Published : 16 Sep 2015 11:19 AM
Last Updated : 16 Sep 2015 11:19 AM

தி இந்து: பயணத்தில் பதிந்தவை

ஆவணமாக விளங்கும் நாளிதழ்
- நடிகர் சிவகார்த்திகேயன்

‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் ஒரு செய்தியைப் படிக்கும்போது அதை இங்கேமட்டும்தான் படிக்க முடியும் என்ற எண்ணம் ஏற்படும். அந்த உணர்வை ‘திஇந்து’ தமிழ் நாளிதழும் ஏற்படுத்த வேண்டும் என்பது என் விருப்பம். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் செல்போன் வழியே தெரிந்துகொண்டாலும், அந்த நிகழ்வுக்கான காரணம், குற்றத்துக்கான தீர்வு இவற்றையெல்லாம் ஒரு நாளிதழ் வழியேதான் அறிய முடிகிறது. அந்தவகையில் ஒரு நாளிதழ் ஆவணமாகத்தான் நம் கையில் கிடைக்கிறது.

அப்படியான செய்திகளைத் தாங்கி வெளிவந்துகொண்டிருக்கும் ‘தி இந்து’தமிழ் நாளிதழின் வடிவமைப்பு என்னை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. செய்திக்கான அளவு, கலர் டோன், புகைப்படத் தேர்வு இவையெல்லாம்தனித்தன்மையோடு இருக்கின்றன.

சினிமா செய்தியைப் பொறுத்தவரையில், ‘ஒரு நடிகன் எத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார்?’ என்பதோடு மட்டுமல்லாமல் அதில் உள்ள வியாபார நுணுக்கங்கள், ஒரு ஹீரோ சம்பளம் நிர்ணயிப்பதில் உள்ள புள்ளிவிவரங்கள், யார் யாருக்கு எவ்வளவு லாபம் செல்கிறது என்பதையெல்லாம் அவ்வப்போது வெளியிடலாம். மற்ற தொழில் மாதிரி சினிமாவும் ஒரு தொழில்தான் என்ற எண்ணத்தை மக்களுக்குஏற்படுத்துவதோடு அதன் மீதிருக்கும் மாயையைப் போக்கவும் செய்யும்.இதை ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் செய்தால் சிறப்பாக இருக்கும்.



பல்துறை வாசல்
- பாஸ்கர் சக்தி

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் தொடங்கியதிலிருந்து அதன் வாசகன் நான். நாளிதழ் வாங்கிய ஒரு மணி நேரத்தில் அதில் உள்ள செய்திகளை வாசித்து முடித்ததும் மடித்து வீசுகிற பழக்கத்தை மாற்றி அதில் உள்ள கட்டுரைகளை வாசிப்பதற்கான நேரத்தை ஒதுக்கும்படி செய்ததே ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் சாதனை. செய்திகள் தாண்டி நடுப் பக்கங்களில் வரும் கட்டுரைகள், இணைப்பிதழ்களில் வரும் தொடர்கள், பேட்டிகள், சினிமா விமர்சனம், கலை இலக்கிய அலசல்கள் என்று அத்தனை துறைகளைப் பற்றியும் தகவல்களை அளிப்பதில்‘தி இந்து’ தமிழ் நாளிதழ் சிறந்து விளங்குகிறது.

தமிழ்நாட்டின் பிரதான பிரச்சினைகளைக் குறித்து சராசரி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காரியத்தை ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் தொடர்ந்து செய்துவருகிறது.உதாரணமாக மதுவிலக்கு, குடிப்பிரச்சினை சம்பந்தமாகத் தற்போதுவெளிவரும் தொடர் மிகவும் முக்கியமானது, ஆக்கபூர்வமானது. ஒரு பிரச்சினையின் தீமைகளைச் சுட்டிக்காட்டுவதோடு நில்லாமல் தீர்வுக்கான பாதையைக் காட்டும் பொறுப்புணர்ச்சி இந்த இதழின் மீதான மரியாதையைக் கூட்டுகிறது.

நாளுக்கு நாள் மெருகேறிவரும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழிடம்வைப்பதற்கு ஒரு வாசகனாக, எழுத்தாளனாக இரண்டு வேண்டுகோள்கள்: ஒன்று தமிழ்ப் பத்திரிகைகளில் சிறுகதைகளுக்கான இடம் குறைந்துவரும்சூழ்நிலையில் வாரம் ஒரு நல்ல சிறுகதையை ‘தி இந்து’ தமிழ் நாளிதழ்வெளியிட வேண்டும். சிறுகதை இலக்கியத்துக்கு ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் பங்களிப்பாக அது திகழ வேண்டும். மற்றொன்று தமிழின் சிறந்த (அனைத்துத் துறைகளின்) ஆளுமைகளது விரிவான முழுமையான நேர்காணல்களை வெளியிட வேண்டும். ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் தொடர்ந்து வெற்றியுடன் பயணிக்க மனமார்ந்த வாழ்த்துகள்!



