Published : 05 Aug 2019 09:06 AM
Last Updated : 05 Aug 2019 09:06 AM

வெள்ளை மாதுளைகளுக்கு என்னவாயிற்று?

முகம்மது ரியாஸ்

பழங்களில் ராணி என்று மாதுளையைக் குறிப்பிடுவது வெற்றுப் புகழ்ச்சி அல்ல. மணவறை முதல் மருத்துவமனை வரை மாதுளைக்கு ஒரு தனி இடம் உண்டு. பண்டைய எகிப்து நாகரிகத்தில் மாதுளை செழிப்புக்கான குறியீடு என்றால், இந்தியாவில் அது கருத்தரித்தலோடு தொடர்புடைய பழமாகவும் பார்க்கப்பட்டிருக்கிறது. எது எப்படியோ வயிற்றுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மாதுளையின் மகத்துவமே வேறு.

வெப்ப நாடான இந்தியா மாதுளையை வரித்துக்கொண்டதும், மாதுளை விளைச்சலில் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதும் ஆச்சரியமானதல்ல. ஓராண்டில் மட்டும் சுமார் 28 லட்சம் டன் அளவுக்கு இங்கே மாதுளை விளைவிக்கப்படுகிறது. ஏனைய பழ வகைகள்போல அல்லாமல், ஆண்டு முழுவதும் சந்தையில் கிடைக்கக்கூடிய சூழலை நவீன வேளாண்மை சாத்தியப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் மாதுளை விளைச்சலில் மகாராஷ்டிரம் முன்னணி வகிக்கிறது.

இந்தியாவில் கணேஷ், காபூல், மிர்துளா, பஹாவா என்று பல ரகங்களில் மாதுளை பயிரிடப்பட்டுவந்தாலும், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது கணேஷ்தான் அதைத்தான் நம்மூரில் நாட்டு மாதுளை என்று சொல்கிறோம். ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவப் பயன்பாட்டில் அதிகம் இடம்பெறும் மாதுளை வகையும் இதுதான். பொதுவாக, எல்லா சந்தைகளிலும் இதுவே முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கும். குறிப்பாக, தமிழ்நாட்டில் இதற்குத்தான் முதல் மரியாதை. ஆனால், சமீப காலமாக இந்த வகை மாதுளைகளின் வருகை குறைந்துவருகிறது. அந்த இடத்தை காபூல் ரக மாதுளைகள் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கின்றன. என்ன காரணம்?

பொதுவாகவே நாட்டு மாதுளைகளில் எளிதில் வெடிப்பு விழுந்துவிடும்; சீக்கிரமே கெட்டுவிடும்; சேதம் அதிகம் என்பதால், பழக்கடைக்காரர்கள் மிக ஜாக்கிரதையாகவே அதை அணுகுவார்கள். மேல் பார்வைக்குப் பொலிவாக இருப்பதோடு, நாள்பட்டு கெடாமலிருக்கக்கூடியவை என்பதால், மக்கள் காபூல் ரகத்தையே இப்போது விரும்புகிறார்கள். அதனால், நாட்டு மாதுளையை எடுத்துவந்தால் விற்பனையாகாமல் தேங்கிவிடுகிறது; நஷ்டமாகிறது; மாறாக, காபூல் ரகத்தை நாள்பட்டு வைத்திருக்க முடியும் சேதாரமும் குறைவு என்பதால், வியாபாரிகளும் காபூல் பக்கம் சாய்ந்துவருகிறார்கள்.

கோயம்பேடு பழக்கடைகள் பக்கம் ஒரு நடை போய்வந்தேன். “தமிழ்நாட்டுக்கு மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களிலிருந்து மாதுளைகள் பெருமளவில் வருகின்றன. ஒரு முறைக்கு 500 டன் வருகிறது என்றால், அதில் 50 டன் மட்டுமே நாட்டு மாதுளை வருகிறது. மீதம் 90% காபூல் வகைதான். மக்களுக்குச் சிவப்பு மாதுளையான காபூல் ரகம் மீது ஏற்பட்டிருக்கும் மயக்கம்தான் காரணம்” என்கிறார்கள் கடைக்காரர்கள். அதேசமயம், “நாட்டு மாதுளையின் மகத்துவம் உணர்ந்தவர்கள் இன்னும் அதைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என்றும் சொன்னார்கள்.

மக்களுக்கு மேல் மினுமினுப்பு மீது இருக்கும் மோகம் என்றைக்குத்தான் போகுமோ தெரியவில்லை. நேற்று அலுவலகம் பக்கம் இளநீர் தள்ளுவண்டி ஒன்றைப் பார்த்தேன். பச்சைப் பசேல் என்று மிளிர்ந்தன காய்கள். “புது ரகம் சார்; பத்து ரூபாய் அதிகம்” என்றார் இளநீர்க்காரர். தண்ணீருக்காக இளநீர் வாங்குவதா, வெளியிலுள்ள மட்டைக்காக வாங்குவதா?

- முகம்மது ரியாஸ், தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x