Published : 26 Dec 2019 07:14 AM
Last Updated : 26 Dec 2019 07:14 AM

பிரிட்டனை உலுக்கியெடுக்கும் அரசியல் மாற்றங்கள் அமெரிக்காவிலும் நடக்குமா?

மாத்யூ குட்வின், எரிக் காப்மன்

பிரிட்டன் கடந்த ஒன்பது ஆண்டுகளில், எட்டு பெரும் தேர்தல்களால் உலுக்கியெடுக்கப்பட்டிருக்கிறது. நான்கு பொதுத் தேர்தல்கள், ஸ்காட்லாந்துக்கு சுதந்திரம் அளிப்பது தொடர்பாக மக்களின் கருத்தறியும் இரண்டு வாக்கெடுப்புகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருப்பதா, வேண்டாமா என்பது தொடர்பாக மேலும் இரண்டு வாக்கெடுப்புகள். ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு நடந்த இரண்டு தேர்தல்களும் உலகின் மிகப் பழமையானதும் மிகவும் வலிமையானதுமான மக்களாட்சிகளில் ஒன்றான பிரிட்டனைக் குலுக்கியெடுக்கும் காலக்கட்டத்தை நோக்கி நகர்த்திவிட்டன. குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான பிரெக்ஸிட் யுத்தங்களானது அரசியல் கொந்தளிப்புக்கும், பிரிட்டன் தன்னை மறுஒழுங்கு செய்துகொள்ள வேண்டிய நிலைக்கும் தள்ளிவிட்டன.

பிரிட்டன் அரசியலைப் பொறுத்தவரை, அது தன்னை மறுஒழுங்கு செய்துகொள்வது என்பது மிகவும் அரிதான நிகழ்வு: 1980-களில் நடந்த இடதுசாரிகளின் மோதல்களானது கட்சி பிரிவதற்கும், புதிய தொழிலாளர் கட்சியும் டோனி பிளேரும் எழுச்சி பெறுவதற்கும் காரணமானது. தற்போது, பிரிட்டன் மீண்டும் ஒரு மறுஒழுங்குக்கான நெருக்கடியில் இருக்கிறது. தற்போது அந்த மறுஒழுங்கானது புதியதொரு பண்பாட்டு விவாதத்தில் வேர்கொண்டிருக்கிறது. குடியுரிமை, இன வேறுபாடுகள் பற்றிய இந்தப் பண்பாட்டுப் பிரச்சினைகள் அமெரிக்க அரசியலையும் மறுகட்டமைக்கக்கூடியவை.

இரண்டு என்பது இரண்டல்ல

பிரிட்டனைப் பொறுத்தவரையில் மரபுத்துவக் கட்சி (கன்சர்வேடிவ்), தொழிலாளர் கட்சி (லேபர்) என்று பார்ப்பதைக் காட்டிலும் இடதுசாரிகள், வலதுசாரிகள் என்ற இரண்டு பெரும் பிரிவுகளாகவே அதை நாம் முதலில் பார்க்க வேண்டும். இடதுசாரி என்ற பிரிவு முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, முற்போக்கு விடுதலை ஜனநாயகக் கட்சி மற்றும் கிரீன் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கியது. வலதுசாரி என்ற பிரிவுக்குள் மரபுத்துவக் கட்சி, ஜனரஞ்சக அரசியலை முன்வைக்கும் பிரிட்டிஷ் தேசியக் கட்சியின் அதிதீவிர வலதுசாரிகள், நைஜெல் பாராஜ் தலைமையிலான சுதந்திரவாதக் கட்சி, மிக சமீபத்திய பிரெக்ஸிட் கட்சி ஆகியவை உள்ளடங்கும்.

