Published : 15 Aug 2019 07:18 am

Updated : 15 Aug 2019 07:18 am

 

Published : 15 Aug 2019 07:18 AM
Last Updated : 15 Aug 2019 07:18 AM

கலவல ஸி.கண்ணன்: சென்னையின் கண்!

chennai-s-eye

சுப்பிரமணி இரமேஷ்

கலவல ஸி.கண்ணன் செட்டியாரைப் பார்த்து, ‘எல்லா மதங்களும் உண்மையென்ற சமரச ஞானத்தை ஊட்டத் தவறாதவர்’ என்றார் பாரதியார். ‘உத்தம தேசாபிமானி, பாரத மாதாவின் அருந்தவப் புதல்வர்’ என்றார் எஸ்.கஸ்தூரிரங்க ஐயங்கார். ‘பாத்திரமறிந்து ஜாதி மத வித்தியாசமின்றி தர்மம் செய்துவந்தவர்’ என்றார் அன்னிபெசன்ட் அம்மையார். ‘வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாது தர்மம் செய்தவர்’ என்றார் காங்கிரஸ் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி.

கலவல கண்ணனின் அருமையை உணர இதைவிட வேறென்ன வேண்டும்?
‘மிஸஸ் கிங் அண்டு கோ’ நிறுவனத்தை நடத்திவந்த செல்லம் செட்டியாருக்கு மூத்த மகனாக சென்னையில் 1869 ஆகஸ்ட் மாதம் பிறந்தவர் கலவல கண்ணன். இராமானுஜம் என்றொரு தம்பியும் அவருக்கு உண்டு. இவர்களை ‘கலவல சகோதரர்கள்’ என்றழைத்தனர். உயர் கல்வியை முடித்த கண்ணன், தந்தையின் வணிகத்தைத் தம்பியுடன் இணைந்து செய்துவந்தார். தமது வணிகத்தில் பெற்ற செல்வத்தின் பெரும் பகுதியைச் சமூகத்துக்கெனச் செலவிட முன்வந்ததிலிருந்து அவரது சமூகவெளி விரிவடைகிறது.

அனைவருக்கும் எழுத்தறிவு

ஆங்காங்கே கல்வி நிலையங்களைத் தொடங்கி அனைவருக்கும் எழுத்தறிவு கொடுக்க நினைத்தார். சிந்தாதிரிப்பேட்டை, சௌகார்பேட்டை, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் பாடசாலைகளை நிறுவினார். குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கென தனிப் பள்ளிகளை நடத்தினார். சமூகத்தில் பின்தங்கிய மக்களின் குழந்தைகள் படிப்பதற்கெனப் பல இடங்களில் இரவுப் பள்ளிகளையும் நடத்தினார். சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பெண்கள் பள்ளியில் ஆகஸ்ட் 28, 1919 அன்று காந்தியின் மகன் தேவதாஸ் காந்தியைச் சிறப்பு விருந்தினராக அழைத்துவந்து, இந்தி வகுப்பைத் தொடங்கியிருக்கிறார். அதுகுறித்து ‘சிந்தாதிரிப்பேட்டையில் ஹிந்திப் பயிற்சி’ என்று தேசபக்தன் (27.8.1919) முன்னறிவிப்பாகச் செய்தி வெளியிட்டது.

பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களை முன்னேற்ற அவர்களுக்குக் கல்வி அளிப்பதுதான் தீர்வாக இருக்கும் என்பதில் முனைந்து செயல்பட்டிருக்கிறார் அவர். அதனால்தான், 1887-ல் திருவள்ளூரிலும், 1890-ல் பெரம்பூரிலும் பள்ளிகள் தொடங்கினார். இப்பள்ளிகள் இன்று நூற்றாண்டுகளைக் கடந்து சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. ‘கண்ணன் செட்டியார் கலாசாலை போன்று எல்லாப் பாடசாலையிலும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தால், தேசம் மறுபடி மேன்மையடையும்’ என்று மயிலாப்பூரில் கண்ணன் தொடங்கிய இலவச சம்ஸ்கிருதக் கலாசாலையின் சிறப்புகள் குறித்த கட்டுரையில் பாரதியார் எழுதியிருக்கிறார்.

