Published : 13 Feb 2020 08:29 AM
Last Updated : 13 Feb 2020 08:29 AM

பத்தே நாட்களில் உருவான ஆயிரம் படுக்கை மருத்துவமனை

மாநிலத்தவருக்கே 75% வேலை... தயாராகிறது புதிய சட்டம்!

கர்நாடக மாநிலத்தில் தொழிற்சாலைகள், சிறு, குறு, நடுத்தரத் தொழில் பிரிவுகள், கூட்டு நிறுவனங்கள், அரசு - தனியார் கூட்டாண்மை நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ளூர் மக்களுக்கு 75% வேலைவாய்ப்புகள் அளிப்பதற்கான சட்ட முன்வடிவு தயாராகிக்கொண்டிருக்கிறது. ஆந்திரத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் இது தயாராகிறது. கர்நாடகத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள் மட்டுமல்லாது, 15 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்பவர்கள், அரசு திட்டங்களுக்காகத் தங்களுடைய நிலங்களைக் கொடுத்தவர்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் இச்சட்டம் கொண்டுவரப்படுகிறது. இது சட்டமானால், அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களின் பட்டியலை அரசிடம் தர வேண்டும். இந்த சட்டப்படி வேலை தரப்பட்டிருக்கிறதா என்று அரசு ஆய்வுசெய்யும்.

பத்தே நாட்களில் உருவான ஆயிரம் படுக்கை மருத்துவமனை

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்க 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஹுவோஷென்ஷன் நகரில் பத்தே நாட்களில் உருவானதை உலகம் பேசுகிறது. இந்த மருத்துவமனையை 7,000 தொழிலாளர்கள் கொண்ட குழு நிர்மாணித்தது. இரவு பகலாக வேலை நடந்தது. இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்தச் சிறப்பு மருத்துவமனை மொத்தம் 60,000 சதுர மீட்டர் (6 லட்சம் சதுர அடி) பரப்பளவு கொண்டது. தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மட்டும் 30 உள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வகப் பணியாளர்கள், அடுத்த நிலை உதவிப் பணியாளர்கள் என 1,400 பேர் அடங்கிய குழுவை சீன ராணுவம் அளித்துள்ளது. இவர்கள் ‘சார்ஸ்' பரவியபோது அதைக் கட்டுப்படுத்தியதில் அனுபவம் வாய்ந்தவர்கள். வூஹானிலும் 1,500 படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை தயாராகிவிட்டது. 2003-ல் ‘சார்ஸ்' வைரஸ் காய்ச்சலின்போது ஜியோடாங்ஷன் நகர சிறப்பு மருத்துவமனை ஏழு நாட்களில் உருவானது. அதையும் இப்போது புதுப்பித்துவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x