Published : 22 Jul 2020 07:38 am

Updated : 22 Jul 2020 07:38 am

 

Published : 22 Jul 2020 07:38 AM
Last Updated : 22 Jul 2020 07:38 AM

விவசாய சீர்திருத்தத்துக்கான தருணம்

agricultural-reform

கரோனா நோய்ப் பரவலின் விளைவுகள் நாட்டின் சகல தொழில் துறைகளையும் ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. இப்போதைக்கு ஒரே ஆறுதலாக இருப்பது விவசாயத் துறை மட்டுமே. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக நிலப்பரப்பில் கோதுமை, நெல் சாகுபடி, கடந்த ஆண்டைவிட அதிக விளைச்சல், அதிக கொள்முதல் என்றெல்லாம் சாதனைப் பட்டியல் நீள்கிறது. உண்மைதான், ஆனால் அதற்கு நாடு தந்துகொண்டிருக்கும் விலையை யாரும் கவனமாக ஆய்வுசெய்வதாகத் தெரிவதில்லை. விவசாயம் தொடர்பான பல்வேறு அதிகாரங்கள் அரசமைப்புச் சட்டத்தின் மத்திய, மாநிலப் பட்டியல்களில் இடம்பெற்றாலும் பெரும் பொறுப்பு மாநில அரசுகளுக்கே இருக்கிறது. ஆனால், மாநிலங்களிடையில் தெளிவான புரிதல்களும் ஒருங்கிணைப்பும் இல்லை.

நிலச் சீர்திருத்தங்கள் கேரளம், வங்கம் போல பிற மாநிலங்களில் தீவிரமாக நடக்கவில்லை. தமிழ்நாட்டில் உழுபவருக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கம் சிலரிடமிருந்து நிலங்களைப் பறிக்க மட்டுமே பயன்பட்டது. இதன் விளைவு, விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகள் பெரும்பாலும் நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துப் பயிர் செய்வோருக்கும் நிலமற்ற விவசாயிகளுக்கும் பாதுகாப்பற்ற நிலையே தொடர்கிறது. விவசாயிகளுக்குக் குறைந்தபட்சக் கூலி திட்டத்தைக்கூட மத்திய, மாநில அரசுகளால் அமல்படுத்த முடியவில்லை. விளைந்தாலும் விளையாவிட்டாலும் விவசாயிகளின் நிலைமை பரிதாபமாகத்தான் இருக்கிறது. இடைத் தரகர்களும் வியாபாரிகளும் அடையும் லாபத்தை விவசாயியும் நுகர்வோரும் வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கிறது.


சிதறடிக்கப்படும் விளைநிலங்கள்

விவசாய நிலங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் துண்டுதுண்டாகப் பாகப்பிரிவினை செய்யப்படுவதும், திட்டமிட்ட வகையில் சாகுபடி செய்ய முடியாத வகையில் சிதறுவதும், ஆறுகளிலும் நிலத்தடியிலும் நீர் இருப்பு குறைவதும் பருவமழை தவறுவதும், காலமல்லாத காலத்தில் பெருமழையாகப் பெய்து வெள்ளப்பெருக்காக ஓடுவதும் அலைக்கழிப்புகளை அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறது. புவி வெப்பமாதலால் பருவங்களில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்திருந்தாலும் அதை எதிர்கொள்வதற்கான திட்டங்களை அரசுகள் வகுக்கவில்லை. நிலத்தடி நீரைப் பெருக்கவும் மழை நீரைச் சேமிக்கவும் விவசாயிகளிடமிருந்தும் போதிய ஒத்துழைப்பு இல்லை. பயிர்க் காப்பீடு, பயிர் சுழற்சிச் சாகுபடி, இயற்கை உரப் பயன்பாடு அதிகரிப்பு, ரசாயன உரப் பயன்பாடு குறைப்பு ஆகியவற்றுக்கு விவசாயிகளிடையே இயக்கம் தோன்ற வேண்டும். அதிக நீர் தேவைப்படும் பயிர்களைக் கைவிட்டு நவதானியங்களையும் புன்செய் பயிர்களையும் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றையும் பயிரிடும் முறைக்கு விவசாயிகள் மாற வேண்டும். விவசாயத்தால் விவசாயிகளுக்கும் அரசுக்கும் வருவாய் கிடைக்காமல் போவதுடன் மழை, வெள்ளம், வறட்சி, மண் அரிப்பு போன்றவற்றுக்கு அதிக நிதியைச் செலவிட வேண்டிய இரட்டை இழப்பு ஏற்படுகிறது.

தண்ணீர் ஏற்றுமதி

1960-களின் நடுப்பகுதியில் அரிசி, கோதுமையைக்கூட கப்பலில் இறக்குமதி செய்துதான் சாப்பிட்டோம். இப்போது உணவு தானியக் கையிருப்பு உபரியாக இருந்தாலும், உற்பத்தித் திறன் மிகவும் குறைவாக இருக்கிறது. இந்தியாவுக்குள்ளேயே பஞ்சாபில் ஒரு ஹெக்டேரில் விளையும் கோதுமையில் 40-45% வரையில்தான் மத்திய பிரதேசத்தில் விளைகிறது. பஞ்சாபைவிட அதிகப் பரப்பளவில் கோதுமை சாகுபடி செய்து, பஞ்சாபைவிட குறைவாக அறுவடை செய்கிறது மத்திய பிரதேசம்.

