Published : 08 Dec 2019 07:47 am

Updated : 08 Dec 2019 07:47 am

 

Published : 08 Dec 2019 07:47 AM
Last Updated : 08 Dec 2019 07:47 AM

மக்களிடம் இருங்கள் - அண்ணா எப்போதும் சொல்லும் மந்திரம்: ‘விஐடி’ விஸ்வநாதன் பேட்டி

vit-viswanathan-interview

இந்தியாவில் இளவயதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர்களில் ஒருவர் ஜி.விஸ்வநாதன். 1967-ல் அண்ணா தலைமையிலான திமுக வரலாற்று வெற்றியைப் பெற்று, சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியாக உள்ளே நுழைந்தபோது, கூடவே நடந்த மக்களவைத் தேர்தலிலும் புதிய வரலாறு ஒன்றைப் படைத்திருந்தது. போட்டியிட்ட 25 தொகுதிகளிலும் அக்கட்சி வென்றிருந்தது. நாடாளுமன்றத்தில் விஸ்வநாதன் காலடி எடுத்து வைத்தபோது அவருக்கு வயது 26. அண்ணாவால் நம்பிக்கையோடு பார்க்கப்பட்டவராக இருந்ததோடு, பின்னாளில் கருணாநிதி, எம்ஜிஆர் இருவரோடும் கருத்துகளுக்காக மோதுபவராகவும் இருந்தார். பிற்காலத்தில் அரசியலிலிருந்து ஒதுங்கி, கல்வித் துறையோடு பிணைத்துக்கொண்டவர். இன்று இந்தியாவின் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் ஒன்றாகத் தனது விஐடியை வளர்த்தெடுத்திருக்கிறார். விஸ்வநாதனுடனான உரையாடல், கட்சியை அண்ணா எப்படிக் கையாண்டார் என்பதை நெருக்கமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.

அண்ணாவை நோக்கி நீங்கள் பயணப்பட்ட பாதையைச் சொல்லுங்கள்…

குடியாத்தம் பக்கம் கொத்தகுப்பம்தான் என் ஊர். விவசாயக் குடும்பம். அப்பாவுக்கு எழுதப் படிக்கத் தெரியும். அம்மாவுக்கு அதுவும் தெரியாது. வீட்டில் ஆறாவது பிள்ளை. ஊரிலேயே நான்தான் முதல் பட்டதாரி. கம்யூனிஸ்ட்டுகள் நிறைந்த ஊர் அது. என்னிடமும் அதன் தாக்கம் இருந்தது. ஆறாவது படிக்கும்போதே ரஷ்ய அதிபர் ஸ்டாலின் படத்தை வீட்டில் மாட்டியிருந்தேன். ஸ்டாலின் மறைந்தபோது பள்ளிக்கூடத்தில் இரங்கல் கூட்டம் நடத்த முயன்றோம். பெரியார், சம்பத் கூட்டங்கள் எல்லாம் கேட்டிருந்தாலும் அண்ணாவின் கூட்டம்தான் தாக்கத்தை உண்டாக்கியது. 1954-ல் வேலூர் முனிசிபாலிட்டி சார்பில் நடந்த காந்தி சிலை திறப்பு விழாவில் - இந்த நகர்மன்றம் என்ற சொல்லெல்லாம் அன்றைக்குக் கிடையாது; அண்ணா உருவாக்கியது அது - அவர் பேச்சைக் கேட்டேன். வேலூர் முனிசிபாலிட்டி தலைவராக இருந்த சீதாபதி, காந்தி சிலையை அண்ணா தலைமையில் திறக்க ஏற்பாடு செய்துவிட்டார். காங்கிரஸாரோ கடுமையாக எதிர்த்தனர் - கடையடைப்புப் போராட்டம்கூட நடத்தினர். நான் அப்போது ஒன்பதாம் வகுப்பு மாணவன். பஸ்ஸுக்குக் காசு இல்லாததால் நானும் நண்பர்களும் சைக்கிளிலேயே போயிருந்தோம். ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு’ என்று அண்ணா பேசியது அந்தக் கூட்டத்தில்தான் – காந்தியைத்தான் அப்படிக் குறிப்பிட்டார்.

