Published : 20 May 2020 05:11 PM
Last Updated : 20 May 2020 05:11 PM

கரோனாவைக் கட்டுப்படுத்த செயலிகள் கைகொடுக்குமா? 

‘பரிசோதனை மற்றும் தடமறிதல் (Test and Trace)’ – கனடாவின் மாகாணங்கள், பல வாரங்களுக்குப் பிறகு எச்சரிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் நிலையில், அரசியல் தலைவர்கள் முதல் பொது சுகாதார அதிகாரிகள் வரை வலியுறுத்தும் தாரக மந்திரம் இதுதான்.

கரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனையை மிகப் பெரிய அளவில் நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள். அதேபோல, வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் தொடர்புகளைத் தடமறிவதில் காத்திரமான திட்டம் நமக்குத் தேவை. அப்போதுதான் யார் யாருக்கெல்லாம் கரோனா தொற்று இருக்கிறது என்பதைத் துரிதமாக அறிந்துகொண்டு, வைரஸ் எல்லை மீறிப் பரவத் தொடங்கும் முன் அவர்களை எச்சரிக்க முடியும்.

தடமறிதலில் இருக்கும் தடங்கல்கள்
தொடர்புகளின் தடமறிவது என்பது மிக முக்கியமான நடவடிக்கை என்று கூறியிருக்கும் கனடாவின் தலைமைப் பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரஸா டாம், அப்போதுதான் புதிய தொற்றுகள் ஏற்படாமல் வெற்றிகரமாக மீள் திறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்திருக்கிறார். ஒன்டாரியோ மாகாணத் தலைமை அமைச்சர் டால் ஃபோர்டும் இதைத்தான் சொல்கிறார். மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடங்கும் சூழலில், தேசிய அளவில் தொடர்புகளின் தடமறியும் நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்வது என்று மாகாணத் தலைமை அமைச்சர்களுடன் ஆலோசித்து வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருக்கிறார்.

தொடர்புகளின் தடமறிவது மிக முக்கியமானதுதான் என்றாலும், அதில் நிறைய சிக்கல்களும் இருக்கின்றன. தொழில்நுட்பம், சமூகம் மற்றும் அரசியல் ரீதியிலான சிக்கல்கள் அவை. கனடாவைப் பொறுத்தவரை, இந்த விஷயத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான விரிவான, பயனளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அறிகுறிகள் குறைவு என்றே தெரிகிறது.

செயலிகளின் பங்கு
இது தொடர்பாக, உயர்மட்ட அளவிலான அறிவிப்புகள் வெளியாகும் என்று பரபரப்பான பேச்சுகள் எழுந்திருக்கின்றன. தென் கொரியாவிலும் ஹாங்காங்கிலும் தொற்றின் சங்கிலியை உடைப்பதற்கும், பெருந்தொற்றைத் தடுத்து நிறுத்துவதற்கும், தொடர்புகளைத் தடமறிய உதவும் செல்போன் செயலிகள் உதவின என்று சொல்லப்படுகிறது.

‘கோவிட்-19’ நோய்த் தொற்றுள்ளவர்கள் என்று தெரியாமல் அவர்களைத் தொடர்புகொள்ள நேர்பவர்களுக்கு, அதுகுறித்து எச்சரிக்கை சமிக்ஞை அளிக்கும் செல்போன் செயலி ஒன்றை உருவாக்குவதில் கூகுளும் ஃபேஸ்புக்கும் இணைந்து செயல்படுகின்றன. அல்பெர்ட்டா மாகாணம் தனது சொந்தச் செயலியை அறிமுகப்படுத்திவிட்டது. பிற மாநிலங்களும் செயலியை உருவாக்கும் பணியில் மும்முரமாக இறங்கியிருக்கின்றன.

