல்லது செல்வாக்குள்ள மாணவர்கள் இளைய மாணவர்களையும் மாணவிகளையும் ஏதாவது ஒரு வகையில் அச்சுறுத்தும் வாய்ப்புகளும் அதிகம். ‘என்னுடைய செல்பேசியைக் காணோம் சார்’ என்றாலோ, ‘என் மொபைலை யாரோ திருடிவிட்டார்கள்’ என்றோ மாணவர்கள் புகார் செய்தால் ஆசிரியர் பாடு திண்டாட்டமாகிவிடும். அவர் செல்பேசியைத் தேடுவாரா பாடத்தை நடத்துவாரா? ‘கிறிஸ்துமஸ் பரிசாக என் அப்பா 180 பவுண்டுக்கு இதை வாங்கிக் கொடுத்தார்’ என்று ஒரு மாணவி சொன்னால் ஆசிரியர் மனது எப்படிக் கலங்கும்?

எல்லாவற்றையும்விட, இதனால் பெற்றோர் களுக்கு ஏற்படக்கூடிய நிதிச் சுமையை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. இதைப் பற்றி யாரும் அதிகம் பேச மாட்டார்கள். ஜான் லெவிஸ் என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனம் 2012-ல் பள்ளிக்கூட வயதில் உள்ள பெற்றோர்களிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. நல்ல சீருடை, புத்தகப்பை, நோட்டுப்புத்தகம், புத்தகம், ஜியாமெட்ரி பாக்ஸ், கலர் பென்சில் செட், பேனா, பென்சில், காலுக்கு ஷூ, டை என்று எல்லாவற்றுக்கும் சேர்த்து சராசரியாக 550 பவுண்டு (பவுன்) செலவிடுகிறார்கள் என்று தெரிவித்தது. பல ஏழைப் பெற்றோருக்கு இந்தச் செலவை எதிர்கொள்வதே ரத்தக் கண்ணீர் விடும் அளவுக்கு பெரும் சுமையாக இருந்திருக்கிறது. இதெல்லாம் பெற்றவர்களுக்கு ஒரு பெரும் சுமையா என்று சிலர் அலட்சியப்படுத்தலாம். இப்போது சுமாரான டேப்லெட் அல்லது ஸ்மார்ட்போனின் விலை சராசரியாக 270 பவுண்ட் (பவுன்) என்கிறார்கள். 2017-ல் 96% மாணவர்கள் சொந்தமாக டேப்லட் அல்லது ஸ்மார்ட்போன் வாங்கிவிடுவார்கள் என்கிறார்கள். எத்தனை பெற்றோர் தலையில் இந்தச் சுமை விடியப்போகிறதோ?

வலி தரும் பார்வை

இப்படி விலை கொடுத்து ஸ்மார்ட் போன் வாங்கித்தர முடியாத ஏழைப் பெற்றோரின் குழந்தைகளுக்கு இதை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற வேட்கை அதிகரிப்பது இயற்கை; அது அவர்களுக்குப் பெருத்த ஏக்கமாகவே மாறிவிடும். 20 ஆண்டுகளுக்கு முன்னால் நான் படித்தபோது டன்லப் டிரெய்னர் (கேன்வாஸ் ஷூக்கள்) வாங்கி அணிந்துகொண்டு போனால் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் கேலி செய்யா விட்டாலும் பரிதாபமாகப் பார்ப்பார்கள்; அந்தப் பார்வையைச் சகித்துக்கொள்ளவே முடியாது. கிறிஸ்துமஸ், ஈத் அல்லது பிறந்த நாளுக்குப் பிறகு புதிய ஆடை, காலணி போன்ற பரிசுகளுடன் பள்ளிக்கூட வாயிலைத் தாண்டி மாணவர்கள் உள்ளே வரும்போதே மற்றவர்கள் பார்த்துவிட்டு ‘ஆஹா…’ ‘ஊஹூ…’ என்று பாராட்டாகவும் கேலியாகவும் குரல் எழுப்புவது நினைவுக்கு வருகிறது. அந்த மாணவர் அல்லது மாணவியைச் சுற்றி நின்றுகொண்டு, ‘இதை எங்கே வாங்கினாய்?, யார் வாங்கிக் கொடுத்தார், எதற்காக என்றெல்லாம் கேட்டுவிட்டு கடைசியாக என்ன விலை என்று கேட்பார்கள். அந்தக் காலத்தில் 50 பவுண்ட் (பவுன்) கொடுத்து ஷூ வாங்குகிறவர்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்வார்கள். இப்போது நிலைமை என்ன? இதென்ன செல்போனா அல்லது சோப்பு டப்பாவா என்று கேட்டு கேலியாகச் சிரிப்பார்கள்.

பள்ளிக்கூடங்களில் சீருடைகளை அமல்படுத்திய தால் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடும் மதம், மொழி, இன அடிப்படையிலான பேதங்களும் பெரும்பாலும் மறைந்துவருகின்றன. எல்லோரும் நல்ல ஆடை அணிந்துவரும்போது கந்தலை அணிந்துவந்தால் எல்லோருடைய கண்களையும் உறுத்தவே செய்யும். செல்பேசிகளுக்கும் இது பொருந்தும். எனவே இவை பள்ளிக்கூடங்களில் அனுமதிக்கப்படக் கூடாது. மாணவர்கள் அமைதியாக, எந்தவிதக் கவலையுமின்றி பாட புத்தகங்களை வைத்துக்கொண்டு படித்து முன்னேறட்டும். நவீன சாதனங்களைப் பயன்படுத்த வேண்டிய காலம் பின்னர் வரும். அதுவரை அடிப்படை அறிவைப் பெருக்கிக்கொள்ள காலம்காலமாக கைகொடுத்துவரும் சாதனங் களையே பயன்படுத்தி மூளைக்கு வேலை கொடுப்போம். செல்பேசிகள் மூலம் தங்களுடைய குடும்ப அந்தஸ்து தெரிந்துவிட்டதே என்ற கவலை மாணவர்களுக்கு வராமல் தடுப்போம்.

© `தி கார்டியன்'

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x