இதற்குப் பின் அண்ணாவின் தம்பிகள் ஆகிவிட்டோம். பள்ளிக்கூடத்தில் இறைவழிபாட்டுக் கூட்டத்துக்குச் செல்வதை நாங்கள் நிறுத்தினோம். எங்கள் ஆசிரியர் கோபால் ஐயர் ஆளுக்கு ஒரு ரூபாய் அபராதம் போட்டார். நாங்கள் தலைமையாசிரியரிடம் போனோம். அவர் ஒரு கிறிஸ்தவர், கொஞ்சம் தாராளர். டபிள்யு.சி.சுந்தரானந்தம் என்று பெயர். “எங்களுக்குப் பிரார்த்தனையில் நம்பிக்கை இல்லை” என்றோம். “அது உங்கள் விருப்பம். ஆனால், பொது ஒழுங்காகச் சில விஷயங்கள் இருக்கையில், நீங்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றார். அபராதத்தை ரத்துசெய்தார். எஸ்எஸ்எல்சி படித்தபோது, வகுப்புக்குப் பெயர் வைத்து, மாணவர்களுக்குள் அணிகள் பிரிப்பது அந்நாள் வழக்கம். அப்போது எங்கள் வகுப்புக்கு நாங்கள் ‘நம் நாடு’ என்றும், அணிகளுக்கு ‘அறிஞர் அணி’, ‘நாவலர் அணி’, ‘கலைஞர் அணி’ என்றும் பெயர் வைத்தோம். ஆசிரியர் இதையும் எதிர்த்தார். தலைமையாசிரியரிடம் போனோம். “பசங்க ஏதோ ஆசைப்படுறாங்க. விடுங்க” என்றார். ஆசிரியரும் இதையெல்லாம் ஏற்றுக்கொண்டார் என்பதையும் சொல்ல வேண்டும்.

பள்ளிக்குப் பக்கத்திலேயே ‘வள்ளுவர் படிப்பகம்’ இருந்தது. திமுகவினர் சின்னதாக ஒரு குடிசை போட்டு அதை நடத்தினார்கள். செய்தித்தாள்கள் மட்டும் கிடைக்கும். பள்ளிக்குப் போகும்போதே செய்திகளைப் படித்துவிட்டுத்தான் போவேன். அண்ணாவின் கருத்துகள் ஏனைய தலைவர்களையும் மதிக்கும்படி செய்யும்.

பி.டி.ரனதிவே, பி.சி.ஜோஷி போன்ற தலைவர்கள் யார் குடியாத்தம் பக்கம் வந்தாலும் அவர்களுடைய கூட்டங்களுக்கும் போய்விடுவோம். 1955-ல் நான் வேலூரில் கல்லூரியில் சேர்ந்தேன். 1957 தேர்தலில் ம.பா.சாரதி வேலூரில் திமுக வேட்பாளர். அவரை ஆதரித்து வேலூர் தொகுதியில் ஒரே நாளில் ஏழு கூட்டங்கள் பேசினார் அண்ணா. சாயந்திரம் 4 மணிக்குப் பிரச்சாரத்தை ஆரம்பித்து, இரவு 10 மணிக்கு முடித்தார். எல்லா கூட்டங்களுக்கும் போனேன். ஒரு கூட்டத்தில் பேசியதை இன்னொரு கூட்டத்தில் பேசவே இல்லை அண்ணா. நாமும் அண்ணா மாதிரி ஆக வேண்டும் என்றால், நிறைய வாசிக்க வேண்டும், கூட்டங்கள் கேட்க வேண்டும், விவாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமுமே இருந்தது. இன்டர்மீடியட் முடித்துவிட்டு, பிஏ படிப்பதற்காக சென்னை லயோலா கல்லூரியில் சேர்ந்தேன். அடுத்த வருடம் முரசொலி செல்வம் அங்கு வந்து சேர்ந்தார். அவர்தான் என்னை அழைத்துச்சென்று கருணாநிதிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இப்படித்தான் அண்ணாவுக்கும் நான் அறிமுகமானேன்.

நேரடி அரசியலுக்குள் எப்போது வந்தீர்கள்?