பொருளாதார மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்
- வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி. விசுவநாதன்:

மக்களாட்சி நிலைபெற நாடாளுமன்றம், சட்டப்பேரவை, நீதிமன்றம்எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது ஊடகத் துறை. குறிப்பாகப் பத்திரிகைத் துறை. அரசு நிர்வாகம், ஆளும் கட்சி, எதிர்க் கட்சி, பொதுமக்கள் என இவர்களில் யார் தவறு செய்தாலும் அதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

அரசு தவறு செய்யும்போது எதிர்க்கட்சியாகவும் அரசு நல்ல செயல்களில் ஈடுபடும்போது தோழமைக் கட்சியாகவும் இருந்து பத்திரிகைகள் செயல்பட வேண்டும். இது சிக்கலான நிலைதான் என்றாலும் அதை ‘தி இந்து’ தமிழ்நாளேடு சரியாகச் செய்துகொண்டிருக்கிறது.

‘தி இந்து தமிழ்’ நாளேடு நடுநிலைப் பத்திரிகையாக விளங்க வேண்டும் என்பது எனது விருப்பம். செய்தி வெளியிடுவதில் தங்களது நிலைப்பாட்டைக் காட்டாமல் இருக்க வேண்டும். தலையங்கத்தில் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்.

‘தி இந்து’ ஆங்கிலத்தை கடந்த 60 ஆண்டுகளாக நான் ஈடுபாட்டுடன் படித்துவருகிறேன். அதில் சிறு பிழை கண்டாலும் வருத்தப்படுவேன்.தொடர்ந்து ‘தி இந்து’ தமிழ் நாளேடு தொடங்கினார்கள். தாயோடு (‘தி இந்து’ ஆங்கிலம்) போட்டி போடும் அளவுக்கு ‘தி இந்து’ தமிழ் நாளேடு வளர வேண்டும்.

அரசியலில் ஓங்கி ஒலிக்கும் சில பிரச்சினைகளுக்கு மத்தியில் சில முக்கியத் தகவல்கள் மக்களைப் போய்ச்சேரத் தவறுகின்றன. உதாரணமாக நதிகள் இணைப்பு, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் குறித்த செய்திகளுக்கு ‘தி இந்து’ நாளேடு அதிக அக்கறைஎடுத்துக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் கல்வி, பொருளாதார மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் ஒரு கருவியாக ‘தி இந்து’ தமிழ் நாளேடு இருக்க வேண்டும். நடுப்பக்க கட்டுரைகள்சிறப்பாக இருக்கின்றன. மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் அதிகம் வர வேண்டும்.



பண்பாட்டைப் பேணிக் காக்கும் இதழ்
- வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலய அதிபர் ஏ.எம்.ஏ. பிரபாகர்:

இரண்டாண்டுப் பயணத்தைச் சிறப்பாகவும் பொறுப்பாகவும் முடித்து மூன்றாவது ஆண்டில் பயணத்தைத் தொடரும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ‘தி இந்து’ நாளிதழ் தமிழ் பேசும், படிக்கும் மக்களுக்கு நல்லதொரு சிறப்பான விருந்து. பல வண்ணங்களில் செய்திகளை உடனுக்குடன் தந்து நம் எண்ணங்களைக் கவரும் அற்புதமான தினசரி. உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தருவதில் சிறந்த பத்திரிகை.

டெல்டா செய்திகளில் தொடங்கி உலகச் செய்திகள் வரையிலும்,விளையாட்டு, அரசியல், வணிகம், மருத்துவம், விவசாயம், சினிமா, பொது அறிவு என எல்லாச் செய்திகளையும் தருவதில் சகலகலாவல்லவன். ஞாயிற்றுக்கிழமை - கலை ஞாயிறு, ஞாயிறு அரங்கம், பெண் இன்று, திங்கள் - வணிகவீதி, வாகன உலகம், செவ்வாய் - வெற்றிக்கொடி, புதன் - மாயாபஜார், வியாழன் – ஆனந்த ஜோதி, வெள்ளி - இளமை புதுமை, இந்து டாக்கீஸ், சனி - நிலமும் வளமும், சொந்த வீடு என்று பெண்கள், குழந்தைகள்,இளைஞர்கள் ஆன்மிகவாதிகள், முதலீட்டாளர்கள் என எல்லாத் தரப்பினருக்கும் வாரத்தின் எல்லா நாட்களிலும் வஞ்சகமில்லாமல் இணைப்புகளை வாரித்தரும் வள்ளல்.

இப்படி எண்ணற்ற செய்திகளைத் தந்து தமிழ்ச் சமூகத்தை இந்த நாளிதழ்உயர்த்துகிறது. செய்திகளைத் தருவதில் கண்ணியத்தைக் கடைப்பிடித்து நமது பண்பாட்டைப் பேணிக் காப்பதுடன் நம் நாகரிகத்தையும் உயர்த்துகிறது. அனைவரையும் தமிழ் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் இந்த நாளிதழ் நமக்கு எந்நாளும் தேவை. இது மேன்மேலும் வளரவும், அனைவரும் விரும்பும்படிஇதன் புகழ் பரவவும் என் அன்பார்ந்த ஆசீரும் மனமார்ந்த வாழ்த்துக்களும்.



