Published : 21 Oct 2019 07:40 am

Updated : 21 Oct 2019 07:40 am

 

Published : 21 Oct 2019 07:40 AM
Last Updated : 21 Oct 2019 07:40 AM

இந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக   

bjp

நிஸ்துலா ஹெப்பர்

இந்திய அரசியலை உன்னிப்பாகக் கவனித்துவரும் ஆய்வாளர்களில் ஒருவரும், டாடா சமூக அறிவியல் கழகத்தின் அரசியல் துறைப் பேராசிரியருமான அஸ்வனி குமார், “இந்திய அரசியலில் முன்னர் காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்திவந்த இடத்தை இப்போது பாஜக பிடித்திருக்கிறது” என்கிறார்.

“நாடு முழுவதையும் ஒரே கட்சி ஆளும் விதம் மாறவில்லை, கட்சிதான் மாறியிருக்கிறது” என்று சொல்லும் அவர், காங்கிரஸ் காலத்துக்கும் பாஜக காலத்துக்கும் இடையே முக்கியமான சில வேறுபாடுகள் இருக்கின்றன” என்றும் சுட்டிக்காட்டுகிறார். பேட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்.

இந்திய அரசியல் குறித்து ஆய்வுசெய்த பேராசிரியர் ரஜனி கோத்தாரி, ‘காங்கிரஸ் முறை’ என்று ஒன்றைக் கூறியபோது, அது இந்திய அரசியல் நடைமுறையைப் புரிந்துகொள்வதற்கு மிகச் சிறந்த விளக்கமாக இருந்தது; பாஜக இப்போது ஏறுமுகமாக இருக்கும்போது உங்களுடைய கருத்து என்ன?

ரஜனி கோத்தாரி ‘காங்கிரஸ் முறை’ என்று சொன்ன காலகட்டத்தில், அவரே கூறியதைப் போல நாட்டின் பெரும்பான்மைப் பகுதிகள் காங்கிரஸின் கைகளில் இருந்த அந்த நாட்களில், ஏனைய கட்சிகள் விளிம்புநிலைக் கட்சிகளாகவே இருந்தன; எதிர்க்கட்சியும் கண்ணாடியில் தெரியும் ஆளும் கட்சியின் எதிர்பிம்பம்போலவே இருந்தது. ஆனால், இப்போது அப்படி எதுவும் நிகழவில்லை. இப்போது நான் காண்பது கோத்தாரி சொன்ன ‘காங்கிரஸ் முறை’யின் மிதமான, மாறுபட்ட வடிவம். இதை நாம் ‘பாஜக முறை’ என்று சொல்லிவிட முடியாது. இப்போதும்கூட ஒரு கட்சி ஆதிக்க முறைதான் தொடர்கிறது. இவ்விரு கட்சிகளின் ஆதிக்கத்தில் சில கட்டமைப்பு வேறுபாடுகள் மட்டும் தெரிகின்றன.

காங்கிரஸ், பாரதிய ஜனதா இடையிலான கட்டமைப்பு மாற்றங்கள் என்ன?

மிகப் பெரிய அளவிலான சித்தாந்த மாற்றம் இந்தக் கட்டமைப்பு வேறுபாட்டில் முக்கியமானதாகும். நாட்டின் பல பகுதிகளில் நான் மேற்கொண்ட பயணத்தில் உணர்ந்துகொண்டது என்னவென்றால், எதிர்க்கட்சிகள் பலவும் கற்பனைசெய்திருப்பதைக் காட்டிலும் அதிகமாகவே பாஜக - ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் இன்று மக்களிடையே ஆழமாக ஊடுருவியிருக்கிறது. இதை ஒப்புக்கொண்டேதான் ஆக வேண்டும்.

அரசியல் அறிவியல் பேராசிரியர் தாரிக் தச்சில் தனது ஆய்வில் அறிந்துகொண்டபடி ஆர்எஸ்எஸ், பாஜக இரண்டும் அரசியல் அமைப்புகளாக அல்லாமல் சமூக அமைப்புகளாகவே செயல்பட்டுவருகின்றன. பேராசிரியர் ரஜனி கோத்தாரி ஆய்வுசெய்த காலகட்டத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக விளங்கினாலும், அது ஆட்சியிலிருந்த மாநிலங்களிலேயேகூட அதன் செல்வாக்கு எட்டாத பகுதிகளும் இருந்தன.

ஆனால், பாஜகவோ அமைப்புரீதியாக அது ஆட்சியில் இல்லாத பகுதிகளில் எல்லாம்கூட மூலைமுடுக்குகளிலெல்லாம் பரவியிருக்கிறது. ஒருகாலத்தில், காங்கிரஸ் தேசியவாதக் கட்சியாகவும் இடதுசாரிக் கொள்கைக்கு நெருங்கிய மையவாதக் கட்சியாகவும் இருந்தபோது அதன் தாக்கத்தை எங்கும் பார்க்க முடிந்தது. இன்றைக்கு அந்த இடத்தை இந்துத்துவ தேசியவாதம் பிடித்துக்கொண்டிருக்கிறது. காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து தரும் அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கம், அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டுவது ஆகியவற்றுக்கு நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் மக்களிடம் ஆதரவு இருப்பது சித்தாந்த மாறுதலின் விளைவுகள்.