வேலூரிலிருந்து சென்னை வரும்போதும் திரும்பும் போதும், காஞ்சிபுரத்தில் இறங்கி அண்ணாவைப் பார்ப்பது எங்களுக்கு ஒரு வழக்கம். எங்களுக்கு என்று இப்போது குறிப்பிடுவது, நான், தோப்பூர் திருவேங்கடம், துரைமுருகன் மூவரும். வீட்டில் வெறும் பனியன், வேட்டியோடுதான் இருப்பார் அண்ணா. வீட்டில் நாற்காலிகள்கூட அதிகம் இருக்காது. பாயை விரித்து அதில் உட்கார்ந்துதான் பேசிக்கொண்டிருப்போம். மாணவர்களோடு பேசுகையில் ஆங்கிலத்தில் பேசுவதைத்தான் அவர் விரும்புவார். நாங்களும் எங்களை அப்படி வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்திருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது. மாணவர்களுக்கு அன்று அவர்தான் முன்மாதிரி. நானே அவரைப் பார்த்துதான் வலது வகிடு எடுத்துத் தலை சீவினேன். அண்ணா போலப் படிக்க வேண்டும் என்று எண்ணித்தான் எம்.ஏ., படித்தேன். தனக்குத் தெரிந்த எல்லா செய்திகளையும் மாணவர்களோடு பேசுவார். சரிக்குச் சமமாகக் கருத்துகளை மதிப்பளித்துக் கேட்பார். விவாதிக்க அனுமதிப்பார். இப்படியெல்லாம் உறவிருந்தாலும் மாணவர்கள் நேரடியாக அரசியலுக்கு வருவதை அவர் ஊக்குவிக்கவில்லை. “அரசியலுணர்வோடு இருங்கள்; படிப்பு முடிந்ததும் உங்கள் வாழ்க்கையைத் தீர்மானியுங்கள்” என்றே சொன்னார். அதனால் 1961-ல் எம்.ஏ., முடிக்கிற வரை அரசியலுக்கு வெளியேதான் இருந்தேன். அப்போது லயோலாவில் படிக்கிற மாணவர்கள் நிறையப் பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக முயற்சிப்பார்கள். எம்.ஏ., முடித்த கையோடு சட்டக் கல்லூரியில் சேர்ந்தவன், அங்கிருந்தபடியே குடிமைப்பணித் தேர்வு எழுதினேன். 1962-ல் ஐபிஎஸ் தேர்வானேன். வடகிழக்குக்குப் போகச் சொன்னார்கள். அப்பா வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

சட்ட மாணவனாகவே தொடர்ந்த நிலையில்தான் திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தின் செயலாளரானேன் – பதினெட்டு வயதைக் கடந்தவர்கள் இந்த அமைப்பில் சேரலாம் என்றிருந்த இந்த அமைப்பு திமுக சார்பு கொண்டது என்றாலும், திமுக நேரடியாக இதன் முடிவுகளைக் கட்டுப்படுத்தாது. அப்போது எல்லாம் விடுதலை இயக்கத்தில் இருப்பதான ஒரு உணர்வில்தான் அண்ணாவைப் பின்தொடர்ந்தவர்கள் இருந்தோம். 1962 வரையில் தனி நாடு கேட்ட இயக்கம்தானே திமுக? சட்டக் கல்லூரியில் பழனிச்சாமி என்று ஒரு பேராசிரியர். “திராவிட நாடு கிடைத்த பிறகு, நான் ஐநா சபைக்கு அம்பாசிடராகப் போய்விடுவேன்” என்பார். அந்த அளவுக்கு நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் இருந்தது. 1963-ல் சட்டக் கல்லூரி முடித்துவிட்டு, வேலூரில் வழக்கறிஞர் வி.சி.ராஜகோபாலாச்சாரியாரிடம் பயிற்சி வழக்கறிஞராகச் சேர்ந்தேன். அண்ணாவைப் போய்ப் பார்ப்பது, கட்சிக் கூட்டங்களில் பங்கேற்பது, சின்னச் சின்ன காரியங்களை எடுத்துச்செய்வது என்று போய்க்கொண்டிருந்தது. கட்சியில் நிதி திரட்டுவதற்காக அவ்வப்போது சிறப்புக் கூட்டங்களை நடத்துவார்கள். அதாவது, சினிமாவுக்குப் போவது மாதிரி காசு கொடுத்து டிக்கெட் வாங்கி கூட்டம் கேட்க வேண்டும். அப்படி குடியாத்தம் லட்சுமி டாக்கீஸில் 1965-ல் நடந்த ஒரு கூட்டத்துக்கு அண்ணா பேச வந்தார். அந்தக் கூட்டத்தில்தான் அண்ணா முன் சில நிமிடங்கள் பேசினேன். அதுதான் வாழ்வின் திருப்புமுனை.