பிரிட்டனில் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் கடந்த பத்தாண்டுகளில் வலுவான நிலையிலிருந்து மோதிக்கொண்டிருக்கும் காட்சியானது பெரிதும் அமெரிக்க அரசியலைப் போன்றே இருக்கிறது. ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகியவை பிரிட்டனின் மக்கள்தொகையில் 10%-க்கும் குறைவாக இருப்பதால் அவற்றைக் கணக்கில்கொள்ளவில்லை. ஒவ்வொரு அரசியல் முகாமும் அதன் சமூகம் மற்றும் கருத்தியல்களில் மாற்றங்களைப் பெற வேண்டியிருக்கிறது. பிரிட்டன் தற்போது மிகவும் ஆழமாகவும் நீண்ட கால அளவிலும் மறுஒழுங்கு செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியிருப்பதாகவே விவரங்கள் தெரிவிக்கின்றன. பிரெக்ஸிட் பண்பாட்டு யுத்தங்கள் பிரிட்டனின் அரசியல் வரைபடத்தை மட்டும் உலுக்கவில்லை, மாறாக அந்த நாட்டையே எதிர்துருவ அரசியல் நிலைக்கு இட்டுச்சென்றிருக்கிறது.

2010 முதல் 2019 வரையிலான காலகட்டங்களில் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவான மாவட்டங்கள், வலதுசாரிகளின் பக்கம் மாறி மரபுத்துவக் கட்சியையோ அல்லது ஜனரஞ்சக அரசியலை முன்வைக்கும் வலதுசாரிகளையோ ஆதரிக்கின்றனர். தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிக்க வேண்டும் என்று வாக்களிக்கும் இடங்கள் இடதுசாரிகளிடம் நகர்ந்துவிட்டனர்; தொழிலாளர் கட்சிக்கும் பிரெக்ஸிட்டுக்கு எதிரான சுதந்திரவாத ஜனநாயகக் கட்சிக்கும் கிரீன் கட்சிக்கும் வாக்களிப்பதையே அவர்கள் மிகவும் விரும்புகின்றனர். இந்த மாற்றங்கள், நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தலில் போரிஸ் ஜான்சன் பெற்றிருக்கும் வெற்றியை விளக்குவதற்கு உதவியாக இருக்கும். நிலக்கரிச் சுரங்கங்கள், தொழிற்சாலை நகரங்களைக் கொண்ட மிட்லாண்ட்ஸ் மற்றும் வடக்கு இங்கிலாந்து பகுதிகளின் ‘சிவப்புச் சுவர்’ மாவட்டங்களில் மரபுத்துவக் கட்சியினர் வெற்றிபெற்றிருப்பதும் இந்த மாற்றங்களால்தான். இதுவரை இந்த மாவட்டங்களில் தொழிலாளர் கட்சிக்கே பெருமளவில் வாக்களித்துவந்தனர். அமெரிக்காவில் ஒரு தடவை மிட்வெஸ்ட் பிராந்தியத்தில் நீலக் கழுத்துப் படைப் பணியாளர்கள் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்ததைப் போல ஆச்சர்யமான நிகழ்வு இது.

குடியேற்ற பீதி

இப்படி நடந்ததற்குக் காரணம் என்ன? இடதுசாரிகளின் தரப்பில் இதற்குச் சொல்லப்படும் பிரபலமான பதில் பொருளாதாரப் பாதுகாப்பின்மை, பொருளாதார உலகமயமாக்கம், சீன இறக்குமதி என்பதாக இருக்கும். ஆனால், நிலப்பகுதிகளாக மட்டுமின்றி அங்கு வசிக்கும் வாக்காளர்களையும் நெருங்கிப் பார்த்தால், குடியேற்றங்கள் பற்றிய அவர்களின் மனவோட்டங்களைக் கொண்டு, பிரெக்ஸிட்டுக்கான ஆதரவை முன்கூட்டியே அனுமானிக்க முடியும். குடியேற்றங்களின் அளவும் வேகமும் பற்றிய பிரிட்டன் மக்களின் கவலைகள், அது கண்டிப்பாகக் கட்டுப்படுத்தப்படும் என்று போரிஸ் ஜான்சன் அளித்திருக்கும் உறுதி ஆகியவையே பிரிட்டனில் நடந்துள்ள அரசியல் மாற்றங்களின் அடிப்படை. பெரும்பாலான வாக்காளர்கள், அவர்களது கட்சி அரசியல் அடையாளங்களைக் காட்டிலும் பண்பாட்டுக் கூறுகளுக்கே முன்னுரிமை கொடுத்திருக்கிறார்கள்.

