Published : 10 Mar 2020 09:08 AM
Last Updated : 10 Mar 2020 09:08 AM

360: ‘கோவிட்-19’ உலகம் எப்படி எதிர்கொள்கிறது?

சிங்கப்பூர்: வைரஸ் தாக்கியவர்கள், நோயின் தீவிரத்துக்கேற்ப நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். சிகிச்சையும் தொடர்கிறது. காய்ச்சல், சளி, இருமல், தும்மல் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்குச் செல்வதையும், அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதையும் சிங்கப்பூர் அரசு ஊக்குவிக்கிறது. மீறுபவர்களுக்குக் கடுமையான அபராதமும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று எச்சரித்து இதன் தீவிரத்தை உணர்த்துகிறது.

முகக் கவசம் உள்ளிட்டவற்றை விலை உயர்த்தி விற்கக் கூடாது, பதுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறது. காய்ச்சல் வந்தவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பை அவர்கள் குணமாகும் வரை எல்லா நிறுவனங்களும் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. பொதுப் போக்குவரத்து வாகனங்கள் அனைத்திலும் கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகின்றன. பொது நிகழ்ச்சிகள் காலவரம்பின்றித் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

சீனாவுக்குச் செல்வதற்கும் அங்கிருந்து திரும்புவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சீன பாஸ்போர்ட்டுகளுக்கு விசா தருவது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் சீனா சென்று திரும்பியவர்கள் சிறப்பு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையம், துறைமுகம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய அனைத்திலும் வெப்பத் திரையிடல் மூலம் பயணிகள் சோதிக்கப்படுகின்றனர்.

பிராணிகள், பறவைகள் அருகில் செல்லக் கூடாது என்று சுகாதார ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். பாதி சமைத்த உணவுகளுக்கும், சமைக்காத உணவுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவுடன் இணைந்து செயல்படுவதற்குக் கூட்டு செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. சாலைகளிலும் பொது இடங்களிலும் கிருமிநாசினிகள் அடிக்கடி தெளிக்கப்படுகின்றன. வீதிகளில் செல்வோரைக் காவல் துறையும் சுகாதாரத் துறையும் கண்காணிக்கின்றன.

மின்தூக்கிகளின் பட்டன்கள், குழாய்களின் கைப்பிடிகள் போன்ற மக்கள் தொடும் பகுதிகள் அடிக்கடி கிருமிநாசினிகளால் துடைக்கப்படுகின்றன. காற்று மாசு கண்காணிக்கப்படுகிறது. வருமான இழப்பைச் சந்திக்கும் தொழில், வர்த்தக நிறுவனங்களுக்கும் குடும்பங்களுக்கும் நிதியுதவி அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

இத்தாலி: அதிகம் பாதிப்புக்கு உள்ளான இத்தாலியின் வடக்கு மாநிலங்களுக்கு ஏப்ரல் 3 வரை செல்லக் கூடாது என்று பிரதமர் ஜிசெப்பி கான்ட் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், அருங்காட்சியகங்கள், திரையரங்குகள், கலை நிகழ்ச்சி அரங்குகள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்கங்கள் மூடப்பட்டுள்ளன. பனிச்சறுக்கு விளையாட்டு மையங்கள் மறுஅறிவிப்பு வரை மூடப்படுகின்றன.

திருமணம், நீத்தார் நினைவுக்கூட்டங்கள் போன்றவையும் ஒத்திவைக்கப்பட வேண்டுமென்று வேண்டுகோள் விடப்பட்டிருக்கிறது. வழிபாட்டு மையங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் திறந்து வைக்க அனுமதிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. வடக்கு இத்தாலியைத் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்க முடிவெடுத்ததும் ஹோட்டல்களிலும் மதுபான விடுதிகளிலும் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உடனடியாக வெளியேறிவிட்டனர்.

பிரான்ஸ்: ஆயிரம் பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடக் கூடாது என்று சுகாதார அமைச்சர் ஒலிவியல் வெரான் தடை விதித்துள்ளார்.

வாடிகன்: வாடிகனில் போப்பாண்டவர் ஞாயிறுதோறும் தனது மாளிகையின் சாளரம் வழியாக நிகழ்த்தும் உரை நடைபெறவில்லை. இணையதளம் வழியாகவும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள பெரிய திரைகளிலும் அவரது உரை ஒளிபரப்பானது.

ருமேனியா: ஆயிரம் பேருக்கும் மேல் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்திருக்கிறது.

கிரேக்கம்: அடுத்த இரு வாரங்களுக்கு விளையாட்டு நிகழ்ச்சிகள், மைதானங்களில் பார்வையாளர்கள் இல்லாமலேயே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் நாட்டில், கிராண்ட் ப்ரீ கார் பந்தயம் மார்ச் 20 முதல் 22 வரை பந்தயக்காரர்களுடன் மட்டும் நடைபெறும். பார்வையாளர்கள் தொலைக்காட்சியில் பார்க்கட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x