1967 தேர்தல் வாய்ப்புக்கு வித்திட்டதும் அந்தக் கூட்டப் பேச்சுதான் இல்லையா?

ஆமாம். அறிவார்ந்த விவாதங்களை அண்ணா வெகுவாக ரசிப்பார். அந்தக் கூட்டத்துக்குப் பிறகு, “பையன் நல்லாப் பேசுறான்; நாடாளுமன்றத்துக்கு அனுப்பலாம்யா” என்று சொன்னதோடு, என்னைப் பற்றி கட்சிக்காரர்களிடம் விசாரித்துமிருக்கிறார். இது அடுத்து வந்த 1967 மக்களவைத் தேர்தலில் சீட் கேட்கலாம் என்ற எண்ணத்தைக் கொடுத்தது. வேலூர் தனித்தொகுதி என்பதால், வந்தவாசி தொகுதியைக் கேட்கலாம் என யோசித்தோம். ஆனால், அதில் சிக்கல் இருந்தது. ஏற்கெனவே அந்தத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்துகொண்டிருந்த தர்மலிங்கம்தான் எங்கள் மாவட்டச் செயலாளரும். 1957 தேர்தலிலேயே திமுகவில் வென்ற இருவரில் ஒருவர். இன்னொருவரான சம்பத் கட்சியை விட்டுப் போன பிறகு, திமுகவின் ஒரே மக்களவை உறுப்பினராக இருந்தார். 1962 தேர்தலிலும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். தவிர, அண்ணாவுக்கு நல்ல நெருக்கம். இருந்தும் மோதினேன். என்ன தைரியம் என்றால், திமுகவின் நிறுவனர், பொதுச்செயலாளர், அவர் எடுக்கும் முடிவை யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்றாலும்கூட, தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்காத ஜனநாயகர் அண்ணா.

1967 தேர்தலில்தான் வேட்பாளர் தேர்வில் அமெரிக்க முறையை அண்ணா பரீட்சித்துப் பார்த்தார் இல்லையா?

ஆமாம், இந்தியாவில் அது புது முயற்சி. அமெரிக்காவில் கட்சிக்கு உள்ளேயே கட்சியினரைக் கொண்டு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் முறை இருப்பதுபோல - பிரைமரிஸ் என்று சொல்வார்கள்; இதையும் அங்கே தேர்தல் ஆணையம் செய்கிறது - நாம் திமுகவில் அதைச் செய்து பார்ப்போம் என்றார் அண்ணா. மூன்று தலைவர்களைக் கொண்ட ஆய்வுக் குழுக்களை அமைத்து, ஊர் ஊராக அவர்களை அனுப்பிக் கட்சியினரிடம் கருத்து கேட்டார். அதன் அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தார். சத்தியவாணி, கே.ஏ.மதியழகன், ஏ.கோவிந்தசாமி மூன்று பேரும் வந்தவாசிக்கு ஆய்வுப் பணிக்கு வந்தார்கள். ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சென்றார்கள். கட்சியினரிடம் எனக்குத்தான் பெரிய செல்வாக்கு இருக்கிறது என்பதை அண்ணாவிடம் அவர்கள் கொடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள். 1.1.1967 அன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அண்ணா. ஆனால், வந்தவாசி தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. எனக்கு ரொம்ப ஏமாற்றம். கருணாநிதியைச் சென்று பார்த்தேன். “அண்ணாவைப் போய்ப் பார்” என்றார். அண்ணாவைப் பார்த்தேன். “நீ ப.உ.சண்முகத்தைப் பார்” என்றார். ப.உ.சண்முகம் எங்கள் மாவட்டத்தில் பெரிய தலைவர். அவருக்கும் எனக்கும் ஒரு உரசல் இருந்தது. அவரைப் பார்க்கச் சொல்கிறாரே என்று நினைத்தபடி போனேன். ப.உ.சண்முகம் ஒரு மணி நேரம் காக்கவைத்தார். வேண்டாவெறுப்பாக அழைத்தார். “என்ன விஷயம்?” என்றார். வந்த கதையைச் சொல்லி “அண்ணா உங்களைப் பார்க்கச் சொன்னார்” என்றேன். “பார்த்துவிட்டாய் அல்லவா? கிளம்பு!” என்றார். மீண்டும் அண்ணாவைச் சந்தித்து இதைச் சொன்னேன். “அப்படியா, கொஞ்சம் பொறு. நான் தர்மலிங்கத்துடனும் பேச வேண்டும்” என்றார். ஒரு வாரம் கழித்து என்னை வேட்பாளராக அறிவித்தார். திறமை எங்கிருந்தாலும் அதைக் கண்டுபிடிப்பதிலும் அங்கீகரிப்பதிலும் அதேசமயம், கட்சிக்குள் அனுபவமும் திறமையும் எதிரும் புதிருமாகிவிடாமல் எல்லோரையும் அரவணைப்பதிலும் அவ்வளவு அக்கறையோடு இருந்தவர் அண்ணா.