தொடர்புகளின் தடமறிவதில் இந்தச் செயலிகள் பெரிய அளவில் உதவும் என்று எல்லோரும் மிகையாகக் கருதுவதாகத் தெரிகிறது. பழைய பாணியில் பொது சுகாதாரப் பணியாளர்கள் போன், மின்னஞ்சல் மூலம் மக்களைத் தொடர்பு கொள்வதைவிடவும், டிஜிட்டல் சாதனங்கள் மூலம் மக்களை நேரடியாகத் தொடர்புகொள்வது துரிதமான பலன்களை அளிக்கும் என்பது உண்மைதான். செலவும் குறைவு என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

அந்தரங்க உரிமைக்கு ஆபத்து
ஆனால், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், இதுபோன்ற செயலிகள் சிறப்பாகச் செயல்பட வேண்டுமெனில், அவை ஊடுருவும் தன்மை கொண்டவையாக இருக்க வேண்டும். தங்கள் அந்தரங்கமும், குடிமைச் சுதந்திரமும் முக்கியமானவை எனக் கருதுவோரின் பார்வையில் இதுபோன்ற செயலிகள் அதிக அளவில் ஊடுருவும் தன்மை கொண்டவையாகவே தெரியும். இதுபோன்ற செயலிகள் சீனா போன்ற சில நாடுகளில் வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளப்படலாம். அங்கு இந்தச் செயலிகளை அரசுகள் கட்டாயமாக்க முடியும். ஆனால், கனடா மக்களால் அத்தனை எளிதில் தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது. விட்டுக்கொடுக்கவும் கூடாது!

இந்தச் செயலிகளால் முறைகேடுகள் நடக்கும் சாத்தியம் உண்டு என்று குடிமைச் சுதந்திர ஆர்வலர்களும், அந்தரங்க உரிமைகளை ஆதரிப்பவர்களும் எச்சரிக்கிறார்கள். இதுபோன்ற கட்டாய வழிமுறைகள், கடைசிப் புகலிடமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர்கள் மிகச் சரியாகவே வலியுறுத்துகிறார்கள். எந்த நடவடிக்கையாக இருந்தாலும், அது சுய விருப்பத்தின் அடிப்படையிலும், குறிப்பிட்ட கால அவகாசம் கொண்டதாகவும், தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கும் வகையிலும் இருக்க வேண்டும். அத்துடன், அந்தரங்க உரிமை ஆணையர் அல்லது கண்காணிப்பு விசாரணை அதிகாரியால் இந்தப் பணிகள் மேற்பார்வையிடப்பட வேண்டும்.

இது சரியான வாதம்தான் என்றாலும், இந்த உத்தரவாதங்கள் எந்த வழிமுறையையும் தவிர்க்க முடியாத அளவில் வலுவிழக்கச் செய்துவிடும். நோய்ப் பரவலைத் தடுத்து நிறுத்துவதுதான் உடனடி நோக்கம் என்றால், தெரிவு செய்யவோ மறுக்கவோ மக்களை அனுமதிப்பதும், பாதுகாப்புக் காரணங்களுடன் முடிச்சு போடுவதும் பலன் தராது.

நடைமுறைச் சிக்கல்கள்
அதேசமயம், இந்தச் செயலிகளின் செயல்திறனே பெரிய அளவில் கேள்விக்குரியது. இந்தத் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்கும் பட்சத்தில் சில நடைமுறைப் பிரச்சினைகள் ஏற்படலாம். கரோனா தொற்றுக்குள்ளானோரின் தொடர்புகளின் தடமறியும் இந்தச் செயலிகள், சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் போன்களை ‘அன்லாக்டு’ ஆக வைத்திருக்கும் போதுதான் செயல்படும். தவிர எந்நேரமும் இந்தச் செயலி செயல்பாட்டில் இருந்தாக வேண்டும். அதிகமானோர் பயன்படுத்தாதபட்சத்தில் இதன் செயல்திறனும் குறைவாகவே இருக்கும். இது ஒரு பெரிய பிரச்சினை.

அத்துடன், இந்தச் செயலிகளால் குடும்ப உறுப்பினர்களையும், கடந்துசெல்லும் அந்நிய நபர்களையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. வீடுகளுக்கும் பொதுவெளிகளுக்கும் இடையிலான வேறுபாட்டையும் உணர முடியாது. தொற்றுக்குள்ளானோரிடம் விசாரித்து அறியும் விஷயத்தில், மனிதர்களால் மட்டுமே இதுபோன்ற வேறுபாடுகளை உணர்ந்து செயல்பட முடியும். இதனால், நோய்த் தொற்றுக்குள்ளாக வாய்ப்பில்லாதவர்களை எச்சரித்து நேரத்தை வீணடிக்க வேண்டியிருக்காது.

