Published : 26 Jun 2020 07:01 am

Updated : 26 Jun 2020 07:01 am

 

Published : 26 Jun 2020 07:01 AM
Last Updated : 26 Jun 2020 07:01 AM

சீனப் பொருட்கள் புறக்கணிப்பு கோஷம் எந்த அளவுக்கு யதார்த்தத்தில் சாத்தியம்?

boycott-chinese-products

இந்தியா-சீனாவுக்கு இடை யேயான எல்லைப் பிரச்சினையைத் தொடர்ந்து சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்கிற கோஷம் உரக்க ஒலிக்கிறது. இந்தக் குரல் உச்சஸ்தாயி நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போதுதான், ‘ஒன்பிளஸ்’ என்கிற சீன செல்பேசி நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம் இந்தியாவுக்குள் நுழைந்த சில மணி நேரங்களுக்கெல்லாம் விற்றுத் தீர்ந்திருக்கிறது. அதாவது, அரசியல் கோஷங்கள் ஒன்றாகவும், நடைமுறை அதற்கு நேர்மாறாகவும் இருக்கிறது. உண்மையிலேயே, இந்தியாவால் சீனாவின் தயவின்றிச் செயல்பட முடியுமா? முடியலாம்; ஆனால், அதற்குப் பயணிக்க வேண்டிய தொலைவு சாதாரணமானது அல்ல.

உலகமயமாக்கல் கொள்கையை ஏற்று இந்தியாவும் சீனாவும் ஒரே சமயத்தில் உலக அரங்கில் தொழில் உற்பத்தியில் இறங்கின. ஆனால், இந்தியாவை ஒப்பிடும்போது சீனாவில் குவியும் அந்நிய முதலீடுகள் அதிகம். அதற்குக் காரணம், சீனா தனது அடிப்படைக் கட்டமைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்திக்கொண்டும் புதுப்பித்துக்கொண்டும் வந்ததுதான். விளைவாக, இந்தியாவின் பல்வேறு தொழில் துறைகள் சீனாவைச் சார்ந்தே செயல்பட்டுவருகின்றன.

ரூ.7 லட்சம் கோடி இறக்குமதி

தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் மூலப்பொருட்கள், இடைநிலைப் பொருட்கள், கருவிகள், மின்சார – மின்னணுச் சாதனங்கள், இரும்புச் சாமான்கள், அன்றாடப் பயன்பாட்டுக்கானவை, ரசாயனங்கள், உரங்கள், உலோக – அலோகங்கள், மருந்து – மாத்திரை தயாரிப்புக்கான மூலப்பொருட்கள், மருத்துவக் கருவிகள், மோட்டார் வாகனத் தயாரிப்புக்கான உதிரிபாகங்கள், பல்வேறு வகையான பிளாஸ்டிக்குகள், கடிகாரங்கள், சைக்கிள்கள், பொம்மைகள், அழகு சாதனங்கள், காலணிகள், ஆடைகள், செல்பேசிகள், மடிக்கணினிகள், நிலைக் கணினிகள், அவற்றுக்கான உள் பாகங்கள், வயர்கள், பிளக்குகள், அறைகலன்கள், கேமராக்கள், மசாலா சாமான்கள் என்று சீனாவிடமிருந்து நாம் வாங்கும் பொருட்கள் ஏராளம்.

சீனாவிடமிருந்து 2018-19 நிதியாண்டில் மட்டும் இந்தியா செய்த இறக்குமதிகளின் மொத்த மதிப்பு எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட ரூ.7 லட்சம் கோடி! இந்தியாவின் மொத்த இறக்குமதி மதிப்பில் இது 17%. அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்வதைப் போல இரண்டு மடங்கு. சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பு ரூ.2.3 லட்சம் கோடி. மதிப்பு அதிகமில்லாத பொருட்களையும் மூலப்பொருட்களையும்தான் சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது.

நுகர்பொருள் சந்தையில் எப்படி?

இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகும் ஐந்து செல்பேசிகளில் நான்கு சீனாவில் தயாரிக்கப்படுபவை. சீன நிறுவனங்களான ‘ஜியோமி’, ‘ஓப்போ’, ‘விவோ’, ‘ரியல்மி’ நான்குமே இந்தியாவில் பிரபலம். இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்தியாவில் அதிகம் விற்ற ஸ்மார்ட்போன்களில் 75% சீனாவில் தயாரிக்கப்பட்டவைதான். நகரங்களில் மட்டுமல்ல, இந்திய கிராமங்களிலும் சீனப் பொருட்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளின் ஸ்மார்ட் ரகங்களில் சீனாவின் ‘ஜியோமோ’ மட்டும் 27% விற்பனையாகிறது. இந்தியாவில் விற்கப்படும் டை-அம்மோனியம் பாஸ்பேட் உரத்தில் 45%-ம், யூரியாவில் 13%-ம் சீனாவில் உற்பத்தியாகின்றன. சீனாவின் நான்கு பெரிய செல்போன் நிறுவனங்கள் 2018-ன் முதல் மூன்று மாதங்களில் இந்தியச் சந்தையில் 55%-ஐக் கைப்பற்றின. 2019-ல் அது 73% ஆக உயர்ந்தது. 2020-ல் 80% ஆகிவிட்டது. இந்தியாவில் மின்னணுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றில் 67% பாகங்களை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்துதான் பயன்படுத்துகின்றன. சூரியஒளி மின்தகடுகள், லித்தியம் பேட்டரிகள் சீனாவில்தான் மலிவு என்பதால் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளும் அவற்றை அங்கிருந்துதான் வாங்குகின்றன.