இரு வேளைகளுக்கான ஒரு இதழ்
- நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்

பொதுவாக, நாளேடுகளுக்கும், வார மற்றும் மாத இதழ்களுக்கும் பெருத்தவேறுபாடு உண்டு. நாளேடுகள் செய்திகளைச் சுமந்து செல்லும் வாகனங்கள்.ஆனால், வார மற்றும் மாத இதழ்கள், கருத்துகள், கதைகள், கவிதைகள்,கட்டுரைகள் (உபயோகமற்ற ஊர்வம்பு உட்பட) அனைத்தையும் சுமக்கவல்லவை.

இந்த வேறுபாட்டை உடைத்தெறிந்து, ஒருபுறம் செய்திகளைத் தாங்கியும், இன்னொரு புறம் சிந்தனைக்கு விருந்தாகும் பல்வேறு கட்டுரைகள், பொதுமக்களுக்கான விவாதக் களம் ஆகியவற்றோடும், ‘தி இந்து’ தமிழ்நாளேடு ஒரு வித்தியாசமான நாளேடாக உருவாகியிருக்கிறது.

காலையில் அவசர அவசரமாக அலுவலகத்துக்குப் போவதற்கு முன்னால்அன்றைய செய்திகளைத் தெரிந்துகொண்டுவிட்டோம் என்னும் ஒருஅரைகுறைத் திருப்தியை அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டால் அதுவே ஒரு நாளேட்டுக்குப் போதுமானதாகும். ஆனால், அப்படி இல்லாமல்,செய்திகளுக்காகக் காலையிலும், மிகச் சிறந்த கட்டுரைகள் மற்றும் கருத்துக் களஞ்சியங்களுக்காக மாலையிலும், தினமும் குறைந்தபட்சம் இருமுறையாவது படிக்க வேண்டிய நாளேடாகக் குறுகிய காலத்திற்குள் உருவானது ‘தி இந்து’ தமிழ் நாளேட்டின் சிறப்பு என்று நான் கருதுகிறேன்.



குக்கிராமங்கள் வரை கொண்டுசேர்க்க வேண்டும்
- தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

எளிய, அழகிய தமிழ் நடை, பாமரரும் உணரும் வண்ணம் எளிய சொல்லாட்சி. விருப்பு வெறுப்பற்ற நடுநிலையான பார்வை, செய்திகளை விரைந்து தரும் வேகம் –இவை ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் சிறப்பாகும்.

உலகப் புகழ்பெற்ற சாதனையாளர்கள் பிறந்த தினத்தில் அவர்களைப் பற்றிவரும் ‘முத்துக்கள் பத்து’ பொது அறிவுக்கு உரம். பரவலாக, செறிவாக,விரைவாகச் செய்திகளைச் சொல்லும் ‘ஊர்வலம்’, மக்களின் கருத்தை அறிய‘வாக்களிக்கலாம் வாங்க’, நகரில் நடப்பவற்றை மக்கள் அறிந்துகொள்ள ‘நகரில் நடப்பவை’, பழமைக்கும் புதுமைக்கும் இணைப்பிட்டுவரும் ‘கருத்துப்பேழை’ இவை அனைத்தையும் ‘தி இந்து’வின் பயனுள்ள பங்களிப்பாக நாங்கள் பார்க்கிறோம்.

உலகப் பந்தை உள்ளங்கையில் வைத்து உருட்டிப் பார்க்கும் சர்வதேசச் செய்திகள் மிகவும் பயனுள்ளவை. வணிக வீதி - வளரும் இளைய தலைமுறையினருக்கு வரப்பிரசாதம். ‘வாகன உலகம்’ நுகர்வோருக்கு வழிகாட்டி. துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் வளரும் தலைமுறைக்குஅறிவுப் பொக்கிஷம்.

எளிய நடையில் எவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் நம் தாய்மொழியாம் தமிழில் ‘தி இந்து’ தமிழ் வெளிவருவது நமக்குக் கிடைத்த வரமாகும்.குழந்தைகளின் குதூகல உலகம் ‘மாயாபஜார்’, வளரும் குழந்தைகளின் பொதுஅறிவை, தனித் திறமையை வளர்க்கிறது. கருத்து வளம், சிந்தனைச்செழுமை, மக்களிடம் செய்திகளை வேகமாக, உண்மையாக, நடுநிலையாககொண்டுசேர்க்கும் தனித்தன்மை, இவையெல்லாம் ‘தி இந்து’ தமிழ் நாளிதழிடம் உள்ளன. இந்த இதழைக் குக்கிராமங்கள் வரை கொண்டுசேர்க்க வேண்டியது அவசர அவசியமாகும். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் தமிழ்ச் சேவை தொடர, வளர வாழ்த்துக்கள்.



