Published : 21 May 2014 08:28 AM
Last Updated : 21 May 2014 08:28 AM

அகாலி வாக்குகளை விழுங்கிய ஆ.ஆ.க.!

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு தொகுதிகளும் பதிவான வாக்குகளில் 25%-ம் கிடைத்திருப்பதை சிரோமணி அகாலிதளம் - பா.ஜ.க. கூட்டணியின் ஆணவத்துக்கும் அராஜகத்துக்கும் எதிரான மக்களின் கோபத்தின் வெளிப்பாடு என்று வர்ணிப்பது உண்மையைப் பாதி மட்டும் சொல்வதாகும். பஞ்சாபைத் தவிர, வேறு எந்த மாநிலத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி கிட்டவில்லை. பஞ்சாபுக்குப் பக்கத்திலேயே இருக்கும் ஹரியானா, கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்குச் சொந்த மாநிலம் என்பதால், கட்சியின் முழுக் கவனமும் அங்கு செலுத்தப்பட்டும் வெறும் 4% வாக்குகள் மட்டுமே அந்தக் கட்சி பெற்றது.

ஆ.ஆ.க-வுக்கு ஆதரவு ஏன்?

ஆ.ஆ.க-வுக்கு இதுவரை பஞ்சாபில் முறையான கட்சி அமைப்பு இல்லை. அதன் தேர்தல் பிரச்சாரத்தை, கடைசி நேரத்தில் தேர்வு செய்த 12 பேர் குழுதான் மேற் கொண்டது. அவர்களில் சிலர் டெல்லியிலிருந்து வந்தவர்கள். அதன் வேட்பாளர்கள் அங்கும் இங்குமாக சேகரித்து நிறுத்தப்பட்டவர்கள். அவர்களில் சிலருக்குக் கையில் பணம் இல்லாததால் வெளியில் போய் பிரச்சாரம் செய்யக்கூடத் தயக்கம் இருந்தது.

பரீத்கோட்டில் டாக்டர் சாது சிங் 4,50,751 வாக்குகள் பெற்று வென்றார். கவிஞரும் கல்லூரி முதல்வருமான அவர் சில மாதங்களுக்கு முன்னால்தான் ஆ.ஆ.க-வில் சேர்ந்தார். அவருடைய தொகுதியில் இருந்த கிராமங்களில் 10% கிராமங்களுக்கு மேல் அவரால் பிரச்சாரத்துக்குப் போக முடியவில்லை.

நகைச்சுவையான பேச்சு, எழுத்தால் தொகுதியில் மிகவும் பிரபலமாகிவிட்ட பகவந்த் மான், இளைஞர்கள் பின்தொடர, பைக்குகளில் கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரம் செய்து 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்.

டாக்டர் தரம்வீர் காந்தி என்ற இதய அறுவைச் சிகிச்சை நிபுணர், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பிரணீத் கௌரை அவரது கோட்டை என்று கருதப்பட்ட பாட்டியாலா தொகுதியிலேயே தோற்கடித்துவிட்டார்.

ஃபதேகர் சாஹிப் தொகுதியில் டாக்டர் ஹரீந்தர் சிங் கால்சா வெற்றி பெற்றுள்ளார். நார்வேயில் இந்தியத் தூதராக இருந்த அவர் பொற்கோயிலில் ராணுவம் நுழைந்ததைக் கண்டித்து 1984-ல் பதவியைத் துறந்தார்.

இதெல்லாம் பஞ்சாபில் நடப்பதற்குக் காரணம், பஞ்சாபி யர்கள்தான் துணிச்சலாகப் புதிய விஷயங்களை முயன்று பார்ப்பவர்கள் என்கின்றனர். புதிதாக எது வந்தாலும் அது என்ன என்று சோதித்துப் பார்ப்பதும், யாருமே நுழைய அச்சப்படும் துறைகளில் நுழைந்து பார்ப்பதும் பஞ்சாபிகளின் இயற்கைக் குணம்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதி களில் ஆ.ஆ.க. 33 தொகுதிகளில் முதல் இடத்திலும், 25 தொகுதிகளில் இரண்டாம் இடத்திலும் வந்திருக்கிறது. அதாவது, மாநிலத்தின் சரிபாதி தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப் புறங்களிலும் அது பரவியிருக்கிறது.

