Published : 05 Dec 2019 10:51 AM
Last Updated : 05 Dec 2019 10:51 AM

ஆட்சி தொடர்கிறது... ஜெயலலிதாவின் கனவு தொடர்கிறதா?

தமிழகத்தின் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் 11%-ஐ எட்ட வேண்டும், பத்தாண்டுகளுக்குள் 20,000 மெகாவாட் கூடுதல் மின்உற்பத்தி, தமிழகத்தின் தொழில் நகரங்களை உலகத் தரத்தில் கட்டமைக்க வேண்டும் என்று பல்வேறு கனவுகளுடன் இருந்தவர் ஜெயலலிதா. அவரது தொலைநோக்குப் பார்வையில், 2023-ம் ஆண்டுவாக்கில் தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்ற திட்டங்களுடன் ‘விஷன் 2023’ என்ற அறிக்கை 2012-ல் வெளியிடப்பட்டது. அதில் உள்ள திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டால், இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழகத்தில் 2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது, தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்சினை உச்சத்தில் இருந்தது. ஜெயலலிதா எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் மின்பற்றாக்குறை ஒழிக்கப்பட்டு, தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறியது.

ஏழு திட்டங்கள்

2011-ல் ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பதவியேற்றதும், ஏழு திட்டங்களை அமல்படுத்தக் கையெழுத்திட்டார். அவை:

1) படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண உதவியாக வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரூ.25,000-ஐ ரூ.50,000 ஆக உயர்த்தினார்.

2) மணப் பெண்ணுக்குத் தாலிக்குத் தங்கமாகத் தரும் அளவை 4 கிராமாக (அரை பவுன்) உயர்த்தினார்.

3) முதியோர், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கைம்பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்ட உதவித்தொகையை ரூ.500-லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தினார்.

4) பொது விநியோகத் திட்டத்தில் அரிசி பெறத் தகுதி உடைய ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவரும் 20 கிலோ அரிசியை, ‘விலையில்லா அரிசி’யாக வழங்க ஆணை பிறப்பித்தார்.

5) ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டுவந்த 35 கிலோ அரிசியையும், விலையில்லா அரிசியாக வழங்க உத்தரவிட்டார்.

6) மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த ரூ.1,000 உதவித்தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கினார்.

7) அரசுப் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு சலுகையாக, மகப்பேறு விடுப்பை ஆறு மாதங்களாக அதிகரித்தார்.

ஜெயலலிதாவின் ஆட்சியில் முன்னேற்றம் அடைந்த துறைகளில் பொது சுகாதாரமும் ஒன்று. பிரசவ கால இறப்புகள் அரசு மருத்துவமனைகளில் 1% மட்டுமே என்று குறைக்கப்பட்டது. முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. ஏழை மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்த மடிக்கணினி, அரசால் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. கைக்குழந்தையுடன் பயணிக்கும் பெண்கள் மறைவாகப் பாலூட்ட பேருந்து நிலையங்களிலும் தனியிடம் ஒதுக்கித் தரப்பட்டது தாய்மார்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.

வளரிளம் பெண்கள் அனைவருக்கும் விலையில்லா நாப்கின்களை வழங்கினார். சுய உதவித் திட்டம் மூலம் பெண்களுக்கு நிதி வழங்கப்பட்டது. உள்ளாட்சி மன்றங்களில் 50% இடங்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டதெல்லாம் பெரிய சாதனைகள். 1991-ல் ஜெயலலிதா தொடங்கிவைத்த ‘தொட்டில் குழந்தைகள் திட்டம்’ இப்போது உலகின் கவனத்தை ஈர்த்திருப்பதுடன் பிற மாநிலங்களிலும் பின்பற்றப்படுகிறது. அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமென்ட் எல்லாம் குறைந்த விலையில் மக்களுக்கு விற்கப்படுகின்றன.