வைத்தியசாலையும் பால் தானமும்

கல்வியைத் தொடர்ந்து மக்களின் உடல்நலத்தைப் பேணும் பொருட்டு, அதன் பக்கம் அவரது அக்கறை திரும்பியது. திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், நெல்லூர் (ஆந்திர பிரதேசம்) ஆகிய இடங்களில் இலவச ஆயுர்வேத வைத்தியசாலைகளைத் தொடங்கியிருக்கிறார். இவரது நேரடிப் பார்வையில் இம்மருத்துவமனைகள் இயங்கியிருக்கின்றன.

1920-ல் ஜனவரி-மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் திருவல்லிக்கேணி ஆயுர்வேத மருத்துவமனையில் 38,236 பேர் மருத்துவம் பார்த்திருக்கின்றனர். இது குறித்துத் தொடர்ந்து சுதேசமித்திரன் செய்திகளை வெளியிட்டுள்ளது. ‘வைத்தியசாலை சரியான ஏற்பாட்டுடன் நடந்துவருவதுடன் நோயாளிகளைக் கவனித்து மருந்து கொடுக்கவும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இங்கு குவியும் நோயாளிகளுக்கு இடவசதிதான் போதாததாக இருக்கிறது. இத்தகைய தர்ம ஸ்தாபனத்தை நடத்திவரும் ராவ் பகதூர் தர்மமூர்த்தி கலவல கண்ணன் செட்டியாருக்குப் பொதுமக்கள் நன்றி காட்டக் கடமைப்பட்டிருக்கிறார்கள்’ என்று எஸ்.கஸ்தூரிரங்க ஐயங்கார் (சுதேசமித்திரன், 27.4.1920) குறிப்பிட்டிருக்கிறார்.

சென்னைக்கு மருத்துவ வசதி தேடிவருபவர்கள் தங்குவதற்கு எழும்பூரில் ஒரு விடுதியைக் கட்டினார் கலவல கண்ணன். ‘எழும்பூர் ஸ்டேஷனுக்கு அருகில் கண்ணன் செட்டியார் சத்திரம் ஒன்று இருக்கிறது. இன்னும் சில சத்திரங்கள் இருப்பினும் அவை யாத்திரிகர்களுக்குச் சௌகரியப்படாது’ (தமிழ்நாடு பயணக் கட்டுரைகள், (தொ.ஆ)
ஏ.கே.செட்டியார் 45:2012) என்று சென்னை நகரம் குறித்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடுதி இன்றுவரை பயன்பாட்டில் இருக்கிறது. மிகக் குறைந்த கட்டணத்தில் நவீன வசதிகளுடன் இயங்கிவருகிறது.

இவர் திருவல்லிக்கேணியில் தொடங்கிய குழந்தைகளுக்கான பால் தானம் இவரது கொடைகளில் ஆகச் சிறந்தது. இன்றும் இந்த தானம் தொடர்கிறது. 1919-ல் சென்னைக்கு வந்த லேடி விலிங்டன், ‘குழந்தைகளுக்குப் பால் கொடுத்து உதவும் தருமத்தை மிஸ்டர் செட்டியார் மேற்கொண்டிருப்பதைக் காணத் தமக்கு அதிக ஆனந்தம் உண்டாகிறது. மிஸ்டர் செட்டியாரைப் போலவே இன்னும் பல கனவான்கள் தர்ம விஷயத்தில் முன்வர வேண்டும்’ (சுதேசமித்திரன், 08.4.1920) என்று பார்வையாளர் குறிப்பேட்டில் எழுதியிருக்கிறார்.