சாதி, பண பலம் பார்த்து ஆட்களை நிறுத்தும் காங்கிரஸின் வியூகத்தை அண்ணா எப்படி எதிர்கொண்டார்?

எனக்குத் தெரிய இந்தியத் தேர்தல் களத்தில் சாதி – பண பலத்தை உடைக்க முற்பட்ட ஒரே தலைவர் என்று அண்ணாவையே சொல்வேன். திமுகவில் ஆரம்ப கால வேட்பாளர் பட்டியலைப் பார்த்தால், இது துலக்கமாக உங்களுக்குத் தெரியும். என் தொகுதியையே எடுத்துக் கொள்ளுங்கள், வன்னியர் சமூகம் பெரும்பான்மையினராக உள்ள தொகுதி அது. காங்கிரஸ் நிறுத்தியிருந்த வேட்பாளர் கிருஷ்ணசாமி – அவர் என் கல்லூரித் தோழரும்கூட – வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். அண்ணா இதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை. பிற்பாடு எம்ஜிஆர் தொடங்கித்தான் திராவிடக் கட்சிகளின் வேட்பாளர் தேர்வில் இந்த சாதிக் கணக்கு உருவானது; அவருக்கு ஈடாக கருணாநிதியும் தொடங்கியபோது இது பரவலானது. அண்ணாவைப் பொறுத்த அளவில் தலித்துகள் முதல் பிராமணர்கள் வரை ‘தமிழர்’ என்ற அடையாளத்தின் கீழ் எல்லோரையும் ஒன்றாக்க முற்பட்டார். சமூகங்கள் இடையேயான நல்லிணக்கத்துக்கும் அவர்களுக்கான வாய்ப்புகளைச் சமமாக்கவும் முயன்றார். “உங்கள் சொந்த சமூக வரையறையிலிருந்து முதலில் வெளியேறுங்கள்” என்பார். “நீங்கள் மக்களுக்காக அர்ப்பணிப்போடு உழைத்தால், அவர்களுக்கு நீங்கள் தேவை என்பதை உணர்த்திவிட்டால், உங்களை எல்லா வரையறைகளுக்கும் அப்பாற்பட்டு மக்கள் நேசிப்பார்கள்” என்று சொல்வார்.

சாமானியர்களின் கட்சியாகத் தொடங்கப்பட்ட திமுக அந்நாட்களில் தேர்தல் செலவுகளை எப்படி எதிர்கொண்டது? ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்படும் வழக்கம் இருந்ததா?

அண்ணா இருந்தவரை அப்படியான சூழல் பொதுவில் இல்லை. ஏனென்றால், அண்ணாவின் முக்கியமான பிரச்சாரங்களில் ஒன்று, காங்கிரஸ் ஓட்டுக்கு எட்டணா; குடும்பத்துக்கு ஐந்து ரூபாய் பணம் கொடுப்பதைக் கண்டித்து, தேர்தல் சமயங்களில் தொடர்ந்து அவர் பேசிவந்தது. காமராஜரை நேரடியாகவே குற்றஞ்சாட்டியவர், நாடாளுமன்றத்திலும் இது தொடர்பில் காங்கிரஸை விளாசியிருக்கிறார். நிதி வசூலித்துதான் அன்றைக்கெல்லாம் எல்லா காரியங்களும் நடந்தன. 1967 தேர்தலையே கருணாநிதி பொருளாளராகத் திரட்டித்தந்த ரூ.11 லட்சத்தை வைத்துதான் கட்சி எதிர்கொண்டது. மக்களவைத் தொகுதிக்கு கட்சி சார்பில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் அண்ணா ரூ.4,000 கொடுத்தார். பக்கா கணக்கு, காசோலையாகத்தான் என்னிடம் அது வந்தது. அதற்கு மேல் ரூ.20,000 வரை வேட்பாளர்கள் செலவழித்தார்கள். எனக்கு ரூ.45,000 செலவானது. எல்லாமே வசூல், சொந்தக் காசுதான். என்னுடைய மாமனார் ராமஜெயம், ‘ராமஜெயம்’ என்ற பெயரில் பஸ் கம்பெனி வைத்திருந்தார். 25 பஸ்கள் ஓடின. திமுக மேடையில், “இதோ இருக்கிறாரே விஸ்வநாதன், யார் இவர்? ராமஜெயத்தின் மருமகன். நாளைக்கு திமுக ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்து நாட்டுடைமை ஆக்கப்படும். விஸ்வநாதனின் மாமனார் பஸ்களும் விதிவிலக்கல்ல” என்றே பேசப்பட்ட காலம் அது. அண்ணாவுக்குத் தெரிய எந்தத் தவறும் நடக்க முடியாது.

