Published : 30 Aug 2019 08:15 AM
Last Updated : 30 Aug 2019 08:15 AM

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயமா?

சமூக ஊடகங்களில் பிரச்சினைக்குரிய பதிவுகளைப் பதிவிடுபவர்களைக் கண்டுபிடிப்பதில், சமூக ஊடக நிறுவனங்களின் உதவியைப் பெறும் முயற்சியில் தமிழக அரசு இருக்கிறது. இது போன்ற விவகாரத்தை மேலும் இரண்டு உயர் நீதிமன்றங்கள் விசாரிப்பதால் எல்லா வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் அப்போதுதான் முரண்பாடில்லாத தீர்ப்புகள் வழங்கப்படும் என்றும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் ஆகிய நிறுவனங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றன.

சமூக ஊடகங்களின் கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைப்பது குறித்து தமிழ்நாடு அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்திருக்கும் மனு, தற்போதைய சட்டத்தின்படி ஏற்றுக்கொள்ளக்கூடியதாகத் தெரியவில்லை. இது தொடர்பாக இரண்டு மனுக்களை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்றமும் இந்த யோசனையில் பொருத்தப்பாடு இல்லை என்றே கூறுகிறது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, ஒருவருடைய ஆதார் எண்ணை அரசின் நிதியுதவி உள்ளிட்டவற்றைப் பெறுவதற்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் முடிவு மேற்கோள் காட்டப்பட்டது. மேலும், ஒருவருடைய அடையாளத்தை நிறுவுவதற்காக நிறுவனங்களோ தனிநபர்களோதான் ஆதார் எண்ணைப் பயன்படுத்த வேண்டும் என்ற வகையில், ஆதார் சட்டப் பிரிவு 57 நீக்கப்பட்டதையும் சென்னை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

சமூக ஊடகங்களில் பிரச்சினைக்குரிய கருத்துகளைப் பதிவிடுபவர்களைக் கண்டுபிடிக்க முடியாதபடி அவர்கள் எளிதில் தப்பிவிடுகிறார்கள் என்பதைக் காரணம் காட்டி, மனுதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்கள். இணைய குற்றங்களைக் கையாள்வதற்கான சட்டபூர்வ வழிமுறைகளையும் இணைய சேவைகளைத் தரும் நிறுவனங்களின் பொறுப்புகளையும் ஆய்வுசெய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த மனுக்களின் எல்லையை விரிவாக்கியது.

கடந்த ஆண்டில், மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சகம் இணைய சேவை வழங்குவோருக்குப் புதிய வரைவு விதிமுறைகளை அறிவித்து, மக்களிடம் கருத்துகளைக் கேட்டது. இணைய சேவையளிப்போர், சேவையைப் பெறுவோர் ஆகிய இரண்டு முனைகளிலும் மின்னணுப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பயன்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனங்கள், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் மாற்று வழி ஏதும் இல்லை என்று தங்கள் இயலாமையை வெளிப்படுத்தினார்கள். இந்த விஷயம் அந்நிறுவனங்களின் உலகளாவிய கொள்கை சார்ந்தது என்றாலும், சமூக ஊடகங்களில் பதிவுசெய்திருக்கும் பயனாளிகளின் நலன் சார்ந்ததும்கூட.

நீதிபதி கே.எஸ்.புட்டாசுவாமி தொடுத்த வழக்கில், ஒன்பது நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு 2017-ல் அளித்த தீர்ப்பின்படி இணைய நடவடிக்கைகளை மாநில அரசு கட்டுப்படுத்தும் விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் அளவுகோல்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். குழந்தைகளை ஆபாசமாகச் சித்தரிக்கும் படங்கள், காணொலிகள், குழுவினருக்கு இடையிலான மோதல்கள், கும்பல் வன்முறை போன்றவற்றைத் தடுப்பதற்கு வழிமுறைகள் கண்டாக வேண்டியது அவசியம். அதே நேரத்தில் தனிநபரின் உரிமையும் அந்தரங்கமும் பாதிக்கப்படாமல் இதைச் செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x