Published : 09 Mar 2020 08:37 AM
Last Updated : 09 Mar 2020 08:37 AM

360: கோவிட்-19 பரவலை எப்படித் தடுக்கலாம்?

தொகுப்பு: ஆசை

* வெளியில் சென்றுவிட்டு வரும்போது உங்கள் கைகளை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவுங்கள்.

* தும்முகிறவர்களிடமிருந்து ஒரு மீட்டர் தொலைவேனும் பராமரிக்கவும். ஏனெனில், தும்முகிற நபருக்கு ‘கோவிட்-19’ இருந்தால் அது தும்மலில் வெளிப்படும் துளிகளில் கலந்திருக்கும். நீங்கள் சுவாசிக்கும்போது அந்தத் துளிகள் காற்றினூடாக மூக்கு வழியாக சென்றால் நீங்களும் ‘கோவிட்-19’ தொற்றுக்கு ஆளாகக் கூடும்.

* கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிருங்கள். ஏனெனில், அப்படிப்பட்ட இடங்களில் ‘கோவிட்-19’ வெகு வேகமாகப் பரவும். பலரிடமும் ஒரே நேரத்தில் தொற்றுவதற்கு வாய்ப்புண்டு.

* எப்போதும் உங்கள் சட்டைப் பைகளில் நிறைய துடைப்புக் காகிதங்கள் வைத்திருங்கள். தும்மும்போது அந்தக் காகிதத்தை முகத்தின் மீது அழுத்திப் பிடித்துக்கொண்டு தும்முங்கள். தும்மிய பிறகு அந்தக் காகிதத்தை உடனடியாகக் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுங்கள். கொட்டாவி, ஏப்பம் விடும்போதும் இப்படியே.

* காய்ச்சல், இருமல் தொடர்ந்து இருந்தாலோ மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தாலோ உடனடியாக மருத்துவ உதவியை நாடவும். எந்த அளவுக்குச் சீக்கிரம் மருத்துவ உதவியை நாடுகிறோமோ அந்த அளவுக்கு நோயின் பரவலைக் கட்டுப்படுத்தலாம்.

மிக முக்கியம்:

* கைகளால் முகத்தை, குறிப்பாக கண், வாய், மூக்கு போன்ற உறுப்புகளைத் தொடும் பழக்கத்தைத் தவிருங்கள். ஏனெனில், ‘கோவிட்-19’ தாக்குதலுக்குள்ளான நபர் புழங்கிய இடங்களில் அந்த வைரஸ் சில நாட்களுக்கு அப்படியே இருப்பதற்கு வாய்ப்புண்டு. அதனைத் தொட்டுவிட்டு முகத்தைத் தொடும்போது அந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளது.

* ‘கோவிட்-19’ பற்றி வாட்ஸப், சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை நம்பிவிட வேண்டாம். சரியாக உறுதிப்படுத்திக்கொள்ளாமல் யாருக்கும் இந்தத் தகவல்களை நீங்கள் அனுப்பாதீர்கள். ஏனெனில், கொள்ளைநோய் காலத்தில் வதந்திகளால் ஏற்படும் சேதாரம் மிக அதிகமாக இருக்கும்.

* ‘கோவிட்-19’ பரவல் அதிகமாக இருக்கும் நாடுகள், மாநிலங்கள், ஊர்களுக்குச் செல்ல வேண்டாம். ஏனென்றால், சீனாவில் தோன்றிய ‘கோவிட்-19’ தாக்குதல் உலக அளவில் பரவியதற்குப் பயணமும் முக்கிய காரணம். ஆகவே, அப்படிப்பட்ட பயணங்களைத் தவிருங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x