Last Updated : 27 Apr, 2020 08:08 AM

 

Published : 27 Apr 2020 08:08 AM
Last Updated : 27 Apr 2020 08:08 AM

கடைசித் தொற்றாளர் குணமான பிறகுதான் எங்கள் பணி முழுமை அடையும்!- கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரோஸி வெண்ணிலா பேட்டி

கரோனா தடுப்பில் தமிழ்நாட்டில் சிறப்பாகப் பணியாற்றிவரும் மாவட்டங்களில் ஒன்று என்று கரூரைச் சொல்லலாமா? பல விதங்களில் அப்படிச் சொல்ல முடியும். வணிகத்துக்குப் பேர்போன மாவட்டம் என்பதால், இயல்பாகவே நிறைய வெளியூர் ஆட்கள் வந்துசெல்லும் ஊர் இது. கரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒன்றாக அது தொடக்கத்தில் இருந்தபோது அந்தத் தகவல் யாருக்கும் ஆச்சரியம் தரவில்லை. ஆனால், இன்று சூழல் தலைகீழாக மாறி அதிக தொற்றற்ற மாவட்டங்களில் ஒன்றாகியிருக்கிறது. ஏப்ரல் 20 அன்று ஒரே நாளில் 48 பேர் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து குணமாகிச் சென்றனர்; கரூர் மட்டுமல்லாமல் திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களில் உறுதிசெய்யப்படும் கரோனா தொற்றாளர்களும் இங்குதான் அழைத்துவரப்படுகிறார்கள். தொற்றாளர்களை எதிர்கொள்வதில் ஆரம்பித்து அனுமதி, பரிசோதனை, சிகிச்சை முறை, உணவு என அனைத்தையும் தனது குழுவினருடன் இணைந்து துரிதமாக ஒருங்கிணைக்கிறார், டீன் ரோஸி வெண்ணிலா. அவருடன் பேசினேன்…

நிறைய பேரைக் குணப்படுத்துவது இங்கே எப்படிச் சாத்தியமாயிற்று?

தமிழக அரசின் பிரதான அக்கறையாக கரோனா மாறியிருக்கிறது. கேட்கும் எல்லா உதவிகளும் கிடைக்கின்றன. இன்னொருபுறம், எங்கள் மருத்துவர்கள், பணியாளர்களும் முக்கியக் காரணம். முதல் நாளிலேயே தங்களை முழுமையாகத் தயார்படுத்திக்கொண்டார்கள். இன்றுவரை சளைக்காமல் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை என அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஒருங்கிணைப்போடு செயலாற்றுவதன் மூலம்தான் இது சாத்தியமாகியிருக்கிறது.

கரோனா தொற்றாளர்களை எப்படிப் பராமரிக்கிறீர்கள்?

அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் முதன்மையான நோக்கம். அதற்காகத் தினமும் மனநல ஆலோசனைகள் வழங்குகிறோம். அடுத்ததாக, அவர்களிடம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துதல். மருத்துவர்களும் செவிலியர்களும் கனிவுடனும் அக்கறையுடனும் நடந்துகொள்கிறார்கள். தொற்று பரவாமலும் பாதிக்காமலும் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சிகிச்சை அளிக்கிறோம். அத்துடன் சத்தான உணவும் சேரும்போது நல்ல பலன் கிடைக்கிறது.

மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்குப் பரவலாகத் தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், இங்கே எப்படிக் கட்டுக்குள் வைத்திருக்கிறீர்கள்?

மொத்தம் 531 பேர் மூன்று ஷிஃப்ட்களாகப் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கான பாதுகாப்பு உடைகளில் தொடங்கி, அதுகுறித்த பயிற்சிகள், தனிமைப்படுத்திக்கொள்ளும் இடம், உணவு என எல்லாவற்றையும் ஆரம்ப நாட்களிலேயே ஏற்படுத்திவிட்டோம். தினமும் ஆலோசனைகள், பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. எனவே, அவர்களும் பணிச்சுமை, மனச்சுமை இல்லாமல் பணியாற்றுகிறார்கள். இவர்களில் யாருக்கும் தொற்று இல்லை என்பது மிகுந்த மன நிம்மதியைத் தந்திருக்கிறது.

புதிய மருத்துவமனை என்பதால் ஏதேனும் சிரமங்களை எதிர்கொள்கிறீர்களா?

ஒருவகையில் இது அனுகூலம்தான். புதிய கட்டிடம் என்பதால், தேவையான வசதிகளெல்லாம் நன்கு கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனி அறைகள், கழிப்பறைகளைக் கொடுக்க முடிகிறது. வென்டிலேட்டர் தேவைப்படுகிறவர்களுக்கு உடனடியாகக் கொடுக்க முடிகிறது. தேவையான பணியாளர்கள் இருப்பதால், வளாகத்தை எப்போதும் சுகாதாரமாகப் பராமரிக்க முடிகிறது.

உலகமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இந்தப் புதிய தொற்றின்போது பணியாற்றுவது எப்படி இருக்கிறது?

இப்படி ஒரு பேரிடர்க் காலத்தில் பணியாற்றுவது மிகப் பெரிய சவால்தான். ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக ஓய்வில்லாமல் பணியாற்றுவதால் மிகுந்த களைப்பாக இருக்கிறது. தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறபோது, மனதில் இனம்புரியாத பயமும்கூட இருந்தது. அது எங்கள் வளாகத்திலிருந்து குணமடைந்து வெளியேறிய முதல் நபரைப் பார்க்கும் வரைதான். அது பெரிய உத்வேகம் கொடுத்தது. ஒவ்வொரு நோயாளியும் குணமடைந்து வெளியேறுவது பெரிய நிம்மதியைத் தருகிறது. இதுவரை மொத்தம் 144 பேர் குணமாகியிருக்கிறார்கள். இப்போது என் மனதில் எந்தப் பயமும் இல்லை. புது உற்சாகம்கூடப் பிறந்திருக்கிறது. கடைசித் தொற்றாளர் வரை எல்லோரையும் குணமாக்கிய பிறகுதான் எங்கள் பணி முழுமை அடையும். அந்த நாளைச் சீக்கிரமே எட்டுவதற்காகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

- கரு.முத்து, தொடர்புக்கு: muthu.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x