நிகழ் வரலாற்று ஆவண இயக்கம்
-ஆயிஷா இரா. நடராசன்

தமிழ் வாசிப்பு உலகில் தனக்கென்று ஒரு முத்திரையைப் பதிக்கும் ஒரு இதழ்‘தி இந்து’ தமிழ் நாளிதழ். கருத்துப் படங்கள் உட்பட அனைத்துப்பரிமாணங்களிலும் ஒருமைல் கல்லை அடைந்த மகுடத்தை நாம் ‘தி இந்து’இதழுக்கு வழங்க முடியும். காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில்தொடங்கிய‘இந்தியன் - ஒப்பீனியன்’ இதழ்போல ‘தி இந்து’ தமிழி நாளிதழ்இன்றைய ‘தமிழக ஒப்பீனியன்’ அந்தஸ்தைப் பெற்றுள்ளதை மறுப்பதற்கில்லை. குடும்பத்தின் அனைத்து வயது உறுப்பினர்களுக்கும்ஏதாவது ஒன்று கிடைக்க வைக்கும் முயற்சியில் தரத்தையும் சமசரம்செய்துகொள்ளாதது பெரிய சவால்தான்.

கலாச்சார, சுற்றுச்சூழலிய, அரசியல் விடுதலை மற்றும் கல்வி சார்ந்தநிபுணத்துவக் கட்டுரைகள் நமக்குப் பழைய டிரிப்யூன் (அமெரிக்கக் கருப்பு-அடிமை முறைக்கு எதிரான தினசரி), அயோத்திதாசரின் ‘ஒரு பைசா தமிழன்’மற்றும் ஜஸ்டிஸ் பத்திரிகைகளை நினைவுபடுத்தும் ஆழம் கொண்டவை.

‘மாயாபஜார்’, ‘வெற்றிக்கொடி’, ‘பெண் இன்று’ போன்ற இணைப்புகள் தமிழக இளைய சமுதாயத்தின் தோழமைச் சின்னங்கள், இணையத்தில் வரும் பெரியமுயற்சிகளைப் போல ‘தி இந்து’ இவற்றைப் பொது – தகவல் பெட்டகமாகத்தொகுத்து வைப்பதுடன் ‘ஆண்டு மலர்’ (Year book) முயற்சிகளும் மேற்கொண்டால் மாணவர் - மற்றும் அறிவுத் தளத்தில் இயங்குவோரின் வெகுநாள் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலும்.

தமிழ் மொழியில் அறிவியல் ஆய்விதழ் ஒன்று இல்லாமை பெரிய குறை.சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் கனவான அதையும் பரிசீலிக்கலாம்.

மாத்ருபூமி, உதயவாணி, ஈநாடு, மலையாள மனோரமா போன்ற இதழ்களுக்கு ஒப்பானதாக, அவற்றைக் கடந்து செல்வதாக உள்ள ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் தமிழ்ச் சமூகத்தின் 21-ம் நூற்றாண்டுச் சாதனை என்பதில் சந்தேகம் இல்லை.குறுகிய காலத்தில் அத்தகைய நம்பிக்கையை விதைப்பது என்பது ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் குழுவின் அர்ப்பணிப்போடு கூடிய முழு உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. இது தொடரட்டும். வாழ்த்துக்கள்.



வெற்றிடத்தை நிரப்பிய இதழ்
- பர்வீன் சுல்தானா

வயக்காட்டுக்குள் யானை நுழைகிற மாதிரிதான் ஒரு புது வரவு இருக்கவேண்டும் என்று சொல்வார்கள். அதை அப்படியே மெய்ப்பித்து அதிரடியாகக் களமிறங்கிய ‘தி இந்து’வின் வீச்சும் வேகமும் பிரமிக்கத்தக்கவை. செய்தித்தாள் படிப்பவர்களில் பல ரகம் உண்டு. சிலருக்குக் காலையில்எழுந்ததுமே செய்தித்தாள் படித்தாக வேண்டும், ஒருசிலருக்கு ஒரு பத்திரிகை இல்லையென்றால் இன்னொரு நாளிதழ், இன்னும் சிலரோ ஒரே பத்திரிகையைத்தான் தொடர்ந்து வாசிப்பார்கள். ஆனால் ‘தி இந்து’ நாளிதழோ ஒவ்வொரு நாளும் அதை வாசிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வை எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் அதன் வடிவமைப்பும் அது தாங்கி வரும் செய்திகளும்.