குடியேற்றங்கள் தொடர்பான தனிப்பட்டவர்களின் மனவோட்டங்களிலிருந்தே பிரெக்ஸிட் பற்றிய அவர்களது கருத்தையும் உறுதியாகக் கணித்துவிட முடியும். குடியேற்றங்களில் சுதந்திரவாதத்தன்மையுடன் நடந்துகொள்வது பல்கலைக்கழகப் பட்டதாரிகளும், இளம் வாக்காளர்களும் மட்டுமே. இடதுசாரி, முற்போக்குக் கட்சிகள் வெள்ளை இனத்தவர்களைக் காலமாற்றங்களுக்கு நிர்ப்பந்தப்படுத்துவதோடு மட்டுமின்றி, அவர்களைச் சிறுபான்மை இனத்தவர் ஆக்குவதும் அதிகரித்துவருகிறது. வலதுசாரிகளோ இத்தகைய வேறுபாடுகள் இயல்பானது என்றும், அதில் மாற்றங்களை உண்டாக்குவது இழப்புக்கு வழிவகுக்கும் என்றும் வெள்ளையர்களிடம் வலியுறுத்துவது அதிகரித்துவருகிறது.

‘திறந்த அல்லது மூடிய’ என்று பார்ப்பதற்குப் பதிலாக ‘வேகமாக அல்லது மெதுவாக’ என்ற கோணத்தில் பார்ப்பது இந்தப் பிரச்சினையைப் புரிந்துகொள்ள உதவும். போரிஸ் ஜான்சனும் மரபுத்துவக் கட்சியும் இந்த விரைவான சமூக மாற்றத்தின் மீதான கவலைகளைப் பண்பாட்டுப் பாதுகாப்பற்ற சூழலாக உணரச் செய்வதில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த மற்ற நாட்டவர்களைச் சுதந்திரமாக அனுமதிப்பதையும், பெரிய அளவிலான குடியேற்றங்களையும் கட்டுப்படுத்துவது பற்றி தொழிலாளர் கட்சியும் இதைப் போன்ற உறுதிமொழியை வழங்கியிருந்தாலும் அது நம்பிக்கையை ஈட்டவில்லை.

மாறிவரும் முகாம்கள்

பிரிட்டனில் நடந்திருப்பதில் முக்கியமான மற்றுமொரு விஷயம், மேற்கத்திய நாடுகள் அனைத்துக்குமே பொதுவானது. வாக்காளர்கள் இன அடிப்படையிலேயே பிரிந்துகிடக்கிறார்கள். அமெரிக்காவைப் போல இல்லை என்றாலும் பிரிட்டனின் வெள்ளை இனத்தவரிடமிருந்து சிறுபான்மையினர் விலகி நிற்பது அதிகரித்தபடியே இருக்கிறது. பிரிட்டனின் மொத்த மக்கள்தொகையில் சிறுபான்மை இனத்தவர்கள் 15%-க்கும் சற்று குறைவாக இருக்கிறார்கள். 2011-ல் ஒரு பிராந்தியத்தில் வசிக்கும் இனக்குழுக்களுக்கு இடையிலான கருத்தொருமிப்பு, 2016-ல் பிரெக்ஸிட் முடிவுக்கு இருந்த ஆதரவு என இவை எல்லாமுமாகச் சேர்ந்து, 2010-19 ஆண்டுகளில் இடதுசாரி மற்றும் வலதுசாரி முகாம்களிடையே 40%-க்கும் அதிகமான வேறுபாட்டினை உருவாக்கியிருக்கிறது.