கனடாவில், பரிசோதனை மற்றும் தொடர்புகளின் தடமறிதல் ஆகியவை, மாகாணப் பொது சுகாதார அலுவலர்களின் பொறுப்புகளாக இருக்கும் சூழலில், பல்வேறு வழிமுறைகள் அடங்கிய ஓர் ஒட்டுப்போட்ட வழிமுறையைத்தான் நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். பல்வேறு தொழில்நுட்பங்கள், தரவுகளைச் சேகரிக்கும் வழிமுறைகள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றின் கலவையானது, தேசிய அளவில் இந்தப் பெருந்தொற்று தொடர்பான தெளிவற்ற சித்திரத்தைத்தான் உருவாக்குகிறது.

பழைய பாணி வழிமுறை
இவற்றில் சில வழிமுறைகள் போதுமான பலனையும் கொடுப்பதில்லை. கரோனா வைரஸால் கடும் பாதிப்புகளை குபேக் மாகாணம் சந்தித்திருக்கும் சூழலிலும், தொடர்புகளின் தடமறிய அம்மாகாண அரசு கொண்டுவந்திருக்கும் புதிய வழிமுறையானது பழைய பாணியிலான தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. அந்த வழிமுறையால் இலக்கை எட்ட முடியாது.

குபேக் மாகாணத்தில் இந்தப் பணிகளைச் செய்ய, அகினாக்ஸ் (Akinox) நிறுவனத்தால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு, மின்னஞ்சலைப் பயன்படுத்துகிறது. அதன்படி கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவருக்கு, மின்னஞ்சல் அனுப்பப்படும். அவர் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார் எனும் விவரங்களை, அவர்களின் மின்னஞ்சல் விவரங்களுடன் அனுப்புமாறு அவரிடம் கேட்கப்படும். அதன் வழியாக, சங்கிலித் தொடர் போல தொடர்புகளைத் தடமறியும் பணி நடக்கும்.

ஆனால், “உலகின் பிற பகுதிகளில் இதற்காக உருவாக்கப்பட்ட செயலிகளை ஒப்பிடுகையில், இது வழக்கொழிந்த, பழைய பாணியிலான வழிமுறை என்றே தெரிகிறது” என்று சிபிசி நியூஸ் சேனலுக்குப் பேட்டியளித்த நுண்ணுயிரியல் மற்றும் நோயெதிர்ப்புத் துறை இணைப் பேராசிரியர் ஜார்ஜ் ஃப்ரிட்ஸ் கூறியிருக்கிறார்.

தீர்வு என்ன?
இப்படியான சிக்கல்களுக்கு மத்தியில், குறைந்த கால அவகாசத்தில் நம்மிடம் இருக்கும் சிறந்த தீர்வு என்பது தொடர்புகளைத் தடமறியும் பணியைச் செய்யும் களப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான். குறிப்பாக, எச்.ஐ.வி. தொற்று போன்ற நோய்களைக் கையாண்ட அனுபவம் கொண்டவர்களை இதில் பயன்படுத்திக்கொள்ளலாம். தடமறியும் பணிகளைச் செய்ய 10,000 பேருக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்துக்கு 44 மில்லியன் டாலரை முதலீடு செய்ய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் திட்டமிட்டிருக்கிறது. சில சமயங்களில், பாரம்பரியமான வழிமுறைகளே சிறந்தவையாக இருக்கும்.

இப்படியான வழிமுறைகளை மேற்கொள்வது கனடாவுக்குச் சவாலான விஷயம்தான். ஆனால், எளிதான தொழில்நுட்பத் தீர்வுகள் இல்லாத சூழலில், மனிதர்களைச் சார்ந்த வழிமுறைகளை வலுப்படுத்த பணத்தைச் செலவழிப்பதைவிட வேறு வழி ஏதும் இல்லை. தொழில்நுட்பங்கள் மூலம் ஏற்படும் தோல்வியால் ஏற்படும் இழப்புகளை ஒப்பிட, இந்த வழிமுறை மலிவானதாகவே இருக்கும்!

(கனடாவுக்கு மட்டுமல்ல... இந்தியச் சூழலுக்கும் இது பொருந்தும்)

***
‘தி ஸ்டார்’ எனும் கனடா நாளிதழில் வெளியான தலையங்கம்.
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x