நாட்டில் எத்தனையோ நடக்கிறதே, இந்தக் கொடுமைகளைச் சுட்டுக்காட்டுகிற அறம் இங்கே இல்லையே என்ற பன்னெடுங்கால வெற்றிடத்தைத் தன் வரவால் ‘தி இந்து’ நிரப்பியிருக்கிறது. எந்தச் சார்புத்தன்மையும் இல்லாமல் செய்திகளைச் சமூகத்துக்கும் கடத்தும் இதன் பாங்குபோற்றுதலுக்குரியது. சமூகக் குறைகளைச் சுட்டிக்காட்டக்கூடிய வலிமைமிகு ஆயுதத்தை ஒருபோதும் தவறாகப் பிரயோகிக்காத ‘தி இந்து’வின்சார்பற்றதன்மைக்குப் பாராட்டுகள்.

அந்தக் காலத்தில் பத்திரிகைகளில் வெளிவருகிற தொடர்கதைகளை வெட்டியெடுத்து பைண்டிங் செய்துவைப்பார்கள். அந்த மாதிரி ‘தி இந்து’நாளிதழில் வெளிவருகிற செய்திக் கட்டுரைகளை இளம் தலைமுறையினர் பத்திரப்படுத்திப் பாதுகாத்துப் பயன்பெற வேண்டும். மூன்றாம் ஆண்டில்அடியெடுத்து வைக்கிற ‘தி இந்து’ மென்மேலும் சிகரம் தொட வாழ்த்துக்கள்.



பண்பட்ட எழுத்து
- ரோஹிணி

தி இந்து தமிழ் நாளிதழில் வரும் ஒவ்வொரு விஷயமும் அது முன்வைக்கப்படும் விதமும் பண்பட்ட முறையில் உள்ளது. கிசுகிசு அம்சங்களை அறவே தவிர்த்து, கண்ணியமான முறையில் செய்திகளை அலசுகிறது. எந்த இடத்திலும் கொச்சையான தன்மையைப் பார்க்கவே முடியாது என்பது இதன் சிறப்பு.

சுற்றுச்சூழல் குறித்த விஷயங்கள் அதிகம் வருவது எனக்குப் பிடித்திருக்கிறது. சினிமா விமர்சனங்கள் நேர்த்தியாக உள்ளன. ஒவ்வொரு அம்சத்திலும் முற்போக்குப் பார்வை இருப்ப்தை இந்தப் பத்திரிகையின் மிக முக்கியமான அம்சமாகக் கருதுகிறேன்.



நாளைக்கான நாளிதழ்
- ஜெயமோகன், எழுத்தாளர்

செய்தித்தாள்கள் என்ற அமைப்பு அச்சுக் கலை அளித்த கொடை. அச்சுக் கலைதான் உண்மையில் உலகைப் பேச்சிலிருந்து எழுத்து நோக்கிக் கொண்டுவந்தது. முன்பெல்லாம் எப்போதைக்குமான பதிவுகளே எழுத்தில் இருந்தன. அன்றாடப் பதிவுகள் செவிவழியாகப் பகிரப்பட்டன. ஆகவே செய்திகள் எப்போதும் ஒலியாகவே இருந்தன.

செய்தித்தாள் நம் அறிதலில் பெரும் புரட்சியை உருவாக்கியது. செய்தி எழுத்தில் பதிவாகிப் பகிரப்பட்டபோது அதற்கு ஆவண மதிப்பு வந்தது. ஒவ்வொருநாளும் நாம் செய்தியில் நம் நாட்டையும் சமூகத்தையும் உலகையும் கண்கூடாகப் பார்த்துக்கொள்கிறோம். இன்று காஷ்மீரில் கடையடைப்பு, அசாமில் தொழிற்சங்கப் போராட்டம், கோவாவில் திரை விழா, நியூயார்க் பங்குச் சந்தை நிலவரம், சீனாவின் தொழில் நிலை என ஒரு விஸ்வரூப தரிசனத்தை அடைகிறோம். நம் முன்னோர் கிராமங்களில் வாழ்ந்தனர். நாம் உலகில் வாழ்கிறோம். அவ்வுலகைச் செய்தித்தாள்கள் உருவாக்குகின்றன.

ஆனால் இன்று செய்தித்தாளின் இடம் மெல்ல மாறிவருகிறது. செய்தித்தாளின் அச்சு கோக்கப்படுவதற்கு முன்னரே செய்தியைத் தொலைக்காட்சிகள் அலசிக் காயவைத்துவிடுகின்றன. மிகச் சில ஆண்டுகளிலேயே இணையமும், சமூக வலைத்தளங்களும் அந்த இடத்தை எடுத்துக்கொண்டன.

இந்த மாறிய சூழலில் முந்தைய தலைமுறையினர் வெறும் பழக்க தோஷத்துக்காக வாசிப்பவையாக செய்தித்தாள்கள் ஆகிவிடக் கூடாது என உணர்ந்த முதல் தமிழ் நாளிதழ் தமிழ் ஹிந்து. இன்றைய இணையச் சூழலில் செய்தித்தாள்கள் இரண்டு பணிகளை ஆற்ற முடியும்.

