Published : 29 Jul 2020 16:47 pm

Updated : 29 Jul 2020 16:47 pm

 

Published : 29 Jul 2020 04:47 PM
Last Updated : 29 Jul 2020 04:47 PM

நஜீப் ரஸாக்: நம்பகத்தன்மையை இழந்து நிற்கும் தலைவர்

najib-razak-a-leader-who-is-losing-credibility

சில மாதங்களுக்கு முன்னர், மலேசியப் பிரதமர் பதவியிலிருந்து மகாதீர் முகமது விலகியதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைக்குப் பின்னர், தற்போது மீண்டும் ஒரு பரபரப்புச் செய்தி மலேசியாவின் மீது சர்வதேசக் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ‘1எம்டிபி’ ஊழல் என்று அழைக்கப்படும் மிகப் பெரிய ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் குற்றவாளி என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. மலேசிய வரலாற்றில் ஊழல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட முதல் தலைவர் இவர்தான்.

வழக்கு என்ன?


வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்துடன் 2009-ல் தொடங்கப்பட்ட ‘1 மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாத்’ (‘1எம்டிபி’ ) எனும் அரசு நிறுவனம் தொடர்பான வழக்கு இது. அந்நிறுவனத்தின் 2.67 பில்லியன் மலேசிய ரிங்கிட் (இந்திய மதிப்பில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய்) தொகையை, நஜீப் தனது வங்கிக் கணக்குக்கு மாற்றிக்கொண்டதாக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அதிகார முறைகேடு, நம்பிக்கை மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளும் பதிவுசெய்யப்பட்டிருந்தன. நஜீபின் மனைவி ரோஸ்மா மேன்ஸர் மீதும் நிதி மோசடி, வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டன. ரோஸ்மா பெரும் ஆடம்பரப் பிரியர். இந்தத் தம்பதியிடமிருந்து 306 கைப்பைகள், 401 கைக்கடிகாரங்கள், 234 மூக்குக் கண்ணாடிகள் போன்றவை கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தவிர, முறைகேடாகத் திரட்டப்பட்ட பணம், ரியல் எஸ்டேட் முதல் சொகுசுக் கப்பல்கள்வரை பல்வேறு வகைகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸில் சொத்துகளை வாங்கிக் குவித்தது, பிகாசோ போன்ற புகழ்பெற்ற ஓவியர்களின் படைப்புகளை வாங்கியது, ‘வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’, ‘டாடிஸ் ஹோம்’ போன்ற ஹாலிவுட் படங்களின் தயாரிப்புக்கு நிதி வழங்கியது எனப் பல்வேறு விதங்களில் இந்தப் பணம் முதலீடு செய்யப்பட்டது தெரியவந்திருக்கிறது. இந்த ஊழல் தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உட்பட 8 நாடுகள் விசாரணை நடத்தி வந்தன.

தண்டனை விவரம்

தொழிலதிபரும் நிதி ஆலோசகருமான ஜோ லோதான் இந்தக் குற்றத்தின் மூளையாகச் செயல்பட்டவர் என்றும், தனக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது என்றும் நஜீப் தரப்பு வாதிட்டது. சவுதி அரச குடும்பத்திலிருந்து வழங்கப்பட்ட நன்கொடைதான் தனது வங்கிக் கணக்கில் போடப்பட்டுள்ளது என்றும் இவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

எனினும், வழக்கை விசாரித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக நஜீபுக்கு 12 வருட சிறைத் தண்டனை விதித்திருக்கிறது. பண மோசடி, நம்பிக்கைத் துரோகம் ஆகியவற்றின் அடிப்படையிலான 6 குற்றச்சாட்டுகளுக்குத் தலா 10 வருட சிறைத்தண்டனையும், 210 மில்லியன் மலேசிய ரிங்கிட் அபராதமும் இவருக்கு விதிக்கப்பட்டிருக்கின்றன. அதேசமயம், மேல்முறையீடு செய்ய நஜீப் தரப்பு முடிவெடுத்திருப்பதால், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அசைக்க முடியாத தலைவர்

மலேசிய அரசியலில் செல்வாக்கு மிகுந்தவர் நஜீப் ரஸாக். இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர். மலேசியாவின் இரண்டாவது பிரதமரான அப்துல் ரஸாக் ஹுசைனின் மூத்த மகன் இவர். மலேசியாவின் மூன்றாவது பிரதமர் ஹுசைன் ஓனும், நஜீபின் உறவினர்தான். மலேசியாவில் 60 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ‘அம்னோ’ கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகள் இவருக்குக் கிடைத்தன. பல துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். 2004-ல் துணைப் பிரதமரான இவர், பிரதமராகும் தருணத்துக்காகவும் காத்திருந்தார்.