காவிரி நதி நீருக்காகவும், முல்லைப் பெரியாறு அணையில் நீர்தேக்கும் அளவை உயர்த்திக்கொள்ளவும் அவர் நிகழ்த்திய சட்ட, அரசியல் போராட்டங்களும் அதில் கிடைத்த வெற்றிகளும் என்றென்றும் நினைவுகூரப்படும். மத்திய - மாநில உறவுகளை ஆராய நியமிக்கப்பட்ட ரஞ்சித் சிங் சர்க்காரியா கமிஷன் முன்னிலையில் வாதாட அவரால் வைக்கப்பட்ட பல்வேறு குறிப்புகள், மாநில உரிமைகளின் மீது அவருக்கு இருந்த அக்கறையைப் பறைசாற்றுகிறது.

2006 முதல் 2011 வரை தமிழகத்தில் நில ஆக்கிரமிப்புகள் சீர்செய்யப்பட்டன. 1,673 வழக்குகளைப் பதிவுசெய்து, ரூ.1,173.66 கோடி மதிப்புள்ள 10.7 லட்சம் சதுர அடி வீட்டுமனைகள் உள்ளிட்ட 2,734 ஏக்கர் நிலத்தை மீட்டு, உரிமையாளர்களுக்கு ஜெயலலிதா அரசு வழங்கியது பெரிதாகப் பேசப்படாத ஒரு சாதனையாகும்.

தமிழகத்தின் உரிமைக்குரல்

திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சமூக நலத் திட்டங்களை வாக்காளர்களைக் கவரும் திட்டங்கள் என்று விமர்சிப்பதுண்டு. ஜெயலலிதா தொடங்கிய பல திட்டங்களும் அத்தகைய விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கின்றன என்றாலும், அவரது இறுதி ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட ‘விஷன்- 2023’ தமிழகத்தின் பல்துறை மேம்பாடு குறித்த அவரது தொலைநோக்குப் பார்வையை எடுத்துச்சொல்கிறது.

மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட அவரது உரையும், அவர் கடைசியாகப் பங்கேற்ற சுதந்திர தின விழாவில் “பொருளாதாரச் சுதந்திரமே உண்மையான சுதந்திரமாக இருக்க முடியும்” என்ற அவரது முழக்கமும் தீர்க்கமானவை. நீட் தேர்வும் பொது சரக்கு மற்றும் சேவை வரிமுறை ஏன் கூடாது என்று அவரால் முன்வைக்கப்பட்ட வாதங்கள், மாநில உரிமைகள் என்ற வலுவான அடிப்படையைக் கொண்டவை.

உள்ளடக்கத்தின் தேவை

மத்திய அரசு எல்லா அதிகாரங்களையும் டெல்லியில் குவிக்கும் இந்நாட்களில் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் எப்படி எதிர்வினையாற்றி இருப்பார்? சொல்ல முடியாது, அதிமுகவுக்கு மேலும் வலுவான உள்ளடக்கத்தை அவர் இந்நாட்களில் உருவாக்கியிருக்கக்கூடும். ஏனென்றால், தேசியக் கட்சிகளோ அரசோ தன் கட்சி மீது ஆதிக்கம் செலுத்த ஒருபோதும் அவர் அனுமதித்தது இல்லை.

ஜெயலலிதாவின் எதிர்பாராத மரணம், தமிழகம் குறித்த அவரது தொலைநோக்குத் திட்டங்களில் சுணக்கத்தை ஏற்படுத்திவிட்டது. ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெறுவதாகச் சொல்லும் அதிமுக அரசுக்கு, அவரது கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. அரசியல் தளத்தில் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்ட திமுகவும் அதிமுகவும் மக்கள்நலத் திட்டங்களில் ஒன்றையொன்று பின்தொடரவே செய்தன. ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை திமுக தொடர்ந்து செயல்படுத்தியது. திமுக கொண்டுவந்த நலத் திட்டங்களை ஜெயலலிதாவும் தொடர்ந்தார். தமிழகம் இன்று அடைந்திருக்கும் சமூக, பொருளாதார வளர்ச்சியில் இவ்விரு கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் முக்கியப் பங்குண்டு.

- இரா.தங்கத்துரை, ஆசிரியர், கருத்துக்களம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x