ஒன்று, இன்றைய நவீன ஊடகங்களில் வெளிவரும் பல கோணங்களிலான செய்திக் கொப்பளிப்புகளுக்கு அடிப்படையாக உறுதியான ஆய்வுப்புலம் கொண்ட செய்திகளை வெளியிடுவது. அதாவது முன்னரே அறிந்த செய்திகளையே நாளிதழில் சென்று மீண்டும் உறுதிசெய்துகொள்ள வேண்டியிருக்கிறது இன்று. அந்த நம்பகத்தன்மையை உருவாக்குவது இன்றைய நாளிதழின் தேவை.

அத்தகைய செய்திகள் நடுநிலைமை, தகவல் செறிவு கொண்டவையாக இருக்க வேண்டும். நாளிதழ் அவற்றுக்குப் பொறுப்பேற்க வேண்டும். ஊகங்கள் வதந்திகள் தவிர்க்கப்படவேண்டும். தமிழ் இந்துவின் செய்திகளின் தரம் அத்தகையதாக உள்ளன. இன்று செய்திகளை அறிவதற்காக அல்ல தி இந்து தமிழின் நம்பகமான செய்தியாளர் குழு அதை எப்படிப்பார்க்கிறது என அறிவதற்காகவே நான் அதை வாசிக்கிறேன்.

இன்னொன்று, செய்திகளைப் புரிந்துகொள்வதற்கான சிந்தனைப்புலத்தை உருவாக்குவது. தமிழ்ச் சூழலில் இன்று செயல்பட்டுக்கொண்டிருக்கும் அத்தனை சிந்தனைத் தரப்புகளையும் தொகுத்துச் சுருக்கமாக அளித்துக்கொண்டே இருக்கிறது தி இந்து தமிழ். அக்கருத்துக்களை அறிந்தால் மட்டுமே செய்திகளை ஒட்டி வாசகன் சிந்திக்க முடியும். அரசியலையும் இலக்கியத்தையும் சமூகத்தையும் புரிந்துகொள்ள முடியும்.

இவ்விரு பணிகளையும் தி இந்து தமிழ் மிகச் சிறப்பாகச் செய்துவருவதனால்தான் தமிழ்ச் செய்தித்தாள்களில் வழிகாட்டி நிலையில் நின்று எதிர்காலம் நோக்கிச் செல்கிறது



பல்லாண்டு வாழ்க!
- கமல்ஹாசன், நடிகர்

'தி இந்து' தமிழ் நாளிதழின் இரண்டாம் ஆண்டு நிறைவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் பல்லாண்டுகள் வரும், வாழ்த்தவும் நான் இருப்பேன் என்ற நம்பிக்கையுடன் உங்கள் கமல்ஹாசன்



வார இதழ் போன்ற நாளிதழ்
- பாண்டிராஜ், திரைப்பட இயக்குநர்

கண் மூடித் திறப்பதற்குள் நம்ம பசங்க வளர்ந்து நமக்குத் தோழன் ஆகிப்போவது போலதான் இருக்கிறது, தி இந்து தமிழ் நாளிதழின் இந்த அடுத்த ஆண்டு தொடக்கத்திற்கான கொண்டாட்டம்.

ஒரு குழந்தையாய், பாரம்பரியம் மிக்க இந்து குழுமத்தில் இருந்து புதிதாய் ஒரு தமிழ் நாளிதழ் என்ற அடையாளத்துடன் வெளிவந்த தி இந்து தமிழ் நாளிதழின் முதல் பிரதி முதல், இன்று வரை அதை தொடர்ந்து வாசிக்கும் வாசகன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். அதில் நானும் பிளாஷ்பேக் என்ற பெயரில் ஒரு தொடர் எழுதியிருக்கிறேன் என்ற லேசான கர்வமும் உண்டு. எங்கெங்கோ விழாக்களுக்குச் செல்லும்போதெல்லாம், தி இந்து நாளிதழில் உங்களின் பிளாஷ்பேக் தொடர் வாசித்தேன் எனக் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு யாரோ ஒருவர் பகிரும் வார்த்தைகள், எனக்கானவை அல்ல, தி இந்து நாளிதழின் பாரம்பரியத்திற்கும், தலைமுறைகளை தாண்டி நிற்கும் உறவுக்கும் ஆனவை.

இன்றைக்கு தி இந்துவை அதிகம் வாசிப்பவர்கள் இளைஞர்கள்தான். நாளிதழ் வாசிக்கும் பழக்கம் இளைஞர்களிடம் அதிகமாகிருக்கிறது என்றால் அது தி இந்துவின் தமிழ்ப் பதிப்பின் வருகைக்கு பிறகுதான் என்று உறுதியாய் சொல்ல முடிகிறது. ஏனென்றால், ஒவ்வொரு தினசரி இதழுமே ஒரு வார இதழ் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

