Published : 06 Aug 2019 08:17 AM
Last Updated : 06 Aug 2019 08:17 AM

காஷ்மீரைப் புரிந்துகொள்வது எப்படி?

செல்வ.புவியரசன்

இந்தியா சுதந்திரம் அடைந்த 1947, ஆகஸ்ட் 15 அன்று காஷ்மீரானது இந்தியாவின் ஒரு அங்கம் இல்லை. ஒரு தனித்த தேசமாக இருக்கவே பெரும்பான்மை காஷ்மீரிகளும் அன்று நினைத்திருந்தனர். மொத்த மக்கள்தொகையில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட காஷ்மீரை அன்று ஆண்டுகொண்டிருந்த அரசர் ஹரி சிங் ஒரு இந்து. முடியாட்சிக்கு எதிராக ஜனநாயகம் வளர்ந்துவந்த காஷ்மீரின் அரசியல் முகமாக உருவெடுத்துவந்தார் ஷேக் அப்துல்லா. அவருடைய கனவும் சுதந்திர, ஜனநாயக, மதச்சார்பற்ற காஷ்மீர் என்பதாகவே இருந்தது. ஆனால், காஷ்மீரை அபகரிக்கும் பாகிஸ்தானின் முயற்சிகள் மன்னர் ஹரி சிங்கை இந்தியாவின் பக்கம் திருப்பியது. ‘எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முடிவை காஷ்மீரிகள் ஒரு கருத்தெடுப்பின் வழியாகத் தெரிவிப்பார்கள்’ என்கிற உறுதிமொழியின் அடிப்படையிலேயே தன்னுடன் காஷ்மீரை இணைத்துக்கொண்டது இந்தியா.

காஷ்மீரின் தனித்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், அரசமைப்பில் 370-வது பிரிவை இந்தியா உருவாக்கியது. ராணுவம், வெளியுறவு, தகவல்தொடர்பு, நாணயம் நீங்கலாக ஏனைய எந்த விஷயத்திலும் மத்திய அரசு தலையிடாது என்பதை உறுதிப்படுத்தும் சட்டப் பிரிவு இது. காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் பாலமாகச் செயல்பட்ட அந்தச் சட்டப் பிரிவைத்தான் இன்றைய பாஜக அரசு முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது.  

காஷ்மீர் ஒரே மாநிலமாகக் கருதப்பட்டாலும், அடிப்படையில் காஷ்மீர், ஜம்மு, லடாக் எனும் மூன்று பிராந்தியங்களின் சேர்க்கையே அது. என்றாலும், இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது உணர்வால் அது பெருமளவில் ஒன்றுபட்டிருந்தது. அவர்களுடைய ஏகோபித்த தலைவராக ஷேக் அப்துல்லா இருந்தார். இன்றைய சூழலில் பாஜக மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையைக் காட்டிலும் மோசமானது எதுவென்றால், இந்த எழுபதாண்டுகளில் படிப்படியாக அந்த நிலை மாறியதும் மீண்டும் அது மூன்று பிராந்தியங்களாக மனரீதியாகப் பிளவுண்டதும்தான்.

இன்றைய பாஜக அரசு எடுத்திருக்கும் முடிவு காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடுமையான கோபம், கொந்தளிப்பு, ஏமாற்றம், விரக்தியை உண்டாக்கினாலும் ஜம்முவிலும் லடாக்கிலும் நேர் எதிரான மனநிலையே பிரதிபலிக்கும். அடுத்து ஜம்மு மக்கள் தங்களைத் தனி மாநிலமாகவோ, ஒன்றியப் பிரதேசமாகவோகூட அறிவிக்கக் கோரி வலியுறுத்தும் நிலை உருவாகலாம். ஏனென்றால், அத்தனை பிளவுகள் அங்கே உருவாகியிருக்கின்றன.     

காஷ்மீர்: ஒரு பார்வை

இந்தியாவின் வடக்கு முனை காஷ்மீர். இமயமலைக்கும் பீர்பாஞ்சல் மலைத்தொடருக்கும் இடைப்பட்ட பகுதி காஷ்மீர் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. சுற்றுலா மூலம் கிடைக்கும் வருமானம்தான் காஷ்மீரின் முக்கிய பொருளாதார ஆதாரம். அனந்த்நாக், பாரமுல்லா, பட்காம், குப்வாரா, ஸ்ரீநகர், குல்காம், ஷோபியான், கந்தர்பால், புல்வாமா, பண்டிபுரா ஆகிய பத்து மாவட்டங்களை உள்ளடக்கியது காஷ்மீர் பிராந்தியம். நிலப்பரப்பு 15,948 ச.கி.மீ. அதாவது, மொத்த மாநிலத்தின் நிலப்பரப்பில் காஷ்மீர் பிராந்தியத்தின் பங்கு 15.73%. ஆனால், 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி காஷ்மீர் பிராந்தியத்தின் மக்கள்தொகை 69,07,623. அதாவது, மொத்த பிராந்தியத்தின் மக்கள்தொகையில் காஷ்மீர் பிராந்தியத்தின் பங்கு 55.04%.

