Published : 17 Aug 2015 09:40 AM
Last Updated : 17 Aug 2015 09:40 AM

மெரினா என்றொரு வாழ்க்கை!

சென்னையின் அழகு மட்டுமல்ல மெரினா. அது ஒரு தனி உலகம்.

ஏவி.எம். சினிமா செட்போலப் பரபரப்பாக இயங்குகிறது ‘குட்டி டிஜிட்டல் ஸ்டுடியோ’. திரும்பிய பக்கமெல்லாம் சினிமா நட்சத்திரங்களின் ஆள் உயர கட்-அவுட்கள். “உங்களுக்கு ஹன்சிகாவா… நயன்தாராவா?’’ ஏதோ கல்யாணத் தரகர் ரேஞ்சுக்குக் கேட்கிறார் கேமராமேன் முருகன். “ல்ல… நஸ்ரியா..” வெட்கப்படுகிறார் அந்த வடநாட்டுப் பையன். அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பையன் நஸ்ரியாவோடு நிற்கும் கலர் போட்டோவைக் கண்ணாடிப் பையில் போட்டுக் கொடுத்துவிட்டு, “அறுவது ரூபா குடுபா’ என்கிறார்கள். அடுத்தடுத்து அபிமான நட்சத்திரங்களோடு சேர்ந்து போட்டோ எடுக்க வரிசை கட்டுகிறது இளந்தாரிகள் கூட்டம்.

மெரினாவில் குதிரைச் சவாரி போவதும் தனி சுகம்தான். சுமார் 300 குதிரைகள் மெரினா உலாவில் இருக்கின்றன. பெரும்பாலும் விடலைப் பையன்கள்தான் ஜாக்கிகள். “நாலு மணி நேரம் குதிரை ஓடுச்சுன்னா எழுநூறு ரூபா வரைக்கும் கெடைக்கும். அதக் கொண்டுபோயி ஓனர்ட்ட குடுத்தா, முந்நூறு ரூபா குடுப்பாரு. அதுல நூற எடுத்துக்கினு மீதிய வீட்டுல குடுத்துருவோம்” என்கிற ஜாக்கி மாட்டாங்குப்பம் மகேஷ், பத்தாம் வகுப்பு மாணவர்.

“இப்புடிக் குதிரை ஓட்டினா படிப்பெல்லாம் எப்புடி?’’ என்று கேட்டால், “படிக்கத்தாண்ணா குதிரை ஓட்டுறோம்’’ என்று யதார்த்தம் சொல்கிறார். “சாயந்தரம் பீச்சுல ஓடுற இந்தக் குதிரைங்கள மத்த நேரங்கள்ல கல்யாண ஊர்வலம், கோயில் திருவிழான்னு கெளப்பிக்கிட்டுப் போயிருவாங்க. பெரும்பாலும் பிரச்சினை இல்ல. மழை நாள்தாண்ணா எங்களுக்குப் பிரச்சினை. பொழப்பு ஓடாது” என்கிறார்.

என்னதான் கணினித் தொழில்நுட்பம் கலியுகத்தை ஆட்டிப் படைத்தாலும் இன்னமும் கிளி ஜோசியம், கைரேகை பார்த்துக் காலத்தைக் கணித்துக்கொள்ள இன்றைக்கும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இவர்களை எதிர்பார்த்து ஜோசியக்காரர்கள் பல பேர் கடற்கரை மணலில் கடைவிரித்துக் காத்திருக்கிறார்கள். “ஒழைச்சிச் சாப்புடணும்னு நமக்குக் கட்டாயம் இல்ல சார். போதும்டான்ற அளவுக்கு ஆயி அப்பன் சொத்துச் சேத்து வெச்சிருக்காங்க. அதுக்காக, மூணு நாலு தலைமுறையா செஞ்சுட்டு வந்த தொழிலை விட முடியல. அதனால, 27 வருசமா பெட்டி தூக்குறேன்.

வாரத்துல ரெண்டு நாளு கிளியோட பீச்சுப் பக்கம் வந்திருவேன்” என்கிறார் கிளி ஜோசியத்தில் மற்றவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கே.கே.நகர் முருகேசன். “எப்பயாச்சும் உங்களுக்கு ஜோசியம் பாத்துருக்கீகளா?’’ என்றதுமே முகம் சுருங்கிப்போனவர், ‘‘அதெப்படி... ஜோசியக்காரளுக்கே ஜோசியம் சொன்னா பலிக்காதுல்ல.. அதனால நான் வெளியில ஜாதகம் மட்டும் பாத்துக்குவேன்” என்று சமாளித்தார். கிளிகளைச் சீட்டு எடுக்கப் பழக்குவதற்காகவே சென்னையில் கோச்சர்கள்(!) இருக்கிறார்களாம். இவர்களிடம் மூன்று மாதங்கள் படிக்கும் கிளிகள், ஜோசியக்காரர்களிடம் பத்திருபது நாட்கள் அப்ரண்டிஷிப் பயிற்சி எடுத்த பிறகுதான் வழிக்கு வருமாம். இது முருகேசன் சொன்ன கொசுறுத் தகவல்.