2019-20-ல் 3,600 கோடி டாலர்கள் (சுமார் ரூ.3 லட்சம் கோடி) மதிப்புக்கு வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. 2,500 கோடி டாலர்கள் (ரூ.1,87,000) மதிப்புக்கு இறக்குமதியும் செய்யப்பட்டன. வர்த்தக உபரி 1,100 கோடி டாலர்கள். ஆனால், நம்முடைய ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகித்த அரிசி, கோதுமை, கரும்பு, பருத்தி ஆகிய அனைத்துமே அதிக தண்ணீரைக் குடிப்பவை. உண்மையில், நாம் உணவு தானியங்களை அல்ல; தண்ணீரைத்தான் ஏற்றுமதி செய்திருக்கிறோம்.

கரும்புக்குச் சிறப்பு வரி

இந்தியாவில் கரும்புச் சாகுபடியும் சர்க்கரை உற்பத்தியும் தேவைக்கு அதிகமாகவே இருக்கின்றன. சர்க்கரை ஆலைகள் சாகுபடியாளர்களுக்கு உரிய காலத்தில் பணத்தைத் தருவதில்லை. கரும்பிலிருந்து எத்தனாலை எடுத்து பெட்ரோலில் கலக்கும் அரசுகளின் திட்டம் தொடர்ந்து தள்ளிப்போகிறது. இருந்தும், சாராய வடிப்பாலைகளின் தேவைக்காக மட்டுமே இந்த நாட்டில் கரும்புச் சாகுபடி ஊக்குவிக்கப்படுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உலகின் நீரிழிவுத் தலைநகரமாக இந்தியா, அதிலும் குறிப்பாகத் தமிழ்நாடு மாறியதற்கு மூல காரணம், இந்தச் சர்க்கரையின் பயன்பாடுதான். இதன் பயன்பாட்டைக் குறைக்கவே அரசு இதன் மீது சிறப்பு வரி விதிக்க வேண்டும் என்ற யோசனையைச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம், பனை எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு பெட்ரோலியத்துக்கு அடுத்தபடியாகச் செலவிட்டுவருகிறோம். உள்நாட்டில் சுமார் 20 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள் எண்ணெய்ப் பனை சாகுபடிக்கு ஏற்றவையாக இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தும் திட்டங்களைத் தீட்டினால், இறக்குமதிச் செலவும் குறையும் உள்நாட்டிலும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். ஒரு ஹெக்டேரில் சாகுபடியாகும் பனை மரங்கள் 4 மெட்ரிக் டன் எண்ணெய் தரும். கொள்முதல் விலை, விலையில்லா மின்சாரம் ஆகியவற்றுக்குக் குரல் கொடுக்கும் விவசாய அமைப்புகள் இதுபோன்ற ஆக்கபூர்வமான யோசனைகளை நிறைவேற்ற மத்திய - மாநில அரசுகளுக்கு அழுத்தம் தந்தால் விவசாய வருமானமும் அதிகரிக்கும்.

வருமானம் உயர வழி

காய்கறிகள், பழங்கள், மலர்கள், எண்ணெய் வித்துகள், மூலிகைகள், நறுமணப் பொருட்கள், காபி-தேயிலை ஆகியவை பணப் பயிர்கள். இவற்றின் விளைச்சலையும் சந்தையையும் பெருக்கினாலே விவசாய வருமானமும் உயரும். இவற்றை மதிப்புக்கூட்டித் தின்பண்டமாகவும் மருந்துகளாகவும் மாற்றும்போது லாபமும் பல மடங்கு பெருகும். அரசு மானியம் தருவதால், அதிகம் பயன்படுத்தப்படும் யூரியா உரமானது பயிருக்கும் நிலத்துக்கும் நீருக்கும் விஷத்தைச் சேர்க்கிறது. அதில் உள்ள நைட்ரஜன் 80% காற்றில் கரைந்துவிடுகிறது அல்லது நீரில் கலந்து மக்களுக்கும் கால்நடைகளுக்கும் தீங்கு விளைவிக்கிறது என்று பல ஆய்வுகள் கூறிய பிறகும், யூரியா பயன்பாட்டைக் குறைக்கவோ கைவிடவோ விவசாயிகள் தயாரில்லை. உடனடியாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பிரச்சினை இது.

விவசாயத்தில் நவீனத் தொழில்நுட்ப முறைகள் கையாளப்பட வேண்டும். கூட்டுப்பண்ணைத் திட்டங்களை லட்சியக் கனவு என்று வர்ணிக்காமல், அதைச் செயல்படுத்தும் முயற்சிகளில் இறங்க வேண்டும். அரசு கொண்டுவரும் புதிய விவசாயக் குத்தகைச் சட்டத்தைப் பெரு நிறுவனங்களைக் காட்டிலும் விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இயற்ற வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று பிரதமர் மோடி கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவித்தார். அதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட வேண்டும்.

- வ.ரங்காசாரி, மூத்த பத்திரிகையாளர்.

தொடர்புக்கு: vrangachari57@gmail.comவிவசாய சீர்திருத்தத்துக்கான தருணம்Agricultural reformகரோனாவிவசாயத் துறைவிளைநிலங்கள்தண்ணீர் ஏற்றுமதி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

lockdown-relaxation

தளர்வுகள் அவசியம்!

கருத்துப் பேழை
narasimma-rao

ராவ்: செயல் வீரர்

கருத்துப் பேழை
x