விளைவாக, மாநில அரசியலில் காஷ்மீர் பிராந்தியத்தில் வாழ்வோரின் செல்வாக்கே ஓங்கியிருக்கிறது. மொத்தம் 87 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் காஷ்மீர் பிராந்தியத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டுமே 46. அதேபோல, மாநிலத்திலுள்ள 6 தொகுதிகளில் காஷ்மீர் பிராந்தியத்தின் பங்கு மட்டும் 3. காஷ்மீர் பிராந்தியம் முஸ்லிம்கள் பெருமளவிலான எண்ணிக்கையில் வசிக்கும் பிராந்தியம். இங்குள்ளவர்களில் ஏறக்குறைய 97% பேர் முஸ்லிம்கள். காஷ்மீரியும் உருதுவும் இந்தப் பிராந்தியத்தில் அதிகம் பேசப்படும் மொழிகள்.

தேசிய மாநாட்டுக் கட்சிக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையில்தான் இங்கே போட்டி நிலவுகிறது. காங்கிரஸுக்கும் மார்க்ஸிஸ்ட் கட்சிக்கும் கணிசமான செல்வாக்கு உண்டு. பாஜகவுக்கு எந்தப் பிடியும் இங்கு இல்லை. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இங்குள்ள ஸ்ரீநகர், அனந்த்நாக், பாரமுல்லா ஆகிய மூன்று தொகுதிகளிலும் தேசிய மாநாட்டுக் கட்சியே வென்றது.

ஜம்மு: ஒரு பார்வை

கதுவா, ஜம்மு, உதம்பூர், தோடா, ரஜோரி, பூஞ்ச், ரியாசி, ராம்பன், சம்பா, கிஸ்த்வார் ஆகிய பத்து மாவட்டங்களை உள்ளடக்கியது ஜம்மு பிராந்தியம். நிலப்பரப்பு 26,293 ச.கி.மீ. அதாவது, மாநிலத்தின் மொத்தப் பரப்பளவில் இது 25.93%. 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஜம்மு பிராந்தியத்தின் மக்கள்தொகை 53,50,811. அதாவது, மொத்த பிராந்தியத்தின் மக்கள்தொகையில் காஷ்மீர் பிராந்தியத்தின் பங்கு 42.64%.

ஜம்மு பிராந்தியத்தில் பெரும்பான்மையினர் இந்துக்கள். அவர்களுடைய எண்ணிக்கை ஏறக்குறைய 62%. பெரும்பாலும் இவர்கள் டோக்ரா இனத்தைச் சேர்ந்தவர்கள். ரஜோரி, பூஞ்ச், தோடா, கிஸ்த்வார், சம்பா ஆகிய ஐந்து மாவட்டங்களில் மட்டுமே முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.

மருத்துவம், பொறியியல் என்று அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் ஜம்மு பிராந்தியத்தில் அமைந்துள்ளன. ஐஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகமும் இங்கே அமைந்துள்ளன. ஜம்மு பிராந்தியத்தில் 37 சட்டமன்றத் தொகுதிகளும், மக்களவையில் 2 தொகுதிகளும் இருக்கின்றன.

பீர்பாஞ்சல் மலைத்தொடரானது காஷ்மீர் பள்ளத்தாக்கி லிருந்து ஜம்முவைப் பிரிக்கிறது என்றாலும், காஷ்மீர் பிராந்தியத்துடன் உணர்வால் ஒன்றுபட்டவர்கள் ஜம்மு பிராந்தியத்தினர். காஷ்மீர் பிராந்தியத்தைப் போலவே தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) ஆகிய கட்சிகளே ஜம்மு பகுதியிலும் செல்வாக்கு பெற்றிருந்தன. ஆனால், சமீப காலமாக பாஜகவின் கோட்டையாக மாறிவருகிறது ஜம்மு பிராந்தியம். விளைவாக, காஷ்மீர் பிராந்தியத்துடன் ஒரு விலக்கமும் அங்கே உண்டாகிவருகிறது.

