Published : 07 May 2020 08:41 am

Updated : 07 May 2020 08:41 am

 

Published : 07 May 2020 08:41 AM
Last Updated : 07 May 2020 08:41 AM

கரோனா காலச் செயல்பாடு: கவனம் ஈர்க்கும் இரு எம்.பி.க்கள்

two-mps-of-tamilnadu

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை கரோனாவை எதிர்கொள்ளும் மருத்துவ உபகரணங்கள் வாங்க ஒதுக்கலாம் என்று மார்ச் 24 அன்று அறிவித்தது இந்திய அரசு. பத்தே நாட்களில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியே ரத்துசெய்யப்படுகிறது என்று அறிவித்தது அதே அரசு. இந்த 10 நாள் இடைவெளிக்குள் மதுரை அரசு மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவக் கருவிகளை வாங்கிக்கொண்டு வந்துவிட்டார் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்.

தலைவர்களும் அதிகாரிகளும் “வீட்டில் இரு, வீட்டில் இரு” என்று சொல்லிக்கொண்டிருந்தபோது, வீட்டில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துப் போட்டிகளை அறிவித்த இடத்தில் எழுத்தாளராக வெளிப்பட்டார் அவர். வீடு தேடி வரும் காய்கறித் தொகுப்பு என்ற அவரது திட்டத்தின் வெற்றி, சென்னை மாநகராட்சியையும் அதைத் தொடர வைத்தது. அதேபோல, மளிகைத் தொகுப்பு வழங்குதல், இலங்கை அகதிகளுக்கு உணவு தானியங்களை வழங்குதல் என்று தொடர்ந்த அவர், இப்போது மாமதுரையின் ‘அன்னவாசல்’ திட்டத்தைத் தொடங்கி எளியோருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குவதற்கென ஒரு பெரும் இளைஞர் படையையே களத்தில் இறக்கிப் பசி தீர்க்கிறார்.


உலகமெங்குமிருந்து மருத்துவக் கருவிகள் கேட்டு ஆர்டர்கள் குவிந்த நேரத்தில், வெறும் 10 நாள் அவகாசத்தில் மருத்துவக் கருவிகள் வாங்கியது எப்படி என்று அவரைக் கேட்டால், “மொத்தமாக நிதியை ஒதுக்கி, தேவையானதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லாமல் என்ன தேவை என்று கேட்டு அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்தேன். அன்று மாலையே மாவட்ட ஆட்சியர் நிர்வாக உத்தரவை வழங்கினார். கருவிகளை வாங்க மருத்துவர் துரைராஜ் தலைமையிலான குழு வேலையில் இறங்கியது. இன்னொரு காரணம், நான் 2019- 20-ம் நிதி ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.56.17 லட்சம் வைத்திருந்தேன். இல்லையென்றால், மற்ற தொகுதிகளைப் போல மதுரை தொகுதி மக்களும் ஏமாந்துபோயிருப்பார்கள்” என்கிறார் சு.வெங்கடேசன்.

கரோனா காரணமாக ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்புகையில், நொய்டாவில் மாட்டிக்கொண்ட இருவரை டெல்லியில் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் 40 நாட்களாகத் தங்க வைத்திருக்கிறார் ரவிக்குமார். அவருடைய விழுப்புரம் தொகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் மஹாராஷ்டிரம், கோவா, கேரளம், ஆந்திரம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் தங்கி வேலை பார்ப்பவர்கள். அவர்களுக்கான உண்டு, உறைவிட ஏற்பாடுகளைச் செய்தார் ரவிக்குமார். கூடவே, அவர்களின் குடும்பத்துக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். அதேபோல வீடற்றவர்கள், பழங்குடியினர், நரிக்குறவர்களையும் தேடித் தேடி உதவினார். இவரும் கடந்த நிதியாண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை மிச்சம் வைத்திருந்ததால், அரசு மருத்துவமனைக்குத் தேவையான உபகரணங்கள் வாங்க ரூ.65.20 லட்சம் வழங்க முடிந்தது.

கரோனா வரும் முன்பே தொகுதி மக்களின் உடல்நலம் குறித்த விஷயங்களில் கூடுதல் அக்கறை காட்டினார் ரவிக்குமார் என்பது ஆச்சரியமான செய்தி. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஆய்வுக்கூட்டம் நடத்துவதை வழக்கமாக வைத்திருந்த ரவிக்குமார், அந்தக் கூட்டங்களில் நூறு நாட்கள் வேலைத்திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், சுகாதாரத் திட்டம், மகளிர் நலம் குறித்தே அதிகம் விவாதித்தார். அதன் விளைவாக, தொகுதியில் புற்றுநோயும் தொழுநோயும் அதிகமாக இருப்பதை அறிந்த அவர், அங்குள்ள பெண்களில் பெரும்பாலானோர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப்பதும் ஒரு காரணம் என்று தெரியவந்தது. “இதுபற்றி நாடாளுமன்றத்திலேயே கேள்வி எழுப்பினேன். இந்தியாவில் 54% பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொன்ன அமைச்சர், தமிழ்நாட்டில் 56% பேர் ரத்தசோகைக்கு ஆளானவர்கள் என்றார். விழுப்புரம் தொகுதியில் இன்னும் அதிகமாக 63%. மகளிர் குழுவினர் மூலம் கணக்கிட்டு அவர்களுக்கு சுகாதாரத் துறை மூலம் மருந்து மாத்திரைகள் கொடுக்க ஏற்பாடு செய்தேன். கூடவே, தொகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 பேருக்குப் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து சிகிச்சைக்காக மொத்தம் ரூ.50 லட்சம் பெற்றுக்கொடுத்தேன். இப்போது முழுக்க முழுக்க கரோனா குறித்த விஷயங்களிலேயே கவனம் செலுத்திவருகிறேன்” என்றார்.

நெருக்கடிக் காலமானது நமது பிரநிதிகள் எப்படியானவர்கள் என்பதை அடையாளம் காண மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு; செயலூக்கம் நிறைந்த வளர்ந்துவரும் தலைவர்களுக்கு அது படைப்பூக்கமான செயல்பாடுகளுக்கான வாய்ப்பு. நல்லன தொடரட்டும்!

- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in


கரோனா காலச் செயல்பாடுகவனம் ஈர்க்கும் இரு எம்.பி.க்கள்நாடாளுமன்ற உறுப்பினர்கள்தொகுதி மேம்பாட்டு நிதிசு.வெங்கடேசன்ரவிக்குமார்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x