புகழ் விரும்பாத சமூக சேவகர்

கண்ணன் செட்டியார் இறந்தபோது நடைபெற்ற நினைவஞ்சலிக் கூட்டத்தில் எஸ்.கஸ்தூரிரங்க ஐயங்கார், சி.ராஜகோபாலாச்சாரியார், சி.பி.இராமசுவாமி ஐயர், எஸ்.சத்தியமூர்த்தி, அன்னிபெசன்ட் அம்மையார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்து இதழும், சுதேசமித்திரன் இதழும் (31.08.1920) முழுப் பக்கம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ‘கண்ணன் செட்டியார் பிறரின் பாராட்டை விரும்பாதவர். வேல்ஸ் இளவரசரை வரவேற்கும் குழுவில் அவரது பெயர் இடம்பெற்றதைக்கூட அவர் விரும்பவில்லை’ என்று அந்நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய டி.வி.சேஷகிரி ஐயர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆங்கில அரசு அளித்த ‘ராவ் பகதூர்’ என்ற பட்டத்தை மட்டும் அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். திருவல்லிக்கேணி மக்கள் அவரை ‘தருமமூர்த்தி’ என்றழைத்தனர். சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள பொதுமக்கள் இவரது இறப்புக்குப் பிறகு ஒரு கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். ‘சென்னையின் கண் தருமமூர்த்தி என்று வழங்கப்படும் ராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டியார் அகால மரணமடைந்ததைக் குறித்து சிந்தாதிரிப்பேட்டை வாசிகளடங்கிய இக்கூட்டத்தார் மிகவும் வருத்தப்படுகிறார்கள்.

காலஞ்சென்ற இப்பெரியவர் ஞாபகார்த்தமாக, அவரது உருவப்படம் ஒன்றை சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள அவரது பெண் பாடசாலையில் திறந்துவைக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறது’ (சுதேசமித்திரன், 24.8.1920) என்று அக்கூட்டத்தில் முடிவெடுத்திருக்கிறார்கள். கண்ணன் செட்டியாருக்கு ஆங்கில அரசு, நண்பர்கள், தலைவர்கள் அளித்த இடத்தைத் தாண்டி, பொதுமக்கள் அளித்த இடம் மகத்தானது. அவருக்குக் குழந்தைச் செல்வமில்லை; பொதுமக்களைத்தான் தம்முடைய செல்வமாகக் கருதினார். அதனால்தான், அவரது உயிலில் தனக்குப் பிறகு தர்ம காரியங்கள் தொடர்ந்து நடைபெற வருடத்துக்கு ரூ.75,000 ஒதுக்கியிருக்கிறார். தன் துணைவியார் சீத்தம்மா மறைவுக்குப் பிறகு, மேற்கண்ட தொகையுடன் கூடுதலாக ரூ.30,000 உயர்த்தப்பட வேண்டும் என்றும் எழுதியிருக்கிறார்.

சாதிய ஏற்றத்தாழ்வுகள் ஓங்கிக் காணப்பட்ட அக்காலத்தில், எல்லோரையும் சமமாகப் பார்த்தவர் கண்ணன். ‘சிலர் பட்டம் கிடைக்கிற காலம் பார்த்து தர்மம் செய்வது வழக்கம். தர்மமூர்த்தி கண்ணன் செட்டியார் அந்த கோஷ்டியைச் சேர்ந்தவரல்ல’ என்ற எஸ்.சத்தியமூர்த்தி, ‘அவரது மரணம் கட்சிக்குப் பேரிழப்பு’ என்று நினைவஞ்சலிக் கூட்டத்தில் கூறியிருக்கிறார். கண்ணன் செட்டியார் இறுதிவரை காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்.

கண்ணன் செட்டியார் இந்தியன் வங்கியின் இயக்குநர், பச்சையப்பன் அறக்கட்டளையின் அறங்காவலர், ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி தேவஸ்தான அறக்கட்டளையின் அறங்காவலர், மயிலாப்பூர் சங்கீத சபாவின் தலைவர் என்று பல பொறுப்புகள் வகித்திருக்கிறார். 51-வது வயதிலேயே அவர் இயற்கை எய்திவிட்டாலும் அவரது சமூகப் பங்களிப்பினூடாக ஒவ்வொருவர் மனதிலும் என்றும் நிறைந்திருப்பார். ஒரு நல்ல குடிமகன் எப்படி சமூகத்தோடு தன்னைப் பிணைத்துக்கொள்ள வேண்டும், நாட்டுக்கு எப்படி பங்களிக்க வேண்டும் என்பதற்கு இவர் ஓர் உதாரணம்.

- சுப்பிரமணி இரமேஷ்,
தொடர்புக்கு: ramesh5480@gmail.com
ஆகஸ்ட் 2019: கலவல கண்ணனின்
150-வது பிறந்த ஆண்டு
கலவல ஸி.கண்ணன்சென்னையின் கண்பாரத மாதாமிஸஸ் கிங் அண்டு கோஎழுத்தறிவுவைத்தியசாலைமருத்துவ வசதிசமூக சேவகர்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x