2008-ல் நிதியமைச்சராக நஜீப் பொறுப்பேற்ற சமயத்தில், கடுமையான பொருளாதார மந்தநிலையை மலேசியா எதிர்கொண்டது. அப்போது இவர் எடுத்த பொருளாதார நடவடிக்கைகள் நல்ல பலன் தந்தன. அதேசமயம், அம்னோ கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசின் பிற செயல்பாடுகளால், மக்கள் அதிருப்தியடைந்தனர். இதனால், 2008 மார்ச் மாதம் நடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் கணிசமான இடங்களில் வென்றிருந்தன.

இதையடுத்து நெருக்கடிக்குள்ளான அப்போதைய பிரதமர் அப்துல்லா அகமது பதாவி, நஜீபை அடுத்த பிரதமராக்க விரும்பினார். எனினும், கட்சியின் தலைவர் பதவிக்கு நஜீப் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் பிரதமர் பதவி கிடைக்கும் எனும் சூழல் இருந்தது. தனது தனிப்பட்ட செல்வாக்கால் போட்டியின்றி அந்தப் பதவிக்குத் தேர்வானார் நஜீப். 2009 ஏப்ரல் 3-ல் பிரதமர் பதவியில் அமர்ந்தார்.

தகர்ந்த நம்பிக்கை

நஜீப் மலேசியப் பிரதமரானபோது, இனக்குழுக்களுக்கு இடையிலான பதற்றத்தைத் தணித்து, பொருளாதாரத்தை மேம்படுத்தும் சீர்திருத்தவாதியாக இருப்பார் எனும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆரம்பத்தில் இவரது செயல்பாடுகள் நம்பிக்கையளிக்கவே செய்தன. எதிர்க்கட்சிகள் நடத்திவந்த இரண்டு நாளிதழ்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவித்தார். பொருளாதாரச் சீர்திருத்தங்களையும் கொண்டுவந்தார். தெற்காசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்த அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஒபாமா, ட்ரம்ப் இருவரின் அபிமானத்தையும் நட்பையும் பெற்றவர் நஜீப். “எனது விருப்பத்துக்குரிய பிரதமர் நஜீப்” என்று ட்ரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், பொறுப்பான தலைவராக சர்வதேச அரங்கில் தன்னைக் காட்டிக்கொண்டாலும், உள்நாட்டில் தனது விமர்சகர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்று சர்வதேச ஊடகங்கள் இவரை விமர்சித்தன.

நஜீப் ஆட்சிக்காலத்தின்போதுதான், ‘1எம்டிபி’ தொடங்கப்பட்டது. அதன் ஆலோசனைக் குழுவின் தலைவராக நஜீப்தான் இருந்தார். ஆரம்பத்திலேயே அந்நிறுவனத்தின் நம்பகத்தன்மை தொடர்பாகக் கேள்விகள் எழுந்தன. அந்த நிறுவனத்துக்கு வணிக முகவரியும், ஆடிட்டரும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம், நாடாளுமன்றத்திலேயே பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். வழக்கம்போல, வெளிநாட்டினருடன் இணைந்து நடக்கும் உள்நாட்டு சதி என்றெல்லாம் தற்காப்புத் தாக்குதல்களை நஜீப் அரசு நடத்தியது. நஜீப் தலைமையிலான அரசின் ஊழல்கள் குறித்துப் பேசிய பலர் கைது செய்யப்பட்டார்கள். பாலியல் குற்றச்சாட்டில் அன்வர் இப்ராஹிம் சிறையிலடைக்கப்பட்டதும் நஜீபின் ஆட்சிக்காலத்தில்தான்.

ஊழலை வெளிக்கொணர்ந்தவர்

‘1எம்டிபி’ ஊழல் தொடர்பான முக்கியத் தகவல்களை வெளியிட்டவர் லண்டனைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளரான கிளேர் ரிகாஸ்ட்ல் பிரவுன். பிபிசி, ஸ்கைநியூஸ், ஐ-டிவி போன்ற ஊடகங்களில் பணியாற்றிய இவர், கொஞ்சம்கூட சமரசம் செய்துகொள்ளாதவர். துணிச்சலுக்குப் பெயர் போனவர். ‘சரவாக் ரிப்போர்ட்’ (Sarawak Report) எனும் இணைய இதழ் மூலம், உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்திவருகிறார்.

