Published : 01 May 2020 08:08 am

Updated : 01 May 2020 08:08 am

 

Published : 01 May 2020 08:08 AM
Last Updated : 01 May 2020 08:08 AM

புலம்பெயர் தொழிலாளர்கள் உரிமைகளைப் பற்றி எப்போது பேசப்போகிறோம்?

migrant-workers

இந்த ஆண்டின் தொழிலாளர் தினக் கூடுகைகள் கரோனாவால் தடைபட்டு நிற்கின்றன. கூடுதலாய், தொழிலாளர் இயக்கத்தை நோக்கிக் கேள்வியொன்றும் எழுந்துநிற்கிறது. இதுவரையிலும் தொழிலாளர் வர்க்கம் போராடி வென்றெடுத்த உரிமைகள் எல்லாம் அமைப்பு சார்ந்தவர்களுக்கு மட்டும்தானா?

நாடு முழுவதும் ஊரடங்கைக் கடைப்பிடித்துவரும் நிலையில், பல்லாயிரக்கணக்கில் புலம்பெயர் தொழிலாளர்கள் பல நூறு கிமீ தொலைவு நடந்தே தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பிக்கொண்டிருக் கிறார்கள். எந்தவொரு சமூகப் பாதுகாப்பும் இல்லாமல், தினக்கூலியை மட்டுமே நம்பி மாநிலங்களின் எல்லைகளைக் கடந்து வந்தவர்கள் இவர்கள். குறைவான கூலிக்கு அதிகப்படியான உழைப்பை நல்கிய இவர்கள், இன்று ‘வெளியாட்கள்’ என்று கருதப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வேலை இல்லாதபட்சத்தில் அவர்களது உணவுக்கும் தங்குமிடத்துக்கும் எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை கரோனா தெளிவுபடுத்தியிருக்கிறது. விரிந்து பரந்த நிலப்பரப்பைக் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தில், ஒரு மாத காலத்துக்கும் மேலாக ஊரடங்கைக் கடைப்பிடித்தது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி என்றால், இந்தக் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் அலைக்கழிந்துகொண்டிருப்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய தேசிய அவமானம்.


ஏன் புலம்பெயர்கிறார்கள்?

விவசாயத்தையே பெரிதும் நம்பியிருக்கும் நாடு இந்தியா. நடவு, அறுவடைக் காலம் தவிர்த்து, ஆண்டின் பல மாதங்கள் வேலைவாய்ப்பில்லாத நிலை தவிர்க்க இயலாதது. மாநிலங்களுக்குள்ளும் மாநிலங்களுக்கிடையிலுமாகச் சுமார் 13.9 கோடிப் பேர் தொழிற்சாலைப் பணிகளுக்காகவும் விவசாயப் பணிகளுக்காகவும் கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்திருக்கிறார்கள். மாநிலங்களுக்கிடையிலான புலம்பெயர்வு மட்டும் 90 லட்சமாக இருக்கலாம் என்கிறது இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கை-2017. இந்த விவரங்கள் எல்லாம், 10 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மதிப்பீடுகள். இதுகுறித்துத் தெளிவான விவரங்கள் எதுவும் அரசிடமே இல்லை என்பதுதான் உண்மை நிலை.

புலம்பெயர் தொழிலாளர்களில் 4 கோடிப் பேர் கட்டுமானப் பணிகளிலும், 2 கோடிப் பேர் வீட்டு வேலைகளிலும், 1.1 கோடிப் பேர் ஜவுளித் தொழிற்சாலைகளிலும், 1 கோடிப் பேர் செங்கல் சூளைகளிலும் பணிபுரிகிறார்கள் என்கிறது புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து ஆய்வுகளை நடத்திவரும் ஆஜீவிகா அமைப்பு. இவை தவிர போக்குவரத்துத் துறை, சுரங்கப் பணிகள், விவசாய வேலைகளுக்காக இடம்பெயர்பவர்களும் இருக்கிறார்கள்.

மழை பற்றாக்குறையும் எதிர்பாராத வெள்ளமும்கூட இந்தப் புலம்பெயர்வு தொடர்ந்து அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கின்றன. வறுமையோடு சாதிய ஏற்றத்தாழ்வுகளும் முக்கியப் பின்னணியாக இருக்கின்றன. உத்தர பிரதேசம், பிஹாரிலிருந்து நீண்ட காலமாகவே இத்தகைய புலம்பெயர்வு நடந்துகொண்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் இந்த மாநிலங்களோடு பார்க்கையில் கேரளம், தமிழ்நாடு, மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இளம் வயதினரின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அதிகளவில் இளம் வயதினரைக் கொண்டிருக்கும் மாநிலங்கள் என்பதால், உத்தர பிரதேசமும் பிஹாரும் புலம்பெயர்வுக்கு இயல்பாகவே தள்ளப்பட்டுவிட்டன. ஒடிஷா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்தும் இந்தப் புலம்பெயர்வுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. சமீப காலங்களில் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து புலம்பெயர்வு மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