நடந்து முடிந்திருக்கும் மக்களவைத் தேர்தலில் ஜம்மு பிராந்தியத்திலுள்ள ஜம்மு, உதம்பூர் இரண்டு தொகுதிகளிலும் பாஜகவே வென்றது. உதம்பூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜிதேந்திர சிங் காங்கிரஸ் வேட்பாளரும் காஷ்மீரின் கடைசி மன்னரான கரண் சிங்கின் வாரிசுமான விக்கிரமாதித்ய சிங்கைக் காட்டிலும் 3.57 லட்சம் அதிகம் வாக்குகள் பெற்று வென்றார். ஜம்மு மற்றும் காஷ்மீர் வரலாற்றிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றது அவர்தான். ஜம்மு தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜூகல் கிஷோரும் காங்கிரஸ் வேட்பாளர் ரமண் பல்லாவைக் காட்டிலும் கூடுதலாக 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, காஷ்மீரிலிருந்து ஜம்முவை தனியாகப் பிரிக்க வேண்டும் என்ற குரலை முன்னிறுத்துகிறது உள்ளூர் பாஜக.

லடாக்: ஒரு பார்வை

லே, கார்கில் ஆகிய இரண்டு மாவட்டங்களை மட்டுமே உள்ளடக்கியது லடாக் பிராந்தியம். நிலப்பரப்பு 59,146 
ச.கி.மீ. அதாவது, மாநிலத்தின் மொத்தப் பரப்பளவில் இது 58.33%. 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி லடாக் பிராந்தியத்தின் மக்கள்தொகை 2,90,492. அதாவது, மாநிலத்தின் மக்கள்தொகையில் லடாக் பிராந்தியத்தின் பங்கு வெறும் 2.31%.

லடாக் பிராந்தியத்தில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் 47%. இந்துக்கள் வெறும் 6%. எனினும், பௌத்தர்கள் எண்ணிக்கை 45% என்பதால், பௌத்தர்கள் – இந்துக்கள் இடையிலான இணக்கமும், அவர்களுடைய கூட்டும் அதிகம். மக்கள்தொகை குறைவு என்பதால், லடாக் பிராந்தியத்திற்கான சட்டமன்றத்தில் நான்கு தொகுதிகளும், மக்களவையில் ஒரு தொகுதியும் மட்டுமே லடாக்குக்கு கிடைத்திருக்கிறது. விளைவாக, மாநில அரசியலில் இவர்களுடைய செல்வாக்கு குறைவு.

தொடக்கத்தில் காஷ்மீர் பிராந்தியத்தின் அரசியல் உணர்வுகளோடு ஒத்திசைத்துவந்த லடாக் பகுதியும் சமீப காலமாக ஜம்மு பிராந்தியத்தைப் போலவே பாஜக செல்வாக்கு பெறும் பிராந்தியமாகவும் காஷ்மீர் பிராந்தியத்திடமிருந்து ஒரு விலக்கத்தை அடையும் பிராந்தியமாகவும் மாறிவந்தது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் லடாக் தொகுதியை பாஜக வென்றது. தேர்தல் நெருங்க நெருங்க பாஜக கடைசியாகக் கையிலெடுத்த ஆயுதம், லெ பகுதிக்குத் தனி அந்தஸ்து அளிக்கப்படும் என்பதுதான். லெ மாவட்டத்துக்கும் பாஜகவுக்கும் ஏற்கெனவே நெருக்கம் அதிகம். 1997-ல் எல்.கே.அத்வானி தொடங்கிவைத்த ‘சிந்து தர்ஷன்’ விழா ஆண்டுதோறும் இன்னும் அங்கே தொடர்ந்துகொண்டிருக்கிறது. இப்பகுதியில் வாழும் புத்த மதத்தினரோடு நெருக்கம் காட்டிவருகிறது பாஜக.

மூன்று பிராந்தியங்களும் ஒருமித்த எண்ணத்துடன் இருந்தால், இப்படி ஒரு முடிவை எந்த ஒரு அரசும் எடுக்கத் தயங்கும். பாஜக அரசு துணிந்து இறங்க பிராந்தியங்கள் இடையே வளர்ந்துவந்த விலக்கமும், காஷ்மீர் கட்சிகள் அதற்கு உரிய கவனம் அளிக்கத் தவறியதும் ஒரு முக்கியமான காரணம். மாநிலங்களின் வலிமை மக்களின் ஏகோபித்த உணர்விலேயே இருக்கின்றன என்பதும் சேர்ந்துதான் காஷ்மீர் நமக்கு உணர்த்தும் உண்மை! 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x