Published : 18 Dec 2019 07:14 AM
Last Updated : 18 Dec 2019 07:14 AM

ஐநா பருவநிலை மாற்ற மாநாடு: மேலும் ஓர் ஏமாற்றம்!

இந்த நூற்றாண்டைத் தீர்மானிக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சினை பருவநிலை மாற்றம்தான். ஆனால், அது தொடர்பாக ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் நடந்து முடிந்துள்ள ஐநா மாநாடு, பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது. பருவநிலை மாற்றம் குறித்துப் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான ஆய்வுக்குழு மேற்கொண்டு அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை எடுக்காவிட்டால் மிகப் பெரும் கேடுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளது. பசுமை இல்ல வாயுக்களின் தற்போதைய வெளியேற்றத்துக்கும் அடுத்து வரும் பத்தாண்டுகளில் அதைக் கட்டுப்படுத்த வேண்டிய அளவுக்கும் இடையே நீண்ட இடைவெளி இருப்பதை ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. அறிவியல்பூர்வமான இந்தப் புதிய ஆய்வறிக்கைகள் கிடைத்திருக்கும்பட்சத்தில், ஏறக்குறைய 200 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருக்கும் இந்த மாநாட்டின் பலன் வருத்தமளிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

பாரிஸ் உடன்பாட்டின் அங்கத்தினர்களுக்கு இடையே தற்போது ஸ்பெயினில் நடந்து முடிந்துள்ள மாநாடு, கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த அமைப்புகளையெல்லாம் செயல்படாத நிலைக்கு ஆளாக்கிவிட்டது. பாரிஸ் உடன்பாட்டுக்கு முந்தைய கியோடோ உடன்படிக்கையின்படி தூய்மையை மேம்படுத்தும் தொழில்நுட்பத்துக்காகச் செலவிடுவதற்குச் சில நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. குதிரை பேர பாணியிலான இந்த நிலைப்பாடு, பருவநிலை மாற்றத்தால் மிகவும் மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பாதிப்புகளைப் பற்றிய ஆய்வு விவரங்கள், இவ்விஷயத்தில் தீவிர கவனமும் உடனடி நடவடிக்கைகளும் தேவை என்பதை எடுத்துக்காட்டுகின்றன. ஆனால், வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்குள் நிலைநிறுத்தும் வகையில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறினாலும் மாநாட்டின் இறுதி அறிவிக்கை அந்த இலக்கைப் பலவீனப்படுத்தும் வகையிலேயே உள்ளது. பருவநிலை மாற்றங்கள் மற்றும் அதன் பாதிப்புகளைச் சமாளிக்கவும் ஏழை நாடுகளுக்கு அதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் வளரும் நாடுகள், அடுத்த ஆண்டிலிருந்து ஆண்டொன்றுக்கு இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான தொகையை உருவாக்க வேண்டும் என்று பருவநிலை மாற்றம் தொடர்பான உடன்பாட்டில் கையெழுத்திட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஆனால், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற சர்வதேச குடிமைச் சமூகத்தின் அழுத்தத்தை அந்நாடுகள் தவிர்த்துவிட முடியாது.

இந்தியாவின் மொத்த கரியமில வாயு வெளியேற்ற அளவைக் காட்டிலும் அதன் சராசரி தனிநபர் அளவு குறைவாகவே உள்ளது. மற்ற பெரிய நாடுகளைக் காட்டிலும், பாரிஸ் உடன்படிக்கையின் கீழான அதன் இலக்கை எளிதில் அடைந்துவிட முடியும். எனினும் நிலக்கரி, பெட்ரோல் உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது என்பது நீண்ட கால நோக்கில் தவிர்க்க முடியாதது. இந்தியா இந்த இலக்கை நோக்கி நடை போட வேண்டியது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x