பஞ்சாபிகள் தாராள மனம் படைத்தவர்கள். அநீதியைச் சகித்துக்கொள்ள மாட்டார்கள். அகாலி பா.ஜ.க. கூட்டணி யினரின் அகந்தைக்குப் பாடம் புகட்ட இந்தத் தேர்தலை அவர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்று வரலாற்றுப் பேராசிரியர் ஹரீஷ் புரி கூறுகிறார்.

வாள் சீக்கியர்களுக்கானது

வீரம் செறிந்தவர்கள் மீது சீக்கியர்களுக்கு மரியாதை உண்டு. அதே சமயம் சீக்கியர்கள் அல்லாதவர்களின் வீரத்தை அவர்கள் ரோஷத் துடனேயே பார்ப்பார்கள். நரேந்திர மோடியை மாபெரும் வீரராகச் சித்தரித்ததையும் அவருக்கு வாள் பரிசாகத் தரப்பட்டதையும் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. வாளைத் தரிப்பதற்கான அருகதை சீக்கியர்களுக்கு மட்டுமே உண்டு என்று கருதுபவர்கள்.

எனவே, மோடிக்கு ஆதரவாக வாக்களிப்பதையும் அவர்கள் விரும்பவில்லை. மாறாக, வேட்பாளர்களில் உள்ளூர் வீரர் யார் என்று பார்த்து வாக்களித்திருக்கிறார்கள். சிறந்த உதாரணம், அமிர்தசரஸ் நகரில் காங்கிரஸ் வேட் பாளர் அமரீந்தர் சிங்கை ஆதரித்து பா.ஜ.க-வின் அருண் ஜேட்லியைத் தோற்கடித்தது.

அதே போல பதிண்டா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மன்பிரீத் சிங் பாதலை மாவீரனாக வாக்காளர்கள் கருதினர்.

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோற்ற பிரதாப் சிங் பஜ்வா, அம்பிகா சோனி, சுநீல் ஜாக்கர் ஆகி யோரை வீரம் செறிந்தவர்களாக பஞ்சாபிகள் கருதுவதில்லை. வீரம் செறிந்த சீக்கிய வேட்பாளர்கள் இல்லாத தொகுதிகளில்தான் ஆ.ஆ.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர்.

ஆதாயம் தேடும் அகாலிதளம்

பஞ்சாபின் கிராமப் பகுதிகளில் பாரம்பரியமாகத் தங்களை ஆதரித்த வாக்காளர்களை இப்போது வேறு கட்சி கவர்ந்துகொள்வதற்கு வந்துவிட்டதே என்ற கவலை அகாலிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. 1984-ல் டெல்லியில் நடந்த சீக்கியர்கள் கலவரம் தொடர்பாக விசாரிக்க அர்விந்த் கேஜ்ரிவால் தனிக் குழுவை நியமித்ததால், சீக்கியர்களின் மனதில் அவருக்குத் தனியிடம் கிடைத்திருக்கிறது. சீக்கியர் களின் பிரச்சினைகளைத் தீர்க்க மனமில்லாமல் அவற்றில் வெறும் அரசியல் ஆதாயம் தேடுகிறது அகாலிதளம் என்ற கோபம் சீக்கியர்களுக்கு இருக்கிறது.

குஜராத்தில் சீக்கியர்கள் விரட்டப்பட்டதற்குக் காரணம் மோடிதான் என்று ஆ.ஆ.க. செய்த பிரச்சாரம் வேறு சீக்கியர்களிடம் மோடி மீது கோபம்கொள்ளச் செய்துவிட்டது.

மால்வா பகுதியில் ஆ.ஆ.க-வுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியும் களத்தில் இறங்கிப் பிரச்சாரம் செய்தது. கூடவே, வெளிநாடு வாழ் சீக்கியர்களும் சமூக வலைத்தளங்களில் ஆ.ஆ.க-வுக்கு ஆதரவாக பஞ்சாபி களிடையே தீவிரப் பிரச்சாரம் செய்தனர்.

எதிர்காலத்தில் பஞ்சாப் அரசியல் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், ஆ.ஆ.க-வுக்கு பஞ்சாப் பேரவையில் கணிசமான தொகுதிகள் கிடைக்கும் என்பது நிச்சயம்.

‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x