இந்தக் காரணங்களால், 2010-க்கும், 2019-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில், இடதுசாரிகள் சராசரியாக 20%-க்கும் அதிகமான வாக்குகளைக் கூடுதலாகப் பெற்று வெற்றிபெறும் தொகுதிகளில் வெள்ளை இனத்தவரால் 12%-யையும், பிரெக்ஸிட் ஆதரவால் 8%-யையும் இழந்திருக்கிறார்கள். தொழிலாளர் கட்சியைக் காட்டிலும் 30% கூடுலான வாக்குகளைப் பெறும் மரபுத்துவ ஆதிக்கம் நிறைந்த தொகுதிகளில், பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக மேலும் 14% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. 2011-ன் இன அடிப்படையிலான கணக்கெடுப்பின்படியும், 2016-ன் பிரெக்ஸிட் வாக்கெடுப்பு தரவுகளைக் கொண்டும் இந்த முடிவு பெறப்படுகிறது.

தொழிலாளர் கட்சியின் மிகவும் புரட்சிகரமான தலைவரான ஜெரமி கார்பைன், இடதுசாரிகளின் வாக்குகளையே பெற முடியாமல் போயிருப்பதிலிருந்து, அமெரிக்காவின் இடதுசாரி அரசியலும் சில பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். போரிஸ் ஜான்சன் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவான வாக்குகளை ஒன்றுதிரட்டியிருக்கிறார் என்றாலும், ஏனைய வாக்குகள் அனைத்தும் முற்போக்கு சக்திகளிடையே சிதறிப்போய்விட்டன. மரபுத்துவக் கட்சி, பொதுமக்களின் தேவைகளை உள்ளடக்கிய வகையில் தன்னுடைய கருத்தியலைச் சீரமைத்துக்கொள்ளும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது, தொழிலாளர் கட்சி தனது கருத்தியலை இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு, 1983-ல் மைக்கேல் பூட் தலைமையின் கீழ் தொழிலாளர் கட்சி சோஷலிஸத்தை ஆதரித்ததையும், ஜெரெமி கார்பைன் இப்போது வாக்காளர்களை ஈர்த்து நடுநிலைக்குக் கொண்டுவரத் தவறியதையும் சொல்லலாம். ஆனால் இன்னமும்கூட, இடதுசாரிகளை விமர்சிக்கும் காஸ் முட்டே போன்ற அரசியல் அறிவியலாளர்கள், ஜெரெமி கார்பைனின் கருத்துகளில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை என்றே தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள்.

வலதுசாரிகளின் சமரசங்கள்

வாக்காளர் ஆய்வுக் குழுவின் ஆய்வுகள் எடுத்துக்காட்டுவதுபோல, சராசரி அமெரிக்க வாக்காளர், பொருளாதாரத்தில் வலதுசாரியாகவும் பண்பாட்டில் இடதுசாரியாகவுமே இருக்கிறார். இந்த நிலை குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி இரண்டுக்குமே உவப்பானது. பிரிட்டிஷ் எழுத்தாளர் டேவிட் குட்கார்ட் குறிப்பிட்டிருப்பதுபோல, பெரும்பாலான மேற்கத்திய இடதுசாரிக் கட்சிகளைப் போலவே தொழிலாளர் கட்சியும் குடியேற்றம், குடும்பங்கள், தேசிய அடையாளம் குறித்த விஷயங்களில் கட்சிச்சார்பற்ற வாக்காளரின் அடையாளப் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்குத் தயக்கம் காட்டியது.