மருந்து மாத்திரைகள் தயாரிப்புக்கான அடிப்படை மூலப்பொருட்கள் சீனாவிடமிருந்துதான் 69% இறக்குமதியாகின்றன. இந்தியாவில் அவற்றைத் தயாரித்த நிறுவனங்கள்கூட சீனாவைப் போல தங்களால் விலை குறைவாக விற்க முடியவில்லை என்று உற்பத்திப் பிரிவுகளை மூடிவிட்டன. ஒரு பொருளை மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்தால், அந்தப் பொருள் மீது வரியைச் சகட்டுமேனிக்கு உயர்த்தி, அதன் உற்பத்தியை முடக்குவதே இந்திய அதிகாரிகள், ஆட்சியாளர்களின் பொருளாதார உத்தியாக இருக்கிறது. அது மோசமான பின்விளைவுகளையே உருவாக்குகிறது.

ஆக்கிரமிக்கும் சீன முதலீடு

இந்தியத் தொழில்களில் சீனா பெருமளவு முதலீடும் செய்துவருகிறது. 2014 முதல் இரு நாடுகளுக்கிடையிலான தொழில்-வர்த்தக உறவு வலுப்பட்டிருக்கிறது. 2020-ல் மட்டும் சீனா இந்தியாவில் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறது. ‘பேடிஎம்’ நிறுவனமும் சீனாவுடையதுதான். ஊடகங்களிலும் சீன முதலீடுகள் கணிசம். மிகப் பிரபலமான டிக்டாக் செயலி சீனாவினுடையது. இந்தியர்களின் செயலிப் பயன்பாட்டில் 44% சீன நிறுவனங்களுடையவைதான். சீனாவின் உலக ஏற்றுமதியில் இந்தியாவுக்கு அது தருவது வெறும் 6%, இந்தியாவிடமிருந்து அது வாங்குவது 1%.

2020-21-ல் இந்திய ஜிடிபி -4.5% ஆகச் சரியும் என்கிறது ஒரு ஆய்வுக் கணிப்பு. கடந்த ஐந்து ஆண்டுகளாக உலக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு குறைந்துகொண்டே வருகிறது. வியத்நாம், வங்கதேசம் போன்ற நாடுகள்கூட ஏற்றுமதியை அதிகரித்திருக்கின்றன. சீனா எல்லாத் துறைகளிலும் முதலீட்டை மேற்கொண்டு உற்பத்தியை விரிவுபடுத்தியிருக்கிறது. இந்திய அரசு, அரசுத் துறை நிறுவனங்களுக்குக்கூட முன்னுரிமை தராமல், தனியாரை முன்னிலைப்படுத்தப் பார்க்கிறது. தனியார்களோ அதிக லாபம் தரக்கூடிய தொழிலைத் தவிர, மற்றவற்றில் ஆர்வம் காட்டுவதில்லை.

இந்தியா ஒரு சுயசார்பு நாடாகத் திகழ வேண்டும் என்பது இன்றைய ஆட்சியாளர்களின் கண்டுபிடிப்பு அல்ல. காந்தி காலத்திலிருந்தே இது தொடர்பில் நாம் தொடர்ந்து பேசிவந்திருக்கிறோம். ஆனால், காந்திக்குத் தன்னுடைய முழுக்கத்தின் பின்னணியில் ஒரு தெளிவான செயல்திட்டமும், தனிப்பட்ட வாழ்விலும்கூட தன் கொள்கையில் ஓர் உறுதியும் இருந்தது.

சுதந்திரம் அடைந்த கையோடு, காந்தியோடு அவருடைய கொள்கைகளையும் கழற்றிவிட்ட இந்தியாவினுடைய எந்த ஒரு கட்சியும் இன்றைக்கு சுயசார்புக்கு என்று தனித்த செயல்திட்டம் ஒன்றை வைத்திருப்பதாகவோ, அதில் குறைந்தபட்சம் விருப்புறுதியைக் கொண்டிருப்பதாகவோகூட சொல்ல முடியாது. இப்படியான சூழலில் வெறும் சுயசார்பு தொடர்பிலான முழக்கத்தை எப்படிப் பார்ப்பது?

- வ.ரங்காசாரி, மூத்த பத்திரிகையாளர்.

தொடர்புக்கு: vrangachari57@gmail.com

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

சீனப் பொருட்கள் புறக்கணிப்புசீனப் பொருட்கள் புறக்கணிப்பு கோஷம்Boycott chinese productsChina india clashLadakh issue

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

narasimma-rao

ராவ்: செயல் வீரர்

கருத்துப் பேழை