Published : 10 Sep 2019 09:05 AM
Last Updated : 10 Sep 2019 09:05 AM

360: அனுஷ்கா சங்கரின் தெம்பூட்டும் கடிதம்

லாலுவின் சிறப்புச் சிகிச்சைக்கு முயன்றுவரும் தேஜஸ்வி

தீவன மோசடி வழக்கின் பொருட்டு 2017-லிருந்து சிறைவாசம் அனுபவித்துவரும் லாலு பிரசாத் யாதவ், உடல்நலக் குறைவால் ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். லாலுவின் சிறுநீரகச் செயல்பாடு 50%-லிருந்து 37% ஆகக் குறைந்ததைத் தொடர்ந்து, தன் தந்தைக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்கு முயன்றுவருகிறார் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ். படுக்கையில் இருந்துகொண்டே தன் அரசியல் வாரிசான தேஜஸ்வியுடன் நாட்டு நடப்புகளையும் விவாதித்துக்கொண்டிருக்கிறார் லாலு. பொருளாதார வீழ்ச்சியும் வேலைவாய்ப்பின்றித் தவிக்கும் இளைஞர்களும் லாலுவைக் கடுமையாகப் பாதிப்பதாகவும், பாஜகவின் வெற்றிக்கு வழிவகுத்த எதிர்க்கட்சிகளின் பிளவைச் சரிசெய்து, அடுத்த முறை இதே தவறு நேர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னதாகவும் தெரிவித்துள்ளார் தேஜஸ்வி.

மத்திய பிரதேச காங்கிரஸுக்குள்தொடரும் குளறுபடி

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் திக்விஜய சிங் அரசாங்க நடவடிக்கைகளுள் மூக்கை நுழைக்கிறார் என்று வனத் துறை அமைச்சர் உமங் சிங்கார் புகார் அளித்ததைத் தொடர்ந்து கட்சிக்குள் குளறுபடிகள் ஆரம்பித்தன. இது தொடர்பாக சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியிருந்தார் உமங் சிங்கார். இந்த விஷயத்தைக் கட்சி மேலிடம் தீவிரமாக அணுக வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராத்திய சிந்தியாவும் தெரிவித்திருந்தார். விஷயம் பூதாகரமாகிவரும் நிலையைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்திருக்கிறார் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத். இன்னும் 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், விரைவில் இதற்குத் தீர்வுகாண வேண்டும் என்றும் கட்சிக்கு உத்தரவிட்டிருக்கிறார் சோனியா.

அனுஷ்கா சங்கரின் தெம்பூட்டும் கடிதம்

சிதார் இசைக் கலைஞரும் சிதார் மேதை ரவிசங்கரின் மகளுமான அனுஷ்கா சங்கர், கருப்பை பிரச்சினையால் தொடர்ந்து ஒற்றைத் தலைவலியையும் உதிரப் போக்கையும் அனுபவித்துவந்ததால் கருப்பையை அகற்றிக்கொள்ள நேர்ந்தது. இப்படிப்பட்ட சிகிச்சைகள் குறித்து வெளியில் பேசவே தயங்கும் சூழலில், பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு வெளிப்படையான கடிதம் எழுதி பெண்களின் மனம் கவர் நாயகியாகியிருக்கிறார் அனுஷ்கா. சமூக வலைதளங்களில் இக்கடிதம் பரவலான வரவேற்பைப் பெற்றுவருகிறது. தங்களுக்கு மருத்துவர்கள் இந்த ஆலோசனையை வழங்கியபோது தயங்கியதாகவும், அனுஷ்காவின் முடிவு புது தெம்பையும் துணிச்சலையும் தந்திருப்பதாகவும் பல பெண்கள் பதிவிட்டுவருகின்றனர்.

பட்டினியில் தவிக்கும் ‘இந்திரா’ உணவகங்கள்

ஏழைகள் பசியாறுவதற்காக முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட ‘அம்மா’ உணவகங்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பெங்களூருவிலும் ‘இந்திரா கேன்டீன்கள்’ என்ற பெயரில் மானிய விலை உணவகங்களை காங்கிரஸ் முதல்வர் சித்தராமய்யா 2018 ஆகஸ்ட் 15-ல் தொடங்கினார். இந்த உணவகங்களை இதுவரை 14.47 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், இதை நடத்துவதற்கான நிதியை மாநில அரசு மூலம் ஒதுக்காமல், பெங்களூரு மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்திருந்தனர். குமாரசாமி முதலமைச்சராக இருந்தபோது காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி அரசு இதற்கு நிதி ஒதுக்கவில்லை. பணம் இல்லை என்று பெங்களூரு மாநகராட்சியும் கையை விரித்துவிட்டது. இதனால், 173 நிலையான உணவகங்களும், 18 நடமாடும் உணவகங்களும் தடுமாறுகின்றன. “பணக்காரர்களுக்கு மட்டும்தான் பசியாற்றுவீர்கள், உங்கள் வயிறு நிரம்பினால் போதுமா, இந்திரா கேன்டீனை மூட நடவடிக்கை எடுத்தால் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்றெல்லாம் முதல்வர் எடியூரப்பாவைத் தொடர்ந்து சாடியபடி இருக்கிறார் சித்தராமய்யா. “மக்கள் சாப்பிடும் எண்ணிக்கையைப் போலப் பல மடங்கு சாப்பிடுவதாகக் கணக்கெழுதப்பட்டு பணம் கையாடல் நடக்கிறது. அவற்றை விசாரித்து முடிக்காமல் தொடர்ந்து நிதி அளித்துக்கொண்டிருக்க முடியாது” என்று எடியூரப்பாவும் துணை முதல்வர் அஸ்வத் நாராயணனும் பதிலளித்திருக்கின்றனர். கேன்டீன்களை மூட மாட்டோம், பெயரையும் மாற்ற மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். “என்ன பிரச்சினை என்றாலும் ஒரு மக்கள்நலத் திட்டத்தைக் கிடப்பில் போடக் கூடாது” என்று விமர்சிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x