2015-ல் இந்த ஊழல் தொடர்பாக, கிளேர் வெளியிட்ட தகவல்கள், ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ இதழில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து மலேசியாவில் அவரது இணைய இதழ் முடக்கப்பட்டது. அவருக்குக் கைது வாரன்ட்டும் பிறப்பிக்கப்பட்டது. அரசு ஒரு பக்கம் இது தொடர்பாக விசாரணை நடத்தினாலும், நஜீபைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டன. 2016 ஜனவரியில், இந்தப் புகார்கள் மீதான விசாரணை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்த அரசுத் தலைமை வழக்கறிஞர், எல்லா குற்றச்சாட்டுகளிலிருந்தும் நஜீபை விடுவித்தார். எனினும், நஜீப் பதவி விலக வேண்டும் என்று போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து மீண்டும் விசாரணை தீவிரமடைந்தது. 2018 தேர்தலில் அம்னோ கூட்டணி தோல்வியடைய நஜீப் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் முக்கியப் பங்கு வகித்தன.

இந்நிலையில் இந்தத் தீர்ப்பு தொடர்பாகக் கருத்து தெரிவித்திருக்கும் க்ளேர், “இந்தத் தீர்ப்பால் எனக்கு மகிழ்ச்சியோ வருத்தமோ இல்லை” என்று கூறியிருக்கிறார். இது நஜீபைப் பெரிய அளவில் பாதிக்காது என்று அவர் கருதுகிறார். இந்த ஊழல் தொடர்பாக அவர் எழுதிய ‘தி சரவாக் ரிப்போர்ட்’ (The Sarawak Report) எனும் புத்தகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த ஊழலில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஜோ லோவைப் பற்றி டாம் ரைட், பிராட்லி ஹோப் எழுதிய ‘பில்லியன் டாலர் வேல்’ (Billion Dollar Whale) எனும் புத்தகமும் முக்கியமானது.

இனி என்ன ஆகும்?

இதுதான் நஜீப் சம்பந்தப்பட்ட முதல் விசாரணை. இன்னும் 4 விசாரணைகள் மிச்சமிருக்கின்றன. எனினும், இவற்றால் இவருக்குப் பெரிய அளவில் பாதகம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. தற்போதைய பிரதமர் முஹ்யிதின் யாசின் தலைமையிலான அரசுக்கு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கிறார்கள். எனவே, அரசுக்கு அரசியல் ரீதியாக அழுத்தங்கள் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

ஊடகச் சுதந்திரம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்றவற்றால் முஹ்யிதின் யாசின் அரசு வரவேற்பைப் பெற்றிருந்தாலும், வேலைவாய்ப்பின்மை, எண்ணெய் ஏற்றுமதியில் சரிவு, கரோனா பரவல் அதிகரிப்பு என பல்வேறு பிரச்சினைகளில் தடுமாறி வருகிறது. மலாய்க்காரர்களின் ஆதிக்கம் நிறைந்த ஆட்சி எனும் அதிருப்தி பிற இனக்குழுக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்நிலையில், ஸ்திரத்தன்மை வாய்ந்த புதிய அரசு அமைய வேண்டும் எனும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு மீண்டும் பிரதமர் பதவிக்கு வருவதற்கு நஜீப் முயற்சிக்கக்கூடும் என்றும் பேசப்படுகிறது. அப்படி ஒரு வாய்ப்பு அவருக்குக் கிடைத்தால் இந்த வழக்குகளிலிருந்து வெளியில் வரும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கும். எனினும், 60 ஆண்டுகளாக மலேசியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அம்னோ கட்சிக்கு தார்மிக ரீதியில் இது பின்னடைவாகவே கருதப்படுகிறது.

இந்தத் தீர்ப்பு தொடர்பாகத் தலையங்கம் எழுதியிருக்கும் ‘தி கார்டியன்’ இதழ், “அரசியல் தலைவர்கள், அரசின் பொக்கிஷங்களைத் தங்கள் தனிப்பட்ட உண்டியலாகச் சேமிக்கக் கூடாது; யாரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல” என்று அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறது.

தவறவிடாதீர்!


Najib RazakLosing credibilityமலேசியாபிரதமர்நஜீப் ரஸாக்நம்பகத்தன்மைஊழல் வழக்கு‘1எம்டிபி’ ஊழல்குற்றவாளிகோலாலம்பூர் உயர் நீதிமன்றம்அப்துல் ரஸாக் ஹுசைன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x