திங்கள் தோறும் வரும் பொருளாதார நுணுக்கங்களை எளிமையாய் சொல்லித்தரும் வணிக வீதி, செவ்வாய் தோறும் நல்அறிவு பகிர்ந்து அனைவரையும் வெற்றிப் படிக்கட்டில் ஏற்ற உதவும் வெற்றிக்கொடி, குழந்தைகளை மயக்கும் குதூகல இணைப்பாய் புதன் தோறும் மாயாபஜார், சமய சன்மார்க்க நெறிகளைப் பகிர்ந்து உள்ளத்தில் உண்மை ஒளியைப் பாய்ச்ச வியாழன்தோறும் ஆனந்த ஜோதி, இளைஞர்களின் ட்ரென்டி பிரெண்டாய் இளமை புதுமை மற்றும் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை திரை உலா வரும் இந்து டாக்கீஸ் என வெள்ளி அன்று இரண்டு இலவச இணைப்புகள், உடல் நலம் காக்க ‘நலம் வாழ’ மற்றும் ரியல் எஸ்டேட்டின் ரியல் ஸ்டேட்டஸ் சொல்லும் ‘சொந்த வீடு’ என சனி தோறும் இரண்டு இலவச இணைப்புகள், பதுமைகள் முதல் புதுமைப் பெண்கள் வரை அனைவரின் பிம்பமாய் ஞாயிறுதோறும் ‘பெண் இன்று’ என, வாரத்தின் ஏழு நாளில் ஒன்பது இலவச இணைப்புகளைக் கடமைக்குக் கொடுக்காமல், யாரும் கடனாக கேட்டால்கூட கொடுக்க யோசிக்கும் தரத்தில், வணிக சமரசங்கள் இல்லமால் கொடுக்கும் தி இந்து நாளிதழின் பணி, பாராட்டுதற்குரிய அரும்பணி.

இந்த இலவச இணைப்புகளை வைத்து படிக்கலாம் என்று நினைத்தால் வைத்து பார்க்கத்தான் முடிகிறதே ஒழிய, வைத்து படிக்க முடிவதில்லை. இப்படி நிறைய நிறைய இருப்பதே தி இந்துவைப் பொறுத்த மட்டில் ஒரு சின்ன குறை.

இந்த இணைப்புகளை தாண்டி ஒவ்வொரு நாளிதழின் தலையங்கம் பேசும் கருத்துச் செறிவில் தொடங்கி, குறும்பாய் கருத்து சொல்லும் கருத்துச் சித்திரம் வரை, பூச்செண்டு, ஊர்வலம், கருத்துப் பேழை, மாநிலம், தேசம், வணிகம், ஆடுகளம், கடைசிப் பக்கம் என ஒவ்வொரு இதழுக்குள்ளும் பல இதழ்களை ஒளித்துவைத்து, வாசகனின் உள்ளத்தில் ஒளி பாய்ச்சும் தி இந்து நாளிதழின் வெற்றிப்பயணம் மேலும் தொடர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

உண்மை நின்றிட வேண்டும் என்பது தி இந்து நாழிதளின் நோக்கம். உண்மை வென்றிட வேண்டும் என்பதே என் போன்ற சாமான்யனின் ஏக்கம். அதற்கு என்றும் தி இந்து வென்றிட வேண்டும், என்றும் உண்மையோடு இந்து நின்றிட வேண்டும் என வேண்டும்…

தி இந்து தமிழ் நாளிதழின் வாசர்களில் ஒருவன்



தனித்துவமான நாளிதழ்
- காவிரி டெல்டா பாசனப் பகுதி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் மன்னார்குடி எஸ். ரங்கநாதன்

ஒவ்வொரு அம்சத்திலும் நாளிதழை அலாதியானதாக ஆக்கிவரும் தி இந்து தமிழ் நாளிதழின் ஆசிரியர் குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். 1954-ல் நான் அண்னாமலைப் பல்கலைக்ககத்தில் படித்துக்கொண்டிருந்தேன். இந்து நாளிதழுக்குத் தமிழ்ப் பதிப்பொன்றைத் தொடங்க வேண்டும் என்று இந்து நாளிதழின் வாசகர்கள் தீவிரமகக் கோரிக்கை விடுத்த காலம் அது.

2013-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி அந்தக் கனவு நிறைவேறியது. இந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நாளித்ழின் வளர்ச்சியைத் தெளிவாக உணர முடிகிறது. ஆங்கில இந்துவைப் போலவே தமிழ் நாளிதழும் ஆதாரபூர்வமான, பயனுள்ள தகவல்களைத் தருகிறது. இதன் தலையங்கங்கள், தேசிய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களைப் பேசுகின்றன. வாசகர்களின் பன்முகப்பட்ட தேவைகளையும் விருப்பங்களையும் அறிந்து விஷயங்களைத் தரும் ஆசிரியர் குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்.

தி இந்து தமிழில் வரும் விஷயங்கள் ஆரோக்கியமான விதத்திலும் கண்ணியமான மொழியிலும் உள்ளன. பல கட்டுரைகள் கவித்துவமான முறையில் ரசனையோடு தரப்படுகின்றன. இதுவே இந்துவைத் தனித்துக் காட்டுகிறது.