அதற்கு மாறாக, வலதுசாரிகளும் தற்போது அரசின் பொதுச் செலவுகளை அதிகரிப்பவர்களாக மாறிவிட்டார் கள். உதாரணத்துக்கு, ட்ரம்ப் தலைமையின் கீழ் நிதிப் பற்றாக்குறையானது 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு வானத்தைத் தொட்டிருக்கிறது. பிரிட்டனிலும் போரிஸ் ஜான்சன், பொதுப் பணிகளுக்காக அதிகம் செலவிடுவதாக உறுதியளித்திருக்கிறார். குறைந்தபட்சக் கூலியை உயர்த்து வதாகவும், நலிவடைந்த தொழில்களுக்கு அதிகளவில் அரசு உதவி செய்யப்போவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.

கருத்தியல் முகாம்களை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாத தொழிலாளர் கட்சி, வாக்குகளைக் கவரும் மரபுத்துவக் கட்சியின் திறன் கைவராமல் 2010-லிருந்தே தடுமாறிக்கொண்டிருக்கிறது. 1990-களில் டோனி பிளேர் செய்ததுபோல, தொழிலாளர் கட்சி சோஷலிஸம் தொடர்பான தன் கொள்கைகளில், வளமான சமூகச் சுதந்திரவாதிகள் என்ற நிலைக்குத் தங்களைக் கொஞ்சம் மிதப்படுத்திக்கொள்ளலாம். அல்லது, டேனிஷ் சமூக ஜனநாயகவாதிகளைப் போல குடியேற்றக் கொள்கைகளில் வலதுசாரி நிலையை எடுத்து வெள்ளையினத்தைச் சேர்ந்த தொழிலாளர் வகுப்பின் ஆதரவைத் திரும்பப் பெறலாம். தற்போதைக்கு, தொழிலாளர் கட்சியின் வாக்குவங்கி என்பது திருப்திகொள்ள வாய்ப்பில்லாத வகையிலேயே இருக்கிறது.

பழைமைவாதிகளுக்கும் இதே பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதிகளவிலான தொழிலாளர் வகுப்பினரைத் தக்கவைத்துக்கொள்வதோடு, சமூகரீதியான பழைமைவாதத்தையும், குடியேற்றங்களுக்கு எதிரான வாக்காளர்களையும் பராமரிக்க வேண்டும். போரிஸ் ஜான்சனும் மரபுத்துவக் கட்சியும் வலதுசாரி ஜனரஞ்சக அரசியலை மீண்டும் வளர்த்தெடுப்பது எளிதானது அல்ல.

அமெரிக்க அரசியலும் பிரிட்டனின் வழியிலேயே தன்னை மாற்றத்துக்கு உட்படுத்திக்கொண்டிருக்கிறது. வரலாற்றுரீதியாகவே ஜனநாயகக் கட்சியினர் இடதுசாரி வாக்காளர்களைத் தங்களின் பின்னால் ஒன்றுதிரட்டி வைத்திருக்கிறார்கள். எனினும், அக்கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் குடியேற்ற விஷயத்தில் முற்போக்கான நிலைகளை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். 2020 தேர்தலில் ட்ரம்ப்பின் பிரச்சாரம் அமெரிக்காவின் ‘சிவப்புச் சுவர்’ பிராந்தியங்களுக்குள் மேலும் ஊடுருவுவதைப் பார்க்கக்கூடும். அதைப் போலவே, போரிஸ் ஜான்சனைப் போல ட்ரம்ப்பும் தன்னுடைய விருப்பத்துக்கு மாறாகவோ அல்லது அவரது கட்சியின் விருப்பத்துக்கு மாறாகவோ பொருளாதார விஷயங்களில் இடதுசாரிக் கொள்கைகளை சுவீகரித்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் 2020-ல் அவரால் தனது பலவீனத்திலிருந்து மீண்டுவர முடியும்.

- மாத்யூ குட்வின், எரிக் காப்மன்

அரசியல் அறிவியலாளர்கள்.

© தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: புவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x