Published : 19 Aug 2015 09:35 AM
Last Updated : 19 Aug 2015 09:35 AM

மெல்லத் தமிழன் இனி 2 - இந்த ஓட்டைகளை அடைக்க முடியாதா?

முதலில் நம்முடைய உணவு மானியத் திட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பார்ப்போம். மாதத்துக்கு 20 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அளிக்கப்பட்ட உணவு மானியம் ரூ. 24,900 கோடி. ஆண்டுக்கு சராசரியாக ரூ.4,980 கோடி செலவிடப்படுகிறது. வழங்கப்படும் விலையில்லா அரிசியில் கணிசமான பகுதி கள்ளச் சந்தையில்தான் புழக்கத்தில் விடப்படுகிறது. இதற்கென்றே இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். விலையில்லா அரிசியை பாலீஷ் செய்வதற்கு என்றே ஊர்கள்தோறும் பிரத்யேக அரிசி ஆலைகள் இருக்கின்றன. இங்கு பாலீஷ் செய்யப்படும் அரிசி தமிழகத்திலும் பக்கத்து மாநிலங்களிலும் கிலோ ரூ.10 முதல் ரூ.18 வரை விலை வைத்து விற்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை மிகப் பெரிய கள்ளத்தொழில் இது.

முக்கியக் காரணம், போலி குடும்ப அட்டைகள். மத்திய அரசின் உணவு மற்றும் நுகர்வோர் துறையின் அறிக்கையின்படி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் தானியத்தில் 16.67% போலி குடும்ப அட்டைகள் வழியாகவும், 19.71% ஊழல்களாலும், கள்ளச்சந்தைக்கு விற்கப்படுகிறது. மொத்த மானியத் தொகையான ரூ.7,258 கோடியில் ரூ.2,640 கோடி கள்ளச் சந்தைக்குக் கசிகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தேசிய அளவிலான புள்ளிவிவரம் என்றாலும், கிட்டத்தட்ட தமிழகத்துக்கும் இது பொருந்தும். கடந்த 2009-ம் ஆண்டே தமிழகத்தில் சுமார் 25 லட்சம் போலி குடும்ப அட்டைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

இந்த ஒரு மோசடியைத் தடுத்தாலே, ஆண்டுக்குச் சராசரியாக ஆகும் செலவான ரூ.4,980 கோடியில் குறைந்தது மூன்றில் ஒரு பகுதியான ரூ.1,660 கோடியைச் சேமிக்கலாம்.

உணவு மானியத்தைக் கணக்கிட்டதைப் போலவே மின்சார மானியத்தையும் கணக்கிடலாம்.

மின்சார மானியத்துக்கு 2015-16 ஆண்டு பட்ஜெட்டில் ரூ.22,430 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டு சராசரி ரூ.4,486 கோடி. மின்உற்பத்தி நிலையங்களைச் சிறப்பாகப் பராமரிப்பது, மின்கடத்தி சாதனங்களின் தரத்தை உயர்த்தி மின்இழப்பைத் தவிர்ப்பது, பழைய மீட்டர்களை அப்புறப்படுத்துவது, மின்உபயோகத்தின் மீதான கட்டுப்பாடுகளை விதிப்பது, மின்சிக்கனம் ஆகிய நடவடிக்கைகள் மூலம் பெருமளவு மின்சாரத்தைச் சேமிக்க முடியும்.

மேற்கண்ட தொழில்நுட்பக் காரணங்களால் அல்லாமல் மின்திருட்டு மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் ரூ. 56 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மின் துறை அதிகாரிகளிடம் பேசினால், “தமிழகத்தில் பெரும்பாலும் டிரான்ஸ்ஃபார்மர், தெருவோர இணைப்புப் பெட்டி, மின்கம்பங்களிலிருந்து அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் கொக்கி போட்டு மின்சாரம் திருடுவது, வீட்டு உபயோக மின்சாரத்தை வணிக உபயோகத்துக்குப் பயன்படுத்துவது, மீட்டரை இயங்க விடாமல் காந்தம் உள்ளிட்ட பொருட்களை வைப்பது, மீட்டரைத் துண்டித்து மின்சாரத்தைப் பயன்படுத்துவது, கட்டுமானத்துக்குத் தற்காலிக இணைப்பு வாங்காமல் ஏற்கெனவே இருக்கும் இணைப்பைப் பயன்படுத்துவது போன்றவை மூலம்தான் மின்திருட்டு நடக்கிறது” என்கிறார்கள். மேற்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்தி மின்சாரத்தை மிச்சப்படுத்தினால் ஓர் ஆண்டுக்கு ஆகும் மானியச் செலவான ரூ.4,486 கோடியில் மூன்றில் ஒரு பகுதியான சுமார் ரூ.1,495 கோடியைச் சேமிக்கலாம்.

இறுதியாக, வாங்கிய கடனுக்குக் கட்டும் வட்டித் தொகை. தமிழக அரசு 2015-16-ம் ஆண்டு கட்ட வேண்டிய கடன் மற்றும் வட்டித் தொகை ரூ.17,856.55 கோடி. இது அடுத்தடுத்த நிதி ஆண்டுகளில் முறையே ரூ. 19,999.45 மற்றும் 22,399.38 கோடி என்று உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதுபோக புதியதாக 2015-16-ம் ஆண்டில் ரூ.30,446 கோடி வாங்க திட்டமிட்டுள்ளது. பெரும்பாலான கடன்கள் பன்னாட்டு நிதி நிறுவனங்கள், உலக வங்கியிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளன. பொதுவாக, இதுபோன்ற நிறுவனங்களிடம் வாங்கிய கடன் அவ்வளவு சீக்கிரத்தில் கட்டி அடையாது. வட்டி குட்டி போட்டுக்கொண்டே இருக்கும். எனவே, புதிய கடன்களை வாங்கும்போது வெளியே கடன் வாங்குவதைத் தவிர்த்து, எல்.ஐ.சி., நபார்டு வங்கி மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து கடன் வாங்கினால், வட்டி விகிதம் கணிசமாகக் குறையும். இப்படியாக 2015-16-ம் ஆண்டு கட்ட வேண்டிய கடன், வட்டியான ரூ.17,856 கோடியில் 5% வட்டி விகிதம் குறைந்தால்கூட ஆண்டுக்கு ரூ.893 கோடியைச் சேமிக்கலாம்.

- டி.எல்.சஞ்சீவிகுமார்

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

(தெளிவோம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x