தொழில் செய்திகள் அதிகம் தேவை
- பழனி ஜி. பெரியசாமி, தென் இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத் தலைவர்

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்நாளில் நிர்வாகம், ஆசிரியர் குழு, வாசகர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு நாளிதழ் எவ்வாறு இயங்க வேண்டும் என்ற இலக்கணத்திற்கு ஏற்ப மிகவும் பொறுப்புடனும், சமூக அக்கறையுடனும், ’தி இந்து’ வெளிவருகிறது.

சிந்தனைக் களம் பகுதியில், தம் துறைகளில் சிறந்து விளங்கும் அறிஞர்களும், நல்ல எழுத்தாளர்களும் எழுதிவரும் கட்டுரைகள் தனி நபர்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் உள்ளது.

வேளாண் துறையில் வரும் புதிய தொழில்நுட்பங்கள், அவைகளைப் பயன் படுத்தும் விதம், அதற்கான நிதி ஆதாரங்கள் எவ்வாறு திரட்டுவது, அரசு அளித்துவரும் மானியங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரைகள், இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வெற்றி கண்ட விவசாயிகளின் விரிவான பேட்டிகள் அதிகமாக தி இந்துவில் இடம் பெற வேண்டும் என விரும்புகிறேன்.

வணிகச் செய்திகள் பகுதி சிறப்பாக உள்ளது. இன்னும் விரிவாகத் தமிழகத்தில் இயங்கிவரும் முக்கியத் தொழில்களான சர்க்கரை, மென்பொருள், மோட்டார் கார்கள் மற்றும் அதற்கான உதிரி பாகங்கள், உற்பத்தி போன்ற தொழில்கள், தமிழகத்தில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், மாநில அரசின் தொழில் கொள்கை மற்றும் தொலை நோக்கு திட்டங்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகள் மற்றும் இந்தத் தொழில்களில் தமிழகம் மேலும் சிறந்து விளங்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த நிபுணர்களின் கட்டுரைகள் இடம் பெற வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

ஒவ்வொரு மாவட்டத்திலும், புதிய தொழில்கள் தொடங்குவதற்கு உள்ள வாய்ப்புகள், உள் கட்டமைப்பு வசதிகள் குறித்த தகவல்கள் அடங்கிய கட்டுரைகள் வாரம் அல்லது மாதம் ஒன்றேனும் வெளிவர வேண்டும்.

’தி இந்து’ நாளிதழ் மென்மேலும் வளர விரும்பும் வாசகனாக வாழ்த்துகிறேன்.



தெரிந்த விஷயங்களின் தெரியாத பக்கம்
- குமரி அனந்தன்

ஆங்கில நாளிதழின் பெயரைத் தாங்கி ‘தி இந்து’ தமிழ் வெளியானாலும், தமிழ் மொழியில் தனக்கென்று ஒரு தனித்தன்மையைப் பெற்றுள்ளது. அரசியல், நாகரீகம், மொழி, கலாச்சாரம், பண்பாடு எனப் பல துறைகளிலிருந்தும் அரிய தகவல்களைத் திரட்டிக் கட்டுரைகளாக்கித் தருவது மிகவும் சிறப்புக்குரியது.

நடுப்பக்கக் கட்டுரைகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. எந்தத் தலைப்பு இன்றைக்கு நடுப்பக்க கட்டுரையாக வரப் போகிறது என்ற எதிர்பார்ப்பு, அந்த நாள் தொடங்கும்போதே ஏற்படுகிறது. அந்தளவுக்கு நடுப்பக்க கட்டுரைகள் தரமானதாகவும், ஆய்வு மிகுந்தவையாகவும் இருக்கின்றன. தி இந்து தமிழில் வெளியாகும் அனைத்துக் கட்டுரைகளிலுமே தெரிந்த ஒரு விஷயத்தைப் பற்றிய தெரியாத பல பக்கங்களை மக்கள் அறிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு அதிகமிருக்கிறது.

உதாரணத்துக்கு, காந்தியடிகளின் வாழ்க்கை பற்றியும், அவரது கொள்கைகள் பற்றியும் எல்லாருக்கும் தெரியும். ஆனால், அவரைப் பற்றி யாரும் அறியாத பல தகவல்களை தி இந்துவில் படிக்க முடிந்தது. இந்த வகையில் காந்தியத்தை வளர்க்கும் சேவையிலும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஈடுபடுகிறது.

காந்தியம் மட்டுமன்றி, ஆன்மிகம், அறிவியல், தொழில்நுட்பம் என அனைத்திலும் வலுவான செய்திகளையும், அறிவை வளர்க்கும் தகவல்களையும் தருவது வரவேற்கத்தக்கது. இரண்டு ஆண்டுகளைக் கடந்துள்ள தி இந்து தமிழ் நாளிதழின் செயல்பாடு பாராட்டத்தக்கதாகும். அதன் நற்பணிகள் மேலும் தொடர வாழ்த்துகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x