கட்சிக்காரர்கள் தவறிழைத்தால் என்ன செய்வார்?

கூடுமானவரை திருந்த வாய்ப்புக் கொடுப்பார். ‘சாதாரணக் குடும்பங்களிலிருந்து வந்திருப்பவர்கள், இப்போது ஜனநாயகம் பழகுகிறார்கள்; பொது வாழ்க்கைக்கு வந்தவர்களை முடக்கிவிடக் கூடாது’ என்பார். ரௌடித்தனம், அராஜகம் என்றால் வெளியே அனுப்பிவிடுவார்.

நாடாளுமன்றத்தில் இப்படித்தான் பேச வேண்டும் என்றெல்லாம் அண்ணா ஏதும் வலியுறுத்துவாரா?

முன்னுதாரணமாகத் தான் நடந்துகொள்வதன் மூலமாகவே ஒரு கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்று நினைப்பார் அண்ணா. அண்ணாவின் நாடாளுமன்ற உரைகளே எங்களுக்குப் பெரிய பாடம்தான். நிறைய வாசிக்கச் சொல்வார். மலினமாக எதுவும் பேசிவிடக் கூடாது என்பதை மட்டும் வலியுறுத்துவார். கூட்டாட்சி – அதாவது, மாநிலங்களின் சுயாட்சி – விவகாரத்தில் மிக உறுதியான நிலைப்பாட்டை எதிர்பார்ப்பார். மற்றபடி நம் சுதந்திரம்தான். எல்லா கட்சியினருடனும் நட்பாக இருக்கச் சொல்வார். இந்திரா காந்தி, ஒய்.வி.சவான், கிருபளானி, லோகியா, வாஜ்பாய், ஏ.கே.கோபாலன், டாங்கே, இந்திரஜித் குப்தா, ஜார்ஜ் பெர்னாண்டஸ், மதுலிமாய், பிலு மோடி, ஜெகஜீவன் ராம், கரண் சிங், கே.எல்.ராவ் இப்படி எல்லோரிடமும் பேசுவோம். ஒருகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும் ஜனசங்கமும் சந்தித்துப் பேச வேண்டும் என்றால், அதற்கான இடமாக நாடாளுமன்ற வளாகத்திலுள்ள திமுக அலுவலகம் இருந்தது. நாடாளுமன்ற நடைமுறைகள் இரா.செழியனுக்கு நிறையத் தெரியும். அவரைச் சொல்லிக்கொடுக்கச் சொல்வார். நாடாளுமன்ற நூலகம் ரொம்ப நல்ல நூலகம். ஒவ்வொரு விவகாரம் தொடர்பாகவும் அதுபற்றி அதுவரை யார் யாரெல்லாம், என்னென்னவெல்லாம் பேசியிருக்கிறார்கள் என்று அதன் ஆய்வுத் துறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படிப் பயன்படுத்தியதன் விளைவாகவே ‘மிக அதிகமான துணைக் கேள்விகள் கேட்ட உறுப்பினர்’ என்று பெயர் பெற்றேன். மாநிலங்களவைத் துணைத் தலைவராக இருந்த வயலட் ஆல்வாவுடன் ஒருநாள் நான் பாதையில் நின்று பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த ஒரு காங்கிரஸ்காரர், “இந்தப் பையன் யார்?” என்று கேட்டார். பதிலுக்கு வயலட் ஆல்வா சொன்னார், “இவர் பையனல்ல. இவர் உங்களைப் போன்ற ஒரு எம்பியும்கூட. இனி நீங்கள் நாடாளுமன்றத்தில் யாரேனும் ஒரு இளைஞரைப் பார்த்தால், அவர் திமுக உறுப்பினர் என்று தீர்மானித்து விடுங்கள்!” அப்படி ஒரு இளைஞர் கூட்டம்; ஆனால், அண்ணா அத்தனை நம்பினார், சுதந்திரம் கொடுத்தார்.

உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் அண்ணா என்னவாக இருக்கிறார்?

என்னுடைய முன்மாதிரி அண்ணா. அண்ணாவின் மறைவுக்குப் பின் மரியாதையோடுதான் என்னைக் கட்சியில் வைத்திருந்தார் கருணாநிதி. ஏன் வெளியேறினேன்? வேலூர் சிஎம்சி மருத்துவமனை நிர்வாகத்துக்கும் திமுக அரசுக்கும் இடையே ஒரு பிரச்சினை வந்தபோது, சொந்தக் கட்சியையும் ஆட்சியையும் தலைவரையும் எதிர்த்து உள்ளூர் மருத்துவமனையின் பக்கம் நியாயத்துக்காக நின்றேன். திமுகவிலிருந்து வெளியேறிய பிறகு, அதிமுகவுக்கு எம்ஜிஆரே கூப்பிட்டார். நல்ல மரியாதை கொடுத்துத்தான் வைத்திருந்தார். கட்சியின் பெயரை அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று மாற்றியதோடு, கட்சி விசுவாசத்தைக் காட்ட உடலில் பச்சை குத்திக்கொள்ளும் முறையை ஊக்குவிக்க அவர் முற்பட்டபோது,, இவற்றை நேரடியாகக் கடுமையாக எதிர்த்துக் கட்சியிலிருந்து வெளியேறினேன். பிற்பாடு மீண்டும் அதிமுகவுக்குத் திரும்பினேன், சட்டமன்ற உறுப்பினரானேன். இருந்தாலும்கூட அரசியலில் தொடர்ந்து நீடிக்க முடியாமல்போக அண்ணா கற்றுக்கொடுத்த விழுமியங்களே காரணம். இன்று நான் கல்வித் துறைக்கு மாறி வந்திருக்கலாம். அங்கு நான் அடைந்திருக்கும் வெற்றியையும்கூட அண்ணா ஏற்படுத்திய தாக்கங்களுடனேயே பார்க்க வேண்டும். என்றும் என் தலைவர் அண்ணாதான்.

உங்கள் மேஜையில் வைத்திருக்கும், அண்ணா தன் கைப்பட எழுதிய - சீன ஞானி லாவோ ட்சு சொன்ன - குறிப்பு உங்களுக்காக எழுதித்தந்ததா?

“மக்களிடம் செல்லுங்கள், அவர்கள் மத்தியில் வாழுங்கள், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள், அவர்களிடம் என்ன இருக்கிறதோ அதிலிருந்தே உருவாக்குங்கள்!” இது அவர் எனக்காக எழுதியதில்லை. உலகச் சிந்தனைகளை இப்படி அவர் அறிமுகப்படுத்தும்போது, யாராவது எழுதிக் கையொப்பமிட்டுக் கேட்டால் கொடுப்பார். அப்படி யாருக்கோ எழுதியது. எனக்கும் பிடித்த வாசகம் என்பதால், மேஜையில் படமாக்கி வைத்திருக்கிறேன். “மக்களிடம் இருங்கள்!” இதைத்தான் அடிக்கடி எல்லோருக்கும் அவர் சொல்வார். எவ்வளவு பெரிய மந்திரம்!

- சமஸ்,

தொடர்புக்கு: samas@hindutamil.co.in

(‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலிலிருந்து…)

டிசம்பர் 8: ‘விஐடி’ விஸ்வநாதனின் 81-வது பிறந்தநாள்


‘விஐடி’ விஸ்வநாதன் பேட்டி‘விஐடி’ விஸ்வநாதனின் 81-வது பிறந்தநாள்மாபெரும் தமிழ்க் கனவுஅண்ணாVIT viswanathan interview

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

chennai-book-fair

வெற்றிமாறன் வாக்கு

கருத்துப் பேழை

More From this Author

mother-of-equality

சமத்துவத்தின் தாய்

கருத்துப் பேழை