கிளி ஜோசியம் பிடிக்காதவர்கள் ஜக்கம்மாவிடம் கை ரேகை பார்க்கிறார்கள். பெரும்பாலும் பெண்களே ஜக்கம்மா வாக்குச் சொல்வதால், இவர்களிடம் பெண்கள் தைரியமாய் கை நீட்டுகிறார்கள். ‘‘நம்புனவங்களுக்குத்தான் ஜக்கம்மா வாக்குப் பலிக்கும். பத்து வருஷமா இந்தத் தொழில்ல உக்காந்துக்கிறேன். பீச்சுப் பக்கம் வர்ற நேரம் போக, மத்த நேரத்துல தெருவுக்குள்ள போயி ரேகை பாப்பேன். என்னதான் பாத்தாலும் நிஷ்டையா ஒரு வருமானமில்ல சாமி. வாச்சான் போச்சான் பொழப்புத்தான். த பாரு.. இம்மா நேரமாச்சு.. இன்னும் போணியே ஆவல’’- அலுத்துக்கொள்கிறார் மெரினாவில் உள்ள ஜக்கம்மாவின் பிரதிநிதி தேவி.

ராத்திரியில் மீன் பாடுக்காகக் கடலுக்குப் போகும் மீனவர்கள் பல பேருக்குப் பகுதிநேரப் பணி தருகிறது மெரினா. சுடச் சுட பஜ்ஜி போட்டுக் கொடுக்கும் பெரும்பாலானவர்கள் இந்த ரகம்தான். ‘‘நான், எங்க வீட்டுல, எங்க அண்ணி மூணு பேரும் மதியம் 12 மணிக்கு பீச்சுக்கு வந்தோம்னா பஜ்ஜிக்கான மாவு, காய்களை ரெடி பண்ணி ஸ்டவ்வ பத்த வைக்கிறதுக்கு ரெண்டு அவரு ஆகிரும். நல்லா ஓடுச்சுன்னா ஆயிரம் ரூபா வரைக்கும்கூட நிக்கும். மழை பெஞ்சுட்டா பொழப்பு நாஸ்திதான். கரைச்ச மாவ கடல்ல ஊத்திட்டு இன்னிக்குக் கடல் மாதா நமக்கு அளந்தது அம்புட்டுத்தான்னு வீட்டுக்குப் போயிருவோம்” என்கிறார் பஜ்ஜிக் கடை பரசுராமன்.

மெரினாவில் துப்பாக்கியைக் கொடுத்து பலூனைச் சுடச் சொல்லும் தவமணி, பதினைந்து வருடங்களாகப் பலூனுக்குக் காற்று ஊதுகிறார். இவரும் ஒரு மீனவர்தான். பத்து வயதில் கடலுக்குப் போனவர், சுனாமி சுழற்றியபோது தொழிலுக்காகக் கடலுக்குள் கிடந்தார். அந்த நேரம் ஆழிப் பேரலை கடலுக்குள் அள்ளிக்கொண்டுபோன உயிர்களில் ஆறு பேரைத் தனது தோளில் சுமந்து காப்பாற்றியவர். ‘‘மதியம் மூணு மணிக்கு பீச்சுக்கு வந்தேன்னா, எட்டு மணி வரைக்கும் இருப்பேன். ஊதிக் கட்டுன பலூன்கள யாராச்சும் ஒடைச்சாதான் நமக்குப் பொழப்பு. இல்லாட்டா, பலூன்களை அவுத்துக் காத்துல பறக்க விட்டுட்டுப் போயிக்கிட்டே இருப்பேன்’’- வாழ்க்கையை இலகுவாக வாழப் பழகியிருக்கிறார் தவமணி.

சுண்டல் இல்லாமல் மெரினாவின் கதையை முடிக்க முடியாது. சிறுதுளி பெரு வெள்ளம் என்பதுபோல மெரினாவில் சுண்டல் விற்று லட்சாதிபதி ஆனவர்களும் உண்டு. ராமநாதபுரத்திலிருந்து வந்து மெரினாவில் சுண்டல், முருக்கு விற்கும் செல்லையாவும் அப்படித்தான். ‘‘சுண்டல் வித்த காசுலதாண்ணே என்னோட அக்கா தங்கச்சிக மூணு பேருக்கும் இருவது இருவது பவுன் போட்டு ஜாம்ஜாம்னு கட்டிக் குடுத்தேன். எம் மகளுக்கு பதினஞ்சு பவுன் போட்டேன்.

ஆனா, இப்ப காலம் முன்ன மாதிரி இல்ல. அதனால, குடும்பத்த ராம்நாட்டுக்கே அனுப்பிவெச்சிட்டேன். இங்க நான் மட்டும் ஒண்டிக் கட்டையா ஒழைச்சிக்கிட்டு இருக்கேன். பீச்சுப் பக்கம் வருவேன். இல்லாட்டா எங்கயாச்சும் கட்சி மீட்டங்கி நடந்துச்சுன்னா அந்தப் பக்கம் போயிருவேன். இன்னும் சொச்சப் புள்ளைகள கரையேத்தணுமே’’ - கவலைப்பட்டுச் சொன்னார் செல்லையா.

மெரினா பார்த்துக்கொண்டிருக்கிறது. எல்லோரையும் கரையேற்றும் வல்லமை அதற்குண்டு!

படங்கள்: எல்.சீனிவாசன்
தொடர்புக்கு: shanmugasundaram.kl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x