காங்கிரஸ் எப்படித் தன்னுடைய இடத்தை இழந்தது என்று நினைக்கிறீர்கள்?

ஆய்வாளர் மைரான் வெய்னர் 1970-களில் காங்கிரஸை அருகிலிருந்து பார்த்து ஆய்வுசெய்து பின்வருமாறு எழுதினார்: “காங்கிரஸ் கட்சி மிகவும் துடிப்பாக இருக்கிறது, எல்லா மக்களுடைய எண்ணங்களையும் பிரதிபலிப்பதாகத் திகழ்கிறது, வாக்காளர்களின் நலன்களைக் கவனிக்கும் கட்சியாக விளங்குகிறது.”

ஆனால், காங்கிரஸ் கட்சியின் அமைப்பு முறை அதற்குப் பிறகு சிதைய ஆரம்பித்தது. இந்திரா காந்தி காலத்தில் காங்கிரஸ் தனது அமைப்புகளின் வலிமையை இழக்கத் தொடங்கியது. கட்சியின் முழு நிர்வாகம், கட்சித் தலைமையிடமும் மைய அமைப்பிடமும் குவிந்தது. மாநிலக் கிளைகள், மத்திய அமைப்பின் கட்டளைக்கேற்பச் செயல்பட நேர்ந்தது. கட்சியின் மைய அமைப்பு சர்வாதிகாரம் கொண்டதாக மாறியது. விளைவாக, மாநிலங்களில் வளர்ந்துவந்த புதிய அரசியல் சக்திகளிடம் காங்கிரஸ் நிலைகுலைந்தது.

நாட்டின் பொருளாதாரம் சரிந்துகொண்டிருக்கும் சூழலிலும், இத்தகைய பிரச்சினைகள் அரசியல் களத்தில் ஆழமாகப் பிரதிபலிக்கவில்லை. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ரஜனி கோத்தாரி ‘பாலிடிக்ஸ் ஆஃப் இந்தியா’ என்ற தன்னுடைய நூலைக் கொண்டுவந்தபோது, ‘நடுத்தர வர்க்கத்தை நான் சரியாக ஆராயவில்லை, இதுதான் என்னுடைய பிரச்சினை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

1970-களில் வெறும் 5 கோடி பேர்தான் நடுத்தர வர்க்கமாக இருந்தனர். இப்போது அது மேலும் 9 மடங்கு பெருகி 45 கோடி பேர் ஆகிவிட்டது. இதனால், இந்திய அரசியலில் தேர்தல் முடிவு உட்பட அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக நடுத்தர வர்க்கம் உருவெடுத்துவிட்டது. தூய்மை இந்தியா பிரச்சாரம், வெளிநாடுகளில் இந்தியப் பிரதமர் பங்கேற்கும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி போன்றவை உணவு – வேலைவாய்ப்புப் பிரச்சினைகளைக் காட்டிலும் அவர்களை ஈர்க்கின்றன. பொருளாதார தாராளமயம் மூலம் இத்தனை பெரிய நடுத்தர வர்க்கத்தை இந்தியாவில் உருவாக்கிய காங்கிரஸ், அரசியல்ரீதியாக அவர்களுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்பதைப் போல இன்று விலகிவிட்டிருக்கிறது. பாஜக அவர்களைப் புரிந்துகொண்டிருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள மாநில சக்திகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒரே கட்சியின் ஆதிக்க முறை அரசியல் வளரும்போது எதிரே கூட்டரசை வலியுறுத்தும் எதிர்க்கட்சிகளும் சக்திகளும் உருவாகும்; அதுதான், கூட்டரசின் அடித்தளக் கட்டமைப்பு பலம். தமிழ்நாட்டில் உள்ள திமுக, மகாராஷ்டிரத்தின் சிவசேனை போன்ற கட்சிகள் அம்மாநில மக்களின் விருப்பங்களை, நலன்களைப் பிரதிபலிக்கும் வகையில் மேலும் பல காலங்களுக்கு வலுவோடு திகழும் என்றே நான் நினைக்கிறேன்.

ஏனென்றால், இந்திய அரசமைப்பில் ‘கூட்டரசு’ என்ற கட்டமைப்பே இல்லாமல் போக்கிவிட முடியாது. அதனால்தான், பாஜகவும் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அரசு அமைக்கிறது. ஹெட்கேவார், கோல்வால்கர் சித்தாந்தப்படி கூட்டணி அரசியலே இருக்கக் கூடாது. அவர்கள் கூட்டணிகளை விரும்பவேயில்லை. இந்தியாவின் ஒரே அரசியல் பிரதிநிதியாக ஆர்எஸ்எஸ் - பாஜக (ஜனசங்கம்) இருக்க வேண்டும் என்று மட்டுமே விரும்பினர். ஆனால், யதார்த்த நிலைமை அப்படியானது அல்ல. இதைப் புரிந்துகொண்டிருப்பதாலேயே கூட்டணி அரசுகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் நரேந்திர மோடி.

தி இந்து, தமிழில்: சாரி

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

இந்தியாபாஜகஇந்திய அரசியல்காங்கிரஸ் கட்சிடாடா சமூக அறிவியல் கழகம்ஆளும் விதம்BJPமாநில சக்திகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author