முன்னுதாரண கேரளா

மாநிலங்களுக்கிடையிலான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இணக்கமான கொள்கைகளை வகுப்பதில் இந்திய அளவில் கேரளமே முதலிடத்தில் இருக்கிறது என்கிறது மும்பையைச் சேர்ந்த ‘இந்தியா மைக்ரேஷன் நவ்’ என்ற அமைப்பு. கேரளத்துக்கு 100-க்கு 62 புள்ளிகளைக் கொடுத்திருக்கும் அந்த அமைப்பு, இரண்டாம் இடத்தில் இருக்கும் மஹாராஷ்டிரத்துக்குக் கொடுத்திருக்கும் புள்ளிகள் 42. தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கும் புள்ளிகள் 37 மட்டுமே. ஊரடங்கின்போது கேரளம், புலம்பெயர் தொழிலாளர்களை வெளியேறாமல் தங்கவைப்பதற்கு முயல்கிறது. மஹாராஷ்டிரம் அவர்களைப் பாதுகாப்பாக அனுப்பிவைக்கத் தவிக்கிறது. இவ்விஷயத்தில், தற்போதைய சூழல்களின் அடிப்படையிலேயே இரண்டு மாநிலங்களும் வெவ்வேறு முடிவுகளை எடுத்திருக்கின்றன.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு சமூக நலத் திட்டங்கள், மருத்துவ வசதிகள், அவர்களது குழந்தைகளுக்கான திட்டங்கள் ஆகியவை கேரளத்தில் செயல்படுத்தப்படுகின்றன. ‘விருந்தினர் தொழிலாளர்கள்’ என்று அழைக்கப்படுவதோடு, அவர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்படுகின்றன. வங்கத்திலிருந்தும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் கேரளாவுக்கு வரும் தொழிலாளர்கள் நீண்ட காலமாகத் தங்கியிருப்பதற்கு, அங்கு பின்பற்றப்படும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்தான் காரணம். கேரளத்திலிருந்து வெளிநாடு செல்பவர்களில் ஏறக்குறைய 89.2% பேர், வளைகுடா நாடுகளில் வேலை பார்ப்பவர்கள் என்ற அனுபவத்திலிருந்து கேரளம் கற்றுக்கொண்டிருக்கும் பாடங்கள் இவை. பெரும்பாலும் வயதானவர்களையே அதிகமாகக் கொண்டிருக்கும், வேலைபார்க்கும் இளைஞர்களும் வெளிநாட்டில் தங்கியிருக்கும் மாநிலமான கேரளம், தன்னுடைய தொழிலாளர் தேவையை எப்படி வெற்றிகரமாகச் சமாளிக்கிறது என்பது மற்ற மாநிலங்களுக்குமான முன்னுதாரணம்.

கண்துடைப்புச் சட்டம்

ஓரளவு நல்ல ஊதியம் கிடைக்கும் அமைப்பு சார்ந்த வேலைகளைத் தங்களது மாநிலத்தவர்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று ஆங்காங்கே ‘மண்ணின் மைந்தர்கள்’ கூச்சலிடுகிறார்கள். குறைவான கூலியில் உடலுழைப்பைத் தருவதற்கு மற்ற மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்களின் நலனைப் பற்றி யாருமே குரல்கொடுப்பதில்லை. அந்தத் தொழிலாளர்களுக்குச் சங்கமும் இல்லை. மாநிலங்களுக்கிடையே புலம்பெயரும் தொழிலாளர்களுக்கென்று 1979-ல் தனிச் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படவும் இல்லை. பிரதான பணியளிப்பவர், வேலைக்கு ஆட்களைக் கூட்டிவரும் ஒப்பந்ததாரர் மட்டுமின்றி, மாநில அரசுக்கும் பொறுப்புகளை விதிக்கிறது அச்சட்டம். தொழிலாளர்களின் புலம்பெயர்வுகள் பெரும்பாலும் பருவ காலங்களின் அடிப்படையிலும் சுழற்சி முறையிலும் நடைபெறுவதால், அதுகுறித்து அரசிடம் தெளிவான எந்த விவரங்களும் இல்லை. விவரங்களே இல்லாதபோது அந்தச் சட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்த முடியும்?

இந்நாட்டின் குடிமக்கள், பணிபுரிவதற்காக நாட்டின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம், அது அவர்களின் அடிப்படை உரிமை என்கிறது அரசமைப்புச் சட்டம். அப்படியென்றால், பாதுகாப்பாகத் திரும்பிவருவதற்கான வாய்ப்பையும் அல்லது வேலைக்குச் சென்ற இடத்திலேயே பாதுகாப்பாகத் தங்கியிருப்பதற்கான வாய்ப்பையும் கொண்டிருந்தால்தானே அது உரிமையாக இருக்க முடியும். வேலைக்கான இடம்பெயரும் உரிமை ஒருபுறம் இருக்கட்டும், உயிர்வாழ்வதற்கான உரிமையாவது அவர்களுக்கு உறுதிசெய்யப்பட்டிருக்கிறதா?

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.inபுலம்பெயர் தொழிலாளர்கள் உரிமைபுலம்பெயர் தொழிலாளர்கள்தொழிலாளர் தினக் கூடுகைகள்ஏன் புலம்பெயர்கிறார்கள்Migrant workers

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x